கார்த்தியின் 'சர்தார்' திரைப்பட முன்னோட்டம் வெளியீடு

Published By: Digital Desk 5

15 Oct, 2022 | 10:18 AM
image

வந்திய தேவனாக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் நடிகர் கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படமான 'சர்தார்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

'இரும்புத்திரை', 'ஹீரோ' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் பி. எஸ். மித்ரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'சர்தார்'.

இதில் கார்த்தி இரண்டு வேடத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகைகள் ரெஜிஷா விஜயன் மற்றும் ராசி கண்ணா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் பொலிவுட் நடிகர் ஷங்கி பாண்டே, முனீஸ் காந்த், லைலா, ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜோர்ஜ் சி. வில்லியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

உளவு துறை திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் எனும் நிறுவனம் சார்பில் லக்ஷ்மன் குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

தீபாவளி விருந்தாக ஒக்டோபர் 21ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் 'சர்தார்' வெளியாகிறது. இதனை முன்னிட்டு இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.

முன்னோட்டத்தில் நடிகர் கார்த்தி உளவாளி, பொலிஸ் அதிகாரி என இரண்டு வேடத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார்.

முன்னோட்ட வெளியீட்டு விழாவில் பங்கு பற்றி பேசிய நடிகர் கார்த்தி, '' சர்தார் திரைப்படம் இந்திய பாணியிலான உளவு துறை சம்பந்தப்பட்ட திரில்லர் ஜேனரிலான திரைப்படம். இதில் ஜேம்ஸ் பொண்ட் படத்தில் இடம்பெறும் நீச்சலுடை காட்சிகள் இதில் இடம்பெறவில்லை.

அதனால் குடும்பத்துடன் கண்டு ரசிக்க வேண்டிய படைப்பாக உருவாகி இருக்கிறது. 'சிறுத்தை', 'தீரன் அதிகாரம் ஒன்று' ஆகிய படங்களில் பொலிஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருந்தாலும், இந்தப் படத்தில் விஜய் பிரகாஷ் என்ற விளம்பரத்தை விரும்பும் பொலிஸ் அதிகாரியாக நடித்திருக்கிறேன்.

இயக்குநர் பி. எஸ். மித்திரன் எம்மை சந்தித்து ,''1980 களில் உளவு பார்ப்பதற்காக ஒரு குழு உருவாக்கப்பட்ட போது, அதில் யாரும் ஆர்வமாக இணைந்து பொருத்தமாக பணியாற்றவில்லை என்பதால், ஒரு நாடக நடிகரை தெரிவு செய்து அவருக்கு பயிற்சி அளித்து உளவாளியாக மாற்றியிருக்கிறார்கள்'' என்பது தான் மையக்கரு எனக் கூறியதும் எமக்கு பிடித்திருந்தது. இதுதான் தற்போது 'சர்தார்' திரைப்படமாகியிருக்கிறது. '' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்