குடந்தையான்
தமிழக அரசியலில் வெற்றி நடைப் போட்டுக் கொண்டிருக்கும் ‘திராவிட முறைமை’ பாணியிலான அரசின் மீது எதிர்க்கட்சிகள் வழமையாக முன்வைக்கும் குற்றசாட்டுகளில் ‘வாரிசு அரசியல்’ என்பதும் அதனை மெய்ப்பிப்பது போல் அண்மையில் நடைபெற்ற தி.மு.க.வின் பொதுக்குழுவில், அக்கட்சியின் மக்களவை உறுப்பினரும், தி.மு.க. தலைவரின் சகோதரியுமான கனிமொழிக்கு கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.
இதன்மூலம் அக்கட்சி ‘வாரிசு அரசியல்’ குற்றச்சாட்டை தொடர்ந்து சுமக்கத் தயாராகிவிட்டது. சிலர் இதையும் கடந்து, அக்கட்சியில் கடுமையாக உழைப்பவர்களுக்கும், பெண்களுக்கென ஒதுக்கப்படும் பதவிகளில் பெண்களை நியமிக்கும் உட்கட்சி ஜனநாயகமும் இருப்பதை எண்ணி மகிழ்ச்சியடைகின்றனர்.
தி.மு.க.விற்கு இரண்டாவது முறையாக தலைவராக தெரிவாகியிருக்கும் ஸ்டாலின் முன், அரசியல் ரீதியாக பல சவால்கள் காத்திருக்கின்றன. ஆளுநர் ஆர்.என்.ரவி திருக்குறளை பற்றி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், ‘ஆன்மீகத்தின் ஆதாரமாக விளங்கும் திருக்குறள், சாதாரண வாழ்க்கை நெறி நூலாக மட்டுமே காட்சிப்படுத்தப்படுகிறது’ என்றும், ‘திருக்குறளில் ஆன்மீக அம்சங்கள் ஏராளமாக உள்ளன. அரசியலுக்காக உண்மையை சொல்ல சிலர் மறுக்கின்றனர்’ என்றும் எதிர்நிலை விமர்சனத்தை தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறார்.
இதற்கு தமிழறிஞர்கள் விளக்கமளிக்கையில், ‘1938 ஆம் ஆண்டு முதல் 1965ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் வீசிய ஆரிய, சனாதன, இந்தி மொழி புயல்களில் சிக்கி திருக்குறளும், தமிழ் மொழியும் மறைந்திருக்கும்.
ஆனால் மறையாமல், அதனை திராவிட சிந்தனையாளர்கள். திராவிடக் கொள்கை மீது பற்றுள்ள அரசியல்வாதிகள், தமிழ் மொழி அறிஞர்கள், திருக்குறள் கற்பிக்கும் உலக பொதுமறை அரசியலை உயிர்த்துணர்ந்த பகுத்தறிவுவாதிகள் என்று பலர் அரண் அமைத்தும், களம் கண்டும், போராடியும் பாதுகாத்தனர். ஆரிய கொள்கை மற்றும் ஆரியர்கள் முன்னிறுத்தும் சனாதன தர்மம் என்பது வேறு.
கீதை சொல்லும் அறம் வேறு. திருக்குறள் சொல்லும் அறம் வேறு. அர்த்த சாஸ்திரம் சொல்லும் பொருள் வேறு. திருக்குறள் சொல்லும் பொருள் வேறு. வாத்ஸாயனர் சொல்லும் இன்பம் வேறு. திருக்குறள் கற்பிக்கும் இன்பம் வேறு. இவற்றின் நுட்பமான வேறுபாடுகளை உணராமல், எல்லாம் ஒன்று என்று உணர்பவர்களுக்கு நாவலர் சோமசுந்தர பாரதியார் குறிப்பிடும் மேற்கோளான, ‘வைதிக தர்மமும், பொதுமறை அறமும், ஒன்றென நினைப்பவர் அறிவின் முடவர்’ என்பதனை நினைவூட்டுவதாக குறிப்பிடுகின்றார்கள்.
திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்று முப்பாலுடன் முற்றுப்புள்ளி வைத்துக் கொண்டது. வீடு பேறு இல்லை என்று குறிப்பிடுகிறது. இதற்கு தவத்திட குன்றக்குடி அடிகளார் தெளிவான விளக்கத்தை அளித்திருக்கிறார். எனவே ஆளுநர் திருக்குறளை எம்முடைய தமிழறிஞர்கள் விவரித்திருக்கும் விவரங்களிலிருந்தும், குறிப்புகளிலிருந்தும் உணர்ந்து, புரிந்து கொண்டு பேசவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். வெளிநாட்டினரின் மொழிபெயர்ப்பை படித்துக் கொண்டு, திருக்குறளை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் என்கிறார்கள்.
கடந்த 2ஆம் திகதி காந்தி ஜெயந்தி தினத்தன்று தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணி நடத்த நீதிமன்றத்தை நாடினர். அவர்களுக்கு அனுமதி கிடைத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மத, நல்லிணக்க மனித சங்கிலி அறப்போர் நடத்திட அனுமதி வேண்டும் எனக் கோரப்பட்டது.
இதனை விசாரித்த நீதிமன்றம், மனித சங்கிலி போராட்டத்தை நடத்த அனுமதித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 11ஆம் திகதி அன்று சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் 500க்கும் மேற்பட்ட இடங்களில் மதசார்பற்ற அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக அமைப்புகளின் ஆதரவுடன் சமூக, மத, நல்லிணக்க மனித சங்கிலி அறப்போர் நடைபெற்றது.
இதில் சென்னையில் நடைபெற்ற மனித சங்கிலி திராவிடக் கட்சிகள் பங்கேற்றபோது, வெறுப்பு அரசியலை விதைக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இந்த அறப்போரில் ஆளுங்கட்சி என்பதால் தி.மு.க. பங்குபற்றவில்லை. இருப்பினும் மறைமுகமான உதவிகளை செய்தது. இந்த அறப்போர், எதிர்பார்த்ததை விட அதிக அளவிலான மக்கள் பங்குபற்றி வெற்றி பெறச்செய்தனர்.
இவ்வாறான நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆறாம் திகதி அன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர், காவல்துறையிடம் முறையான அனுமதியை இம்மாத இறுதிக்குள் பெறுவர் என்று அவதானிக்கப்படுகிறது. மேலும் தமிழக முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உள்ள உறுப்பினர்களையும், அவர்களின் பயிற்சி பெறும் இடங்களையும் மாநில உளவுத்துறையினர் உன்னிப்பாக கண்காணித்து வருகிறார்கள்.
இருப்பினும் கோயம்புத்தூரில் உள்ள மாநகராட்சி பாடசாலை ஒன்றில் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் பயிற்சி பெற்ற காணொளி ஒன்று இணையத்தில் வெளியானது. இதனால் அரச இயந்திரம் தற்போது முழுமையாக முடிக்கி விடப்பட்டிருக்கிறது.
பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸின் அரசியல் நடவடிக்கை தமிழகத்தில் தீவிரமானதற்கு வலிமையாக இருந்தும் ஒற்றுமையாக இல்லாத எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தான் முதன்மையான காரணமாகிறது.
விரைவில் தொடங்கவிருக்கும் ‘சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அ.தி.மு.க.வின் சட்டப்பேரவை துணைத் தலைவராக இருக்கும் பன்னீர்செல்வத்தின் இருக்கையை மாற்றி அமைக்காவிட்டால், அ.தி.மு.க. சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிக்கும்’ என்று வாக்களித்த மக்களுக்கு எதிரான ஒருநிலைப்பாட்டை, அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுசெயலாளரான எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்டிருக்கிறார்.
தற்போது அ.தி.மு.க. பலவீனமான நிலையில் இருப்பதால், அக்கட்சியை எப்படி வலிமையான எதிர்க்கட்சியாக இயங்க வைப்பது என்ற திட்டத்தையும், திராவிட கட்சியான தி.மு.க. தான் தீர்மானிக்க வேண்டியதிருக்கிறது.
தி.மு.க.விற்கு எதிரான நிலைப்பாடு தான் அ.தி.மு.க. என்றாலும், இன்று அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர், பன்னீர்செல்வம் தரப்பினர், சசிகலா ஆதரவாளர்கள், தினகரன் ஆதரவாளர்கள் என்று நான்காக பிரிந்து, வலிமை குன்றி இருக்கிறது.
இதுதொடர்பாக அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள் பேசுகையில், ‘பெரும்பான்மையும், இரட்டை இலையும் எங்கு இருக்கிறதோ. அதுதான் அசலான அ.தி.மு.க. இந்தநிலை, தலைவர்கள் மறைந்த பிறகு உருவாகி இருக்கிறது.
இந்த யதார்த்தத்தை உணர்ந்து கொண்டால் கட்சியினர் அனைவரும் எடப்பாடி கே பழனிசாமியின் பின்னர் அணிதிரள்வர். அதுவரை அ.தி.மு.க.வை பலவீனப்படுத்த தி.மு.க.வும், பா.ஜ.க.வும் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கும். ஆனால் அ.தி.மு.க. தொண்டர்கள் ஒருபோதும் தி.மு.க.வையோ, பா.ஜ.க.வையோ ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” என்று விவரிக்கிறார்கள்
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்தும் பேரணி எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தினாலும், ஆளுநர் திருககுறள் மற்றும் சனாதன தர்மம் குறித்து வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பேசினாலும், பா.ஜ.க., மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் அச்சுறுத்தும் அரசியலை மேற்கொண்டாலும், தமிழக மண்ணில் மதரீதியிலான வெறுப்பரசியலுக்கு இடமில்லை என்பது உறுதியாக தெரிகிறது. எப்படியெனில், தி.மு.க. மாவட்டம் தோறும் திராவிடக் கொள்கைகள் தொடர்பாக பயிற்சி பாசறையை நடத்திக் கொண்டிருக்கிறது.
இதற்கு தி.மு.க.வினரைக் கடந்து, திராவிடக் கொள்கைகள் மீது ஆர்வமுடைய ஏனைய அரசியல் இயக்கங்களைக் சார்ந்த இளைய தலைமுறையினரும் அதிகளவில் பங்குபற்றி வருவதால், தமிழகத்தில் பகுத்தறிவு கரங்களின் வலிமை அதிகரித்து வருகிறது என்பது ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM