கந்த சஷ்டி எனப்படுவது முருகப்பெருமான் சூரனை சம்ஹாரம் செய்த நிகழ்வை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் ஒரு பெரு விரத விழாவாகும்.
சஷ்டி என்றால் ஆறு. ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி வரையுள்ள ஆறு நாட்களையும் இந்துக்கள் கந்த சஷ்டி விரத காலமாக அனுஷ்டிக்கின்றனர். இந்த ஆறு நாட்களிலும் சைவர்கள் கந்தப்பெருமானின் இன்னருள் வேண்டி, விரதம் இருப்பர்.
சூரபத்மன் எனும் அசுரன் தேவர்களை சிறைபிடித்து, அவர்களுக்கு பல இன்னல்களை கொடுத்து வந்தான். தேவர்களோ முழுமுதற் கடவுளான ஈசனிடம் தம்மை காப்பாற்றுமாறு வேண்டி தவமிருந்தனர்.
தேவர்களின் கடுந்தவத்தால் மனமிறங்கிய சிவபெருமான் அவர்களை காத்தருள்வதற்காக சத்யோஜாதம், தற்புருஷம், வாமதேவம், ஈசானம், அஹோரம், திருவதனம் ஆகிய தனது ஆறு திருமுகங்களிலிருந்தும் ஆறு தீப்பொறிகளை சரவணப்பொய்கையில் ஆறு பொற்றாமரைகளில் ஒளிரச் செய்தார். அதன் பயனாக, ஆறு தாமரை மலர்களில் ஆறு குழந்தைகள் அவதரித்தன. அத்தினமே முருகப்பெருமான் அவதரித்த வைகாசி விசாகம் எனும் சிறப்பு பெருவிழா வழிபடப்படுகிறது.
அந்த ஆறு குழந்தைகளையும் வளர்க்க நிதர்த்தனி, அபரகேந்தி, மேகேந்தி, வர்யேந்தி, அம்பா, துலா எனும் ஆறு கார்த்திகைப் பெண்கள் தோன்றினர்.
ஈசன் குறிப்பிட்ட நன்னாளில் சக்தியாகிய பார்வதி தேவி ஆறு குழந்தைகளையும் ஒன்றாக கட்டியணைக்க, அது ஒரு குழந்தையாக அவதாரம் எடுத்தது. அக்குழந்தையே கந்தப் பெருமானானது.
திருக்கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் கந்தனுக்கு 'திருக்கார்த்திகேயன்' என்ற பெயரும் உண்டானது.
ஆறு முகங்களுடன் காட்சியளித்ததால் 'ஆறுமுகன்' என்றும் முருகன் அழைக்கப்படுகின்றார்.
யௌவனப் பருவ நிலையில் கந்தப் பெருமானுக்கு சக்தியானவள் தன் சக்தி முழுவதையும் திரட்டி 'சக்திவேல்' எனும் வேலாயுதத்தை கந்தனுக்கு வழங்குகின்றாள்.
அன்றிலிருந்து கந்தனுக்கு 'சக்திவேலவன்' என்ற திருநாமமும் உண்டாயிற்று.
நாரதர் ஞானப்பழ கழகத்தை ஆரம்பித்து நடத்திய நாடகத்தில் சினங்கொண்ட கந்தன் ஆண்டி கோலத்தில் தண்டாயுதத்துடன் மலை மீதமர்ந்தார். அம்மலையே 'பழனி' என்றானது. இதனால் கந்தன் 'பழனியாண்டவன்' என்றும் 'தண்டபாணி' என்றும் அழைக்கப்பட்டார்.
'ஓம்' எனும் பிரணவப் பொருளின் தத்துவத்தை விளக்கமாக கூறத் தெரியாமல் விழித்த பிரம்மனை சிறையில் அடைத்தார். பிறகு தந்தையாகிய சிவனுக்கு தானே ஓம் எனும் பிரணவப் பொருளின் உண்மைத் தத்துவத்தையும் விளக்கத்தையும் உபதேசித்து 'சுவாமிநாதன்' என்றும் அழைக்கப்பட்டார்!
கந்தப் பெருமானது பிறப்பின் நோக்கம் நிறைவேறும் காலமும் வந்தது.
தேவர்களுக்கு தீங்கு செய்து வந்த சூரபத்மனுடன் போர் புரிந்து, தேவர்களை காக்கும் பொருட்டு ஐப்பசி திங்கள் பிரதமையன்று நாள் குறிக்கப்பட்டு, சக்திவேலுடன் போருக்கு புறப்பட்டார், கந்தன். இதனால் 'தேவசேனாபதி' (தேவர் படைக்கு சேனாதிபதி) என்றும் போற்றப்பட்டார்.
முருகனுக்கு துணையாக சிவனின் அம்சத்தில் அவதரித்த வீரபாகுவும் சில வீரர்களும் போருக்குச் சென்றனர்.
ஆறு நாட்கள் நடைபெற்ற சூரசம்ஹாரம் முடிவை எட்டும் நாழிகையில், மாமர வடிவில் நின்ற சூரபத்மனை நோக்கி தன் வேலினை எறிந்தார், சூரபத்மன்.
மரம் இரண்டாக பிளக்கப்பட்டது. பிளவுபட்ட மாமரம் சேவலும் மயிலுமாக வடிவம் கொண்டது. சேவலை கொடியாகவும், மயிலை வாகனமாகவும் முருகன் ஏற்றுக்கொண்டார்.
இந்த சம்பவத்துக்குப் பின் முருகனுக்கு 'சேவற்கொடியோன்', 'மயில்வாகனன்' போன்ற பெயர்களும் உண்டாயிற்று.
கந்தபுராணத்தில் வரும் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோர் முறையே சைவ சித்தாந்தத்தில் பேசப்படும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களை குறிப்பதாக கருதப்படுகின்றது.
ஆன்மாவை துன்புறுத்தும் மலங்களின் கெடுபிடியில் இருந்து ஆன்மாவுக்கு விடுதலை அளிப்பதோடு, ஆணவ மலத்தின் பலத்தை குறைத்து, அதனை தன் காலடியில் இறைவன் வைத்திருப்பதை உணர்த்துவதே சூரசம்ஹார தத்துவம்.
இந்த ஆறு நாட்களும் சைவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, பூரண கும்பம் வைத்து, விளக்கேற்றி, விரதமிருந்து, பூசை வழிபாடு செய்வர். பகற்பொழுதில் உணவருந்தாமல், இரவில் பால், பழம் மட்டும் அருந்தி, பின் ஏழாம் நாள் உணவு உட்கொண்டு விரதத்தை நிறைவேற்றுவர்.
சஷ்டியின் மகத்துவம், முருகப்பெருமான் ஆற்றிய லீலைகள் முதலிய அம்சங்களை கச்சியப்ப சிவாச்சாரியார் தனது கந்தபுராணத்தில் மிக அழகாக வடித்துள்ளார்.
மேலும், நக்கீரர் திருமுருகாற்றுப்படையிலும், குமரகுருபரர் கந்தர் கலி வெண்பாவிலும், அருணகிரிநாதர் திருப்புகழிலும் அறுபடை வேலவனின் புகழை வாரி வழங்கியுள்ளனர்.
திருமுருகாற்றுப்படையில் முருகனின் ஆறு நிலைகளை பற்றி கூறுகிறார்.
கந்தன் மணந்தது, எழுந்தது, நின்றது, அமர்ந்தது, புரிந்தது, தந்தது என ஆறு வகை நிலைகளை அறுபடை வீடுகளோடு மனக்கண்களில் காட்சிப்படுத்தியுள்ளார்.
அவ்விதமாக, தேவயாணியை மணந்தது (திருப்பரங்குன்றம்), சூரனை வதம் செய்ய வீறு கொண்டு எழுந்தது (திருச்செந்தூர்), சுவாமிநாதனாக தந்தைக்கு உபதேசம் செய்ய அமர்ந்தது (சுவாமிமலை), ஞானப்பழம் கிடைக்காமல் ஆண்டிக்கோலத்தில் நின்றது (பழனி), குறமகள் வள்ளியை காந்தர்வ மணம் புரிந்தது (திருத்தணி), வள்ளி தேவயாணி சமேதராய் காட்சி தந்தது (பழமுதிர்ச்சோலை) என அற்புதமாக தொகுத்து வழங்கினார்.
வசந்த காலத்தின்போது இயற்கையின் அழகை கவிதைகளால் விளக்கும் பாணி வியப்புக்குரியது.
குமார சம்பவம் நாடகக் கவிதை சிவசக்தி அருளால் உருவான குமரனின் பிறப்பின் வரலாற்றை விளக்குகிறது. இந்நூல் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் காளிதாசரால் இயற்றப்பட்டது.
வால்மீகி இராமாயணத்தின் பாலகாண்டத்தில் குமாரசம்பவம் கதை இடம்பெற்றுள்ளது. விஸ்வாமித்திரர் இராமரையும் இலட்சுமணரையும் தனது யாக வேள்வியின் காவலுக்கு அழைத்துச் செல்லும்போது, சிவசக்திக்கு பிறந்த குமரனின் வரலாற்றை இருவருக்கும் கூறுகிறார்.
இராமாயணத்தில் வரும் இவ்வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு காளிதாசன் குமாரசம்பவம் எனும் காவியக் கவிதையை நவரசங்களில் எழுதியுள்ளார்.
இந்நூலில் குமரனின் பிறப்பு மற்றும் தேவர்களின் படைத் தலைவராக இருந்த முருகன் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசூரன் ஆகிய அரக்கர்களை போரில் முருகன் வென்று, இந்திரன் முதலான தேவர்களை அரக்கர்களிடமிருந்து விடுவிக்கும் சம்பவங்களை காளிதாசர் அழகுற எடுத்தியம்பிய விதம் மிக அற்புதம்.
கந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு
கந்த சஷ்டி கவசத்தை உருவாக்கியவர் பாலதேவராய சுவாமிகள் ஆவார்.
ஒரு முறை பாலதேவராயர் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டார். பல சிகிச்சைகள் செய்தும், அவரது வலி குணமடையவில்லை.
'இந்த வலி நிறைந்த வாழ்க்கை இனியும் வேண்டாம்' என வெறுத்துப் போனவர், கடலில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளும் முடிவோடு, திருச்செந்தூருக்கு வந்தார்.
அப்போது அங்கே கந்த சஷ்டி விழா அனுஷ்டிக்கப்பட்டு வந்தது. ஏற்கனவே பாலதேவராய சுவாமிகள் தீவிர முருக பக்தர் என்பதால் அந்த திருவிழாக் காட்சிகள் அவர் மனதை சற்றே மாற்றியது.
திருவிழா முடிந்த பிறகு தற்கொலை செய்துகொள்ளலாம் என தன் இறப்பை பிற்போட்டவர், முருகனை வேண்டி, சஷ்டி விரதம் இருக்கத் தொடங்கினார்.
முதல் நாள் திருச்செந்தூர் கடலில் புனித நீராடி, முருகனை வழிபட்ட பிறகு, கோவில் மண்டபத்தில் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தார்.
அவருக்கு முருகப்பெருமான் காட்சியளித்து, அருள் புரிந்தார். அத்துடன் தனக்காக சஷ்டி கவசம் பாடும் திறனையும் அவருக்களித்தார்.
இவ்வாறே பாலதேவராயரால் சஷ்டி கவசம் அருளப்பட்டது.
இலங்கை, இந்தியா, மலேஷியா, சிங்கப்பூர், மொரீஷியஸ் போன்ற நாடுகளில் தமிழர்கள் செரிந்து வாழும் பகுதிகளில் இவ்விரத அனுஷ்டானங்கள் பக்திபூர்வமாக பின்பற்றப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, தமிழகத்தில் செந்திலாண்டவராக அருள் புரியும் திருச்செந்தூரில் லட்சக்கணக்கான முருகன் அடியார்கள் மிகுந்த பக்தியுடன் காப்புக்கட்டி கந்த சஷ்டி விரதம் மேற்கொள்வர்.
இலங்கையிலும் இந்துக்கள் இந்த விரதத்தை வீடுகளிலும் ஆலயங்களிலும் வழிபாடுகள் நிகழ்த்தி முருகனை பூஜிப்பர்.
கலியுக வரதனான கந்தப்பெருமானின் பேரருள் வேண்டி, சஷ்டி விரத நன்னாளில் அறுபடை வேலவனை சரணம் செய்து, நற்பேறு காண்போமாக...!
- எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் (கம்பளை)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM