பரபரப்பான போட்டியில் நமீபியாவை தோற்கடித்த ஐக்கிய அரபு இராச்சியம் : சுப்பர் 12 சுற்றுக்குள் இலங்கை, நெதர்லாந்து

20 Oct, 2022 | 06:14 PM
image

(நெவில் அன்தனி)

எட்டாவது ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் ஏ குழுவுக்கான கடைசி 2 போட்டிகள் கடைசிவரை பரபரப்பையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்த கடைசி ஓவர்களில் முடிவுகள் ஈட்டப்பட்டன.

மெல்பேர்ன், ஜீலோங் கார்டினியா பார்க் விளையாட்டரங்கில் இன்று காலை நடைபெற்ற நெதர்லாந்துடனான போட்டியில் 16 ஓட்டங்களால் அவசியமான வெற்றியை ஈட்டியதன் மூலம் இக் குழுவிலிருந்து முதலாவது அணியாக சுப்பர் 12 சுற்றில் விளையாட இலங்கை தகுதிபெற்றது.

அதனைத் தொடர்ந்து மாலையில் நடைபெற்ற நமிபியாவுக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையிலான போட்டியின் கடைசிப் பந்தில் ஐக்கிய அரபு இராச்சியம் 7 ஓட்டங்களால் வெற்றியீட்டியதை அடுத்து நெதர்லாந்து சுப்பர் 12 சுற்றில் விளையாட தகுதிபெற்றது.

ஆரம்பப் போட்டியில் இலங்கையை அதிர்ச்சி தோல்வி அடையச் செய்த நமீபியாவுக்கு இந்தத் தோல்வியும் சுப்பர் 12 சுற்றுக்கு செல்ல முடியாமல் போனமையும் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

நமிபியா தோல்வி அடைந்தன் காரணமாக சுப்பர் 12 சுற்று வாயிலில் காத்திருந்த நெதர்லாந்துக்கு உள்ளே நுழைவதற்கான அதிர்ஷ்டம் கிட்டியது. 

இலங்கை ஏற்கனவே சுப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கையும் நெதர்லாந்தும் தலா 4 புள்ளிகளைப் பெற்று இக் குழுவில் நிகர ஓட்ட வேக அடிப்படையில் முறையே முதல் இரண்டு இடங்களைப் பெற்றன.

இன்று மாலை கடைசிவரை மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய ஏ குழுவுக்கான கடைசிப் போட்டியில் நமிபியாவை 7 ஓட்டங்களால் ஐக்கிய அரபு இராச்சியம் வெற்றிகொண்டது.

இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியம் ஈட்டிய முதலாவது வெற்றி இதுவாகும்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சியம் 20 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 148 ஓட்டங்களைப் பெற்றது.

முஹம்மத் வசீமின் சகலதுறை ஆட்டமும் கேரளாவைப் பிறப்பிடமாகக் கொண்ட அணித் தலைவர் சுண்டங்காபோயில் ரிஸ்வானின் அதிரடி துடுப்பாட்டமும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெற்றிக்கு வித்திட்டன.

முஹம்மத் ரிஸ்வான், விரித்தியா அரவிந்த் ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி ஆரம்ப விக்கெட்டில் 49 பந்துகளில் 39 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அரவிந்த் 21 ஓட்டங்களைப் பெற்றார்.

ஆனால் அதன் பின்னர் வசீமும் ரிஸ்வானும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 2ஆவது விக்கெட்டில் 41 பந்துகளில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்து அணி வலுவான நிலையை அடைய உதவினர்.

வசீம் 41 பந்துகளை எதிர்கொண்டு 3 சிக்ஸ்கள், ஒரு பவுண்டறியுடன் 50 ஓட்டங்களைக் குவித்தார்.

அவரைத் தொடர்ந்து அலிஷான் ஷராபு 4 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

எனினும் ரிஸ்வானும் பாசில் ஹமீதும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 18 பந்துகளில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து நமிபியாவுக்கு நெருக்கடியைக் கொடுத்தனர்.

ரிஸ்வான் 29 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 43 ஓட்டங்களையும் பாசில் ஹமீத் ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்களையும் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நமிபியா 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 141 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

13ஆவது ஓவரில் 7 விக்கெட்களை இழந்து 69 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்த நமிபியா படு தோல்வியை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், டேவிட் வைஸ் 36 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 3 பவுண்டறிகளுடன் 55 ஓட்டங்களைப் பெற்று நமிபியாவுக்கு வெற்றியீட்டிக்கொடுக்க முயற்சித்தார்.

ரூபன் ட்ரம்ப்பெல்மான்  ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்களைப் பெற்றார். வைஸும் ட்ரம்ப்பெல்மானும் 8ஆவது விக்கெட்டில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்து போட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர்.

கடைசி ஓவரில் நமிபியாவின் வெற்றிக்கு 14 ஓட்டங்கள் தேவைப்பட்டது. மொஹமத் ரிஸ்வான் வீசிய கடைசி ஓவரின் 4ஆவது பந்தை வைஸ், சிக்ஸாக விசுக்கி அடிக்க விளைந்து எல்லைக் கோட்டுக்கு அருகே பிடிகொடுத்து ஆட்டமிழந்ததுடன் நமிபியாவின் எதிர்பார்ப்பு அற்றுப்போனது.

அடுத்த இரண்டு பந்துகளில் தேவைப்பட்ட 9 ஓட்டங்களில் 2 ஓட்டங்கள் மட்டுமே பெறப்பட்டன.

பந்துவீச்சில் ஸஹூர் கான் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்க்ளையும் முஹம்மத் வசீம் 16 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை யும்    கைப்பற்றினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19இன் கீழ் மகளிர் ரி20 உலக்...

2025-01-22 19:40:49
news-image

எம்.சி.ஏ. - சிங்கர் சுப்பர் பிறீமியர்...

2025-01-21 20:30:52
news-image

19இன் கீழ் மகளிர் டி20 உலகக்...

2025-01-21 19:42:42
news-image

லசித் மாலிங்கவின் கில்லர் புத்தக வெளியீடு

2025-01-21 17:32:37
news-image

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு சுப்பர் சிக்ஸ்...

2025-01-21 12:04:39
news-image

கால்பந்தாட்டம் மூலம் ஒற்றுமை 2ஆம் கட்டப்...

2025-01-20 20:36:39
news-image

நியூஸிலாந்தை நைஜீரியாவும் அயர்லாந்தை  ஐக்கிய அமெரிக்காவும்...

2025-01-20 19:06:08
news-image

சர்வதேச தரத்தில் சீகிரியாவில் புதிய கோல்ஃப்...

2025-01-19 19:56:12
news-image

துடுப்பாட்டத்தில் சனெத்மா, பந்துவீச்சில் ப்ரபோதா அற்புதம்;...

2025-01-19 12:39:42
news-image

சுப்பர் சிக்ஸுக்கு இலக்குவைத்துள்ள இலங்கை  ஏ...

2025-01-18 21:42:27
news-image

இங்கிலாந்துக்கு எதிரான இந்திய ஒருநாள் கிரிக்கெட்...

2025-01-18 21:36:53
news-image

திருக்கோ T20 லீக் 2025 -...

2025-01-18 18:45:39