இலங்கை மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி ஒரு ஓட்டத்தால் வெற்றிபெற்றது.

இறுதிவரை பரபரப்பாக இடம்பெற்ற இந்த போட்டியில் இறுதி பந்துக்கு 3 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவர் ஜேசன் ஹோல்டரால் ஒரு ஓட்டத்தை மாத்திரமே பெற முடிந்தது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுகளை இழந்து 330 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் நிரோஷன் டிக்வெல்ல மற்றும் குசால் மென்டிஸ் ஆகியோர் தலா 94 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், தனஞ்சய டி சில்வா  58 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ஜேசன் ஹோல்டர் 3 விக்கட்டுகளை கைப்பற்றினர்.

331 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி ஆரம்பத்தில் சிறப்பாக துடுப்பெடுத்தாடியது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி துடுப்பெடுத்தாடிய லிவிஸ் 148 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், ஜேசன் ஹோல்டர் ஆட்டமிழக்காமல் 45 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

எனினும் ஏனைய வீரர்கள் பிரகாசிக்காத நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 50 ஓவர் நிறைவில் 9 விக்கட்டுகளை இழந்து 329 ஓட்டங்களையே பெறமுடிந்தது.

பந்துவீச்சில் நுவான் குலசேகர மற்றும் லக்மால் தலா 2 விக்கட்டுகளை கைப்பற்றினர்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக இலங்கை அணியின் குசால் மெண்டிஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

இந்த போட்டியில் வெற்றிபெற்றதனூடாக இலங்கை அணி முக்கோணத்தொடரின் இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.