(எம்.ஆர்.எம்.வஸீம்)

காவி உடை அணிந்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைப்பாட்டை நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை வரவேற்கத்தக்கது. அத்துடன் இராணுவ சதி நடவடிக்கை தொடர்பாக தெரிவித்துள்ளமையானது சதிகாரர்களை தூண்டும்வகையிலேயே இருக்கின்றது என நவசமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம்  இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைந்சேர்ந்த தினேஷ் குணவர்த்தன அரசாங்கத்தை அச்சறுத்தும் வகையிலேயே இராணுவ சதி புரட்சி  தொடர்பாக தெரிவித்துள்ளார். ஆனால் அரசாங்கத்தின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதுதான் எமது கடமை. இராணுவ சதி முயற்சிகள் எதுவும் இராணுவத்துக்குள் இல்லையென இராணுவம் மறுத்துள்ளது. தினேஷ் குணவர்த்தனவின் பேச்சு இராணுவத்துக்குள் சதிகாரர்கள் இருக்குமாக இருந்தால் அவர்களை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

மேலும் கடந்த காலத்திலும் சதிகாரர்கள் நாட்டில் இருந்துள்ளனர். இறுதியில் அவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். அந்த நிலையே இவர்களுக்கும் ஏற்படும். இராணுவ சதிமுயற்சியின் மூலம் அரசாங்கத்தை வீழ்த்தலாம் என இவர்கள் எண்ணிக்கொண்டிருக்கின்றனர். அது ஒருபோதும் நடைபெறாது. அத்துடன் இவர்களின் முயற்சிக்கு மக்களின் ஆதரவும் கிடைக்காது.

அத்துடன் காவி உடை அணிந்தால் நாட்டுக்குள் எதைவேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைப்பாடு  நாட்டுக்குள் அண்மைக்காலமாக இருந்துவருகின்றது. என்றாலும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இதுதொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதன்மூலம் சட்டம் அனைவருக்கும் சமமாக நிலைநாட்டப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எமது நன்றிகளை தெரிவிக்கின்றோம் என்றார்.