காலநிலை மாற்றத்தால் இலங்கையின் இருப்பு கேள்விக்குறியாகின்றதா ?

Published By: Digital Desk 5

24 Oct, 2022 | 11:47 AM
image

ஆர்.ராம்

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமானதான தூதுவர் எரிக்சொல்ஹெய்முக்கு ‘ஜனாதிபதியின் காலநிலை ஆலோசகர்’ என்ற புதிய பொறுப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

புதிய பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னர் அவர் இந்தியாவின் ஐ.ஏ.என்.எஸ். இணையத்தளத்திற்கு வழங்கியுள்ள செவ்வியின் போது, “காலநிலை மாற்றம் காரணமாக இலங்கை மோசமாக பாதிக்கப்படும் ஆபத்துள்ளது. வடக்கின் உயர் வலயங்கள் மேலும் வறண்டதாகவும் ஈரமான பகுதிகள் மேலும் ஈரப்பதமானதாகவும் காணப்படலாம். மண்சரிவு உட்பட மோசமான காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் எதிர்காலத்தில் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கலாம்” என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

அத்துடன், “இலங்கையின் இயற்கையை பராமரிக்க முடியும். மீள்சுழற்சி வலுச்சக்தி மின்சார உற்பத்தி மரங்களை வளர்த்தல் பசுமை விவசாயம் இயற்கை சுற்றுலா வேலைவாய்ப்புகளிற்கான பெருமளவு சந்தர்ப்பங்களை வழங்குகின்றன” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், “செழிப்புமிக்க புலமைப் பாரம்பரியத்தை கொண்டுள்ள இலங்கை காலநிலை மாற்றத்திற்கான தளமாக காணப்படமுடியும். காலநிலை மாற்;றத்தை கையாள்வது பசுமையான வேலைகளை உருவாக்குவதற்கும் அனைத்து இலங்கையர்களையும் ஒழுக்கமான நடுத்தர வாழ்க்கைக்கு கொண்டுவருவதற்கான வாய்ப்பை வழங்குகின்றது” என்றும் ஜனாதிபதியின் காலநிலை ஆலோசகர் எரிக்சொல்ஹெய்ம் சுட்டிக்காட்டியுள்ளார். 

காலநிலை மாற்றத்தின் தெளிவான பொதுப்போக்கானது தற்போது உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நெருக்கடிகளில் ஒன்றாக மாறியிருக்கின்றது. இவ்வாறான நிலையில், காலநிலைமாற்றம் குறித்த இலங்கையின் நிலைமைகள் எவ்வாறு உள்ளன என்பது பிரதான விடயமாகின்றது. 

இலங்கையைப் பொறுத்தவரையில், பூகோள வெப்பமாதலுக்கு இலங்கை மிகக் குறைந்த பங்களிப்பையே மேற்கொள்கின்றது. என்றாலும், காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் அதிக தாக்கத்துக்கு முகங்கொடுக்கும் நாடாக இலங்கை உள்ளது. 

இந்து சமுத்திரத்தில் ஒரு அயன மண்டல தீவாக விளங்குவதால், உலகளாவிய காலநிலை அபாயக்குறியீட்டின் மூலம் தீவிர வானிலை நிகழ்வுகளின் அபாயத்தில் உள்ள முதல் பத்து நாடுகளில் இலங்கை 7ஆவது இடத்தில் தொடர்ந்தும் காணப்படுகின்றது. இதனால், காலநிலை மாற்றங்களினால் ஏற்படும் ஆபத்துகளினால் அதிகளவில் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில்  இலங்கையும் உள்வாங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் துறைகளான சுற்றுலா, மீன்பிடி, தேயிலைச் செய்கை, விவசாயம் ஆகியன காலநிலை மாற்றங்களிற்கு அதிகளவான தூண்டற்பேற்றைக் கொண்டுள்ளதோடு, பருவகால பிறழ்வுகள், மழைவீழ்ச்சி வேறுபாடுகளினாலும் பாதிக்கப்படும் நிலைமைகள் உள்ளன. 

