ஜனாதிபதியிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது : அரசியலமைப்பு மறுசீரமைப்பாக காண்பிக்க முயற்சி - சுமந்திரன் 

Published By: Nanthini

23 Oct, 2022 | 11:55 AM
image

(ஆர்.ராம்)

22ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னரும் ஜனாதிபதியிடம் நிறைவேற்று அதிகாரம் முழுமையாக காணப்படுகின்றது என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் 22ஆவது திருத்தத்தினை பெரும் அரசியலமைப்பு மறுசீரமைப்பாக காண்பிப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாகவும் விசனம் தெரிவித்தார்.

22ஆவது திருத்தச்சட்டம் சனிக்கிழமை நிறைவேற்றப்பட்ட நிலையில் கூட்டமைப்பின் ஆறு உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்திருந்தபோதும், சுமந்திரன் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் சபையிலிருந்து வெளியேறியிருந்தார். இந்நிலையில் அதுகுறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

22ஆவது திருத்தச்சட்டம் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த திருத்தச்சட்டம் தமிழ் மக்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தாதபோதும், இந்த திருத்தத்தினை மிகப்பெரும் அரசியலமைப்பு மறுசீரமைப்பாக காண்பிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாட்டில் அரகலய போராட்டக்காரர்கள் மாற்றத்தினை எதிர்பார்த்து முன்மொழிவுகளை செய்துள்ளனர். இந்த முன்மொழிவுகளில் முக்கியமான விடயங்கள் அனைத்தும் கைவிடப்பட்ட நிலையில் தான் 22ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு 22ஆவது திருத்தச்சட்டத்தினை  நிறைவேற்றிய பின்னரும் ஜனாதிபதியிடத்தில் நிறைவேற்று அதிகாரங்கள் காணப்படுகின்றன. அதில் எவ்விதமான மாற்றங்களும் நடைபெற்றிருக்கவில்லை.

இந்த விடயம் ஏற்கனவே எதிர்க்கட்சிகளிடையே கூட்டாக நடைபெற்ற கூட்டத்தில் பேசப்பட்டது. அதன்போது 22ஆவது திருத்தச்சட்டத்தின் மீதான வாக்கெடுப்பில் எதிர்க்கட்சிகள் பங்கேற்பதில்லை என்றே ஏகோபித்து தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், பின்னர் எதிர்க்கட்சிகள் அந்த முடிவினை மாற்றியமைத்துள்ளன. அதற்கான காரணம் உரியவாறு தெளிவுபடுத்தப்படவில்லை. மேலும், ஆளுந்தரப்பு வெறும் கண்துடைப்புக்காக மேற்கொள்ளும் செயற்பாட்டுக்கு ஒத்துழைப்புக்களை வழங்க முடியாது. அந்த அடிப்படையில் தான் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நான் வெளியேறியிருந்தேன்.

கூட்டமைப்பாக முடிவெடுக்கப்படவில்லையா?

22ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்மானம் எடுப்பதற்கான கூட்டத்தினை கடந்த செவ்வாய் அல்லது புதன்கிழமையே கூட்டுமாறு நான் கோரியிருந்தேன்.

இருப்பினும், உறுப்பினர்களின் பிரசன்னம் காணப்படாமையால் வியாழக்கிழமை காலையிலேயே கூட்டம் கூட்டப்பட்டது.

அதன்போது நான் குறித்த திருத்தத்தில் உள்ள சூட்சுமங்களை பற்றி ஏனைய உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தேன்.அவர்கள் அதனை ஏற்றுக்கொண்டார்கள்.

இருப்பினும், அவர்களுக்குள்ளும் மாறுபட்ட நிலைப்பாடுகள் காணப்பட்டன. இதனால் பல்வேறு கோணங்களில் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டு, இவற்றில் முடிவுகள் எடுக்கப்படாது கூட்டம் நிறைவுக்கு வந்திருந்தது. 

அதன் பின்னர், நண்பகலுக்குப் பின்னர் மீண்டும் கூட்டம் கூட்டப்படுவதாக இருந்தபோதும் அவ்விதமான ஏற்பாடுகள் எவையும் நடைபெற்றிருக்கவில்லை.

இதனால், ஐந்து மணி வரையில் நான் காத்திருந்துவிட்டு வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்னதாக வெளியேறியிருந்தேன். ஏற்கனவே, குறித்த திருத்தத்தில் ஏதுமில்லை என்ற நிலைப்பாட்டை கொண்டிருந்தமையால் அதற்கமைவாக வாக்கெடுப்பில் பங்கெடுப்பதில்லை என்ற தீர்மானத்தினை எடுத்திருந்தேன்.

வாக்களிக்காமை பஷிலை ஆதரிப்பதாகாதா?

இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவம் செய்ய முடியாது என்ற விடயம் உள்ளது என்பதற்காக அதனையொரு அரசியலமைப்பு மறுசீரமைப்பாக கொள்ள முடியாது.

அதன் அடிப்படையில் அத்திருத்தத்துக்கு வாக்களிக்காமை பஷிலை ஆதரிப்பதாக அமையாது.

இங்கு ஓரிருவரை மையப்படுத்திக் கொண்டுவரும் திருத்தங்களை வைத்து அரசியலமைப்பில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டது என்று போலியாக மக்களை ஏமாற்றமுடியாது. 

தற்போது நடைபெற்றிருப்பது பொதுமக்களை ஏமாற்றுகின்றதொரு நாடகமாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08