ஐக்கிய அரபு இராச்சியத்தை வீழ்த்தியது இலங்கை 

Published By: Vishnu

18 Oct, 2022 | 08:23 PM
image

(நெவில் அன்தனி)

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிராக மெல்பர்ன், ஜீலோங் கார்டினியா பார்க் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற ஏ குழுவுக்கான ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் முதல் சுற்று போட்டியில் 79 ஓட்டங்களால் மிகவும் அவசியமான வெற்றியை இலங்கை ஈட்டிக்கொண்டது.

நமிபியாவுக்கு எதிரான ஆரம்பப் போட்டியில் 55 ஓட்டங்களால் தோல்வி அடைந்து  ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிரான    இரண்டாவது போட்டியில் 79 ஓட்டங்களால் வெற்றிபெற்றதன்  பலனாக ஆசிய கிண்ண சம்பியனும் முன்னாள் உலக சம்பியனுமான இலங்கைக்கு சுப்பர் 12 சுற்றில் நுழைவதற்கான வாயில் திறக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்தப் போட்டி முடிவுடன் நிகர ஓட்ட வேக வித்தியாசத்தில் இலங்கை 3ஆம் இடத்திலேயே இருக்கிறது. எனவே வியாழக்கிழமை நடைபெறவுள்ள நெதர்லாந்துடனான போட்டியில் இலங்கை வெற்றிபெற்றால் மாத்திரமே சுப்பர் 12 சுற்றில் விளையாட தகுதிபெறும்.

ஐக்கிய அரபு இராச்சியத்துடனான போட்டியில் பெத்தும் நிஸ்ஸன்க குவித்த அரைச் சதம், வனிந்து ஹசங்க டி சில்வா, துஷ்மன்த சமீர ஆகியோரின துல்லியமான பந்துவீச்சு என்பன இலங்கையின் வெற்றியில் பெரும் பங்காற்றின.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை துடுப்பாட்டத்தில் முதல் 3 வீரர்கள் மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பெத்தும் நிஸ்ஸன்க அபார அரைச் சதம்

ஆரம்ப விரர் பெத்தும் நிஸ்ஸன்க அரைச் சதம் குவித்து இரண்டு இணைப்பாட்டங்ளில் முக்கிய பங்கு வகித்திராவிட்டால் இலங்கையின் நிலைமை மிகவும் மோசமடைந்திருக்கும்.

குசல் மெண்டிஸுடன் ஆரம்ப விக்கெட்டில் 28 பந்துகளில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்த பெத்தும் நிஸ்ஸன்க, 2ஆவது விக்கெட்டில் தனஞ்சய டி சில்வாவுடன் 39 பந்துகளில் சரியாக 50 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

குசல் மெண்டிஸ் 18 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 33 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஒரு கட்டத்தில் 117 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை மாத்திரம் இழந்திருந்த இலங்கை, கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதன் பின்னர் 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கடைசி 8 விக்கெட்களை இலங்கை இழந்தமை இரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

8ஆவது ஐசிசி இ20 உலகக் கிண்ணத்தில் கார்த்திக் மெய்யப்பன் ஹெட் - ட்ரிக்

தமிழகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சுழல்பந்துவீச்சாளர் கார்த்திக் மெய்யப்பன் 8ஆவது ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் முதலாவது ஹெட் - ட்ரிக்கை பதிவு செய்து வரலாறு படைத்ததுடன் இலங்கை அணியை நெருக்கடிக்குள்ளாக்கினார்.

பானுக்க ராஜபக்ஷ (5), சரித் அசலன்க (0), தசுன் ஷானக்க (0) ஆகிய மூவரை 15ஆவது ஓவரின் கடைசி 3 பந்துகளில் ஆட்டமிழக்கச் செய்து ஹெட் - ட்ரிக்கை மெய்யப்பன் பூர்த்தி செய்தார்.

பைசலாபாத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட வேகப்பந்துவீச்சாளர் ஸஹூர் கானும் சிறப்பாக பந்துவீசியிருந்தார்.

இலங்கை அணியின் மத்தியவரிசை  துடுப்பாட்டக்காரர்களான வனிந்து ஹசரங்க டி சில்வா (2), சாமிக்க கருணாரட்ன (2), ப்ரமோத் மதுஷான் (1) ஆகியோரும் துடுப்பாட்டத்தில் கோட்டை விட்டனர்.

மறுபக்கத்தில் நிதானம் கலந்த வேகத்துடன் கடைசி ஓவர்வரை துடுப்பெடுத்தாடிய பெத்தும் நிஸ்ஸன்க 60 பந்துகளில் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 74 ஓட்டங்களைப் பெற்று ஒரு பந்து மீதமிருக்க ஆட்டமிழந்தார்.

ஐக்கிய அரபு இராச்சிய பந்துவீச்சில் கார்த்திக் மெய்யப்பன் 4 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஸஹூர் கான் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஆயன் அப்ஸால் கான் 16 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

153 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சியம் 17.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 73 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

ப்ரமோத் மதுஷான் விசிய முதலாவது பந்திலும் நான்காவது பந்திலும் இரண்டு கடினமான பிடிகள் நழுவிப்போயின.

எனினும் இலங்கையின் துல்லியமான பந்துவீச்சுகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய ஐக்கிய அரபு இராச்சியம் 3ஆவது ஓவரிலிருந்து சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து தோல்வியைத் தழுவியது.

துடுப்பாட்டத்தில் ஆயன் அப்ஸால் கான் (19), ஜுனைத் சித்திக் (18), சிராக் சூரி (14) ஆகிய மூவரே 10 ஓட்டங்களுக்குமேல் பெற்றனர்.

இலங்கை பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க டி சில்வா 4 ஓவர்களில் 8 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் துஷ்மன்த சமீர 3.5 ஓவர்களில் 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மஹீஷ் தீக்ஷன 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

துஷ்மன்த சமீரவின் தொடை எலும்பில் உபாதை ஏற்பட்டபோதிலும் அது பாரதூரமானதல்லவென அறிவிக்கப்படுகிறது. அவர் 4ஆவது ஓவரைப் பூர்த்தி செய்யாமல் ஓய்வறைக்கு திரும்பினார். அவரது ஓவரை தசுன் ஷானக்க பூர்த்தி செய்தார்.

போட்டி முடிவில் ஆட்டநாயகன் விருது பெத்தும் நிஸ்ஸன்கவுக்கு கிடைத்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈவா வலைபந்தாட்டத்தில் விமானப்படைக்கு 2 சம்பியன்...

2025-01-17 21:24:06
news-image

ITF ஆசியா அபிவிருத்தி சம்பியன்ஷிப்: சிறுமிகள்...

2025-01-17 20:50:01
news-image

இளம் பெட்மின்டன் வீரர்களுக்கு பண்டாரவளை சென்...

2025-01-17 17:29:38
news-image

எம்சிஏ டி பிரிவு 40 ஓவர்...

2025-01-16 20:03:33
news-image

ஐசிசி 19இன் கீழ் மகளிர் ரி20...

2025-01-16 18:13:11
news-image

மகளிர் சர்வதேச ஒருநாள்  கிரிக்கெட்: ப்ரத்திகா,...

2025-01-15 18:24:23
news-image

றினோன் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தின் 'கால்பந்தாட்டம் மூலம்...

2025-01-14 19:24:40
news-image

டிசம்பர் மாதத்தின் அதிசிறந்த ஐசிசி வீரர்...

2025-01-14 18:34:07
news-image

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா...

2025-01-14 17:02:04
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பெத்தும்...

2025-01-14 14:24:06
news-image

வட மாகாணத்தில் மேசைப்பந்தாட்டப் பயிற்சித் திட்டம்

2025-01-14 14:11:23
news-image

19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக்...

2025-01-13 22:15:59