2016,2017 ஆகிய ஆண்டுகளில் நீடித்த வறட்சியினாலும், பரவலான வெள்ளத்தினாலும் இலங்கையின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. பருவகால மழைவீழ்ச்சிப் போக்கு, சூழலியல் வலயங்களின் மாற்றம் என்பவற்றில் நீண்ட கால மாற்றங்கள் ஏற்படுவதாக காலநிலை மாற்ற எதிர்வுகூறல்கள் தெரிவிக்கின்றன

இந்த நிலைமையானது, தற்போது பொருளாதார ரீதியாக நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ள நாட்டை மேலும், அச்சுறுத்துவதாகவே காணப்படுகின்றது. ஆகவே, பொருளாதார மீட்சி பற்றிய விடயத்தில் இலங்கை கரிசனை கொண்டுள்ள இலங்கை காலநிலை மாற்றம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமாகின்றது. 

இதனடிப்படையில் தான், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது காலநிலை ஆலோசகராக எரிக்சொல்ஹெய்மை நியமித்துள்ளார். இலங்கையில் சமாதத்தினை கட்டியெழுப்புவதில் தோல்வி கண்ட அவரால், இலங்கையின் காலநிலை மாற்றத்தினை முறையாக கையாண்டு வெற்றியடைவாரா என்பது விவாதப்பொருளாகவே நீடிக்கப்போகின்றது. 

இந்நிலையில், “உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சியுடன் தான் காலநிலையில் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தது.  அண்மைக்காலமாக இதர செயற்பாடுகளை விடவும், மனித செயற்பாடுகள் காரணமாகவே காலநிலையில் அதிகமான மாற்றங்கள் ஏற்படுகின்றன” என்று சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க குறிப்பிடுகின்றார். 

“கரியமில வாயுக்களான காபன்டைஒக்சைட், மிதேன், ஓசோன், நைற்றைட் ஒக்சைட் உள்ளிட்ட வாயுக்கள் வெளியேறுதால் காலநிலை மாற்றங்கள் இடம்பெறுகின்றன” என்று கூறியுள்ள அவர், “சக்தி (மின்சாரம் உற்பத்தி), போக்குவரத்து, கைத்தோழில், கழிவுகள் மற்றும் வனங்கள் ஆகிய துறைகளை உள்ளடக்கிய தேசிய செயற்றிட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன” என்றும் குறிப்பிட்டுள்ளார். 

“2015இல் மேற்கொள்ளப்பட்ட பாரிஸ் உடன்படிக்கையின் ஒரு பங்காளரான இலங்கை தேசிய ரீதியில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புக்களை

(யேவழையெடடல னுநவநசஅiநென ஊழவெசiடிரவழைளெ- Nனுஊள) காலநிலை மாற்றங்களிற்கான ஐக்கிய நாடுகளின் சமவாயக் கட்டமைப்பிற்கு (ருNகுஊஊஊ) சமர்ப்பித்துள்ளதோடு தாக்கத்தை தவிர்க்கும் நடவடிக்கை, இசைவாக்கம், இழப்பு மற்றும் சேதம், அமுலாக்க அர்த்தம் ஆகிய படிமுறைகளின் கீழாக படிப்படியாக நடைமுறைப்படுத்தி வருகின்றது” என்றும் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

அதேநேரம், “2015ஆம் ஆண்டு பாரிஸ் உடன்படிக்கையில் பரிந்துரைக்கப்பட்டதற்கு அமைவாக காபன் வெளியேற்றத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படினும் இலங்கையின் சராசரி வருடாந்த வெப்பநிலையானது 2050ஆம் ஆண்டளவில் ஒரு பாகை செல்சியஸிலிருந்து 1.5 பாகை செல்சியஸ் வரையில் அதிகரிக்கக்கூடும் என பகுப்பாய்வுகளின் ஊடாக தீர்மானிக்க முடிந்துள்ளது” என்று காலநிலை மாற்றம் தொடர்பான ஆய்வாளரும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறை பேராசிரியர் எரந்ததி லொகுபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

அதனடிபடையில், “இலங்கையானது காலநிலை மாற்றம் சம்பந்தமாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாவிடின் சராசரி வெப்பநிலை 2 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கும் சாத்தியமுள்ளது” என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், “இலங்கை தேசிய ரீதியில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்பு பரிந்துரைகள் மேம்பட்டவையாக இருக்கின்றன” என்றும் கூறியுள்ளார். 

இருப்பினும், “பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் தான் பாரிய சவால்கள் காணப்படுகின்றன. ஆரம்பத்திலிருந்தே பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு பாரியளவிலான நிதித்தேவை காணப்பட்ட நிலையில் நிதிமூலங்களைப் பெறுவதில் சவால்கள் நீடித்திருந்தன. இந்நிலையில் தற்போது, பொருளாதார நெருக்கடிகளும் ஏற்பட்டுள்ள நிலையில் அந்நிலைமை மேலும் சாவாலுக்குள்ளாகியுள்ளது” என்று குறிப்பிடும் பேராசிரியர் எரந்ததி லொகுபிட்டிய, கொள்கை வகுப்பாளர்கள் முதல் சாதாரண பொதுமக்கள் வரையில் அனைத்து தரப்பினரும் காலநிலை மாற்றத்தின் பங்காளர்களாக உள்ளதோடு, பொறுப்புணர்ந்து செயலாற்றக் கடமைப்பட்டவர்கள்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதியின் காலநிலை ஆலோசகர் எரிக்சொல்ஹெய்ம் இலங்கையின் வடக்கின் உயர் வலயங்கள் மேலும் வறண்டதாக காணப்படும் என்று கூறியுள்ளமை தொடர்பில் பிரத்தியேகமாக நோக்க வேண்டியது அவசியமாகின்றது. 

“2020ஆம் ஆண்டு சர்வதேச காலநிலைமாற்ற பணித்திட்ட குழுவின் அறிக்கையில் காலநிலை மாற்றத்தினால் மோசமாக பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்வாங்கப்பட்டுள்ளதோடு தெற்காசியாவில் காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலிலும் இலங்கை முதன்மை வகிக்கின்றது” என்று யாழ்.பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி.நாகமுத்து பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், “காலநிலை மாற்றத்தின் காரணமாக, இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும், வானிலைக்குழப்பங்கள் காணப்படுகின்றது என்று சுட்டிக்காட்டும் அவர் மத்திய மலைநாடு, மற்றும் தென்மேற்குப் பகுதிகளில் அதிகளவான நிலச்சரிவு அனர்த்தங்களை ஏற்படுத்துவதோடு, ஆறுகள் பெருக்கெடுப்பதற்கும் வகைசெய்கின்றது” என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை, “நாட்டின் வடக்கு, வடமேற்கு பகுதிகளில் குறிப்பிட்டதொரு காலத்தில் அதிகளவான வெப்பநிலை பதிவாகின்றது. இது சமநிலையைக் குலைத்துள்ளது. குறிப்பாக, வடக்கில் மாரி,கோடை காலங்களை வரையறுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதிகயுச்ச வறட்சியும், அதற்கு நிகராக வெள்ள அனர்த்தமும் காணப்படுகின்றது. இதனால் முறையான முகாமை செய்யமுடியாத நிலைமை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவிக்கின்றார். 

“வடக்கில் பருவப்பெயர்ச்சிக்காலங்கள் மாற்றம் கண்டுள்ளன. உதாரணமாக, வடகீழ் பருவப்பெயர்ச்சிக் காலம் நவம்பர் மாதத்திலிருந்து முன்நகர்ந்துள்ளது. இதனால் விவாசய நடவடிக்கைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. அதேநேரம் வடமாகாணத்தினைச் சூழ கடற்பரப்பு அதிகமாக உள்ளதால், கடல்மட்டம் ஒரு அடி அதிகரிக்குமானால், மன்னார் போன்ற தீவுகள் வெள்ளத்தில் மூழ்கும் அச்சமான நிலைமைகள் உருவாகியுள்ளன” என்றும் விரிவுரையாளர் கலாநிதி.நாகமுத்து பிரதீபராஜா சுட்டிக்காட்டியுள்ளார். 

