‘காணாமல்போன’ முஸ்லிம்களின் கதை

Published By: Digital Desk 5

24 Oct, 2022 | 12:15 PM
image

ஏ.எல்.நிப்றாஸ் 

யுத்த மேகம் சூழ்ந்திருந்த காலப்பகுதியில் பிரதானமாகவும், அதற்கு முன்பின்னான காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகவும்; பல நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கடத்தப்பட்டு, காணாமல் போனார்கள் அல்லது வலிந்து காணாமலாக்கப்பட்டார்கள். ஆனால், முஸ்லிம் சமூகத்திற்குள்ளும் சரி தேசிய, சர்வதேச மட்டத்திலும் சரி காணமல்போன முஸ்லிம்களின் விவகாரமே காணமல்போய் விட்டிருக்கின்றது. 

நிலைமாறுகால நீதிப் பொறிமுறையின் கீழ் இன்று மனித உரிமை மீறல்கள், காணாமல்போனோர் விவகாரம், பொறுப்புக்கூறல் எனப் பல விடயங்கள் பேசப்படுகின்றன. இதில் ஒவ்வொரு விடயத்திற்காகவும் சகோதர தமிழ் மக்கள் அரசியல் ரீதியாகவும் சிவில் சமூக ரீதியாகவும் தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கின்றனர். 

ஆனால், முஸ்லிம் சமூகத்தில் இந்த நிலை இல்லை. தமிழர்களிடம் இருந்து இதனையும் முஸ்லிம்கள் கற்றுக் கொண்ட வேண்டியுள்ளதையே இது காட்டுகின்றது. 

காணாமல்போன முஸ்லிம்களுக்காக தொடர்ச்சியாகவும் பரந்துபட்ட அளவிலும் முஸ்லிம்கள் ஒரு சமூகமாக தொடர்ச்சியாக குரல்கொடுக்கவில்லை. அதேநேரம், சமூக அக்கறையற்ற, சோம்பேறித்தனமான முஸ்லிம் தலைவர்கள் மற்றும் எம்.பி.க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் வழக்கம்போல இந்த விடயத்திலும் வாழாவிருப்பதையே காணமுடிகின்றது. 

ஏனைய சமூகத்தினரை விட தமிழ் மக்கள்தான் இந்த நாட்டில் அதிகம் காணாமல்போயுள்ளார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அந்த வகையில் 2 ஆயிரம் நாட்களுக்கு மேலாக அவர்களது குடும்பத்தினர் வடக்கிலும், கிழக்கிலும் ஐ.நா.வின் கொழும்பு அலுவலகத்திற்கு முன்பாகவும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

தமிழ் அரசியல்வாதிகளும் ஜெனிவா வரை இதனை முன்கொண்டு சென்றுள்ளதால், இவ்விடயம் இன்று சர்வதேச விவகாரமாகப் பார்க்கப்படுகின்றது. இதனால் அரசாங்கம் ஆணைக்குழுக்களை நிறுவவும் புதிய சட்டமூலத்தை கொண்டுவரவும் வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டுள்ளதை நாமறிவோம். 

இதேபோன்று தென்னிலங்கையில் கூட, கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலியகொட போன்ற தனிநபர்களின் குடும்பங்களும் இன்னும் போராடிக் கொண்டிருக்கின்றன என்பதை மறந்து விடக் கூடாது. ஆயினும், முஸ்லிம் சமூகமானது காணமல்போனவர்களின் விவகாரத்தை முறையாக உலக அரங்கில் ஆவணப்படுத்தவும் இல்லை. போராடவும் இல்லை. 

இந்தப் போக்கு - இந்த மௌனம், இலங்கையில் முஸ்லிம்கள் யாரும் கடத்தப்படவும் இல்லை. காணமலாக்கப்படவும் இல்லை என்பதான ஒரு போலித் தோற்றப்பாட்டை ஏற்படுத்தியிருக்கின்றது. ஏன், 2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த முஸ்லிம் பிள்ளைகளுக்குக் கூட இப்படியான சம்பவங்கள் நடந்ததே தெரியாமல் போகவே வாய்ப்பு அதிகமுள்ளது, 

முஸ்லிம்கள், ‘மரணம் என்பது நிச்சயிக்;கப்பட்டது’ என்பதையும் ‘அதனை இறைவனே தீர்மானிக்கின்றான்’ என்பதையும் நம்புகின்றவர்கள். ஆயினும், இந்தக் காரணத்திற்காக அதாவது காணமலாக்கப்பட்ட சம்பவங்கள் இறைவனின் எண்ணப்படியே நடந்தன என்ற காரணத்தை கூறிக் கொண்டு, அதற்காக போராடாமல் இருக்க முற்படுவதானது பொதுவான உலக ஒழுங்கிலிருந்து ஒரு சமூகம் விலகியிருக்க முற்படுவதாக அமையும் என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். 

காணாமல்போன முஸ்லிம்கள் விடயத்தில் தமிழ் ஆயுதக் குழுக்களை குற்றம்சாட்டுவதால் தமிழ் மக்கள் கோபித்துக் கொள்வார்கள் என்று நினைக்கத் தேவையில்லை. படைத்தரப்பினர் அல்லது அதிகாரிகள் செய்த தவறுகளுக்காக அரசாங்கத்தை விமர்சிக்கும் அது சிங்கள மக்களை முகம் சுழிக்க வைக்கும் என்றோ, அரசாங்கத்தை ஆத்திரப்படுத்தும் என்றோ மிகையாக கற்பனை செய்ய வேண்டியதும் இல்லை. 

ஏனென்றால் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் தமிழ் ஆயுத இயக்கங்களாலும் வேறு ஆயுதம் தரித்த தரப்பாலும் அங்குமிங்குமாக கடத்தப்பட்டார்கள் அல்லது இந்த இந்த பெயருடைய முஸ்லிம்கள் காணாமல்போனார்கள் என்று முறையிடுவதும் ஆவணப்படுத்துவதும் அது விடயத்தில் நீதியை நிலைநாட்டுவதற்காக குரல்கொடுப்பதும் உண்மையில் நமது கடமையாகும். அது உலக ஒழுங்கிங்கு விதிவிலக்கான விடயமுமல்ல. 

முஸ்லிம்கள் மீதான நேரடிப் படுகொலைகள், தாக்குதல்கள், பூர்வீக நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டமை போன்ற சம்பவங்களை இந்தக் கட்டுரை ஆராயவில்லை. அத்துடன் முஸ்லிம் பொலிஸார் அல்லது தமிழ் இயக்கங்களைச் சேர்ந்த முஸ்லிம் போராளிகள் பற்றியும் குறிப்பிடவில்லை. 

மாறாக, கடத்தப்பட்ட, காணாமல்போன, படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்ற ஆனால் உறுதிப்படுத்தப்படாத சாதாரண நபர்கள் பற்றியே பேசுகின்றது என்பதை நினைவிற் கொள்ளவும். 

அந்த வகையில், யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சாதாரண, அப்பாவி முஸ்லிம்கள் பல்வேறு காரணங்களுக்காக கடத்தப்பட்டார்கள். அதில் சிலர் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. அநேகமானவர்கள் காணமலாக்கப்பட்டார்கள். சிலருக்கு என்ன நடந்தது என்றே தெரியாது. 

முஸ்லிம்கள் காணாமல்போன மற்றும் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் பல சம்பவங்களுடன் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பிருப்பதாகவே முஸ்லிம் சமூகத்திற்குள் உள்ள கண்ணால்கண்ட சாட்சிகளும் ஆதாரங்களும் கூறுகின்றன. ஓரிரு சம்பவங்களுக்கு படையினர் அல்லது இந்திய அமைதிகாக்கும் படையினருக்கு தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகங்களும் அப்போது இருந்ததாக அறிய முடிகின்றது.  

முஸ்லிம்கள் பெரும்பாலும் கப்பம் பெறுவதற்காக கடத்தப்பட்டார்கள். சிலர் வாகனங்களோடு கொண்டு செல்லப்பட்டு காணமலாக்கப்பட்டார்கள். சிலர் வஞ்சம் தீர்ப்பதற்காக கடத்திச் செல்லப்பட்டார்கள், வழிமறித்து பலர் கடத்தப்பட்டனர். இளைஞர்கள், வியாபாரிகள், பணம் படைத்தவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், சாதாரண பொதுமகன்கள் எனப் பலர் இந்தப் பட்டியலில் அடங்குகின்றனர். 

காத்தான்குடி, ஏறாவூர், வாழைச்சேனை, அக்கரைப்பற்று, யாழ்ப்பாணம், எனப் பல இடங்களில் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, 1990ஆம் ஆண்டு புனித ஹஜ் கடமையை நிறைவேற்றி விட்டு வாகனத்தில் சென்று கொண்டிருந்த 100 இற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் புலிகளால் வழிமறிக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். 

இவர்கள் கொலை செய்யப்பட்டு அங்கேயே புதைக்கப்பட்டதாகவும் இன்று வரை விடயமறிந்தவர்கள் கூறுகின்றனர். ஆதரபூர்வ முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அவ்விடத்தை அடையாளப்படுத்தி தோண்டி, விசாரணைகளை நடத்துவதற்காக 2014ஆம் ஆண்டு சில முஸ்லிம் பிரதிநிதிகள் எடுத்த முயற்சிகளும் கடைசியில் குழப்பியடிக்கப்பட்டன அல்லது கைகூடவில்லை. 

இந்தப் பெரிய சம்பவத்தின் நிலைமையே இதுவென்றால் சிறிய காணாமல்போன சம்பவங்கள் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. சர்ஜூன் ஜமால்டீன் எழுதிய ‘சாட்சியமாகும் உயிர்கள்’ போன்ற சில புத்தகங்கள், ஆய்வறிக்கைகள், கவிதைகள், கதைகளுக்குள்; இவையெல்லாம் முடங்கிக் கிடக்கின்றன.

ஓரு தடவை முஸ்லிம் தலைவர் ஒருவர் ஐ.நா. பிரதிநிதியை சந்தித்தபோது காணமல்போன முஸ்லிம்கள் தொடர்பில் கோரிக்கைய முன்வைத்திருந்தார். இன்னுமொரு அரசியல்வாதி ஆவணமொன்றை கையளித்திருந்ததாக ஞாபகம். அதற்கப்பால் எந்த முஸ்லிம் தலைவரும் எம்.பி;யும் தொடர்ச்சியாக இது விடயத்திலோ முஸ்லிம்கள் மீதான ஏனைய மனித உரிமை மீறல்கள் தொடர்பிலோ நீதியை நிலைநாட்ட தொடர்ச்சியாக குரல்கொடு;த்த வரலாறு கிடையாது. 

கடந்த காலத்தில் இது தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் பல அமைக்கப்பட்டன. சுமார் 3000 விண்ணப்பங்கள் முஸ்லிம்கள் தரப்பில் இருந்து கிடைக்கப் பெற்றதாக சொல்லப்பட்டது. காத்தான்குடி போன்ற பல பிரதேசங்களில் இருந்து நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் சாட்சியங்களை அளித்தனர். ஆனால், நீதிநிலைநாட்டப்படவில்லை. எல்லாம் அத்தோடு சரி! இப்போது அமைக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவிலும் அதுதான் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

உண்மையில், தமிழ் சமூகம் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் எல்லா அடிப்படைகளிலும் பல வருடங்களாக தொடர்ச்சியாக போராடி வருகின்றது. முஸ்லிம் சமூகம் இது விடயத்தில் இன்னும் ஆரம்பப்புள்ளியிலேயே நிற்பதாகச் சொல்லலாம். இச்சம்பவங்களை முறையான பரந்துபட்ட ஆவணமாக உலகின்கண்ணுக்கு முன்வைக்கவும் இல்லை. தமிழ் சமூகத்தைப் போல இடைவிடாது போராடவும் இல்லை. 

இவ்வளவு முயற்சிகளை எடுக்கும் தமிழ் மக்களுக்கே இன்னும் நீதி கிடைக்காத நிலையில், சும்மா இருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் பாதிக்கப்பட்ட குடும்பங்களை உள்ளடக்கிய முஸ்லிம் சமூகத்திற்கும் தங்கத் தட்டில் வைத்து நீதி வழங்கப்படும் என கனவில் கூட நினைக்கத் தேவையில்லை. 

ஆக, முஸ்லிம் சமூகம் எல்லா விடயங்களிலும் ஒரு ஜடம்போல இருக்காமல் உயிர்த்தெழ வேண்டியுள்ளது. காணாமல்போனவர்கள், கடத்தப்பட்டவர்கள், கொலையுண்டவர்கள் உள்ளடங்கலாக முஸ்லிம்கள் மீதான் ஒவ்வொரு மனித உரிமை மீறலும் ஆவணப்படுத்தப்படுவதுடன் அரசியல்வாதிகளும் மக்களும் அதற்காக தொடர்ந்து முன்னிற்க வேண்டும். 

நீதியை நிலைநாட்டுவதற்காக போராடுவதை விடுத்து, வெறுமனே காணாமல்போனவர்களின் பழைய புகைப்படங்களைப் பார்த்து அழுது கொண்டிருப்பதாலும், பேரப் பிள்ளைகளுக்கு கதை சொல்லிக் கொண்டிருப்பதாலும் உருப்படியாக எதுவும் நடந்துவிடப்; போவதில்லை. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41