(நெவில் அன்தனி)
குழு 2: ஸிம்பாப்வே
ஐக்கிய அரபு இராச்சியத்திலும் ஓமானிலும் கடந்த வருடம் நடைபெற்ற 7ஆவது அத்தியாயத்தை தவறவிட்டிருந்த ஸிம்பாப்வே 6 வருடங்களின் பின்னர் இந்த வருடம் மீண்டும் ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட்டில் விளையாடுகிறது.
முன்னாள் அணித் தலைவர் டேவிட் ஹூட்டன் பயிற்சி அளிக்கும் ஸிம்பாப்வே அணியில் தற்போது சகலதுறைகளிலும் பிரகாசித்துவரும் சிக்கந்தர் ராஸா முக்கிய வீரராக இடம்பெறுகிறார்.
அவர்கள் இருவரினதும் வழிகாட்டலில் இந்த வருட ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுப்பர் 12 சுற்றில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்த ஸிம்பாப்வே காத்திருக்கிறது.
ஸிம்பாப்வே தனது முதலாவது சுப்பர் 12 சுற்று போட்டியில் தென் ஆபிரிக்காவை எதிர்த்தாடவுள்ளது. அப் போட்டி ஹோபாரட் பெலேரிவ் ஓவல் விளையாட்டரங்கில் இன்று (24) பிற்பகல் நடைபெறவுள்ளது.
2022 ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண பிரபஞ்ச தகதிகாண் பி குழுவுக்கான போட்டிகள் தனது சொந்த நாட்டில் நடைபெற்றதை அனுகூலமாக்கிக்கொண்டு 5 தொடர்ச்சியான வெற்றிகளை ஈட்டி இந்த வருட உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்கு ஸிம்பாப்வே தகுதிபெற்றது.
தகுதிகாண் சுற்றில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெரும்பாலான சந்தர்ப்பங்களில் 200 ஓட்டங்களை அண்மித்த ஸிம்பாப்வே, துடுப்பாட்டத்தில் பிரகாசிக்காதபோது பந்துவீச்சாளர்கள் திறமையாக செயற்பட்டு அணியின் வெற்றிகளை உறுதிசெய்தனர்.
நெதர்லாந்துக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஸிம்பாப்வே 135 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
ஆனால், பந்துவீச்சாளர்கள் அற்புதமாக செயற்பட்டு நெதர்லாந்தை 95 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தியதன் மூலம் ஸிம்பாப்வே அபார வெற்றியை ஈட்டியது.
ஹோபார்ட் பெலேரிவ் ஓவல் விளையாட்டரங்கில் ஒரு வாரத்திற்கு முன்னர் நடைபெற்ற ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண முதல் சுற்றில் ஈட்டப்பட்ட மாறுபாடான பெறுபேறுகளுடன் சுப்பர் 12 சுற்றில் ஸிம்பாப்வே நுழைந்தது.
அயர்லாந்துக்கு எதிரான ஆரம்பப் போட்டியில் 31 ஓட்டங்களால் வெற்றிபெற்ற ஸிம்பாப்வே, 2ஆவது போட்டியில் அதே ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளிடம் தோல்வி அடைந்தது.
இதனை அடுத்து தீர்மானம் மிக்க கடைசி முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்கொட்லாந்தை 5 விக்கெட்களால் இலகுவாக வெற்றிகொண்டு சுப்பர் 12 சுற்று வாய்ப்பை உறுதிசெய்துகொண்டது.
சுப்பர் 12 சுற்றில் குழு 2இல் முன்னாள் சம்பியன்களான இந்தியா மற்றும் பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா, பங்களாதேஷ், நெதர்லாந்து ஆகிய அணிகளுடன் ஸிம்பாப்வே இடம்பெறுகிறது.
மேலும், இருவகை உலகக் கிண்ண வரலாற்றில் தனது அறிமுகப் போட்டிகளில் அவுஸ்திரேலியாவை வெற்றிகொண்ட ஸிம்பாப்வே இம்முறை சுப்பர் 12 சுற்றில் 3 வெற்றிகளுக்கு குறிவைத்து விளையாடவுள்ளது.
இவ் வருட பெறுபேறுகள்
இந்த வருடம் முற்பகுதியில் சக ஆபிரிக்க நாடான நமீபியாவிடம் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் 2 - 3 என்ற ஆட்டங்கள் அடிப்படையில் தோல்வி அடைந்த ஸிம்பாப்வே அதன் பின்னர் ஆப்கானிஸ்தானிடம் 0 - 3 என தோல்வி அடைந்தது.
எனினும் கடைசியாக விளையாடிய 8 போட்டிகளில் பங்களாதேஷுக்கு எதிரான 2 வெற்றிகள் உட்பட 7 போட்டிகளில் ஸிம்பாப்வே வெற்றியீட்டி தனது திறமையை வெளிப்படுத்தியது.
வரலாறு
ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் முதலாவது அத்தியாயத்தில் 2007ஆம் ஆண்டு பங்குபற்றிய ஸிம்பாப்வே, முற்றிலும் எதிர்பாராத வெற்றியை ஈட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அப்போதைய 50 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் சம்பியனும் நட்சத்திர வீரர்களைக் கொண்டதுமான அவுஸ்திரேலியாவை நியூலண்ட்ஸ் விளையாட்டரங்கில் தனது அறிமுகப் போட்டியில் சந்தித்த ஸிம்பாப்வே 5 விக்கெட்களால் வெற்றியீட்டி வரலாறு படைத்தது.
அப் போட்டியில் 3 விக்கெட்களை வீழ்த்திய எல்டன் சிக்கும்புராவும் ஆட்டமிழக்காமல் 60 ஓட்டங்களைக் குவித்த ப்றெண்டன் டெய்லரும் ஸிம்பாப்வேயின் வெற்றியில் பிரதான பங்காற்றியிருந்தனர்.
இன்னுமொரு விசேடம் என்னவென்றால் 50 ஓவர் உலகக் கிண்ணத்திலும் 20 ஓவர் உலகக் கிண்ணத்திலும் அவுஸ்திரேலியாவை தனது அறிமுகப் போட்டிகளில் ஸிம்பாப்வே வீழ்த்தியதாகும்.
இங்கிலாந்தில் 39 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற 3ஆவது புரூடென்ஷல் உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் தொடரில் தனது அறிமுகப் போட்டியில் அவுஸ்திலேயாவை 13 ஓட்டங்களால் ஸிம்பாப்வே வெற்றிகொண்டிருந்தது.
இந்தியாவில் 6 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றிய ஸிம்பாப்வே, முதல் சுற்றில் ஹொங் கொங், ஸ்கொட்லாந்து அணிகளை வெற்றிகொண்டது. ஆனால், ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்ததால் அதன் சுப்பர் 12 சுற்று வாய்ப்பு அற்றுப்போனது.
அதன் பின்னர் இந்த வருடமே இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஸிம்பாப்வே விளையாட தகுதிபெற்றது. இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 5ஆவது தடவையாக ஸிம்பாப்வே விளையாடுகிறது.
சிறந்த வீரர்கள்
உலகக் கிண்ண பிரபஞ்ச தகுதிகாண் சுற்றில் தொடர்நாயகனாக தெரிவான சிக்கந்தர் ராஸா, உபாதையிலிருந்து ஆரோக்கியம் பெற்றுள்ள அணித் தலைவர் க்ரெய்க ஏர்வின், சோன் வில்லியம்ஸ், வெஸ்லி மெதேவியர், ரெயான் பேர்ல் ஆகியோர் துடுப்பாடத்திலும் லூக் ஜொங்வே, சோன் வில்லியம்ஸ், வெலிங்டன் மஸகட்ஸா ப்லெசிங் முசாரபனி ஆகியோர் பந்துவீச்சிலும் முக்கிய வீரர்களாக அணியில் இடம்பெறுகின்றனர்.
சோன் வில்யம்ஸ் (1294 ஓட்டங்கள், 9 அரைச் சதங்கள், 40 விக்கெட்கள்), சிக்கந்தர் ராஸா (1176 ஓட்டங்கள், 6 அரைச் சதங்கள், 33 விக்கெட்கள்), (1087 ஓட்டங்கள், 6 அரைச் சதங்கள்), வெஸ்லி மெதேவியர் (844 ஓட்டங்கள், 7 அரைச் சதங்கள்), ரெயான் பியூரி (755 ஓட்டங்கள், 2 அரைச் சதங்கள்), ரெஜிஸ் சக்கப்வா (654 ஓட்டங்கள்), டெண்டாய் சட்டாரா (51 விக்கெட்கள்), லூக் ஜொங்வே (48 விக்கெட்கள்), ப்ளெசிங் முஸராபனி (36 விக்கெட்கள்) ஆகியோர் சுப்பர் 12 சுற்றில் பிரகாசிக்க காத்திருக்கின்றனர்.
அவர்களுடன் ப்றெட் இவான்ஸ், க்ளைவ் மெடண்டே, டோனி முனியொங்கா, ரிச்சர்ட் எங்கரவா, மில்டன் ஷும்பா ஆகியோரும் ஸிம்பாப்வே குழாத்தில் இடம்பெறுகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM