3 வாக்கெடுப்புகளும் பாடங்களும்

Published By: Digital Desk 5

24 Oct, 2022 | 12:47 PM
image

என்.கண்ணன்

அண்மையில் ஐ.நாவின் இரண்டு அவைகளில் நடந்த மூன்று முக்கியமான வாக்கெடுப்புகள் பரவலான அதிக கவனத்தை பெற்றிருக்கின்றன.

முதலாவது, இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட அனுசரணை நாடுகளால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.

இரண்டாவது, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், சீனா தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட அனுசரணை நாடுகளால் கொண்டு வரப்பட்டு, தோல்வி கண்ட தீர்மானம்.

மூன்றாவது, உக்ரேனின் நான்கு பிராந்தியங்களை, தன்னுடன் இணைத்துக் கொண்ட ரஷ்யாவுக்கு எதிராக, ஐ.நா. பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்ட கண்டனத் தீர்மானம்.

இந்த மூன்று வாக்கெடுப்புகளும், அதன் முடிவுகளும், நாடுகள் எடுத்த தீர்மானங்களும், பூகோள அரசியலின் வெவ்வேறு பரிமாணங்களையும் பாடங்களையும் தருவதாக உள்ளன.

இந்த மூன்று தீர்மானங்களையும் எதிர்கொண்ட இலங்கை, சீனா, ரஷ்யா ஆகியன, கடந்த காலங்களில் ஒன்றாக இணைந்து செயற்பட்ட நட்பு நாடுகள்.

சர்வதேச அரங்கில் இன்றைக்கும் இலங்கை, அதிகம் நம்பிக் கொண்டிருக்கும் நாடுகள், சீனாவும் ரஷ்யாவும் தான்.

போர்க்குற்றங்களுக்கு சர்வதேச நீதி விசாரணை கோரும் தீர்மானம், ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு கொண்டு வரப்பட்டால், சீனாவும் ரஷ்யாவும் தங்களின் ‘வீட்டோ’ அதிகாரங்களைக் கொண்டு அதனைத் தடுத்து விடும் என்று இலங்கை உறுதியாக நம்புகிறது.

அந்த நம்பிக்கையை அரசாங்கத் தலைவர்கள் பகிரங்கமாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்கள். 

ஆனால், ஐ.நா பொதுச்சபையில், ரஷ்யாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் போது, இலங்கை வாக்களிப்பை புறக்கணித்து விலகிக் கொண்டது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு ஆதரவாக எப்போதும் வாக்களித்து வரும் நாடு ரஷ்யா.

ஆனால் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை எதிர்க்காமல் பதுங்கியது இலங்கை. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பான 51/1 தீர்மானத்துக்கு எதிராக ரஷ்யா இம்முறை வாக்களிக்கவில்லை. காரணம், ரஷ்யா இப்போது அதன் அங்கத்துவ நாடு இல்லை.

ஆனால், உக்ரேன், நடுநிலை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும், தீர்மானத்துக்கு ஆதரவாக – அதாவது இலங்கைக்கு எதிராக வாக்களித்திருந்தது.

கடந்த மார்ச் மாதம், உக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையைக் கண்டித்து, ஐ.நா பொதுச்சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் மீதான வாக்கெடுப்பில், இலங்கை எவ்வாறு நடுநிலை வகித்ததோ, அதேபோன்று, உக்ரேனும் நடந்து கொள்ளும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ரஷ்யாவுக்கு எதிரான போரில் மேற்குலக கூட்டாளிகளின் ஆதரவை நம்பியிருக்கும் உக்ரைன், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து கொள்ள விண்ணப்பித்துள்ள, நேட்டோவில் அங்கம் வகிக்க எத்தனிக்கின்ற உக்ரேன், அவர்களின் எண்ணப்படி செயற்படுவதற்கே விரும்பியது.

இலங்கையை விட உக்ரேனுக்கு மேற்குலக கூட்டாளிகள் தான் முக்கியம்.  அதனால், இலங்கை தொடர்பான தீர்மானத்தை உக்ரைன் ஆதரிக்க முடிவு செய்ய, இலங்கை ஏமாந்து போனது.

அதேவேளை, உக்ரேனின் நான்கு பிராந்தியங்களைத் தன்னுடன் இணைத்துக் கொண்ட, ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா. பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு 143 நாடுகள் ஆதரவளித்திருந்தன.

ஆனால், இலங்கை, இந்தியா, சீனா உள்ளிட்ட 35 நாடுகள் நடுநிலை வகித்திருக்கின்றன.

இதே தீர்மானம் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் கொண்டு வரப்பட்ட போது, ரஷ்யா தனது ‘வீட்டோ’ அதிகாரத்தைக் கொண்டு தடுத்தது.

ஆனால், பொதுச்சபையில் அவ்வாறு செய்ய முடியவில்லை. அதற்கு வெறுமனே 5 நாடுகள் தான் ஆதரவளித்தன.

நாடுகளின் இறைமை, பூகோள ஒருமைப்பாடு குறித்து அதிகம் பேசுகின்ற இலங்கை, இந்தியா, சீனா போன்ற நாடுகள், உக்ரேனின் இறைமையை மீறி, அந்த பிராந்தியங்களை தன்னுடன் இணைத்துக் கொண்ட ரஷ்யாவுக்கு எதிராக வாக்களிக்கவில்லை.

நாடுகளின் இறைமை மற்றும் சுதந்திரத்தில் தலையிட முடியாது என்று, இலங்கையின் பல்வேறு பிரச்சினைகளில் இருந்து நழுவிக் கொண்ட இந்தியா போன்ற நாடுகள், உக்ரேனின் சுதந்திரம், இறைமையை மீறிய ரஷ்யாவுக்கு எதிராக செயற்படவில்லை.

அந்த கட்டத்தில் உக்ரேனின் சுதந்திரம், இறைமை ஆகியவற்றை விட, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு, ரஷ்யாவுடனான உறவுகள் தான் முக்கியத்துவமானதாக இருந்தது.

அதனால் தான், ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பில் இருந்து ஒதுங்கியிருந்தன.

அதேவேளை, சீனாவில், உய்குர் இன முஸ்லிம்கள் மீது நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வில் விவாதம் நடத்தக் கோரி, அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகளால் கொண்டு வரப்பட்ட 51/6 தீர்மான வரைவு, சீன உள்ளிட்ட நாடுகளால் தோற்கடிக்கப்பட்டது.

அந்த தீர்மானத்துக்கு எதிராக, 19 நாடுகளும், ஆதரவாக 17 நாடுகளும் வாக்களித்த நிலையில், இரண்டு வாக்குகளால் தீர்மானம் தோல்வியைத் தழுவியது.

இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் 11 நாடுகள் வாக்களிக்காமல் நழுவின.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், நிராகரிக்கப்பட்ட ஒரே ஒரு தீர்மானம் இது தான்.

அமெரிக்காவே முன்னின்று இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்த போதும், சீனாவுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மேற்குலக நாடுகள் முக்கியமான தோல்வியைச் சந்தித்திருக்கின்றன.

சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் மாத்திரமன்றி, இலங்கையும் கூட, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையை, மேற்குலக சார்புடைய ஐ.நா. கட்டமைப்பாகவே விமர்சித்து வந்தது.

ஆனாலும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், சீனாவுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.

பத்து இலட்சம் உய்குர் முஸ்லிம்களை, சீனா தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்திருப்பதாகவும், அவர்களின் மனித உரிமைகளை நசுக்குவதாகவும் சீனா மீது மேற்குலக நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.

முன்னாள் ஐ.நா. மனித உயர்ஸ்தானிகர் மிச்செல்  பச்லெட், ஜின்ஜியாங் மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்த பின்னர், சமர்ப்பித்த அறிக்கையில், மோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்திருந்தார்.

அதனை அடிப்படையாக கொண்டு தான், அடுத்த அமர்வில் அந்த விவகாரம் குறித்து ஆராய வேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானத்தை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்திருந்தன.

ஆனால், மேற்குலக நாடுகளால் இலங்கை பற்றிய தீர்மானத்தை  நிறைவேற்றுவதற்கு ஆதரவாக வாக்குகளை ஒன்றிணைக்க முடிந்தளவுக்கு, சீனாவுக்கு எதிராக வாக்குகளை ஒன்றிணைக்க முடியவில்லை.

சீனாவில் பாதிக்கப்பட்டிருப்பது, முஸ்லிம்களே என்ற போதும், இந்தோனேசியா, கசகஸ்தான், கட்டார், பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், உஸ்பெகிஸ்தான் போன்ற முஸ்லிம் நாடுகள் கூட, சீனாவுக்கு சார்பாகவே வாக்களித்திருக்கின்றன.

மலேசியாவும் நடுநிலை வகித்தது. அதேவேளை, இலங்கை தொடர்பான தீர்மானத்தின் போது, இதே முஸ்லிம் நாடுகள், வாக்களிப்பில் பங்கேற்காமல் ஒதுங்கியிருந்தன.

கோவிட்டினால் உயிரிழந்த முஸ்லிம்களின் சடலங்கள் பலவந்தமாக தகனம் செய்யப்பட்டது, மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறைகள் தான், இலங்கை தொடர்பான வாக்களிப்பில் முஸ்லிம் நாடுகள் அந்த நிலைப்பாட்டை எடுப்பதற்கு காரணம் என்று கூறப்பட்டது.

அது சரியானால், உய்குர் முஸ்லிம்கள், மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள், மனித உரிமை மீறல்கள் விடயத்தில், முஸ்லிம் நாடுகள், சீனாவுக்கு எதிராகவே வாக்களித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.

ஐ.நா.வில் நடத்தப்படும் வாக்கெடுப்புகளில் பூகோள அரசியல் அதிகளவில் ஆதிக்கம் செலுத்துகிறது.

அதனைக் கடந்து ஒவ்வொரு நாடுகளும், தங்களின் மீது செல்வாக்குச் செலுத்தக் கூடிய விடயங்களை மதிப்பீடு செய்தே முடிவுகளை எடுக்கின்றன.

உதாரணத்துக்கு சீனாவுடன், இந்தியா எப்போதும் மோதி வருகின்ற போதும், சீனாவுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்காமல், ஒதுங்கிக் கொண்டது இந்தியா. 

ஏனென்றால், காஷ்மீரில் முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை குறித்து இந்தியாவைத் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வரும் பாகிஸ்தானுடன், சீனா இணைந்து கொண்டு, தனக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வந்து விடக் கூடாது என்பதில் தான் இந்தியா கவனம் செலுத்தியது. அதனால், சீனாவைப் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை.

இந்த மூன்று வாக்கெடுப்புகளில் இருந்தும், பூகோள அரசியல் மட்டும் சர்வதேச அரங்கில் ஆதிக்கம் செலுத்தவில்லை என்பதையும், நாடுகளின் இறைமை, சுதந்திரம் பற்றிய கரிசனைகள் கூட சந்தர்ப்பங்களுக்கேற்ப மாறுபடலாம் என்பதையும், வலுவாக உணர்ந்து கொள்ள முடிகிறது.

இந்தப் பாடங்களைச் சரியாக கற்றுக் கொண்டால் தான், சர்வதேச நீதி கோரும் முயற்சிகளில் தமிழர் தரப்பு சரியானதொரு பாதையை வகுக்க முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாகாண சபைகளுக்கான தேர்தல்களை தாமதப்படுத்த அரசு...

2024-12-13 17:34:29
news-image

இலங்கையில் யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக...

2024-12-13 13:51:26
news-image

மனித உரிமைகளும் பொறுப்புக்களும்

2024-12-11 17:06:28
news-image

சிரியாவின் அசாத்தின் நிலவறைக்குள்...! - சித்திரவதை...

2024-12-11 13:22:24
news-image

சர்வதேச சமூகத்திடமிருந்து ஆதரவை பெறுதல்

2024-12-11 11:18:31
news-image

இனவாதத்தை ஒழிப்பது குறித்த அரசாங்கத்தின் கருத்துக்களும்...

2024-12-11 11:05:09
news-image

இலங்கையை அதிர்ச்சிக்குள்ளாகிய விமான விபத்து -...

2024-12-10 12:27:56
news-image

மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு குறுக்கே நிற்கும்...

2024-12-10 09:04:49
news-image

தமிழரசு கட்சி மட்டக்களப்பில் பெற்ற பெருவெற்றியும்...

2024-12-09 10:45:04
news-image

அசாத் எங்கே – மர்மத்தை தீர்த்துவைத்தது...

2024-12-09 09:48:21
news-image

ஐந்தாண்டுகளுக்கு ஆளுகை தொடரும் - பிரதியமைச்சர்...

2024-12-08 15:45:45
news-image

ரஷ்ய-உக்ரேன் போர் முனைக்கு வலிந்து தள்ளப்பட்டுள்ள...

2024-12-08 15:48:28