எம்முடைய உடலின் ஆரோக்கியத்தை உறுதி செய்வது சிறுநீரகம் தான். ஒருவருடைய சிறுநீரக செயல்பாட்டை வைத்தே அவரின் ஆரோக்கியத்தினை கூறிவிடலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பதால், சிறுநீரகத்திற்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சர்க்கரை, உயர் குருதி அழுத்தம், உப்பு நீர் வியாதி, சிறுநீர் அழற்சி, சிறுநீரகக் கல், சிறுநீர் அடைப்பு, வலி நிவாரணி மாத்திரைகளை அளவுக்கதிமாக எடுத்துக்கொள்பவர்கள் ஆகியோர்களுக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்படக்கூடும். வயிற்று போக்கு மற்றும் வாந்தியால் உடலுள்ள நீர்ச்சத்து வற்றி போவதாலும், பாம்பு கடி, விஷப் பூச்சி கடி, எலி காய்ச்சல், வலி நிவாரணிகளால் ஏற்படும் ஒவ்வாமை ஆகிய காரணங்களால் சிறுநீரகம் செய்லிழக்கும் நிலை ஏற்படக்கூடும். அதே தருணத்தில் யாருக்கும் திடீரென்று சிறுநீரக செயலிழப்பு என்ற நிலை உருவாகாது.

கை கால்களில் வீக்கம் ஏற்பட்டால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளலாம். உடலிலுள்ள தண்ணீரை வெளியேற்ற முடியாமல் சிறுநீரகம் தவிப்பதால் தான் கை கால்களில் வீக்கம் ஏற்படுகிறது. இந்நிலையில் உப்பை தவிர்த்து, தண்ணீரை மட்டும் பருகி வந்தால் நிவாரணம் கிடைக்கும். அதனுடன் அசைவ உணவை முற்றாக தவிர்க்கவேண்டும். சிறுநீரை அடக்கிக் கொள்ளக்கூடாது. வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. புகை மற்றும மதுவை முற்றாக தவிர்க்கவேண்டும். கொழுப்பு சத்து மிக்க உணவுகளை சாப்பிடக்கூடாது. உடல் எடையை அதிகரித்துக்கொள்ளக்கூடாது. விற்றமின் டி மற்றும் கால்சியம் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொண்டால் சிறுநீரக கற்கள் தோன்றுகின்றன. அதனால் இவற்றை தவிர்க்கவேண்டும்.

சிறுநீரக செயலிழப்புக்கு ஆளானவர்கள் பொட்டாசியம் சத்து அதிகமுள்ள வாழைப்பழம், இன்ஸ்ட்டன்ட் கோப்பி, டீ, செயற்கை குளிர் பானங்கள், பேரீச்சம் பழம், இளநீர், ஓரஞ்ச் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும். ஏனெனில் இவைகளில் பொட்டாசியம் சத்து அதிகமாக இருக்கிறது. அதே தருணத்தில் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரகக் கல் பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவர்களின் முறையான பரிந்துரையின் பேரில் இவற்றில் சிலவற்றை சாப்பிடலாம். ஆனால் சிறுநீரக செயலிழப்பிற்குட்பட்டு டயாலிஸஸ் வரை சென்றிருப்பவர்கள் இதனை முற்றாக தவிர்க்கவேண்டும்.

சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைகிறார்கள். அதே போல் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு தான் மரணத்தை சந்திக்கிறார்கள். எனவே சிறுநீரகம், இதயம் இவ்விரண்டு எத்தகைய பாதிப்பு தோன்றினாலும், அதை உடனடியாக கண்காணித்து மருத்துவரை சந்தித்து முறையான ஆலோசனை பெற்று சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்.

டொக்டர்  S சௌந்தரராஜன் M.S.,

தொகுப்பு  அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்