வடக்கில் கடலட்டை மாபியா !

Published By: Vishnu

13 Oct, 2022 | 03:48 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன், எம்.நியூட்டன்)

இலங்கையின் வட கடலில்  முன்னெடுக்கப்படுகின்ற கடலட்டை பண்ணைகள் குறித்து பல்வேறு சர்ச்சைகள் காணப்படுகின்றன. சட்ட விரோதமாகவும் வடக்கில் பாராம்பரியமாக கடற்றொழில் ஈடுப்படும் மீனவ மக்களையும் வட கடலையும் பாதிக்கும் வகையில் இந்த பண்ணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்கங்களின் சமாசங்களின் சம்மேளன தலைவர் அ. அன்னராசா குறிப்பிடுகையில், கடலட்டை பிரச்சினை என்பது வடக்கு கடற்றொழிலாளர்களை மாத்திரமே சார்ந்தல்ல. ஒட்டுமொத்த இலங்கை மக்களையும் சார்ந்த பிரச்சினையாகவே உள்ளது. ஏனெனில் இந்த பண்ணைகளினால் மீன் உற்பத்திகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. வடக்கு கடற்றொழிலாளர்களை ஏமாற்றிவிடலாம் என்று அதிகாரிகள் நினைக்கின்றனர். நாங்கள் ஒரு போதும் ஏமாற்றமடையவோ , இனியும் பொறுமை காக்கவோ போவதில்லை. மாறாக போராட்டங்களையும் சட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுக்க உள்ளதாக கூறினார்.

வடக்கு மீனவர்களின் கூற்றுப்படி, யாழ் குடா மீன்பிடித் தொழிற்துறையில் உள்ள உணவு சங்கிலி பொறிமுறைகளுக்கும் கடலட்டைக்கும் தொடர்புள்ளது. மீன் இனப்பெருக்கத்துடனும் இந்த கடலட்டைகள் தொடர்புப்படுகின்றன. எனவே தான் குறுநகர் பகுதி குடா கடல் அல்லது மண்டைதீவு , வேலணை போன்ற பகுதிகளில் இயற்கையாகவே கடலட்டைகள் காணப்படுகின்றன. கடல் வளங்களைப் பாதிக்காத வகையில் 80 கிராம் எடைக்கு மேலான கடலட்டைகளை எடுத்து தமது வாழ்வாதாரத்தை பாதுகாத்துக் கொள்ளும் சுமார் 1000 குடும்பங்கள் வரை இந்த பிரதேசங்களில்  காணப்படுகின்றன.

குருநகர் தொடக்கம் மெழுஞ்சிமுனை வரையில் இவ்வாறான குடும்பங்கள் உள்ளன. இவர்களின் ஏற்றுமதி எவரது பார்வைக்கும் தெரிவதில்லை. ஏனெனில் அவர்கள் கடல் வளத்திற்கு பாதிப்பில்லாமலும், இயற்கையாகவுமே இத் தொழிலில் ஈடுபடுகின்றனர். ஆனால் அண்மைக்காலமாக இயற்கைக்கு மாறாக கடலட்டை பண்னைகள் யாழ் குடா பகுதிகளில் ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றன. வட கடலையும் அதிலுள்ள வளங்களையும் பாதுகாத்த மீனவ மக்கள் தெருவுக்கு வரும் வகையில் இந்த கடல் பண்னைகளின் ஆக்கிரமிப்பு அமைந்துள்ளன.

பூங்குடிதீவு உள்ளுர் மீனவர்களுக்கு கடலட்டை பண்ணைகளை வழங்குவதாகக் கூறப்பட்ட போதிலும் , அவ்வாறு வழங்காது பிற பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட்டன. உள்ளுர் கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு விடயத்தையும் முன்னெடுக்கப் போவதில்லை என மீன்பிடித்துறை அமைச்சர் கூறிய போதிலும் , கடலட்டை பண்ணை விவகாரத்தில் முற்று முழுதாகவே  பாதிக்கப்படுவது உள்ளுர் மீனவர்களே ஆகும். உதாரணமாக குறுநகர் பகுதியில் கடந்த செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்ட கடலட்டைப் பண்ணை குறிப்பிட்ட பரப்பளவை விட பெரிதாக அமைக்கப்பட்டும் , மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் காணப்படுவதாகக் கூறி அதனை உடனடியாக அகற்றுவதற்கும் உறுதியளிக்கப்பட்டது.

ஆனால் இன்றுவரையில் அந்த பண்ணை அகற்றப்படவில்லை. மீனவர்களுக்கிடையே மோதல்களைத் தோற்றுவிக்கும் வகையில் செயற்பாடுகளும் இடம்பெறுகின்றன. யாழ் குடாநாட்டில் மாத்திரம் 250 இற்கும் மேற்பட்ட கடலட்டை பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. குருநகர் , கொழும்புத்துறை, பாசையூர் , மணியத்தோட்டம் , கொய்யாத்தோட்டம் , மண்டைத்தீவு , அல்ப்பிட்டி , வேலணை, பருத்தித்தீவு மற்றும் பூங்குடிதீவு ஆகிய பகுதிகளிலேயே பெரும்பாலான கடலட்டைப் பண்ணைகள் காணப்படுகின்றன. இவை அனைத்துமே அரசாங்கத்திற்குரியவையல்ல. மாறாக துறைசார் அமைச்சின் அனுமதியுடன் கடற்தொழிலை சாராத நபர்களே உரிமையாளர்களாக உள்ளனர். இவற்றில் வெறும் 70 கடலட்டைப் பண்ணைகள் மாத்திரமே கடற்தொழிலாளர்களை சார்ந்தவையாகும். ஏனைய அனைத்திலுமே கொழும்பைச் சார்ந்தவர்களும் , பிற பிரதேசங்களைச் சார்ந்த வர்த்தகர்களுமே உள்ளனர். இந்த பண்ணைகளால் உள்ளுர் மீனவர்களுக்கு எவ்விதமான பலனும் கிடைப்பதில்லை.

சிறிய பண்ணை கடலட்டை பண்ணைகளை அமைப்பதற்கு ஒரு சிலருக்கு 2 இலட்சம் ரூபா நிதி வழங்கப்படுகிறது. இது உள்ளுர் மீனவர்களை பிளவுபடுத்துவதற்கான முயற்சிகளில் ஒன்றாகவே அமைகின்றது. மேலும் ஒரு சில கடலட்டை பண்ணைகள் உள்ளுர் சார்ந்தவர்களின் பெயர்களில் வாங்கப்பட்டாலும், அவற்றில் பிற பகுதிகளைச் சார்ந்தவர்களே பணியாற்றுகின்றனர். வடக்கில் கடலட்டை பண்ணைகள் என்பவை ஒரு மாபியாவாக செயற்பட ஆரம்பித்துள்ளன. கடலட்டை பண்ணைகளை ஒன்றிணைத்து சங்கங்கள் கூட அமைக்கப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கி எல்லைகளை வகுத்து மீன் பிடியில் ஈடுபட வேண்டும் என கடற்தொழிலாளர்களின் யாப்பு விதிகளில் உள்ளன. இந்த விதிகளைக் கூட மீறியே கடலட்டை பண்ணைகள் அமைக்கப்படுகின்றன. இந்த கடலட்டை பண்ணைகளை மையப்படுத்திய சங்கங்கள் கடற்றொழில் அமைச்சின் பணிப்பாளரின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சங்கங்களை அமைப்பதற்கு 2009 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட , சட்ட மூலத்தையே பயன்படுத்துகின்றனர். இந்த சட்டமூலமானது இறால் பண்ணைகளை அமைப்பதற்காகவே கொண்டு வரப்பட்டன. நீர் வாழ் உயிரின செய்கையின் பணிப்பாளரின் செயற்பாடுகள் குடாநாட்டு மீனவர்களை அழிப்பதாகவே அமைந்துள்ளன.

தூசு தட்டப்பட்ட சட்ட மூலத்தின் ஊடாக வடக்கு கடலையும் , கடற்றொழிலாளர்களையும் கடலட்டை பண்ணைகள் என்ற போர்வையில் பிற தரப்புகளுக்கு விற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கூட்டுறவு சங்கம் , கிராமிய அமைப்பு மற்றும் அட்டை வளர்ப்பு சங்கம் என 3 அமைப்புக்கள் இன்று வட கடலில் காணப்படுகின்றன. இதன் ஊடாக எங்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. எந்த வகையான ஒரு ஆய்வறிக்கையையும் பின்பற்றாமலேயே வட கடலில் கடலட்டை பண்ணைகள் ஸ்தாபிக்கப்படுகின்றன. 1972 ஆம் ஆண்டுக்கு பின்னர் எந்த வகையான ஆய்வும் வடகடலில் முன்னெடுக்கப்படவில்லை என அ. அன்னராசா தெரிவித்திருந்தார்.

சட்ட விரோதமாக கடலில் ஸ்தாபிக்கப்படும் கடலட்டைப் பண்ணைகளை அகற்றுவதற்கு எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. கடற்றொழிலாளர் திணைக்களத்திடம் பலமுறை முறையிட்டும் எவ்வித பலனும் இல்லை. கரையோர பாதுகாப்பு திணைக்களத்திடமும் முறையிட்டுள்ளோம். கடலில் அமைக்கப்படும் கடலட்டை பண்ணைகளுக்கான கொட்டில்கள் ஓலைகளினாலேயே அமைக்கப்பட வேண்டும். ஆனால் சீமெந்து சீட்களை கொண்டே அவை அமைக்கப்பட்டுள்ளன. இதற்கெதிராகவும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இரு வருடத்திற்கு முன்னர் பருத்தித்துறையில் கருவாட்டிற்காக கொட்டில்கள் அமைத்த மீனவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் கடலில் சீமெந்தைக் கொண்டு கொட்டில்கள் அமைக்கப்படுகின்றன. அவை குறித்து முறையிட்டும் துறை சார்ந்தவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை. கடற்றொழிலாளர்கள் என்ற போர்வையில் இந்த கடலட்டை பண்ணைகளின் பிண்ணயில் 95 சதவீதமானவை தனியார் துறையை சார்ந்தவையாகவே உள்ளன.

2014 ஆம் ஆண்டு அரியாலையில் குயிலன் என்ற நிறுவனத்தை சீனா ஸ்தாபித்தது. கடந்த 7 வருடங்களாக இந்த நிறுவனம் கடற்றொழிலாளர்கள் என்ற போர்வையிலேயே செயற்படுகின்றது. ஆனால் இதுவரையில் ஏற்றுக் கொள்ளக் கூடிய எந்தவொரு கடலட்டை பெருக்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியதாக இல்லை. மாறாக ஆய்வு செய்வதாகவே கூறி வருகின்றது. சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கடற்சூழல் மாற்றங்கள் கூடுதலாகவே உள்ளன. அங்கு கடலட்டைகளை உருவாக்கும் தொழிநுட்பத்தை இலங்கையில் முன்னெடுப்பது எந்தளவிற்கு சாத்தியமானது என்பது கேள்விகுறியான விடயமே. ஏனெனில் இலங்கையின் புவிசார் வெப்பநிலையும் , சீனாவின் வெப்பநிலையும் வேறுபட்டவையாகும். அதே போன்று தான் கடல் நீரின் உப்பு  செறிவும் இரு நாடுகளுக்குமிடையில் வேறுபட்டவையாகும். எனவே தான் குயிலன் நிறுவனத்தின் முயற்சிகள் தோல்வியென கூறுகின்றோம். அதே சீனா தற்போது பூங்குடிதீவில் 300 ஏக்கரை கோரியுள்ளதாக அ. அன்னராசா மேலும் குறிப்பிட்டிருந்தார்.

25 மில்லியன் கடலட்டை குஞ்சுகள் தேவை என அமைச்சர் கூறுகின்றார். இந்தியாவிடம் தொழிநுட்பம் கோரிய போது அதனைத் தரவில்லை. எனவே தான் சீனாவிடம் அந்த தொழிநுட்பத்தை பெறுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் எனக் கூறுகின்றார். இந்தியாவைப் பொறுத்தவரை கடலட்டை என்பது தடைப்பட்ட விடயமாகும். கடல் வளத்திற்கும் மீன் உற்பத்திக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதாலேயே இந்தியா கடலட்டைக்கு தடை விதிக்கிறது. அந்த நாட்டிடம் தடை செய்யப்பட்ட விடயத்திற்கு தொழிநுட்பத்தைக் கோரினால் எவ்வாறு கிடைக்கும்?

சீனா தன்னுடைய மக்களுக்கு உணவை பெற்றுக் கொடுப்பதற்காக எமது கடல் வளத்தை அழிக்கின்றது. இதற்கே வட மாகாண கடற்றொழில் அதிகாரிகள் துணை போகின்றனர். இலங்கையில் எந்தவொரு பிரதேசத்திலும் மக்கள் கடலட்டையை உண்ணுவதில்லை. சீனாவிற்கே அவை செல்கின்றன. ஊர்காவற்றுரை பிரதேச செயலகப்பிரிவிலுள்ள அனலைத்தீவு - பருத்தித்தீவில் 2016 ஆம் ஆண்டு தொடக்கம் பல திட்டங்களை கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் போது மக்கள் நலன் சார்ந்த துணிச்சல் மிக்க அதிகாரிகள் அந்த திட்டங்களை தீவுக்குள் கொண்டு வர அனுமதிக்கவில்லை. ஏனெனில் இந்த பருத்தித் தீவை சூழ ஆழம் குறைந்த கடலும் பவளப்பாறைகளும் உள்ளன. இந்த இயற்கை தன்மை அழிந்து விடக் கூடாது என்பதற்காகவே அதிகாரிகள் அந்த திட்டங்களை நிராகரித்தனர்.

ஆனால் இன்று பருத்தித்தீவில் 50 ஏக்கரில் கடலட்டை பண்ணை வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த 50 ஏக்கர் கடலட்டை பண்ணை சட்ட விரோதமான முறையிலேயே ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. பிரதேச செயலகத்தின் அனுமதி இல்லை. யாருக்குமே அனுமதி வழங்கவில்லை என்றால் , 50 ஏக்கரில் கடலட்டை பண்ணை எவ்வாறு வந்தது? இந்த கடலட்டை பண்ணை குறித்து அனலைத்தீவு கடற்றொழிலாளர் சங்கம் முறைப்பாடு செய்துள்ளது. ஆனால் பிரதேச செயலகம் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்த 50 ஏக்கர் கடல் பண்ணை குறித்து எந்த அதிகாரியும் வாய் திறக்கவில்லை. எனவே இந்த கடலட்டை பிரச்சினை என்பது வடக்கு கடற்றொழிலாளர்களை மாத்திரம் சார்ந்தல்ல. ஒட்டுமொத்த இலங்கை மக்களையும் சார்ந்த பிரச்சினையாகவே உள்ளது. ஏனெனில் இந்த பண்ணைகளினால் மீன் உற்பத்திகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. வடக்கு கடற்றொழிலாளர்களை ஏமாற்றிவிடலாம் என்று அதிகாரிகள் நினைக்கின்றனர். நாங்கள் ஒரு போதும் ஏமாற்றமடையவோ , இனியும் பொறுமை காக்கவோ மாட்டோம்.

மக்களை ஏமாற்றும் கடலட்டை பண்ணைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம். பருத்தித் தீவில் 50 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள கடல் பண்ணை பகுதிக்கு அப்பிரதேச மக்களை அனுமதிக்காது அதிகாரிகள் செயற்படுகின்றனர். அங்கு என்ன நடக்கிறது என்பதே எமக்குத் தெரியாது. 1990 ஆம் ஆண்டு வரை அந்த தீவில் 11 குடும்பங்கள் வாழ்ந்தன. அந்த மக்களுக்கு கூட அங்கு அனுமதி இல்லாத நிலைமையே காணப்படுகிறது. எனவே இந்த நிலைமையை அனுமதிக்க முடியாது. மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடளிக்கவுள்ளோம். அதே போன்று போராட்டங்களையும் நீதிமன்ற நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளோம்.

எமக்கிருக்கும் மிகப்பெரிய கவலை யாதெனில் வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு தமிழ் அரசியல் தலைமைத்துவமும் இந்த கடலட்டை பண்ணைகள் குறித்து பேசுவதில்லை. இலங்கையின் மீன் உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கை வடக்கு மீனவர்களே வழங்கினர். அந்த மீனவ சமூகத்தின் இன்றைய நிலை பேரவலமாகவே உள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அ. அன்னராசா  தெளிவுப்படுத்தினார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுகாதாரத்துறையில் 550 பேருக்கு அமெரிக்காவில் வாய்ப்பு...

2023-03-03 13:17:57
news-image

அசமந்தத்தால் வருமானத்தை இழந்தது வவுனியா நகரசபை...

2023-02-28 10:37:11
news-image

ஹட்டன் நகரில் உயிரற்றுப்போன உயிர்வாயு திட்டம்: ...

2023-02-22 15:18:51
news-image

பயிற்சியளிக்காமல் சுகாதார தொழிலாளர்களை கடமையில் ஈடுபடுத்தும்...

2023-01-30 18:11:10
news-image

வருமானத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை இழந்துவரும் வவுனியா...

2022-11-27 11:26:50
news-image

வடக்கில் கடலட்டை மாபியா !

2022-10-13 15:48:06
news-image

வருமான மூலங்களை பயன்படுத்தாத வவுனியா நகரசபை

2022-09-27 10:32:07
news-image

தொல்பொருளியலின் பெயரால் ஆக்கிரமிக்கப்படும் தமிழரின் மற்றுமொரு...

2022-08-22 11:00:02
news-image

கட்டுப்படாத வவுனியா நகரசபை

2022-08-02 16:29:14
news-image

நாட்டிற்கு வெளிச்சம் கொடுத்து இருளில் மூழ்கிய...

2022-07-30 20:45:34
news-image

பத்தனை சந்தியில் அமைக்கப்பட்டுள்ள கடைத்தொகுதி யாருக்கு...

2022-07-23 15:19:14