2 உயர் பொலிஸ் அதிகாரிகளை மன்றில் ஆஜராகுமாறு கோட்டை நீதிவான் உத்தரவு

Published By: Digital Desk 5

22 Oct, 2022 | 10:47 AM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு மத்தி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் டயஸ்,  கொழும்பு மத்தி உதவி பொலிஸ் அத்தியட்சர் நலின் தில்ருக் ஆகிய இருவரையும் எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி, நீதிமன்றில் ஆஜராகுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை (21) உத்தரவிட்டது.

1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் சட்டக்கோவையின் 136 ( 1) ஆம் அத்தியாயத்தின் கீழ் , இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தரிந்து ஜயவர்தன தாக்கல் செய்த  தனிப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்றே, அம்மனுவின்  பிரதிவாதிகளாக குறித்த இரு பொலிஸ் அதிகாரிகளையும் பெயரிட்டே இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டது.

கடந்த 10 ஆம் திகதி , காலி முகத்திடல் முதல் புதுக்கடை நீதிமன்ற வளாகம் வரையில் பேரணியாக செல்ல முயன்ற ஆர்ப்பாட்ட பேரணிக்கு தேவையற்ற இடையூறுகளை விளைவித்து அதனை தடுத்ததாக கூறி இந்த தனிப்பட்ட மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன் ஊடாக குறித்த இரு பொலிஸ் அதிகாரிகளும் தண்டனை சட்டக்கோவையின் 330 மற்றும்  வீதிகள், சாலைகள் தொடர்பிலான  சட்டத்தின் 59 (1) ஆம் பிரிவின் கீழும்  தண்டனைக்குரிய குற்றத்தினை புரிந்துள்ளதாக  குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 குறித்த இரு குற்றச்சாட்டுக்களின் கீழும்,  அந்த இரு பொலிஸ் அதிகாரிகளுக்கும் எதிராக  முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் திருப்தியடைவதால், இவ்வாறு மனுவை விசாரணைக்கு ஏற்று, அவர்களை மன்றில் ஆஜராக உத்தரவிடுவதாக நீதிவான் திலின கமகே அறிவித்தார்.

 நேற்று இம்மனு விசாரணைக்கு வந்த போது, மனுதாரருக்காக,  சட்டத்தரணிகளான  மனுஜய டி சில்வா, ஜயந்த தெஹிஅத்தகே ஆகியோருடன் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மன்றில் ஆஜரானார்.

 கடந்த 9 ஆம் திகதி பொலிஸார் நடந்துகொண்ட விதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மறு நாள் 10 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும், அது குறித்து 9 ஆம் திகதி இரவு 11.57 மணிக்கு மனுதாரரால் வட்ஸ் அப் மற்றும் மின்னஞ்சல் ஊடாக கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு அறிவிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் குறிப்பிட்டார். இதற்கு மேலதிகமாக அந்த அறிவித்தல் பொலிஸ் மா அதிபருக்கும் பிரதியிடப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

 சுமார் 50 பேர் மட்டுமே கொண்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணி,  காலி முகத்திடல் நடை பாதை ஊடாக முன்னோக்கி செல்ல முற்பட்ட போது  பிரதிவாதிகள் இருவர் தலைமையிலான பொலிஸார் , அதற்கு தடை விதித்து, தேவையற்ற தடங்கல்களை ஏற்படுத்தியதாக சாலிய பீரிஸ் குறிப்பிட்டார்.

 இந் நடவடிக்கையானது , எந்தவொரு நபரும் பாதையில் செல்ல உரிமை இருக்கும் நிலையில்  அதனை தடுக்கும் முகமாக நடந்துகொள்வது ' குற்றவியல் இடையூறு' எனும்  குற்றத்தில் சேர்வதாக தண்டனை சட்டக் கோவையின் 330 ஆம் அத்தியாயத்தை விளக்கி ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பிரீஸ் விடயங்களை முன் வைத்தார்.

 கடந்த 10 ஆம் திகதி குறித்த போராட்டத்தை தடுக்க,  பொலிசார் கோட்டை நீதிமன்றில் அனுமதி கோரியிருந்த  போதும், அதனை நீதிமன்றம் நிராகரித்திருந்த பின்னணியில்,  இந்த இடையூறு ஏற்படுத்தப்பட்டதாகவும், இது அரசியலமைப்பின்  14 (1)  உறுப்புரையையும் மீறும் செயல் எனவும் சாலிய பீரிஸ் வாதிட்டார்.

 2008 ஆம் ஆண்டு  அப்போதைய நீதியரசர் சரத் என். சில்வா வழங்கிய தீர்ப்பொன்றினையும் இதன்போது எடுத்துரைத்த ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ்,   அப்போதிருந்த சூழ் நிலையில் கூட பொலிஸ் சோதனை சாவடிகளை தாண்டி பயணிக்கும் போதும்  பொது மக்களுக்கு தேவையற்ற இடையூறுகளை செய்ய முடியாது என்பதை  அத்தீர்ப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

 இதனைவிட,  பாதைகள் மற்றும் சாலைகள் குறித்த சட்டத்தின் 59 ஆம் அத்தியாம் பிரகாரமும் பிரதிவாதிகளான இரு பொலிஸ் அதிகாரிகளும் குற்றமிழைத்துள்ளதாக சாலிய பீரிஸ் வாதிட்டார்.

இந்த இரு உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கும் எதிராக கோட்டை பொலிஸ்  நிலையத்தில் மனுதாரர் முறையிட சென்ற போது அதனை ஏற்க பொலிஸார் மறுத்ததாகவும், அதனால் பொலிஸ் தலைமையகத்தில் மனுதாரர் முறைப்பாடு செய்த போதும் இதுவரை எந்த விசாரணைகளும் நடக்கவில்லை எனவும்  ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

 அதனால் தனது சேவை பெறுநர் தனிப்பட்ட மனுவை தாக்கல் செய்ததாக அவர் கூறினார்.

 இந் நிலையில் மனுவை ஏற்ற நீதிவான் திலின கமகே, குற்றச்சாட்டுக்கள் குறித்து முன் வைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் நீதிமன்றம் திருப்தியடைவதாகவும், அதனால் பிரதிவாதிகளாக குறித்த உயர் பொலிஸ் அதிகாரிகள் இருவரையும் கருதி மன்றில் ஆஜராக உத்தரவிடுவதாகவும் அறிவித்து வழக்கை எதிர்வரும் நவம்பர் 8 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27