(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)
நாட்டின் மொத்த அரிசி உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கை கிழக்கு மாகாணம் வழங்குகிறது. எனினும் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும் போது இந்த பகுதிகளில் பயிரிடல் மற்றும் அறுவடை முன்கூட்டியே செய்யப்படுவதால் அந்த விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலையும், பயிர்களுக்குத் தேவையான உரங்களின் அளவும் சரியான நேரத்தில் கிடைப்பதில்லை என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்த போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
அனுராதபுரம், பொலனறுவை, அம்பாந்தோட்டை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் நெற்செய்கை பாரியளவில் மேற்கொள்ளப்பட்டாலும் நாட்டின் மொத்த அரிசி உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கை கிழக்கு மாகாணம் வழங்குகிறது.
எனினும் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும் போது இந்த பகுதிகளில் பயிரிடல் மற்றும் அறுவடை முன்கூட்டியே செய்யப்படுவதால், அந்த விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலையும் பயிர்களுக்குத் தேவையான உரங்களின் அளவும் சரியான நேரத்தில் கிடைப்பதில்லை.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் அறிவியல் பூர்வமற்ற முடிவுகளால் ஒட்டுமொத்த விவசாயமும் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதோடு, இன்றும் ஒட்டுமொத்த மக்களும் அதன் விளைவுகளை அனுபவித்து வருகின்றனர்.
சிறு மற்றும் பெரும் போகங்களுக்கும் மேலதிகமாக பயிர்ச்செய்கையை மேற்கொள்ளும் இந்த விவசாயிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதன் மூலம் வீழ்ச்சியடைந்த விவசாயத்திற்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும்.
வேகமாக அதிகரித்து வரும் அரிசி விலையைக் கட்டுப்படுத்தி சந்தையில் அரிசிக்கு நிலையான விலையை ஏற்படுத்தவும் உதவும். அதற்கிணங்க இதனை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகக் கருதி அரசாங்கத்திடமிருந்து பின்வரும் கேள்விகளுக்கு குறிப்பிட்ட பதில்களையும் விளக்கங்களையும் எதிர்பார்க்கிறேன்.
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் சிறு மற்றும் பெரும் போக பருவங்களில் நெல் அறுவடை முதலில் பெறப்படுவதால் அறுவடைக்கு உரிய விலை கிடைப்பதில்லை. விற்பனை செய்வதும் சிரமமாகவே உள்ளதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர். அப்பகுதிகளிலும் பிற பகுதிகளிலும் நெல் அறுவடையை முறையான முறைப்படி கொள்வனவு செய்வதற்குரிய தடைகள் என்ன? அந்த தடைகளை நீக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?
கிழக்கு மாகாணத்தில் சிறு, பெரும்போக பருவங்களுக்கு முன்னர் பயிர்ச்செய்கைகளை மேற்கொண்டு வரும் விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையை தவிர்க்க அரசாங்கம் என்ன நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளது? 2022ஃ23 பெரும் போக பருவ நெற்செய்கைக்குத் தேவையான யூரியா, எம்.ஒ.பி மற்றும் டி.எஸ்.பி ஆகிய உரங்களின் அளவு என்ன? அவற்றில் எந்தளவு தொகை தற்போது நாட்டில் கையிருப்பில் உள்ளது? மீதமுள்ள தொகையை பெற எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? அந்த உரங்களை விவசாயிகளுக்கு வழங்கி வைக்க முடியுமான கால எல்லை யாது?
தற்போதைய அரசாங்கத்தின் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் தீர்மானமானது 1 ஏக்கர் வரை விவசாயம் செய்த விவசாயிகளுக்கு மாத்திரமா செல்லுபடியாகும்? அப்படியானால், ஒரு ஏக்கருக்கு அதிகமாக மேற்கொண்ட பயிர்களுக்கு கடன் தள்ளுபடியை வழங்க முடியாதா? இதன் கீழ் தனியார் வங்கிகளின் ஊடாக பெற்ற விவசாயக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படுமா? அவ்வாறு இல்லையென்றால், அந்த விவசாயிகளுக்காக அரசாங்கத்தால் எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் என்ன?
காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளால் நெல் மற்றும் இதர விவசாய பயிர்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? அப்படியானால், மொத்த உற்பத்தியில் சதவீதமாக அந்தத் தொகை எவ்வளவு? அதைத் தடுக்க அல்லது குறைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாது? அவ்வாறு மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படவில்லையாயின், அதற்கான காரணங்கள் என்ன? உலர் வலய பகுதியிலுள்ள நீர்பாசன வாய்க்கால்களிலும் மணல் அகழ்வு நடப்பதால் நீர்பாசனமும், அப்பகுதிகளிலுள்ள பயிர்ச் செய்கைகளும் கடுமையாக சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக விவசாய அமைச்சுக்கோ அல்லது நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கோ தெரியுமா? இந்த மணல் கடத்தலை தடுக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? எனக் கேள்விகளை எழுப்பினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM