வடக்கை இரையாக்கும் 'போதைப்பொருள்' : 23 வயது இளைஞனின் சாட்சியம் - நேரடி ரிப்போர்ட் 

Published By: Nanthini

19 Oct, 2022 | 09:27 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

லங்கையின் வடக்கு மாகாணம் உள்நாட்டு போரின்போது இழந்தவை ஏராளம். ஆனால், அதனை விட பன்மடங்கு இழப்புகளை போரற்ற இன்றைய சூழலில் வட மாகாணம் இழந்து வருகிறது. 

சமூக ஆர்வலர்களின் கண்களுக்கு இவை மறைந்து கிடக்கின்றமை கவலையளிக்கின்றது. 

'போதைப்பொருள்' முழு வடக்கையும் ஆக்கிரமித்துள்ளது. இதனால் அடுத்த சந்ததியினரை இழக்கும் நிலையில் இந்த மாகாணம் உள்ளது. 

பிள்ளைகளை போதைப்பொருளில் இருந்து பாதுகாக்க முடியாமல், எத்தனையோ தாய்மார்கள் கண்ணீர் விடுகின்றனர். மறுபுறம் போதைக்கு அடிமையான தனது மகனை பொலிஸாரிடம் ஒப்படைக்கும் நிலைமை கூட இங்கு ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் இளைய சமூகத்தினரின் எதிர்காலம் பேரழிவை நோக்கிச் செல்கிறது என்பதையே பிரதிபலிக்கின்றன.

ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையான 23 வயது இளைஞனை யாழ். சீர்திருத்த மையமொன்றில் சந்தித்தேன். கூடாத நட்பு, ஆபத்தை அறியாத ஆசைகளினால் போதைக்கு அடிமையாகி தொலைந்துபோன நாட்கள் குறித்து சில விடயங்களை என்னுடன் பகிர்ந்துகொண்டான்.

எனது தாய் ஒரு ஆசிரியை. தந்தை அரச உத்தியோகத்தராக உள்ளார். உயர்தரத்தில் கணித பிரிவில் பரீட்சை எழுதி சித்தியடைந்தேன். ஆனால், பல்கலைக்கழகம் செல்ல வாய்ப்பிருக்கவில்லை. 

எனவே, தனியார் உயர்கல்வி நிலையமொன்றில் பட்டப்படிப்பினை தொடர்ந்தேன். எனக்கு இரு சகோதரிகள் உள்ளனர். அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்த என் வாழ்க்கை கொவிட் பெரும் தொற்றோடு மாறிப்போனது.

கொவிட் தொற்று முடக்க நாட்கள் அவை. பழைய நண்பர்களுடன் எதிர்பாராத விதமாக நெருங்கிய தொடர்புகள் கிடைத்தது. 

அவர்கள் ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமைப்பட்டவர்களாக இருந்துள்ளனர். அதனை நான் அறிந்திருக்கவில்லை. அவர்களும் ஹெரோயின் பயன்படுத்துகின்றமையை  என்னுடன் பகிர்ந்துகொள்ளவும் இல்லை. 

ஈயத்தாளை மூக்குக்கு அருகில் வைத்து எனது நண்பர்கள் ஏதோ செய்வதை எதர்ச்சியாக கண்டேன். அதுகுறித்து வினாவினேன். 

முதலில் ஒன்றுமில்லை என்றவர்கள், பின்னர் ஹெரோயின் என்பதை கூறினர்.

பியர் மற்றும் மதுபானத்தை குடிக்கும்போது அவற்றின் மனம் வீட்டாருக்கு காட்டிக்கொடுப்பதாகவும், அதனாலேயே ஹெரோயின் போதைப்பொருளை  பயன்படுத்துவதாகவும் கூறினர். 

அதற்கு பின்னர் பல தடவைகள் அவர்கள் ஹெரோயின் அடிப்பதை கண்டேன். காலப்போக்கில் என்னை அறியாமலேயே அந்த பழக்கத்துக்கு ஈரக்கப்பட்டு அடிமையாகிவிட்டேன்.

இந்த போதைக்கு அடிமைப்பட்டால், இந்தளவு ஆபத்து வரும் என்று நான் அறிந்திருக்கவில்லை. நாளொன்றுக்கு 3 ஆயிரத்துக்கு ஹெரோயின் வாங்கி அடிப்பேன். 

கல்வி நடவடிக்கைக்காக எனது வங்கி கணக்குக்கு வீட்டிலிருந்து பணம் அனுப்புவார்கள். அதனையே ஹெரோயின் வாங்க பயன்படுத்தினேன். ஹெரோயினை பயன்படுத்திய முதல் நாளில் தலைசுற்றல், வாந்தி என அவதிப்பட்டேன். ஆனால், அன்று பசி, உடல் சோர்வு இருக்கவில்லை.

இறுதியில் ஈயத்தாளை கண்டாலே ஹெரோயின் அடிக்க வேண்டும் என்ற வெறித்தனம் ஏற்பட்டுவிட்டது. தொடர்ந்து ஹெரோயின் பழக்கத்துக்கு அடிமைப்பட்டு, இறுதியில் அது இல்லாமல் இருக்கவே முடியாத நிலைக்கு தள்ளப்பட்டேன். 

ஹெரோயின் அடிக்காதபோது, எழுந்து நடக்க முடியாமல் போனது. ஹெரோயின் கிடைக்காவிட்டால், உடம்பெல்லாம் குத்தும். நாடியெல்லாம் வலிக்கும். 

எத்தனையோ வலிகள் உடம்புக்குள் ஏற்படும். வலிகளை தாங்க முடியாமல் வெறி பிடித்தவன் போன்று செயற்பட்டுள்ளேன்.

எங்காவது பணத்தை பெற்று ஹெரோயினை அடித்துவிட்டால் போதும். சாதாரணமாக செயல்பட முடியும். 

ஆரம்பத்தில் சிற்றின்பத்துக்காக பயன்படுத்தினேன். இறுதியில் வலிகளில் இருந்து மீள கட்டாயமாக பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. 

முதல் 5 தொடக்கம் 10 நாட்கள் வரை மாத்திரமே இன்பத்துக்காக பயன்படுத்த முடியும். பின்னர் அடிமைப்படுத்திவிடும். ஹெரோயின் போதைக்கு அடிமையாகி சுமார் இரண்டு வருடங்கள் வரை வாழ்க்கையை தொலைத்துவிட்டேன்.

ஹெரோயின் போதைப்பொருளை பொறுத்த வரையில் விற்பனை செய்ய வேண்டும் என்று இல்லை. அதனை பழக்கப்படுத்திவிட்டால் போதும். விற்பவர்கள் எங்கிருந்தாலும், தேடிப் போய் வாங்குவார்கள். காடுகளில் இருந்தாலும் கூட, சென்று ஹெரோயினை பெற்றுக்கொள்வோம். ஹெரோயினுக்கு அடிமைப்பட்டதை எனது தாய் அறிந்துவிட்டார். இன்று சட்ட நடவடிக்கைகள் பிரகாரம் சீர்திருத்த மையத்தில் உள்ளேன்.

ஹெரோயின் அடிமைத்தனத்தில் இருந்து விடுபட வேண்டும் என்று இந்த மையத்துக்கு வந்தேன். ஆரம்பத்தில் தப்பித்துச் செல்வதற்கு கூட முயற்சித்தேன். மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டன. 

இன்று என்னை கட்டுப்படுத்தும் அளவுக்கு சுகமடைந்துவிட்டேன். உள ரீதியான மாற்றத்தின் ஊடாகவே ஹெரோயின் அடிமைத்தனத்திலிருந்து முழுமையாக குணமடைய முடியும் என்பதை உணர்ந்துவிட்டேன் என்று அமைதியாக கூறி முடித்தார்.

இவ்வாறு எத்தனையோ இளம் வயதினர் வடக்கில் மாத்திரமல்ல, நாட்டின் பல  பகுதிகளிலும் போதைப்பொருளுக்கு அடிமையாகி, வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர். 

யாழ். சீர்திருத்த நிலையமான நம்பிக்கை இல்லத்தின் கட்டுப்பாட்டாளர் டி.ஆர். ஜெரின் கூறுகையில்,

போதைப்பொருள் விற்பனையாளர்களால் பெரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறோம். நம்பிக்கை இல்லத்தின் பொறுப்பாளராக உள்ள அருட் கலாநிதி வின்சன் மூன்று தடவைகள் போதைப்பொருள் விற்பனையாளர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். அச்சுறுத்தல்கள் இருந்தும் போதைப்பொருளில் இருந்து இளைஞர்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே செயற்படுகின்றோம். யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்கள் கூடுதலாக போதைக்கு அடிமைப்படுகிறவர்களாக உள்ளனர். விழிப்புணர்வுகளை முன்னெடுத்து வருகிறோம்.

ஆனால், யாழ்ப்பாணத்தில் மிகவும் மோசமான முறையில் இளம் வயதினரிடம் ஹெரோயின் உட்பட அனைத்து போதைப்பொருட்கள் பாவனை அதிகரித்துள்ளது. 

பாடசாலை மட்டத்தில் மிகவும் ஆபத்தான முறையில் போதைப்பொருள் பரவி வருகின்றன. எனவே தான் மிக சிறு வயதினர் கூட போதைப்பொருள் பாவனைக்கு தூண்டப்படுகின்றனர். 

7ஆம் வகுப்பில் படிக்கும் மாணவன் ஒருவன் ஹெரோயின் போதைப்பொருளை எவ்வாறு பயன்படுத்துவது, எங்கு கிடைக்கும், விற்பவர் யார், வாங்குபவர் யார் என்று அனைத்து விடயங்களையும் தெரிந்து வைத்துள்ளான் என்றால் யாழில் எந்தளவுக்கு போதைப்பொருள் பரவியுள்ளது என்பதை உணர முடிகிறது.

கொலைகள் மற்றும் கொள்ளைகள் என பல்வேறு குற்றச் செயல்கள் யாழ்ப்பாணம் உட்பட வடக்கின் அனைத்து பகுதிகளிலும்  அதிகரித்துள்ளது என்றால் அதற்கு பிரதான காரணமாக போதைப்பொருள் பயன்பாடு உள்ளன. 

இளைஞர்களை இந்த அழிவிலிருந்து பாதுகாக்க தவறினால், எமது இனத்தின் அழிவு வெகு தொலைவில் இல்லை என்பதே உண்மை. போதைக்கு அடிமையான இளைஞர்கள் நீதிமன்றங்கள் மற்றும் பெற்றோர்கள் ஊடாக எத்தனையோ பேர் அழைத்து வரப்படுகின்றனர். எம்மால் முடிந்தளவு அவர்களை போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்து  விடுவிக்க போராடுகின்றோம் என்றார்.

மேலும், நம்பிக்கை இல்லத்தின் பொறுப்பாளரான அருட் கலாநிதி டேவிட் வின்சன் பற்றிக் கூறுகையில்,

யாழ்ப்பாணத்தில் கிராமங்கள் மற்றும் பாடசாலைகள் என அனைத்து இடங்களிலுமே  போதைப்பொருட்கள் பரவிக் கிடக்கின்றன. 

பெரியளவில் பரவிக்கிடக்கும் போதைப்பொருள் பாவனையை ஒழிக்க வேண்டுமானால், அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட  வேண்டும். வடக்குக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதை முதலில் தடுக்க வேண்டும்.

இனியும் பொறுமை காத்தால், எமது இளைய சமூகத்தினர் அழிந்துவிடுவார்கள். 20 தொடக்கம் 25க்கும் இடையிலான வயதை உடையவர்கள் கூடுதலாக ஹெரோயின் பாவனைக்கு அடிமைப்பட்டுள்ளனர். 13 வயதிலிருந்தே போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகும் நிலைமை யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளமை மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.

இளம் பெண்கள் கூட போதைப்பொருள் பாவனைக்கு தூண்டப்பட்டுள்ளனர். ஹெரோயின் என்ற போதைப்பொருளே  வடக்கில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றிக்கொள்ளல், போதை மாத்திரைகள் என பல வடிவங்களில் வடக்கில் பயன்படுத்தப்படுகின்றன என்றார்.

எனவே, வடக்கில் காணப்படும் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருள் பாவனையால் காணப்படுகின்ற அச்சுறுத்தலான நிலைமையை நேரடி விஜயத்தின் மூலம் உணரக்கூடியதாக இருந்தது. 

போதைப்பொருள் ஆக்கிரமிப்புகளில் இருந்து இளைஞர்களை பாதுகாக்க சமூக மட்டத்திலான பாதுகாப்பு அரண்கள் தேவைப்படுகின்றன. இதனை கூடிய விரைவில் செய்ய வேண்டும் என்பதே வடக்கு பெற்றோர்களின் எதிர்பார்ப்பாகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச விண்வெளி நிலையத்தில் அரபு உரையாடல்கள்

2023-05-29 15:42:07
news-image

ஜனாதிபதி செயலாளரை சந்தித்த அமெரிக்க இராஜதந்திரிகள்

2023-05-27 22:30:22
news-image

சிறுவர்கள்  கடத்தல் : பின்னணியில் நடப்பது...

2023-05-26 16:41:31
news-image

அறகலய மீதான அவதூறுகள் 

2023-05-26 12:00:54
news-image

கொரோனாவை விட கொடூர தொற்று வரப்போகிறது!...

2023-05-25 14:51:14
news-image

குறைவடையப் போகும் வட்டி வீதங்கள் ?

2023-05-24 16:43:35
news-image

ராஜபக்ஷர்களின் இலக்கு : பிரதமர் பதவியா?...

2023-05-23 21:42:25
news-image

தேசிய நல்லிணக்கத்துக்கு இருதரப்பு கருத்தொருமிப்பு அவசரமானது,...

2023-05-22 22:08:35
news-image

சுமந்திரனின் பிரேரணையை வரவேற்கும் டிலான் எம்.பி.

2023-05-22 14:01:41
news-image

ரஷ்ய வைரம் வேண்டாம் !

2023-05-19 16:12:46
news-image

அரசியல் தீர்வு பேச்சுவார்த்தை : தேர்தலுக்கானதா?

2023-05-18 17:24:35
news-image

மக்களின் விருப்பமே 'மலையகம் 200 முத்திரை' 

2023-05-18 12:51:03