கிளிநொச்சி இரணைமடு அபிவிருத்தி திட்டத்தின் ஒரு பகுதியான இபாட் திட்டத்தின் கீழ்  மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தி பணிகளில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனா்.

இந்த திட்டத்தின் கீழ்  இரணைமடுக்குளத்தின் கீழ் வருகின்ற கமக்கார அமைப்புக்களை உள்ளடக்கிய பிரதேசங்களில்  விவசாய வீதிகள்,பாலங்கள்,  நீா்ப்பாசன வாய்க்கால்கள்.பொதுக் கிணறுகள் என்பன பெருமளவு நிதி ஒதுக்கீட்டில்  அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த அபிவிருத்திப் பணிகளிலேயே முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

பாலங்கள், நீா்ப்பாசன வாய்க்கால்கள் என்பன பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ள போதும் அவை சீராக அமைக்கப்படவில்லை என்றும், அவற்றுக்குரிய நியமங்களுக்கு அமைவாக பணிகள் இடம்பெறவில்லை என்றும் தெரிவிக்கும் விவசாயிகள். இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகள் தற்போது பெய்துள்ள ஓரளவான மழைக்கே தாக்கு பிடிக்காது சேதமுற்ற நிலையிலும்,  சரிந்து விழும் நிலையிலும் காணப்படுகிறது எனவும் குறிப்பிடுகின்றனா்.

குறிப்பாக கிளிநொச்சி திருவையாறு மகிழங்காடு கமக்கார அமைப்புக்குட்பட்ட பிரதேசத்தில் அண்மையில் இத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பொதுக்கிணறு இரண்டு பக்கங்களில் மேலிருந்து  அடி வரைக்கும் வெடிப்பு ஏற்பட்டு எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில்   காணப்படுகிறது. அதேவேளை அந்தப் பகுதியில்  புனரமைக்கப்பட்ட விவசாய வீதிகளின் பணிகள் நிறைவுப்பெற்றுள்ளது என்று கூறப்பட்ட போதும் குறித்த வீதிகளில் விவசாயிகள் விவசாய உள்ளீடுகளை கொண்டு செல்ல முடியாத நிலையில் உள்ளது.

இதேவேளை   அங்கு அமைக்கப்பட்டுள்ள  நீா்ப்பாசன வாய்க்கால்களில் உள்ள மதில்கள் மற்றும் மதவுகள் என்பன சாதாரண மழைக்கு தாக்கு பிடிக்க முடியாது உடைந்து காணப்படுகிறது. எனவே இவ்வாறு பல குறைப்பாடுகள் இபாட் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகளில் காணப்படுகிறது. என விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனா்.

ஒதுக்கப்பட்டுள்ள பெருமளவு நிதிக்கு அமைவாக நீடித்து நிலைத்திருக்க கூடிய வகையில் அா்ப்பணிப்புடன் அபிவிருத்தி பணிகளில் ஈடுபடுங்கள் என விவசாயிகள் வினயமாக கோருகின்றனா். இனி இப்படியொரு திட்டம் கிடைக்கப்போவதில்லை எனவும் எனவே கிடைத்துள்ள வாய்ப்பை பயன்படுத்தி சிறந்த அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளுமாறும் விவசாயிகள்  கோரிநிற்கின்றனா்.

மேலும் இந்த முறைகேடுகள் தொடா்பில் அதிகாரிகள் மற்றும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரிடமும் தெரியப்படுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா்.

எனவே இது தொடா்பில் கிளிநொச்சி மாவட்ட பிரதி நீா்ப்பாசன பணிப்பாளா் எந்திரி சுதாகரன் அவா்களை தொடா்பு கொண்டு கேட்ட போது

இபாட் திட்டத்தின் கீழ் இவ்வாறான  பல குறைபாடுகள் காணப்படுகிறது.  இப்போத மழை பெய்து பின்னா் தான் மேறகொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் குறைபாடுகள் வெளிப்பட்டுள்ளது. எனவே ஒப்பந்தகாரர்களிடம் இருந்து இன்னும் திணைக்களம் குறித்த அபிவிருத்திப் பணிகளை பொறுப்பேற்றுகொள்ளவில்லை  பொறுப்பேற்கின்ற போது இவ்வாறான குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அவை நிவா்த்தி செய்யப்பட்டே பொறுப்பேற்கப்படும்.அதுவரைக்கும் அவா்களுக்கான நிதி விடுவிப்பும் மேற்கொள்ளபடாது என்றும் தெரிவித்தார்.