யாழ்.போதனா வைத்தியசாலை தீபாவளி படுகொலைகள் - 35 ஆவது ஆண்டு நினைவு

Published By: Vishnu

23 Oct, 2022 | 01:55 PM
image

ம.ரூபன்

1974 ஜனவரி தமிழாராய்ச்சி மாநாடு பொலிசாரின் துப்பாக்கிச்சூடு ,1977 ஆகஸ்ட் 15 யாழ்.நகரில் பொலிசாரின் தீ வைப்பு, 1981 மே- ஜூன் ஐக்கிய தேசியக் கட்சி குண்டர்களால் நூலகம் எரிப்பு, 1983 க்கு பின் நகரில் இலங்கை படை தாக்குதல்கள் போன்றவற்றில் இருந்து மக்கள் பாதுகாப்பு தேடி யாழ்.வைத்தியசாலைக்குள் ஓடி ஒளிந்தபோது எவருமே உட்புகுந்து தாக்கியதில்லை.

1985 மார்ச் 30 கோட்டையில் இருந்து இலங்கை படையினர் ஏவிய எறிகணை யாழ் மருத்துவமனைக்குள் விழுந்து வெடித்ததில் 9 நோயாளர்கள் பலி, பலர் காயமடைந்ததும் வன்மையாக கண்டித்த இந்தியாவின் அமைதிகாக்கும் இராணுவமே இங்கு புகுந்து படுகொலைகளை செய்துள்ளது.

1987 ஒக்டோபர் 21-22 தீபாவளியை கொண்டாடவேண்டிய யாழ்.நகரம் குண்டு,துப்பாக்கிச் சூட்டு சத்தங்களால் அதிர்ந்தது. நகரை புலிகளிடம் இருந்து கைப்பற்ற கோட்டையில் இருந்த இந்திய (அமைதி) படையினர் எறிகணைகளை ஏவியும் ,MI 24-ஹெலியில் இருந்து  தாக்கியும் வெளியேறி மணிக்கூட்டு கோபுர வீதி,றீகல் திரையரங்க வீதி ஊடாக வைத்தியசாலை வீதிக்கு வந்து காலை 11 மணிக்கு யாழ்.வைத்தியசாலைக்குள் நுழைந்தனர்.

ஒக்டோபர் 10 இல் புலிகளுக்கு எதிராக ( Operation Pawan) நடவடிக்கையை இந்திய படை ஆரம்பித்தது. 24 மணி நேர ஊரடங்குச்சட்டம்.

பலாலி மற்றும் ஏனைய இடங்களில் இருந்து  வரும்போது மோதல்கள். கொக்குவில் பிரம்படி லேனில் 50 க்கும் மேற்பட்டபொதுமக்கள் சுட்டும் கவச வாகனங்களால் நசித்தும் கொடூரமாக கொல்லப்பட்டனர்.வேறு இடங்களிலும் வீடுகளுக்குள்,வீதிகளில் மக்கள் சுட்டுக்கொலை.

வெளியிடங்களில் இருந்து காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக யாழ்.வைத்தியசாலைக்கு வாகனங்களில் கொண்டுவந்தபோதும் இடை வழியிலும், நகரிலும் இந்திய படையினர் சுட்டுக்கொன்ற சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்களும், ஊழியர்களும்,தாதியர்களும் துரிதமாக இரவும் பகலும் பணியாற்றிக்கொண்டிருந்தனர். மருத்துவமனை பாதுகாப்பானது எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாது. இந்திய அமைதிப்படை எமக்கு பாதுகாப்பு என்றே சகலரும் நம்பினார்கள்.

பிரதான வாசலை அடைந்த இந்திய படையினர் சகலரையும் உள்ளே போகுமாறு கூறி கைக்குண்டை வீசி, எதிரே நின்றவர்களை எதுவித கேள்வியும் இன்றி மிருக வேட்டைபோன்று சுட்டுக்கொண்டே வந்தனர்.மருத்துவமனைக்குள் ஒரே வெடிச்சத்தங்களும் குண்டு வெடிப்பு சத்தங்களும்.விடுதிகளின் (Ward) நோயாளிகளும்,உதவிக்கு வந்த உறவினர்களும்,ஊழியர்களும் மருத்துவர்களும் செய்வதறியாது திகைத்தனர்.

நோயாளர் விடுதிகளுக்கும்,அலுவலக அறைகளுக்கும் ( கைக்குண்டு) கிறனேட்டை வீசியதில் அங்கிருந்த பலர் பலி.படையினர் துப்பாக்கியை நீட்டியபடி வந்தபோது தாதியர்களும்,மருத்துவர்களும்,ஊழியர்களும் சீருடையில் நின்று தம்மை அடையாளப்படுத்தி கைகளை உயர்த்தி சரண்டைவதாக கூறியும் சுட்டுத்தள்ளினர்.

மருத்துவர்கள் பரிமேலழகர், எம்.கே.கணேசரட்னம், ஏ.சிவபாதசுந்தரம், திருமதி வடிவேலு (மேற்றன்) திருமதி லீலாவதி(தாதி),திருமதி சிவபாக்கியம் (தாதி),திருமதி இராமநாதன் ( தாதி) சண்முகலிங்கம் ( அம்புலன்ஸ் சாரதி) கனகலிங்கம் (தொலைபேசி இயக்குனர்), கிருஷ்ணராஜா (மேற்பார்வையாளர்) சிற்றூழிர்கள் நோயாளிகள், உறவினர்கள் என எழுபதுக்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

பலர் பின் வாசல் வழியாக தப்பி ஓடினர்.எங்கும் இரத்தம்.ஒரு சடலத்தின் மேல் மற்றொரு சடலம். சடலங்களுடன் இறந்தவரைப்போல கிடந்தும் பலர் தப்பினர்.எனினும் சடலங்களையும் சுட்டனர்.ஒரே வெடிச்சத்தங்கள்.ஐயோ! ஐயோ!! தங்கள் மத தெய்வங்களின் பெயர் சொல்லி எம்மைக்காப்பாற்று என்ற அவலக்குரல்கள்.

மறுநாள் (22 ) தப்பியவர்களின் உதவியுடன் சடலங்களை ஒரே இடத்தில் வைத்து மரங்கள்,டயர்கள் மூலம் கொளுத்தினார்கள். இவர்களும் காணாமலாக்கப்பட்டவர்களே என உறவினர்கள் கூறுகின்றனர். இச்சம்பவங்களை நேரில் கண்டவர்களும், இவற்றை செய்த இந்திய படையிஅதிகாரிகளும், ஜவான்களும் இன்றும் உள்ளனர்.இதுவரை எந்த விசாரணைகளும் நட்ட ஈடும் இல்லை. 

யாழ்.நகரில் இருந்து வெளிவந்த 'முரசொலி', 'ஈழமுரசு' பத்திரிகைகளின் அலுவலகங்களும் இந்திய படையால் குண்டு வைத்து அழிக்கப்பட்டன.

இந்தியப் பத்திரிகைகளில் வெளிவரவில்லை.கொழும்பு பத்திரிகைகளில் வெளிவந்தன இலங்கை அரசு வன்மையாக கண்டித்தது.இதன் தகவல்கள் பின்னர் வெளியாகின.பலரும் எழுதியுள்ளனர்.அன்று இணையத்தளங்கள் இல்லை.

1988 ஜனவரி 21 பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித்தலைவர் அனுரா பண்டாரநாயக்கா,பிரதமர் ரணசிங்க பிரேமதாச,தேசிய பந்தோபஸ்து அமைச்சர் லலித் அத்துலத் முதலி  இந்திய படையின் பயங்கரவாதம் எனக்கண்டித்து பேசினர்.அன்றைய பிரதம நீதியரசர் சர்வானந்தாவின் வயதான சகோதரியும் கணவனும் இந்தியப் படையால் கொல்லப்பட்டதையும் அனுரா சுட்டிக்காட்டியிருந்தார்.ஜே.வி.பியினர் இதனை கண்டித்து இந்தியா இலங்கையை ஆக்கிரமிக்கிறது என்று அன்றும் இன்றும் கூறிவருகின்றனர்.

புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் மோதல் ஏற்பட்டபோது இடையில் சிக்கிய பொதுமக்களே உயிரிழந்தனர் எனவும்,மருத்துவமனைக்குள் இருந்து புலிகள் இந்திய படையை தாக்கியதாகவும் இந்திய அமைதிப்படையின் தளபதி லெப்ரின்ற் ஜெனரல் திபேந்தர் சிங் கூறியிருந்தார்.

இந்தியா இதற்கு மன்னிப்பும் வருத்தமும் தெரிவிக்கவில்லை. இச்சம்பவத்துக்கு பின்னர் 1987 நவம்பர் 9 இந்திய பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கையில் இந்திய அமைதிப்படையினர் தமது பணிகளை சரிவரச்செய்வதாக குறிப்பிட்டார்.

நோர்வேயின் மனித உரிமைகள் அமைப்பான ( NESoHR) இது தொடர்பாக  தகவல்களை கொண்டு 2002 இல் வெளியிட்டுள்ள அறிக்கையில் யாழ்.மருத்துவமனையில் மருத்துவர்கள், தாதியர்கள், ஊழியர்கள், நோயாளிகள், பார்வையாளர்கள் என 135 பேர் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர் எனத்தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் இத்தினத்தை உறவினர்களும்,மருத்துவர்களும் ஊழியர்களும் யாழ்.மருத்துவமனையில் நினைவுகூருகின்றனர். இதற்கான ஒரு நினைவு தூபி அமைக்கப்பட்டு சகலரும் அஞ்சலி செலுத்தவேண்டும். வரலாற்றில் அந்நியப்படை யாழ்ப்பாணத்தில் வைத்தியசாலைக்குள்  தமிழர்களை சுட்டு படுகொலை செய்த கொடூரத்தை என்றுமே மறக்கமுடியாது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச சமூகத்திடமிருந்து ஆதரவை பெறுதல்

2024-12-11 11:18:31
news-image

இனவாதத்தை ஒழிப்பது குறித்த அரசாங்கத்தின் கருத்துக்களும்...

2024-12-11 11:05:09
news-image

இலங்கையை அதிர்ச்சிக்குள்ளாகிய விமான விபத்து -...

2024-12-10 12:27:56
news-image

மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு குறுக்கே நிற்கும்...

2024-12-10 09:04:49
news-image

தமிழரசு கட்சி மட்டக்களப்பில் பெற்ற பெருவெற்றியும்...

2024-12-09 10:45:04
news-image

அசாத் எங்கே – மர்மத்தை தீர்த்துவைத்தது...

2024-12-09 09:48:21
news-image

ஐந்தாண்டுகளுக்கு ஆளுகை தொடரும் - பிரதியமைச்சர்...

2024-12-08 15:45:45
news-image

ரஷ்ய-உக்ரேன் போர் முனைக்கு வலிந்து தள்ளப்பட்டுள்ள...

2024-12-08 15:48:28
news-image

அநுர அரசின் அணுகுமுறை தமிழ் கட்சிகளை...

2024-12-08 12:41:32
news-image

கல்முனை விவகாரம் பிச்சைக்காரன் புண்ணாக தொடரக்...

2024-12-07 11:51:32
news-image

பங்களாதேஷில் தொடரும் வன்முறை : சிறுபான்மையினருக்கு...

2024-12-08 15:49:06
news-image

மிரட்டப்படும் எதிர்க்கட்சிகள்

2024-12-07 11:12:36