உண்மை கண்டறியும் ஆணைக்குழு ; தென்னாபிரிக்க அனுபவம்

18 Oct, 2022 | 01:21 PM
image

ஆணைக்குழு என்றதும்  காலஞ்சென்ற கம்யூனிஸ்ட் தலைவர் பீற்றர் கெனமன் சுவாரஸ்யமாக கூறிய ஒரு கருத்து எமக்கு நினைவுக்கு வரும்." ஆணைக்குழு நியமனம் என்பது மலசல கூடத்துக்கு போவதை ஒத்ததாக இருக்கும்.அமர்வுகள் இடம்பெறும்.அத்துடன் காரியம் முடிந்துவிடும்."

ஆணைக்குழுக்கள் நியமனங்களைப் பொறுத்தவரை, இலங்கையில் பிரத்தியேகமான ஒரு  வரலாறே இருக்கிறது.குறிப்பாக,  இனநெருக்கடியுடன் சம்பந்தப்பட்ட விவகாரங்களை, தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட  பாதிப்புக்களை விசாரணை செய்வதற்கு  இதுவரையில்  நியமிக்கப்பட்டிருக்கக் கூடிய எந்தவொரு ஆணைக்குழுவும் பயனுறுதியுடைய விளைபயன்களை தரவில்லை.உண்மைகள் கண்டறியப்படுவதை தடுக்கவும் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணாமல் காலத்தைக் கடத்தவுமே அரசாங்கங்கள் பெரும்பாலும் ஆணைக்குழுக்களை பயன்படுத்திவந்திருக்கினறன.

ஆயிரக்கணக்கான பக்கங்களில் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு கையளிக்கப்பட்டதை தவிர, மக்கள் இந்த ஆணைக்குழுக்களினால்  உருப்படியான பயனெதையும் அடையவில்லை.இவை தொடர்பிலான தமிழ் மக்களின் அனுபவங்கள் கசப்பானவை மாத்திரமல்ல, கனதியானவையும் கூட.

இப்போது ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அக்டோபர் 6 இலங்கையின் உரிமை மீறல்கள் பிரச்சினைகள் தொடர்பில் -- முன்னைய தீர்மானங்களை விடவும் கடுமையான நிபந்தனைகளை கொண்டது என்று அரசாங்கம் வர்ணிக்கின்ற -- 51/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்புலத்தில் இன்னொரு ஆணைக்குழுவை நியமிப்பது குறித்து அரசாங்கத்தரப்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மனித உரிமைகள் பேரவையின் இறுதி கூட்டத்தொடரில் பங்கேற்க ஜெனீவா சென்றிருந்த வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தீர்மானத்தை முற்றாக நிராகரித்திருந்தாலும் நீதியையும் நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்துவதற்கு ' உண்மை கண்டறியும் பொறிமுறை ' யொன்று  அமைக்கப்படும் என்று கூறினார்.

இலங்கையில் உண்மை  மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்படுவது குறித்து பேசப்படுவது இது முதற்தடவையல்ல.

உள்நாட்டுப் போரின் முடிவுக்கு பிறகு 2010 மேயில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ' கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தார்.அந்த ஆணைக்குழுவின் அறிக்கை 2011 நவம்பரில் அவரிடம் கையளிக்கப்பட்டது.பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டு பகிரங்கப்படுத்தப்பட்டும் கூட அதன் யோசனைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை. ஜெனீவா தீர்மானம் ஒன்றின் ஊடாகவும் கூட அந்த யோசனைகளை நடைமுறைப்படுத்துமாறு  ராஜபக்ச அரசாங்கத்திடம் சர்வதேச சமூகம் கேட்டது.

பிறகு 2015 ஆட்சி மாற்றத்துக்கு பிறகு மைத்திரி -- ரணில் அரசாங்கமும் அந்த வருடம் செப்டெம்பரில் ' உண்மை,நீதி, நல்லிணக்கம் மற்றும் மீள் நிகழாமைக்கான ஆணைக்குழுவொன்றை  அமைப்பதற்கான திட்டம் குறித்து அறிவித்தது. அன்றைய வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர அந்த முயற்சியில் முன்னின்று செயற்பட்டார். ஆனால், அதுவும் கைகூடவில்லை.

பிறகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2021 முற்பகுதியில் முன்னைய ஆணைக்குழுக்களின்  ( கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, பரணகம ஆணைக்குழு , உடலாகம ஆணைக்குழு, மகாநாம திலகரட்ன ஆணைக்குழு) அறிக்கைளை ஆராய்ந்து  அறிக்கையொன்றை சமர்ப்பிக்க நீதியரசர் நவாஸ் தலைமையில் ஒரு ஆணைக்குழுவை நியமித்தார்.அது இடைக்கால அறிக்கைளை அவரிடம்  கையளித்தது.

அதன் இறுதி அறிக்கை கிடைக்கப்பெற்றதும் அதன் யோசனைகளின் அடிப்படையில் உண்மை கண்டறியும் ஆணைக்குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலி சப்ரி கூறுகிறார்.

நவாஸ் ஆணைக்குழு கடந்தவாரம் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற அதன் அமர்வுக்கு இலங்கையில் உள்ள தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் எஸ்.ஈ.ஷாக்கை அழைத்து அவரது நாட்டில் வெள்ளையரின் இன ஒதுக்கல் ஆட்சியின் முடிவுக்கு பிறகு ஜனாதிபதி நெல்சன் மண்டேலா அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட 'உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு' வின் அனுபவங்கள் குறித்து கேட்டறிந்தது.

இலங்கையிலும் அத்தகைய ஆணைக்குழுவொன்றை அமைப்பதற்கான முயற்சிகளை ஊக்குவிப்பதாக கூறிய உயர்ஸ்தானிகர், "பாதிக்கப்பட்டோர், குற்றமிழைத்தோர் உட்பட  நெருக்கடியில் சம்பந்தப்பட்ட சகல  தரப்பினரதும்  இணக்கப்பாட்டின் அடிப்படையில் ஆணைக்குழு உருவாக்கப்பட வேண்டும்.அத்துடன் இறுதி இலக்குகள் எவை என்பதை முன்கூட்டியே அடையாளம் காண்பதும் அவசியம்" என்று குறிப்பிட்டார்.

குற்றமிழைத்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையில் கலந்துரையாடலை ஏற்படுத்துவதை அடிப்படையாகக் கொண்ட தென்னாபிரிக்க ஆணைக்குழுவின் அனுபவங்களின் பிரகாரம் இலங்கையில் ஆணைக்குழுவை அமைப்பதில் தோன்றக்கூடிய பிரச்சினைகளை புரிந்துகொள்ள அந்நாட்டு அனுபவங்களை சுருக்கமாகவேனும் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம்.

சுமார் கால் நாற்றாண்டு காலமாக கொழும்பில் இருந்து பணியாற்றிவரும் மூத்த இந்திய பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான பி.கே.பாலச்சந்திரன் அவர்கள்  அண்மையில் இலங்கை ஆணைக்குழுக்களின் அனுபவங்கள் குறித்து ஆங்கிலப் பத்திரிகையொன்றில் எழுதிய கட்டுரையின் சில  பகுதிகளை எமது வாசகர்களின் நன்மை கருதி கீழே தருகிறோம்.

"தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அனுபவங்கள் இலங்கையில் அமைக்கப்படக்கூடிய அத்தகைய ஆணைக்குழு எதிர்நோக்கக்கூடிய பிரச்சினைகளை  அடையாளம் காட்டுவதாக அமையலாம்.

"தென்னாபிரிக்காவில் வெள்ளையரின் இன ஒதுக்கல் ஆட்சியின் வீழ்ச்சிக்கு பிறகு 1995 ஆம் ஆண்டு ஆணைக்குழு அமைக்கப்பட்டது.குற்றங்களை புரிந்தவர்களிடம் இருந்தும் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்தும் சான்றுகளை திரட்டுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதே தவிர, தனிநபர்களுக்கு எதிராக வழக்கு தொடுப்பதில் கவனம் குவிக்கப்படவில்லை.வலதுசாரி நிறவெறியர்களும் பாதுகாப்பு படைகளும் முற்றுமுழுதான மன்னிப்பைக் கோரிய அதேவேளை, விடுதலை படைகளும் பாதிப்புக்குள்ளான ஆபிரிக்கர்களும் இரண்டாவது உலகப்போருக்கு பின்னர் ஜேர்மன் நாஜிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு இறுதியில் தண்டனை வழங்கப்பட்டதைப்  போன்ற நுரம்பேர்க் பாணி விசாரணையைக் கோரினர்.

"புதிதாக தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கம் பொறுப்புக்கூறல், இழப்பீடு வழங்கல் மற்றும் மன்னிப்பு அளித்தல் தொடர்பில் சனத்தொகையின் முழுமையை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய முறையில் சகல பிரிவினரிடமிருந்தும் சர்வதேச சமூகத்திடமிருந்தும் அபிப்பிராயங்களை கேட்டறிந்த பின்னர் ஆணைக்குழுவை அமைத்தது.ஒரு வருடகாலம் நீடித்த கலந்தாலோசனைச் செயன்முறைகள் 1995ஆம் ஆண்டின் 34 இலக்க தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்க மேம்படுத்தல் சட்டத்தின் நிறைவேற்றத்தில் நிறைவுபெற்றன.இந்த சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஆணைக்குழு 1960 -- 1994 காலப்பகுதியில் இடம்பெற்ற முறைகேடுகளை ஆராய்ந்தது.

"இந்த குறிக்கோள்களை அடைவதற்காக மேற்படி சட்டத்தின் கீழ் மனித உரிமை மீறல்கள் குழு, இழப்பீடு மற்றும் புனர்வாழ்வு குழு, மன்னிப்பு குழு என்று மூன்று குழுக்கள் நிறுவப்பட்டன.நாடுபூராவும் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்ட பின்னரே ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.  இதற்கான நேர்முகப்பரீட்சைகளை சகல அரசியல் கட்சிகள் , சிவில் சமூக மற்றும் மத அமைப்புக்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவே நடத்தியது.அன்றைய தென்னாபிரிக்க  ஜனாதிபதி நெல்சன் மண்டேலா அதிமேற்றிராணியார் டெஸ்மண்ட் டுட்டுவை ஆணைக்குழுவின் தலைவராக நியமித்தார்.

"பகிரங்க விசாரணைகளை நடத்திய ஆணைக்குழு பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து 22,000 க்கும் அதிகமான வாக்குமூலங்களைப் பெற்றது.அரசின் நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்டவர்களும் விடுதலை படைகளின் செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டவர்களும் தங்களது உணர்வுகளை மனந்திறந்து சுதந்திரமாக வெளிப்படுத்தினர்.

"7000 பேர் மன்னிப்புக்கு விண்ணப்பித்தனர்.அவர்களில் 1500 பேருக்கு மன்னிப்பு கிடைத்தது.பாதிக்கப்பட்டவர்களின் உணர்வதிர்ச்சிக் கோளாறை தணிப்பதில் இந்த பகிரங்க செயன்முறைகள் பெரும் பங்களிப்பைச் செயதன.முழு சனத்தொகைக்குமே அறிவுபுகட்டுதல் மற்றும் சீர்திருத்த செயற்பாடுகளாக அமைந்த இவை இறுதியில் பெருமளவுக்கு நல்லிணக்கமுடைய ஆரோக்கியமான தென்னாபிரிக்க சமுதாயமொன்று உருவாக வழிவகுக்கும் என்பதே எதிர்பார்ப்பாக இருந்தது.

"ஆனால், பாதுகாப்பு படைகளின் உயர்மட்ட அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை.கீழ் மட்ட படையினர் ஒத்துழைப்பு வழங்கியதுடன் அவர்களில் அத்துமீறல்களைச் செய்தவர்கள் மன்னிப்புக்காக விண்ணப்பித்தனர். விடுதலை படைகளின் உறுப்பினர்கள் தாங்கள் வெள்ளையரின் இன ஒதுக்கல் ஆட்சிக்கு எதிராக நியாயமான போர் ஒன்றை நடத்தியதால் தவறெதையும் செய்யவில்லை என்று வாதிட்டனர்.இறுதியில் அவர்களும் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கு இணங்கவைக்கப்பட்டனர்.

 "ஆனால், துரதிர்ஷ்டவசமாக, நெல்சன் மண்டேலாவுக்கு பிறகு பதவிக்கு வந்த அரசாங்கங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு திட்டம் உட்பட ஆணைக்குழுவின் யோசனைகளைை நடைமுறைப்படுத்துவதில் தாமதமாகவே செயற்பட்டன.21ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் ஒரு சில யோசனைகளே நடைமுறைப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது.அத்துமீறல்களைச் செய்த முக்கியமான எவரும் தண்டிக்கப்படவில்லை.ஆனால், 

ஆணைக்குழுவின் செயற்பாடுகள் வேதனைகளை குறைப்பதற்காக உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கும்  சுயமனச் சுத்திகரிப்பை செய்வதற்குமான  பகிரங்க களமொன்றை வழங்கின.இது புதிய ஒரு  தென்னாபிரிக்காவுக்கான வியப்பூட்டும் தொடக்கமாக அமைந்தது.

"இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படுமானால், அதுவும் பயனுடையதாக இருக்கமுடியும்,ஆனால் ஓரளவுக்கு மாத்திரமே.தென்னாபிரிக்க ஆணைக்குழுவுடன் ஒப்பிடும்போது இலங்கையில் ஆணைக்குழு அமைக்கப்படக்கூடிய வாய்ப்புக்கள் மங்கலாகவே இருக்கின்றன எனலாம். மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட முன்னைய ஆணைக்குழுக்களுக்கு நேர்ந்த கதியை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது இத்தகைய முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது.அத்துடன் மனித உரிமை மீறல்களைப் பொறுத்தவரை, இலங்கை அரசியல் சமுதாயத்திடம் பெரும்பாலும் பகைமையான அணுகுமுறையையே கடைப்பிடித்து வருகிறது."

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டு மக்களின் விவேகத்தை நிந்தனை செய்யும்...

2024-03-28 12:02:53
news-image

இந்திய - சீன மேலாதிக்க போட்டியின்...

2024-03-28 10:03:53
news-image

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் :...

2024-03-24 17:29:22
news-image

'நிலைப்பாட்டை அறிவிப்போம்' : ரணிலிடம் கூறிய...

2024-03-24 11:48:14
news-image

"ஹர்ஷ, எரான், கபீர் ஏமாற்றிவிட்டார்கள்..." : ...

2024-03-17 12:21:53
news-image

ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதில் அரசியல் கட்சிகளின்...

2024-03-17 06:39:41
news-image

கோட்டாவின் புத்தகம் கூறுவது என்ன?

2024-03-10 14:17:23
news-image

வலுப்பெறும் அரசியல் பிளவுகள் 

2024-03-10 12:32:34
news-image

தமிழர்களும் முஸ்லிம்களுமே ‘அரகலய’ வின் முக்கிய...

2024-03-08 16:39:57
news-image

இந்திய விஜயத்துக்கு பிறகு தேசிய மக்கள்...

2024-03-05 22:00:38
news-image

மீண்டும் "Political Cabinet" 

2024-03-03 12:29:24
news-image

சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் இரு சட்டங்கள் 

2024-02-28 13:29:58