இவ்வாறிருக்கையில், இலங்கையில் தனிநபர் பச்சைவீட்டு வாயு வெளியேற்றம் 2010இல் 1.02 தொன்னாகவும் 2019 இல் உலகளாவிய ஒட்டு மொத்த பங்களிப்பில் 0.03 சதவீதமாகவும் காணப்பட்டது. 

குறைந்த காபன் அடித்தடத்தையும், காலநிலை மாற்றங்களினால் அதிகளவில் பாதிக்கப்படுந்தன்மை காணப்பட்டபோதும் 2030இல் வனங்களின் அளவில் 32மூ ஐ அதிகரிக்கவும், சக்தி (மின் உற்பத்தி), போக்குவரத்து, கைத்தொழில், கழிவு முகாமைத்துவம், காடுகள், விவசாயம் ஆகியவற்றிலிருந்து 2021 - 2050 காலப்பகுதியில் பச்சைவீட்டு வாயு வெளியேற்றத்தை 14.5சதவீதம் குறைக்கவும் இலங்கை உறுதி பூண்டுள்ளது.

இந்த இலட்சிய நோக்கினை அடைவதற்கு இலங்கையானது, 2030இல் மின் உற்பத்தியில் 70சதவீதம் புதுப்பிக்கத்தக்க சக்தியைப் பெறுதல், 2050இல் காபன் நடுநிலையை அடைதல், நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களின் கொள்ளளவு அதிகரிக்காது விடல் ஆகியவற்றை முன்னெடுப்பதற்கு தயாராகி வருகிறது.

அத்துடன், 2030இல் நைதரசன் கழிவுகளை அரைவாசியாகக் குறைக்கும் நோக்கோடு “நிலையான நைதரசன் முகாமைத்துவ கொழும்பு பிரகடனத்தை” பின்பற்றுதல், விவசாய இரசாயனங்களையும், இரசாயன உரங்களையும் தடை செய்தல், சேதன உரங்களையும், பண்ணைகளையும் ஊக்குவித்தல், ஒரு முறை பாவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களைத் தடை செய்தல், ஈ அசையுந்தன்மையை ஊக்குவித்தல்;, ஆகிய செயற்பாடுகள் ஏலவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் 2060 அளவில் காபன் நடுநிலையை அடைவதற்கு  இலங்கை எதிர்பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூச்சுவிட கிடைத்திருக்கும் சந்தர்ப்பம்

2023-03-24 15:06:51
news-image

வலிந்து காணாமலாக்கப்படல்கள் பற்றிய உண்மைகளும் பாதிக்கப்பட்ட...

2023-03-24 09:15:37
news-image

கடன் கிடைத்த திருப்தி எவ்வளவு காலத்திற்கு...

2023-03-22 16:47:59
news-image

புவிசார் அரசியல் எனது அரசாங்கத்தின் நோக்கங்களிற்கு...

2023-03-22 12:11:32
news-image

யாழ்.எம்.பி.யோகேஸ்வரன் நினைவும் ஐ.தேக.தேர்தல் வன்முறையும்

2023-03-21 14:46:01
news-image

அனைத்து அதிகாரமும் கொண்ட இலங்கை ஜனாதிபதி...

2023-03-20 16:58:31
news-image

மாமனாரும் மருமகனும் சர்வகட்சி மாநாடுகளும்

2023-03-19 17:53:33
news-image

அரசாங்கத்தின் அமிலப்பரீட்சை

2023-03-18 16:50:34
news-image

மும்முனை முரண்பாட்டால் கேள்விக்குள்ளாகும் ஜனநாயகம்

2023-03-18 16:49:20
news-image

வியட்நாம் ‘மை லாய்’ படுகொலையின் மாறாத...

2023-03-18 16:48:24
news-image

சரிவை நோக்கும் அமெரிக்க வல்லாண்மை?

2023-03-18 16:38:18
news-image

இலங்கை ரூபாயின் எதிர்காலம்

2023-03-19 12:36:52