(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)
இனவாதம், பௌத்தவாதம் இருக்கும் வரை இந்த நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது. அரசியலமைப்பு திருத்தம் பெருந்தோட்ட மக்களுக்கும், வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கும் எந்த வகையில் சாதகமாக அமையும்? தமிழர்களுக்கு தீர்வு வழங்க கூடாது என்ற கடும் போக்கான இனவாதம் இந்த நாட்டின் அழிவுக்கு மூல காரணம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் தெரிவித்தார்.
அரசியலமைப்பு திருத்தம் இந்த நாட்டை ஒருபோதும் திருத்தாது, புதிய அரசியலமைப்பை உருவாக்கி அதனூடாக தமிழர்களுக்கு தீர்வு தாருங்கள், அதற்கு பொதுஜன வாக்கெடுப்பையும் நடத்துங்கள் எனவும் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (20) வியாழக்கிழமை இடம்பெற்ற 22ஆவது திருத்தச் சட்டமூல வரைபு மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
1978ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பு இந்த நாட்டுக்கு எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை இதுவரையான அரசியலமைப்பு திருத்தங்கள் ஊடாக விளங்கி கொள்ள முடிகிறது.
1978ஆம் ஆண்டு ஜே.ஆர் ஜயவர்தன தந்திரமான முறையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை உருவாக்கி தனது அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்டார். இவரின் அதிகார ஆசை இன்று இந்த நாட்டுக்கு பெருந் தீயாக தாக்கம் செலுத்தியுள்ளது.
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் குறித்து தற்போது அவதானம் செலுத்தப்படுகிறது.அரசியலமைப்பு திருத்தம் செய்வதால் இந்த நாட்டில் வாழும் பெருந்தோட்ட மக்களுக்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு எந்தளவில் அது தீர்வு பெற்றுக் கொடுக்கும் அல்லது சாதகமாக அமையும்.
காகம் என அழைக்கப்படும் அண்டங் காகம் பாராளுமன்றத்துக்கு வர கூடாது என்பதற்காக 22ஆவது திருத்தத்தில் இரட்டை குடியுரிமை விவகாரத்தில் தடையேற்படுத்தப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பல இலட்சினங்கள் 22ஆவது திருத்தத்தில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
நாட்டு நலனுக்காக ஒன்றும் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்படவில்லை. மாறான ஆட்சியாளர்கள் தமது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக போலியான விடயங்களை முன்னிலைப்படுத்தி அரசியலமைப்பை திருத்திக் கொள்கிறார்கள். இறுதியில் அது முழு நாட்டுக்கும் தீயாக மாற்றமடைகிறது.
இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களின் உண்மை பிரச்சினை குறித்து அரசாங்கங்களும்,பௌத்த அர தலைவர்களும் கவனம் செலுத்தவில்லை. மலையக மக்களுக்கு 7 பேச்சஸ் காணியை கூட வழங்க கூடாது என்ற இனவாத போக்கில் இருந்துக் கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது. பெருந்தோட்ட மக்களுக்கு 1 ஹேக்கர் காணிகளை வழங்குங்கள் விவசாயத்தையும், உழைப்பையும் மாத்திரம் நம்பி வாழும் அவர்கள் அரசாங்கத்திற்கு சிறந்த வருமானத்தை ஈட்டிக் கொடுப்பார்கள்.
அரச தலைவர்கள் மத்தியில் இனவாதம் மற்றும் பௌத்தவாதம் இருக்கும் வரை இந்த நாடு ஒருபோதும் முன்னேற்றமடையாது.சிங்கள தலைவர்கள் தமது அடையாளங்களை தக்கவைத்துக் கொள்வதற்காக இனவாதத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறார்கள்.
ஜே.ஆர் ஜயவர்தன விளைத்த இனவாதம் இன்றும் இந்த நாட்டுக்கு சாபமாக தொடர்கிறது. இரண்டாம் குடியரசு யாப்பினை உருவாக்க முன்னின்று செயற்பட்ட ஏ.ஜே.வில்சன் மனமுடைந்து இரண்டாம் யாப்புக்கு எதிராக நூல் வெளியிட்டார். இதனை எந்த சிங்கள தலைவர்களும் இதுவரை மறுக்கவில்லை.
ஜே.ஆர்.ஜயவர்தன மரண படுக்கையில் இருக்கும் போது பத்திரிகையாசிரியர் ஒருவர் எடுத்த நேர்காணலின் போது இந்த நாட்டு மக்களுக்கு சமஷ்டி முறைமையே சிறந்த தீர்வு என குறிப்பிட்டுள்ளதை தற்போதைய ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
30 வருட கால யுத்தம் ஏன் இடம்பெற்றது என்பதற்கான காரணத்தை இந்த நாடு இன்றும் விளங்கிக் கொள்ளவில்லை. 2010ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவிற்கு மக்கள் மத்தியில் சிறந்த நிலை காணப்பட்டது. அவர் நினைத்திருந்தால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கியிருக்கலாம். ஆனால் அவர் இனவாதம் மற்றும் பௌத்த வாதத்துக்கு முன்னுரிமை வழங்கி தன்னிச்சையாக செயற்பட்டார்.
பொருளாதார நெருக்கடி மிக மோசமாக தீவிரமடைந்துள்ள நிலையிலும் அரசாங்கம் இனவாத செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ளவில்லை.தற்போதும் குருந்தூர் மலையில் அடாவடித்தனமாக பௌத்த விகாரைகளை நிர்மாணிக்க கடும்போக்கான முறையில் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. சிங்களவர்கள் வாழாத நாவற்குழி, மயிலிட்டி ஆகிய பகுதிகளில் பௌத்த விகாரைகள் பலவந்தமான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.இந்த நாட்டின் உண்மை பிரச்சனையை ஆட்சியாள்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்,இனவாதம்,பௌத்த வாதம் இருக்கும் வரை இந்த நாட்டை முன்னேற்ற முடியாது.
அரசியலமைப்பு திருத்தங்கள் இந்த நாட்டை திருத்தாது. புதிய அரசியமைப்பின் ஊடாக தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்கும், அரசியல் உரிமைக்கும் தீர்வு காண அவதானம் செலுத்துங்கள்.இனவாதமே இந்த நாட்டின் அழிவுக்கு முக்கிய காரணி என்பதை ஆட்சியாளர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM