குழந்தைகள் மனித கேடயங்களா ?

Published By: Digital Desk 5

16 Oct, 2022 | 03:19 PM
image

சுபத்ரா

“குழந்தைகளுடன் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபடுத்துவதை குற்றமாக காண்பித்து இன்னும் பலரை சிறைக்குள் தள்ளுவதற்கு அரசாங்கம் திட்டமிடுகிறது”

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் குழந்தைகளை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தியது போல, கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழந்தைகளை கேடயமாகப் பயன்படுத்துவதை தடுக்க, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டிருக்கும் கருத்து, பலத்த விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில், ஒக்டோபர் 9ஆம் திகதி காலிமுகத்திடலில், ஒன்று கூடிய பொதுமக்களை பொலிஸார் மோசமான முறையில் நடத்தி, கலைத்தனர்.

அதன்போது, காலிமுகத்திடலுக்குப் பிள்ளைகளுடன் சென்றிருந்த பலரும், துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருந்தனர்.

இது அரசாங்கத்தின் மீதும், பொலிஸார் மீதும் கடும் கண்டனங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில் தான், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, குழந்தைகளை மனித கேடயங்களாகப் பயன்படுத்திய கருத்தை முன்வைத்திருக்கிறார்.

போரின் போது, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் குழந்தைகளை மனித கேடயங்களாக பயன்படுத்தினார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திடீரென புதிய குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.

இறுதிக்கட்டப் போரில், சிறுவர்களைப் போரில் ஈடுபடுத்தியது மற்றும் பொதுமக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்தியதாக, மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம், குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது.

ஆனால், குழந்தைகளை அவ்வாறு பயன்படுத்தியதாக, ராஜபக்ஷ அரசாங்கமோ, ரணில் விக்கிரமசிங்கவோ இதற்கு முன்னர் குற்றச்சாட்டை முன்வைத்ததாக தெரியவில்லை.

இவ்வாறான நிலையில், ஜனாதிபதி ரணில், கொழும்பில் நடத்தப்பட்ட ஒரு சிறிய அமைதிவழிப் போராட்டத்தை, இறுதிக்கட்டப் போர் சம்பவங்களுடன் ஏன் ஒப்பிட முனைகிறார் என்ற கேள்வி எழுகிறது.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், மக்களின் ஜனநாயக உரிமைகளும், அடிப்படைச் சுதந்திரங்களும், மோசமான முறையில் நசுக்கப்பட்டு வருகின்றன.

காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஒழுங்கமைத்தவர்கள் மாத்திரமன்றி, வேடிக்கை பார்க்கச் சென்றவர்களையும் கைது செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இன்னும் பெருமளவிலானோரைக் கைது செய்யும் பட்டியலுடன் பொலிஸார் அலைகின்றனர்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடன், போராட்டங்களை அடக்குவதற்கு முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு தேவையான அனைத்து அதிகாரங்களையும் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.

அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தினார். ஆனால், அதனை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் நீடிப்புச் செய்ய முடியாமல் மூக்குடைபட்டார்.

பின்னர், உயர் பாதுகாப்பு வலயங்களை அறிவித்து, அதிலிருந்தும் பின்வாங்கும் நிலையும் அவருக்கு ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களைக் கட்டுப்படுத்துவது என்ற பெயரில், அவற்றை ஒடுக்குவதில் ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்கவின்  அரசாங்கம் தீவிரமாக இருக்கிறது.

காலிமுகத்திடலில் சாதாரணமாக ஒன்று கூடினால் பொலிஸார் விசாரணை செய்யும் நிலை தோன்றியிருக்கிறது.

எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தும் உரிமை, ஒன்று கூடும் உரிமை என்பன நசுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான பின்னணியில் தான் கடந்த 9ஆம் திகதி காலிமுகத்திடலில் ஒன்று கூடியவர்கள் மீது பொலிஸ் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

அந்தப் போராட்டத்தில் தங்களின் குழந்தைகளுடன் குடும்பமாக பங்கேற்றவர்கள் மாத்திரமன்றி, காலிமுகத்திடலுக்கு காற்று வாங்க குழந்தைகளுடன் சென்றவர்களும், பொலிசாரின் அடாவடித்தனங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டது.

குழந்தைகளை கதறக் கதற தாய்மாரிடம் இருந்து, பெற்றோரிடம் இருந்து பிரித்து, பொலிஸ் அதிகாரிகள் அடாவடித்தனம் செய்த காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன.

அது அரசாங்கத்துக்கும் பொலிஸாருக்கும் பெரும், பாதிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தான், அதனை திசை திருப்பும் வகையில், குழந்தைகளை மனித கேடயமாகப் பயன்படுத்தி போராட்டங்களில் ஈடுபடுவது குற்றம் என்று கூறியிருக்கிறார் ஜனாதிபதி.

அவ்வாறு குழந்தைகளுடன் போராட்டம் நடத்த வரும் பெற்றோரைக் கைது செய்யுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார் என்று  ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன உறுதிப்படுத்தியிருக்கிறார்.

கோட்டா கோ கமவிலும், கொழும்பின் வேறு பல இடங்களிலும் முன்னைய அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போது, அதில் குழந்தைகளும் கணிசமானளவு பங்கெடுத்திருந்தார்கள்.

ஏனென்றால், அப்போது அவர்களும் பாதிக்கப்பட்டனர்.

அப்போது அதனை சட்டவிரோதம் என்றோ, அவர்களைப் போராட்டத்தில் ஈடுபடுத்துவது குற்றச் செயல் என்றோ, எதிர்க்கட்சியில் இருந்த ரணில் விக்கிரமசிங்க யாருக்கும் போதனை கூறவில்லை. 

அன்று பிஞ்சுக் குழந்தைகளும் இணைந்து நடத்திய போராட்டத்தைப் பயன்படுத்தி, ஜனாதிபதி பதவியை அடைந்திருக்கின்ற ரணில் விக்கிரமசிங்க, இப்போது, குழந்தைகளுடன் போராட்டத்துக்கு வருவதை குற்றச் செயல் என்கிறார்.

குழந்தைகள் தங்களின் கல்வியை தொடர முடியாமல், பாடசாலைக்கு செல்ல முடியாமல், வீட்டில் இருந்து மின்வெளிச்சத்திலோ, அல்லது மண்ணெண்ணெய் விளக்கிலோ கூட படிக்க முடியாமல், சரியாக மூன்று வேளையும் உண்ண முடியாமல் தள்ளப்பட்ட நிலையில் தான் , பெற்றோருடன் வீதியில் போராட்டத்துக்கு இறங்கினார்கள்.

அப்போது அவர்களின் போராட்டம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தியாகமாகத் தெரிந்தது, இப்போது அது அவருக்கு குற்றமாகத் தெரிகிறது.

காலிமுகத்திடலில் ஒக்டோபர் 9ஆம் திகதி கூடிய கூட்டம் ஒன்றும், அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கானது அல்ல. அது ஒன்றும் பிரமாண்டமானதாகவும் இருக்கவில்லை.

ஆனால், அந்த சிறிய கூட்டத்தில், குழந்தைகளுடன் இருந்த தாய்மாரையும், தந்தைமாரையும், வெறித்தனத்துடன் எதிர்கொண்டது அரசாங்கம்.

அது கடும் கண்டனத்துக்கு உள்ளாகிய பின்னரும், குழந்தைகளை கேடயமாகப் பயன்படுத்துவதாக, குற்றம்சாட்டுகிறது அரசாங்கம்.

எந்த தாய் அல்லது தந்தை, தனது குழந்தைகளை கேடயமாக பயன்படுத்தி, அரசாங்கத்துக்கு எதிரான ஒரு போராட்டத்தை முன்னெடுப்பார்? 

இந்த உண்மை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், நாட்டில் உள்ள மக்களுக்கு தெரியாமல் இருக்காது.

இந்த ஒரு சிறு போராட்டத்தை அடக்குவதற்கே, இவ்வாறானதொரு அபாண்டமான குற்றச்சாட்டை ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் முன்வைக்கிறது என்றால், இறுதிக்கட்டப் போரில் எத்தகைய அபாண்டங்கள் விடுதலைப் புலிகளின் மீது சுமத்தப்பட்டிருக்கும் என்று ஊகிப்பது கடினமல்ல.

குழந்தைகளை கேடயமாகப் பயன்படுத்தியதாக கூறி, அரசாங்கம் பொலிஸாரின் செயற்பாட்டை நியாயப்படுத்த முனைகிறது.

ஊடகங்களின் கண்முன்பாக, சர்வதேசத்தின் கண்காணிப்புக்கு முன்பாகவே, இவ்வாறான குற்றச்சாட்டுகளை கூறுகின்ற அரசாங்கமும் அதன் படைகளும், உலகத்தின் கண்களைக் கட்டி விட்டு நடத்திய இறுதிக்கட்டப் போரில் எவ்வாறு நடந்து கொண்டிருக்கும்?

குழந்தைகளைப் போராட்டத்தில் ஈடுபடுத்துவதை குற்றமாக காண்பித்து இன்னும் பலரை சிறைக்குள் தள்ளுவதற்கு அரசாங்கம் திட்டமிடுகிறது.

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம், குடும்பம் குடும்பமாகத் தான் முன்னெடுக்கப்பட்டது. அவ்வாறானதொரு போராட்டம் மீண்டும் வந்து விடக் கூடாதென்பதில் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் கவனமாக இருக்கிறது.

அவ்வாறானதொரு மக்கள் புரட்சியில் இருந்து தப்பிக் கொள்வதற்காக, அரசாங்கம் எந்த எல்லைக்கும் செல்வதற்கு தயாராக இருக்கிறது.

அதனைத் தான் குழந்தைகளை கேடயமாகப் பயன்படுத்துவதான குற்றச்சாட்டு உறுதி செய்திருக்கிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right