இலங்கை முஸ்லிம்கள் ஒருபோது பயங்கரவாதத்தை ஆதரிக்கவும் இல்லை இலங்கையின் தேசிய பாதுகாப்பை சீரழிக்கவும் இல்லை. பயங்கரவாத முத்திரை பொரித்து இலங்கை முஸ்லிம்களை அவமதிக்கக் கூடாது என  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஊடக செயலாளர் பாசில் பாரூக் தெரிவித்தார். ஐ.எஸ். அமைப்பு உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக  இலங்கையின் பிரதானமான 12 முஸ்லிம் அமைப்புகள் அறிக்கையொன்றும் வெளியிட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்

 இலங்கை முஸ்லிம் மதத் தலைவர்கள், ஜம் ஈயத்துள் உலமா சபை உறுப்பினர்கள் மற்றும் முஸ்லிம் தலைவர்களுடன் நேற்று  புத்தசாசன மற்றும் நீதி அமைச்சில் பேச்சுவாரத்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் பின்னர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஊடக செயலாளர் ஊடகங்களுக்கு  கருத்து தெரிவிக்கையில்,

இஸ்லாத்தில்  ஒரு போதும்  தீவிரவாதத்தை ஏற்றுக்கொள்ளவும் இல்லை  அனுமதிக்கப்படவும் இல்லை. இலங்கை முஸ்லிம்கள்  ஐ.எஸ். பயங்கரவாத  அமைப்பிற்கு எதிரானவர்கள். இலங்கை முஸ்லிம்கள் ஒருபோதும் இவ்வாறான பயங்கரவாத அமைப்புகளை ஏற்றுக்கொண்டதில்லை. அதற்கான நல்ல உதரணங்களை கடந்த காலங்களில் நாம் அவதானித்துள்ளோம். அதேபோல்  ஐ.எஸ். அமைப்பினை எதிர்த்து உலமா சபையின் தலைவர் இலங்கை வானொலியில் 2014 ஆம் ஆண்டு உரையாற்றியுள்ளார். அத்துடன் 2015 ஆம் ஆண்டு இந்த ஐ.எஸ். அமைப்பு உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக  12 முஸ்லிம் அமைப்புகள் அறிக்கையொன்றும் வெளியிட்டுள்ளன.

மேலும் நாம் ஒருபோதும் எந்த மதத்தையும் அவமதித்துப் பேசவில்லை. அவமதித்து பேசிய சிலருக்கெதிராக நாம் நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். தேசிய ஒற்றுமைக்கும் சக வாழ்வுக்கும் பங்களிப்புச் செய்வதற்காக உலமா சபை நூல்களையும் வெளியிட்டுள்ளது. ஜிஹாக் என்றால் என்ன? ஹிஜாப் என்றால் என்ன? என்பதை விளக்கி சிங்கள மொழியில் புத்தகங்கள் வெளியிட்டுள்ளோம். மத்ரஸாக்களிலோ, சர்வதேச பாடசாலைகளிலோ தீவிரவாதத்தைப் போதிப்பதற்காக யாரும் வெளிநாட்டிலிருந்து வருகை தருவதாக இருந்தால் எமக்கு அறிவியுங்கள். நாம் நடவடிக்கை எடுப்போம். நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமாக அமுல்படுத்தப்பட வேண்டும்.

இஸ்லாமிய மத இயக்கங்களுக்கிடையில் போட்டிகளும் முரண்பாடுகளும் சண்டைகளும் இல்லை. 10 வருடங்களுக்கு முன்பு பேருவளையில் ஒரு சம்பவம் நடந்தது. அதன் பின்பு எந்த அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை. பெரும்பான்மை இனவாத குழுக்கள் முஸ்லிம்களை அரபு நாடுகளுக்குப் போகும்படி சொல்கிறார்கள். இவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மதங்களுக்கும் இனங்களுக்கும் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். எந்தவொரு தனிநபரும் தவறு செய்தால் தண்டிக்கப்பட வேண்டும் என்றார். இந்த நிலைப்பாட்டில் நாம் உள்ளோம். ஆகவே  பயங்கரவாத முத்திரை பொரித்து இலங்கை முஸ்லிம்களை அவமதிக்கக் கூடாது என அவர் குறிப்பிட்டார்.