மட்டக்குளி – காக்கைதீவு பிரதேசத்தைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சந்தேகத்தின்பேரில் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மோதரை, கொட்டாஞ்சேனை, தெமட்டகொடை பொலிஸார் மற்றும் பொலிஸ் அதிரடிப்படையினர் இணைந்து மட்டக்குளி – காக்கைத்தீவு பிரதேசத்தில்  இன்று காலை திடீர் சுற்றிவளைப்பு தேடுதலை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனை இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய இந்த திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டதாக பொலிஸ் அதிரடிப்படைப்பிரிவின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் போது போதைப் பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை எனவும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபர்களிடம் கைரேகை அடையாளங்கள் பெற்றுக்கொண்டதன் பின்னர்  அவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் குறித்த உயரதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.