( எம்.எப்.எம்.பஸீர்)
செல்வந்தர்களை மையப்படுத்தி கோடிக்கணக்கான பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திகோ குறூப் ப்ரைவட் லிமிடட் நிறுவனத்தின் உரிமையாளர் எனக் கூறப்படும் திலினி பிரியமாலியுடன் தொடர்புபட்ட மோசடி நடவடிக்கைகளுக்கு உடந்தையாக செயற்பட்டமைக்காக அவரது கணவர் என அறிமுகம் செய்யப்பட்டுள்ள இசுரு சாமிக பண்டார என்பவரை சி.ஐ.டி.யினர் கைது செய்துள்ளனர்.
'அப்பச்சி' என திலினி பிரியமாலியினால் அழைக்கப்பட்ட இசுரு சாமிக பண்டார இன்று (18) கோட்டை நீதிமன்றின் பதில் நீதிவான் ஷிலினி பெரேரா முன்னிலையில் ஆஜர்ச் செய்யப்பட்ட நிலையில், 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த மோசடி விவகாரத்தின் வழக்கு விசாரணைகள் நாளை (19) விசாரணைக்கு வரும் நிலையிலேயே அவர் இவ்வாறு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கோடிக்கணக்கான மோசடி தொடர்பில் சி.ஐ.டி.க்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய கடந்த 5 ஆம் திகதி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்புக் குழுவொன்று திலினி பிரியமாலியைக் கைது செய்தது. அதன் பின்னரான விசாரணைகள் சி.ஐ.டி.யினருக்கே அதிர்ச்சியளித்தன.
இதுவரை சுமார் 12 முறைப்பாடுகள் சி.ஐ.டி.யினரின் விசாரணைக்கு உட்பட்டுள்ள நிலையில், அவற்றூடாக மோசடி செய்யப்பட்ட தொகை சுமார் 500 கோடி ரூபாவை நெருங்கியுள்ளது.
இறுதியாக முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி 17 ஆம் திகதி திங்கட்கிழமை சி.ஐ.டி.யில் முறைப்பாடளித்திருந்தார்.
அதில் சுமார் எட்டரைக் கோடி ரூபாவை திலினி மோசடி செய்துள்ளதாகவும், தான் காணி ஒன்றினை விற்று குறித்த முதலீட்டை செய்ததாகவும் ஆவணங்களுடன் அசாத் சாலி முறைப்பாடளித்துள்ளார்.
இந் நிலையில் திலினியின் மோசடி நடவடிக்கைகளின் பெறுமானம் 1000 கோடி ரூபாவரை செல்லும் என அனுமானிப்பதாகவும் சி.ஐ.டி.யினர் தெரிவிக்கின்றனர். இந் நிலையில், சி.ஐ.டி.யினர் திலினி பிரியமாலியின் நிறுவனத்தின் ஊழியர்களையும் அழைத்து விசாரித்து வருகின்றனர்.
இந் நிலையில், திலினி பிரியமாலியின் திட்டப்படி செல்வந்தர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பிரபல நடிகைகள் சிலர் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க சி.ஐ.டி.யினர் தீர்மானித்துள்ளனர். அதற்கான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதுவரையிலான சி.ஐ.டி. விசாரணைகள் பிரகாரம், திலினி பிரியமாலி குறித்த மோசடி நடவடிக்கைகளை தனியாக முன்னெடுக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த அரசாங்கத்தின் பிரபல அமைச்சர் ஒருவரின் நெருங்கிய சகாவாக இருந்ததாக கூறப்படும் நபர் ஒருவர் இம்மோசடிகளுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருப்பது குறித்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
திலினி பிரியமாலியின் கணவராகவும் குறித்த நபர் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட சந்தர்ப்பங்களையும் சி.ஐ.டி.யினர் அடையாளம் கண்ட நிலையிலேயே 17 ஆம் திகதி அவரை மீண்டும் அழைத்து விசாரித்தனர்.
சுமார் 9 மணி நேர விசாரணையின் பின்னர், இசுரு சாமிக பண்டார எனும் குறித்த நபரை சி.ஐ.டி.யினர் மாலை 6.30 மணிக்கு கைது செய்தனர்.
சி.ஐ.டி.யினர் முன்னெடுத்த விசாரணைகளில், திலினியும் இசுருவும் சட்ட ரீதியாக திருமணம் செய்துள்ளமை தொடர்பில் எந்த தகவல்களும் இதுவரை வெளிப்படுத்தப்படாத நிலையில், திலினி அவரை ' அப்பச்சி' என செல்லமாக அழைத்துள்ளமை தெரியவந்துள்ளது.
இசுரு சாமிக பண்டார, 2012ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தின் அமைச்சராக இருந்த மேர்வின் சில்வாவிடம் செயலாளராக தன்னைக் காட்டிக்கொண்டுள்ளார்.
எனினும் உண்மையில் அவர் செயலாளராக செயற்படவில்லை எனவும் குறித்த முன்னாள் அமைச்சரின் பனிக் குழுவில், பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக சி.ஐ.டி.யினர் தகவல்களை வெளிப்படுத்திக்கொண்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில், திலினி மோசடி செய்ததாக கூறும் வர்த்தகர்களில் பலரை அவருக்கு அறிமுகம் செய்து மோசடியை முன்னெடுக்க உதவியவர் இசுரு சாமிக பண்டார என தெரியவந்துள்ள நிலையிலேயே சி.ஐ.டி.யினர் அவரைக் கைது செய்துள்ளனர்.
குறிப்பாக சி.ஐ.டி.யில் முறைப்பாடளித்த வர்த்தகரான அப்துல் ஹசன் கமல் ஹசன் எனபவர், 60 ஆயிரம் அமரிக்க டொலர்கள் மற்றும் ஒரு இலட்சம் அவுஸ்திரேய டொலர்களையும் ஒரு கிலோவுக்கும் மேற்பட்ட தங்க நகைகளையும் திலினி மோசடி செய்ததாக கூறியுள்ள நிலையில், அதில் நேரடியாக இசுரு சாமிக பண்டார தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந் நிலையிலேயே அவரை சி.ஐ.டி.யினர் கைது செய்து இன்று கோட்டை நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.
அதன்படியே அவரை நாளை வரை நீதிவான் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நிலையில், இது குறித்த அவ்வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
இதனிடையே, இதுவரை திலினியால் மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் பணத்துக்கு என்ன ஆனது என்பது மர்மமாக இருந்து வருகின்றது. மோசடி செய்யப்பட்ட பணம் அவரது வங்கிக்கணக்குக்கோ, நிறுவன கணக்கிலோ வைப்புச் செய்யப்படவில்லை என தெரியவந்துள்ள நிலையில், அவை பணமாக நிறுவனத்தில் வைக்கப்பட்டிருக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது. மோசடி செய்யப்பட்ட முழு பணத் தொகையையும் சந்தேக நபர்கள் செலவு செய்திருக்க வாய்ப்பில்லை என கூறும்
விசாரணையாளர்கள், இவ்வாறான நிலையில் அந்த பணத் தொகை எங்கோ ஒரு இடத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கும் சி.ஐ.டி.யினர் தொடர்ச்சியாக பணத்தை கண்டுபிடிக்கவும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM