'சர்தார்' திரை விமர்சனம்

Published By: Nanthini

23 Oct, 2022 | 02:08 PM
image

தயாரிப்பு: பிரின்ஸ் பிக்சர்ஸ்

நடிகர்கள்: கார்த்தி, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், முனீஸ் காந்த், ஷங்கி பாண்டே மற்றும் பலர்

இயக்கம்: பி.எஸ். மித்ரன்

மதிப்பீடு: 2.5 / 5

'இரும்புத்திரை', 'ஹீரோ' என இரண்டு படங்களை இயக்கிய இயக்குநர் பி.எஸ். மித்ரனும், 'சிறுத்தை', 'தீரன் அதிகாரம் ஒன்று' ஆகிய இரண்டு படங்களில் காவல்துறை அதிகாரியாக நடித்த கார்த்தியும் இணைந்து உருவாக்கி இருக்கும் திரைப்படம் 'சர்தார்'. 

இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரி, உளவாளி என இரண்டு வேடத்தில் கார்த்தி நடித்திருக்கிறார். இந்நிலையில் 'சர்தார்' ரசிகர்களை கவர்ந்தா, இல்லையா என்பதை இனி காண்போம்.

மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டால், அது தண்ணீருக்காக தான் ஏற்படும் என்ற நிலையில், வணிகத்துக்காக நீர் வளம் சுரண்டப்படும் ஜீவாதார விடயத்தை இன்றைய மக்களுக்கும் நாளைய சமூகத்துக்கும் உணர வைக்கும் வகையில் நல்லதொரு கருத்தை சொல்ல முயன்றதற்காக முதலில் இயக்குநருக்கு சபாஷ் போடலாம்.

தமிழ் திரையுலகில் தேசபக்தி, தேசப்பற்று என்ற பெயரில் இராணுவ வீரர்கள், இராணுவ அதிகாரிகளின் வாழ்க்கையை திரைப்படமாக பார்த்திருக்கிறோம். 

ஆனால், முதன்முறையாக உளவாளிகளுக்கும் தேசப்பற்று, தேசபக்தி இருக்கிறது என்பதையும், அவர்களது வாழ்வியலையும் பாமர மக்கள் முன் படைப்பாக சமர்ப்பித்ததற்கும் இயக்குநரை பாராட்டலாம்.

கார்த்தி, விஜய் பிரகாஷ் என்ற காவல்துறை அதிகாரியாகவும், அதிலும் அவருடைய நடவடிக்கை மூலம் நேர் நிலையான விமர்சனங்கள் சமூக வலைத்தள பக்கத்தில் உருவாக வேண்டும் என்ற கோணத்தில் செயல்படும் அவருடைய பாணி ரசிக்க வைக்கிறது. 

ஆனால், அதேபோன்றதொரு உத்தியை தொடர்ச்சியாக பின்பற்றும்போது, தண்ணீர் உற்பத்தி செய்து, போத்தல்களில் அடைத்து விற்பனை செய்யும் நிறுவனங்களின் மோசடிகளை எதிர்த்து, போராட்டத்தில் ஈடுபடும் லைலா எதிர்பாராமல் மரணமடைகிறார். 

அது தொடர்பான விசாரணையை மேற்கொள்ளும்போது விஜய் பிரகாஷுக்கு பல உண்மைகள் புலப்படுகிறது. அது என்ன? என்பதும், மற்றொரு புள்ளியில், சிறையில் கைதிகள் கலவரம் செய்கிறார்கள். அந்த கலவரத்தை அடக்க சிறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கைதியாக அடைக்கப்பட்டிருக்கும் 'சர்தார்' கார்த்தி, கைதிகளின் கலவரத்தை தனக்கே உரிய பாணியில் அடக்குகிறார். அவர் யார்? என்ற வியப்பும் இணைந்துகொள்ள, முதல் பாதி சுவாரஸ்யம் குறைவாகவும், இறுதியில் விறுவிறுப்புடனும் நிறைவடைகிறது.

இரண்டாம் பாதியில் உளவாளியான கார்த்தி கூத்துக்கட்டும் கலைஞராக இருப்பதுடன், காலப்போக்கில் இந்திய உளவுத் துறையினரால் உளவாளியாக மாற்றப்பட்டு, பாகிஸ்தானுக்கு அனுப்பப்படுகிறார். 

தன்னுடைய உளவுப் பணியை திறம்பட மேற்கொண்டு நாடு திரும்பும் அவனை அரசியல்வாதிகள் 'தேசத் துரோகி' என முத்திரை குத்தி சமூகத்திலிருந்து புறக்கணிக்க தூண்டுகின்றனர். 

ஆனால், அவர் தப்பித்து வேறொரு நாட்டின் சிறையில் கைதியாக அடைப்பட்டிருக்கிறார். இந்நிலையில் அவர் அங்கிருந்து வெளியேற வேண்டிய சூழல் உருவாகிறது. அது என்ன? என்பதும்... சர்தாரின் மகன் தான் விஜய் பிரகாஷ் என்பதற்கான சுவாரஸ்யமான திருப்பமும், சர்தார் ஏன் 32 ஆண்டுகள் சிறையில் இருக்கிறார் என்பதற்கான காரணத்தையும் விறுவிறுப்பாக விளக்குவது தான் படத்தின் மீதமுள்ள திரைக்கதை.

கார்த்தி இரண்டு வேடங்களில் அற்புதமாகவும், நேர்த்தியாகவும் நடித்திருக்கிறார். இரண்டு கதாபாத்திரங்களுக்கான உடல் மொழி, உச்சரிப்பு, தோற்றப் பொலிவு என ஒவ்வொரு விடயத்திலும் கவனம் செலுத்தி, தன்னை செதுக்கிக்கொண்டு அற்புதமான உழைப்பை வழங்கியிருக்கிறார். அதனால் படம் முடிவடைந்த பிறகும் வந்தியதேவனை கடந்து 'சர்தார்' மனதில் பதிகிறார்.

நாயகிகளான ரெஜிஷா விஜயன், ராஷி கண்ணா வழக்கமான சினிமாத்தனங்களுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். 

முனீஸ் காந்த், ரித்விக், ஷங்கி பாண்டே அவர்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரத்தை நியாயப்படுத்துகிறார்கள். லைலா சிறிய இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றினாலும், அவரது கதாபாத்திரம் 'வேலைக்காரன்' படத்தில் சினேகா ஏற்ற கதாபாத்திரத்தை சில கோணங்களில் நினைவூட்டுகிறது.

ஜோர்ஜ் சி. வில்லியம்ஸின் ஒளிப்பதிவும், பொன். பார்த்திபன், பி.எஸ். மித்ரன் உள்ளிட்ட ஐந்து படைப்பாளிகளின் கூட்டணியில் உருவான வசனங்களும், சர்தார் கதாபாத்திரத்துக்காக வடிவமைக்கப்பட்ட சண்டைக் காட்சிகளும் படத்தின் பிரதான வலிமை. 

'இசை அசுரன்' ஜீ.வி. பிரகாஷ் குமாரின் பின்னணி இசை, முதல் பாதியில் கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள்,  பார்வையாளர்களின் செவிகளுக்கு சென்றடையாமல் பார்த்துக்கொள்கிறது.

சர்தார் - தண்ணீர் அரசியலை எச்சரிக்கும் உளவாளி விஞ்ஞானி.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35
news-image

சுந்தர் சி யின் 'அரண்மனை 4'...

2024-04-15 17:04:05
news-image

'பென்ஸ்'| சவாரி செய்யும் ராகவா லோரன்ஸ்

2024-04-15 17:01:37
news-image

இயக்குநர் முத்தையாவின் ‘சுள்ளான் சேது’ ஃபர்ஸ்ட்...

2024-04-15 16:44:03
news-image

ரசிகர்களையும் தொண்டர்களையும் விசில் போட சொல்லும்...

2024-04-15 16:43:48
news-image

ராகவா லோரன்ஸ் நடிக்கும் 'ஹண்டர்'

2024-04-15 16:44:20
news-image

ஆர் ஜே விஜய் நடிக்கும் 'வைஃப்'...

2024-04-15 16:29:01
news-image

மக்கள் செல்வன்: விஜய் சேதுபதி -...

2024-04-15 03:14:19
news-image

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின்...

2024-04-12 01:09:32
news-image

அமீரின் தேர்தல் கால முழக்கமாக ஒலிக்கும்...

2024-04-11 21:33:36