எம்மில் பலருக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்படும். இதற்கு பல காரணங்கள் உண்டு ஒரு சிலருக்கு இந்த மூச்சு திணறல் தொடர்ந்து இருக்கும். இத்தகையவர்களின் நுரையீரல் பரிசோதிக்கப்படும். இதன் போது ஒரு சிலருக்கு ஹைபர் சென்சிவிட்டி நியூமோனிடிஸ் என்ற பாதிப்பு இருப்பது கண்டறியப்படும்.

நுரையீரலுக்கு ஒவ்வாத பொருட்கள் நுரையீரலை தாக்கி, "நியூமோனிடிஸ்' ஏற்பட்டால், அதனை ஹைபர் சென்சிவிட்டி நியூமோனிடிஸ் என்பார்கள். நச்சுத்தன்மை கொண்ட புகை, தூசி, சுவற்றில் இருக்கும் பூஞ்சை, செல்லப் பிராணிகளின் கழிவுகள் மற்றும் அதன் ரோமங்கள் போன்ற எந்த ஒரு பொருளாலும், நுரையீரலில் ஒவ்வாமை உண்டாகும். அதே போல் சில சமயங்களில் எந்த ஒரு காரணமும் அறியமுடியாத பொருள் நுரையீரல் அலர்ஜியால் நியூமோனிடிஸ் ஏற்படுகிறது. 

இதற்கு தொடர்ந்து 6 முதல் 8 வாரங்கள் "ஸ்டீராய்டு' மருந்துகள் எடுத்துக் கொள்வதன் மூலம், இந்நோய் குணமடைகிறது. எட்டு வாரங்கள் கழித்தும் குணமடையாத நிலையில், மேலும் சில பரிசோதனைகள் தேவைப்படலாம்.

அதே போல் வேறு சிலருக்கு நுரையீரலில் சளி சேர்ந்திடும். இதனை அகற்ற ஒரு சில மருத்துவ நிபுணர்கள் சத்திர சிகிச்சையை மேற்கொள்ளுமாறு பரிந்துரைப்பார்கள். ஆனால் ‘பிராங்கோஸ்கோப்' மூலம் நுரையீரலில் இருக்கும் சளியை முழுமையாக அகற்ற இயலாது. பரிசோதனைக்காக ஓரளவுக்கு சளியை வெளியே எடுக்க முடியும். அதன்மூலம் உங்கள் நுரையீரலை தாக்கிய கிருமியினை கண்டறிந்து, அதற்கு ஏற்ற ‘ஆன்டிபயாடிக்' மருந்தை அறியமுடியும். மேலும் இந்த ஆன்டிபயாடிக்ஸை சரியான அளவில் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் நுரையீரல் சளியை முழுமையாக குணப்படுத்த முடியும். எந்த ஒரு கருவியாலும் நுரையீரல் உள்ளே இருக்கும் சளி அனைத்தையும் உறிஞ்சி எடுக்க முடியாது. மருந்து, மாத்திரைகள் மூலமே குணப்படுத்தலாம்.

டொக்டர் எம். பழனியப்பன்,

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்