ஆறுமாத கர்ப்பிணிப் பெண்ணின் பிட்டப் பகுதியை பிளேட் ஒன்றினால் வெட்டிய நபரை  பொதுமக்களின் உதவியுடன் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இச் சம்பவம் நேற்று மஹரகம நகரில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப்பெண் வழமை போன்று நேற்றுக் காலை கடமைக்கு செல்லுவதற்காக பேரூந்தில் ஏறும் போது குறித்த சந்தேக நபர்  அவரது பிட்டப்பகுதியை பிளேடினால்  வெட்டியுள்ளார்.

குறித்த பெண் சத்தமிட்டதையடுத்த அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் சந்தேக நபரை மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, பிட்டப்பகுதியில் ஏற்பட்ட வெட்டுக்காயத்திற்கு 6 தையல் போடப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப்பெண் கொட்டாவை, ருக்மல்கமவைச் சேர்ந்தவரென்றும் தெஹிவளை பகுதியிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் தொழில் புரிபவரென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கர்ப்பிணிப்பெண் மீது தாக்குதல் நடத்திய சந்தேகநபர் இரத்தினபுரியைச் சேர்ந்தவரெனவும்  இரு பிள்ளைகளின் தந்தையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கடந்த ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி மஹரகம மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் இதே பாணியில் குறித்த நபர் , இரு பெண்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பிச்சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யசெய்யப்பட்ட சந்தேகநபரை கங்கொடவில நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுவரும் மஹரகம பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.