(எம்.மனோசித்ரா)
"இங்குள்ள சலவைக் கல்துண்டு ஒன்றைப் பிழிய முடியுமானால், அதிலிருந்து கூட அந்த அரசனின் காதலும் சோகமும் சொட்டும்! இதன் உள்ளே உள்ள அழகு வேலைப்பாட்டை கற்க வேண்டுமானால், ஒவ்வொரு சதுர அங்குலத்துக்கும் ஆறு மாதமாவது தேவைப்படும்" என்ற சுவாமி விவேகானந்தர் கூற்றை உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலை நேரில் கண்டதும் உணர்ந்தேன்.
இந்தியாவின் உத்தர பிரதேசம், ஆக்ரா நகரில், யமுனை ஆற்றின் கரையில் தன் காதல் மனைவி மும்தாஜின் நினைவாக, முகலாய மன்னன் ஷாஜகானால் ஒவ்வொரு அங்குலமும் வியந்து போக வைக்கும் கலை நுட்பத்தில் கட்டுவிக்கப்பட்டிருக்கிறது, இந்த தாஜ் மஹால்.
சுமார் 22,000 பணியாட்களைக் கொண்டு 23 ஆண்டுகளாக கட்டப்பட்ட தாஜ் மஹால் 3 நூற்றாண்டுகளை கடந்தும் பொழிவிழக்காமல் பிரகாசித்துக்கொண்டிருக்கிறது.
தாஜ் மஹால் பாரசீகக் கட்டடக்கலை மரபுகளையும், முன்னைய முகலாய மரபுகளையும் உள்ளடக்கி கட்டப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்புக்கு அடிப்படையாய் அமைந்த தைமூரின் சமாதி, ஹூமாயூன் சமாதி, ஜமா மஸ்ஜித் சிவப்பு நிற மணற்கற்களால் ஆனவை. ஆனால், ஷாஜகான் இதற்கு வெண்ணிற சலவைக் கற்களை பயன்படுத்தியுள்ளார். இவ்வாறு வெண்ணிற சலவைக் கல்லால் ஆனது சமாதிக் கட்டடமாகும்.
எல்லா பக்கங்களிலுமே சமச்சீரான வடிவத்தைக் கொண்டுள்ள தாஜ் மஹாலின் ஒவ்வொரு மூளைக்கும் ஒன்றாக 4 மினார்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் முதன்மைக் கூடத்தில் மும்தாஜினதும் ஷாஜகானினதும் சமாதிகள் உள்ளன. எனினும், இவை போலியானவை என்றும், அவர்களை உண்மையாக அடக்கம் செய்த இடம் கட்டடத்தின் கீழ் தளத்திலேயே உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாரசீக, இந்து அம்சங்களைக் கொண்ட இதன் உச்சியில் தாமரை வடிவ கலசம் வைக்கப்பட்டுள்ளது. இதன் மத்தியில் அமைந்துள்ள பெரிய குவிமாடத்தைச் சுற்றி, 4 சிறிய குவிமாடங்கள் அமைந்துள்ளன.
குவிமாடங்கள் கூரைகளால் மூடப்படாதவை என்பதால் சூரிய ஒளி பட்டு, இயற்கை மின்விளக்குகள் போன்று தோன்றக்கூடிய நுட்பம் அக்காலத்திலேயே பயன்படுத்தப்பட்டிருக்கின்றமை எம்மை வியக்க வைக்கிறது.
கட்டடக் கலையின் போது அழகூட்டலில் தடை செய்யப்பட்டுள்ள மனித உருவங்களையோ அல்லது பிற விலங்கு உருவங்களையோ பயன்படுத்தாமல், இஸ்லாமிய மரபுகளுக்கு இணங்க பூக்கள், செடி, கொடி வடிவங்களே பயன்படுத்தப்பட்டுள்ளன.
தாஜ் மஹாலின் உட்புற கூடம் விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டு எண்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் எல்லா பக்கங்களிலும் வாயில்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், பூங்காவை நோக்கிய கதவு மாத்திரமே பயன்பாட்டில் உள்ளது.
300 மீற்றர் நீளமும், 300 மீற்றர் அகலமும் கொண்ட முகலாய பூங்காவைச் சுற்றி அமைந்துள்ள தாஜ் மஹாலை சூழ அமைக்கப்பட்டுள்ள நடைபாதைகள், பூங்காவின் நான்கு காற்பகுதிகளையும் 16 பூம்படுக்கைகளாக பிரிக்கின்றன.
கட்டடத்துக்கும் நுழைவாயிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் அதன் விம்பம் தென்படக்கூடியவாறு குளமொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள மர வரிசைகளுடன் கூடிய பாதைகளும் நீரூற்றுக்களும் அங்கு செல்வோரை கவர்ந்திழுக்கும் ஈர்ப்பினைக் கொண்டவை.
மூன்று பக்கங்களில் செந்நிற மணற்கல் சுவர்களால் மூடப்பட்டுள்ள தாஜ் மஹாலின், யமுனை ஆற்றை நோக்கியுள்ள பக்கத்தில் சுவர்கள் இல்லை. மணற்கற்களால் ஆன சுற்றுச்சுவர்களின் உட்பக்கங்களில் வளைவுகளுடன் கூடிய தூண் வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் இந்து கோவில்களில் காணப்படும் இந்த அம்சம் முகலாய கட்டடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு ஒவ்வொரு சதுர அடியிலும் தான் மனைவி மீது கொண்ட காதலை உணர்த்தும் வகையில் ஷாஜகான் இந்த உலக அதிசயத்தைப் படைத்துள்ளான்.
இக்கட்டடப் பணியில் ஈடுபட்டோர் பின்னாட்களில் இதனைப் போன்று உருவாக்கா வண்ணமிருக்க அவர்களின் கை விரல்கள் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுவது கற்பனை கதை என தெரிவிக்கப்படுகிறது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இதனை உடைத்து வெண்ணிற சலவைக் கற்களைக் கொண்டு செல்ல முயற்சிக்கப்பட்ட போதிலும், அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. காரணம், வெண்ணிற சலவைக் கற்களை சுவரில் பதிக்கும் போது பயன்படுத்தப்பட்ட பசை, அக்கணமே கல்லாகக்கூடியதாம். இதனை எவரும் சிதைத்து விடக் கூடாது என்பதற்காக இந்த நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
உலக அதிசயங்களில் பேரதிசயமான தாஜ் மஹாலுக்குள் பொழுதுபோக்குக்காக நுழைபவர்களுக்கு கூட, அங்கிருந்து இலகுவில் வெளியேற மனம் வராது. அத்தனை அழகு இதில் பதிந்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM