வடக்கு - கிழக்கில் இன்று நடைபெறும் நினைவேந்தல்களில் நாங்கள் அரசியலை காண்கின்றோம். தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்து விடயங்களுக்கு எதிராகவும் இனிமேல் வடக்கு கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் பலமாக இருக்கும் என வடக்கு - கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் ஊடகப்பேச்சாளர் இராசரெத்தினம் தர்சன் தெரிவித்தார்.
யாழ்.பல்கலைக்கழகமும் கிழக்கு பல்கலைக்கழகமும் இணைந்து வடக்கு - கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் என்னும் அமைப்பு கிழக்கு பல்கலைக்கழகத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
அங்குரார்ப்பணத்தையடுத்த இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே வடக்கு -கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் ஊடகப்பேச்சாளர் இராசரெத்தினம் தர்சன் மேற்கணடவாறு தெரிவித்தார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையில் 18 ஆம் திகதி இடம்பெற்ற சந்திப்பினையடுத்து குறித்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏனைய மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழக வளாகங்களையும் இணைந்து இந்த அமைப்பை வலுப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு - கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் இதன்போது தெரிவித்தனர்.
வடக்கு - கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் தலைவராக கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலைகலாசார பீடத்தின் தலைவர் நி.தர்சன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அமைப்பின் செயலாளராக யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவர் அ.விஜயகுமாரும், பொருளாளராக யாழ். பல்கலைக்கழகத்தினை சேர்ந்த பிரதீபனும், ஊடக பேச்சாளராக யாழ்.பல்கலைக்கத்தை சேர்ந்த இராசரெத்தினம் தர்சனும், செயற்பாட்டு உறுப்பினராக கிழக்கு பல்கலைக்கழக மாணவி அனுஸ்திகாவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட வடக்கு - கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் நி.தர்சன்,
“ வடக்கு - கிழக்கின் அனைத்து பல்கலைக்கழகத்தினையும் உள்ளடக்கியதாக எதிர்காலத்தில் உருவாகவுள்ளோம்.
வடக்கு கிழக்கில் உள்ள பல்கலைக்கழகங்களில் உள்ள அனைத்து தமிழ் மாணவர்களையும் ஒன்றிணைத்து பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக இதனை உருவாக்கவுள்ளோம்.
இது காலத்தின் கட்டாயம் கருதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுவரும் சூழ்நிலையிலேயே இந்த மாணவர் ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளுக்கும் குரல்கொடுக்கும் வகையிலும் மாணவர்கள் நலன்சார்ந்த வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக தலைவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, வடக்கு - கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் அ.விஜயகுமார் தெரிவிக்கையில்,
"வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும் அவர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளுக்கு ஆதரவாக செயற்படும் வகையிலும் இந்த அமைப்பு செயற்படவுள்ளது.
வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் பலமாக இணைந்து செயற்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
இதன்போது கருத்து வெளியிட்ட வடக்கு -கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் ஊடகப்பேச்சாளர் இராசரெத்தினம் தர்சன்,
"வடக்கு - கிழக்கு என்ற இணைந்த பதத்தினை தமிழ் பல்கலைக்கழக மாணவர்களாக நாங்கள் உச்சரிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.
யாழ். பல்கலைக்கழகமும் கிழக்கு பல்கலைக்கழகமும் இணைந்து இந்த கட்டமைப்பினை உருவாக்கியுள்ள போதிலும் முக்கிய பொறுப்புகளில் ஏனைய வடக்கு கிழக்கில் உள்ள வளாகங்களில் உள்ள மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
வடக்கு கிழக்கில் இந்த அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டமிட்ட பௌத்த மயமாக்கலாக இருக்கலாம், தமிழ் அரசியல் கைதிகளில் விடுவிப்பதாக இருக்கலாம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினையாக இருக்கலாம், ஜெனிவாவில் எங்களை ஏமாற்றும் விடயங்களாக இருக்கலாம் அனைத்து விடயங்களுக்கு எதிராகவும் இனிமேல் வடக்கு கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் பலமாக இருக்கும்.
வடக்கு கிழக்கில் இன்று நடைபெறும் நினைவேந்தல்களில் நாங்கள் அரசியலை காண்கின்றோம். கடந்த காலத்தில் கொவிட் போன்ற அச்சுறுத்தல்கள் காரணமாக மாணவர் ஒன்றியங்களினால் தமது செயற்பாடுகளை சிறப்பாக செயற்பட முடியாத நிலையிருந்தது.
எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாது என நம்புகின்றோம்.
முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை அனுஷ்டிக்க யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியக் கட்டமைப்பு ஒன்றினை உருவாக்கியிருந்தது.
அண்மையில் தியாக தீபம் தீலீபன் அவர்களின் நினைவுதினத்தில் கூட நடைபெற்ற சம்பவங்களை அனைவரும் அறிவீர்கள்.
எதிர்காலத்தில் இவ்வாறான இடங்களில் வடக்கு - கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் செயற்படும். வடக்க - கிழக்கில் ஒரு பொதுக்கட்டமைப்பினை உருவாக்கி செயற்படுவதற்கு நாங்கள் தயாராகவுள்ளோம்.
முல்லைதீவின் ஊடாக திருகோணமலையினை அடையும் பாதையில் நாங்கள் வரும்போது அப்பகுதியில் மிகவும் வேதனையான விடயங்களாக இருந்தது.
நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் சிங்கள குடியேற்றங்கள் செய்யப்படுகின்றன. இவ்வாறான விடயங்களுக்கு எதிராக வடக்கு கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் தமது குரலை வெளிப்படுத்தும்” என ஊடக பேச்சாளர் தர்சன் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM