பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தாவிடின் நாடு பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்படும் - மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

By T. Saranya

06 Oct, 2022 | 06:47 PM
image

(நா.தனுஜா)

தற்போது நாட்டின் பொருளாதாரம் முகங்கொடுத்திருக்கும் முக்கிய சவாலாக பணவீக்க அதிகரிப்பு காணப்படுவதாகவும், அதன்விளைவாக வணிக செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்லமுடியாத நிலையேற்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தாவிடின் நாடு பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இருப்பினும் மிகவும் இறுக்கமான நாணயக்கொள்கையைப் பின்பற்றுவதன் விளைவாக எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதமளவில் பணவீக்கத்தை எதிர்பார்த்திருக்கும் மட்டத்திற்குக் குறைத்துக்கொள்ளமுடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இம்மாதத்திற்கான நாணயச்சபைக்கூட்டம் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நிலையில், அதில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் நோக்கில் நேற்று கொழும்பிலுள்ள மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொண்டு நாட்டின் பொருளாதார நிலைவரம் குறித்து விளக்கமளிக்கையிலேயே ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதன்படி நாட்டின் பொருளாதார நெருக்கடியை உரியவாறு கையாள்வதை முன்னிறுத்தியும், விரைவான பொருளாதார மீட்சியை இலக்காகக்கொண்டும் நாணயச்சபை பல்வேறு தீர்மானங்களை மேற்கொண்டிருக்கின்றது.

அந்தவகையில் கொள்கை வட்டிவீதங்களான துணைநில் வைப்புவசதி வீதத்தை 14.50 சதவீதமாகவும், துணைநில் கடன்வசதி வீதத்தை 15.50 சதவீதமாகவும் எவ்வித மாற்றமுமின்றி முன்னைய மட்டங்களிலேயே பேணுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி, வீழ்ச்சிப்பாதையில் கொண்டுசெல்வதற்காக நாணயக்கொள்கையானது தொடர்ந்து இறுக்கமாகப் பேணப்படும் அதேவேளை, அண்மையில் இறைக்கொள்கையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் எதிர்பார்க்கப்படும் இலக்கை எதிர்வரும் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அடைந்துகொள்வதற்கு உதவும் என்று மத்திய வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அடுத்ததாக உள்நாட்டுப்பொருளாதார செயற்பாடுகளைப் பொறுத்தமட்டில், பொருளாதாரமானது முதல் அரையாண்டில் 8 சதவீத சுருக்கத்தைப் பதிவுசெய்திருப்பதாகவும், இரண்டாம் அரையாண்டிலும் இந்தச் சுருக்கம் தொடரும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ள மத்திய வங்கி, இருப்பினும் 2023 ஆம் ஆண்டிலிருந்து பொருளாதார செயற்பாடுகளில் மீட்சி ஏற்படும் என்றும் எதிர்வுகூறியுள்ளது. 

அதேவேளை வெளிநாட்டுத்துறையைப் பொறுத்தமட்டில் பல்வேறு சவால்கள் காணப்பட்ட போதிலும், அண்மையகாலங்களில் வர்த்தகப்பற்றாக்குறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, வெளிநாட்டுத்தொழிலாளர் பணவனுப்பல்களில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு என்பன உள்ளடங்கலாக நேர்மறையான சில மாற்றங்களை அவதானிக்கமுடிவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த மாத இறுதியில் மொத்த அலுவல்சார் ஒதுக்கு 1.8 பில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ள நிலையில், இறுக்கமாக்கப்பட்டிருக்கும் நாணயக்கொள்கை தளர்த்தப்படவேண்டுமென்ற நிலைப்பாடு மக்கள் மத்தியில் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ள மத்திய வங்கி, இப்போது நாணயக்கொள்கையைத் தளர்த்தும் பட்சத்தில் அது பொருளாதார மீட்சியைத் தாமதப்படுத்தக்கூடும் என்பதால் தற்போது சில இடர்ப்பாடுகளை எதிர்கொள்ளவேண்டியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் மேற்படி செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க பின்வருமாறு பதிலளித்தார்:

கேள்வி - சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்கள் தற்போது எந்த மட்டத்தில் உள்ளன?

பதில் - கடந்த மாதம் முதலாம் திகதி சர்வதேச நாணய நிதியத்துடன் உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டதைத்தொடர்ந்து, நாம் கடன்மறுசீரமைப்பை மேற்கொள்வதை இலக்காகக்கொண்டு இருதரப்பு மற்றும் பல்தரப்புக் கடன்வழங்குனர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவருகின்றோம். தெளிவூட்டல் காட்சிப்படுத்தல் மூலம் கடந்த மாதம் 23 ஆம் திகதி இதுகுறித்து அனைத்துக் கடன்வழங்குனர்களுக்கும் விளக்கமளித்தோம். இருதரப்புக்கடன்வழங்குனர்களுடனான பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுத்திருக்கின்றோம். 

அதேவேளை ஜனாதிபதியின் ஜப்பான் விஜயத்தின்போது அந்நாட்டு உயர்மட்ட அதிகாரிகளுடனும், இங்கிலாந்து விஜயத்தின்போது அரசதலைவர்கள் சிலருடனும், மணிலாவில் ஆசிய அபிவிருத்தி வங்கி அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. மேலும் எதிர்வரும் வாரம் நானும் நிதி இராஜாங்க அமைச்சரும் திறைசேரியின் செயலாளரும் சர்வதேச நாணய நிதியத்திற்குச்சென்று இப்பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதுடன், அதனிடமிருந்து இயலுமானவரை விரைவாக உதவியைப் பெற்றுக்கொள்வதில் கரிசனை கொண்டிருக்கின்றோம்.

கேள்வி - கடன்மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவின் நிலைப்பாடு எவ்வாறானதாக இருக்கின்றது?

பதில் - நாம் அனைத்துக் கடன்வழங்குனர்களுடனும் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவருகின்றோம். இருப்பினும் தற்போது குறித்தவொரு கடன்வழங்குனரின் நிலைப்பாடு என்னவென்பது பற்றிக் கூறமுடியாது. அவ்வாறு கூறுவதால் சந்தையில் தாக்கங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது. எனவே கடன்வழங்குனர்களுடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இருக்கின்றது என்று மாத்திரமே கூறமுடியும்.

கேள்வி - சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை வெளிப்படுத்தாமைக்கான காரணம் என்ன?

பதில் - தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு மாத்திரமே எட்டப்பட்டிருக்கின்றது. அதனைத்தொடர்ந்து அவர்களுடைய நிபந்தனைகள் பூர்த்திசெய்யப்பட்டு, உரிய தேவைப்பாடுகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதன் பின்னரேயே இருதரப்பினருக்கும் இடையிலான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். எனவே தற்போது அதற்கு இடைப்பட்ட செயன்முறையிலேயே இருக்கின்றோம். இது எந்தவொரு தருணத்திலும் மாறுபடக்கூடும் என்பதனாலேயே உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாட்டை வெளிப்படுத்தவில்லை என்று நான் கருதுகின்றேன். இருப்பினும் அவசியமான சில விடயங்கள் குறித்து கட்சித்தலைவர்கள் கூட்டத்திலும், பாராளுமன்றத்திலும் ஆராயப்படும்.

கேள்வி - கடன்மறுசீரமைப்பை மேற்கொள்வதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து உதவியைப் பெற்றுக்கொள்வதற்கு மேலதிகமாக எத்தகைய நன்மைகளைப் பெறமுடியும்?

பதில் - கடன்மறுசீரமைப்பின் ஊடாக முதலாவதாக சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து உதவியைப் பெறுவதற்கும் இரண்டாவதாக உலகவங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச பொதுக்கட்டமைப்புக்களிடமிருந்தும் உதவிகளைப் பெறுவதற்கும் எதிர்பார்க்கின்றோம். அதுமாத்திரமன்றி மூன்றாவதாக கடன்மறுசீரமைப்பின் ஊடாக மீளச்செலுத்தவேண்டியுள்ள கடன்களின் அளவைப் பெருமளவிற்குக் குறைத்துக்கொள்வதன் மூலம் வெளிநாட்டுக்கையிருப்பின் அளவை சாதகமான மட்டத்திற்குக் கொண்டுவருவதற்கும், முதலீட்டாளர்கள் மத்தியில் மீண்டும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கும் எதிர்பார்க்கின்றோம் என்று தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை போன்ற நாடுகளிற்கு உதவுவதற்கு ஜி20இன்...

2022-12-02 12:40:31
news-image

அக்கரைப்பற்றுக்கு ஹெரோயின் கடத்தி வந்தவர் கைது

2022-12-02 11:49:42
news-image

உலகின் செலவு குறைந்த நகரங்கள் பட்டியலில்...

2022-12-02 12:12:05
news-image

இலங்கையின் அரசியல் கட்சிகளிற்கு அதிகாரத்தை கைப்பற்றுவது...

2022-12-02 11:27:45
news-image

இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களும்...

2022-12-02 11:47:59
news-image

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை...

2022-12-02 10:58:52
news-image

இன்றும் யாழ். கல்லுண்டாயில் 3ஆவது நாளாக...

2022-12-02 10:54:22
news-image

பணி இடை நிறுத்தப்பட்டுள்ள வைத்தியர் சமல்...

2022-12-02 10:25:52
news-image

இரட்டைக் கொலை வழக்கில் இரட்டை மரண...

2022-12-02 10:28:09
news-image

அனலைதீவு துறைமுகத்தில் கடல் அட்டை பண்ணைக்கு...

2022-12-02 10:32:00
news-image

வருமான வரி கணக்கை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம்...

2022-12-02 10:32:49
news-image

2024 இல் 30 இலட்சம் சுற்றுலாப்பயணிகளை...

2022-12-02 09:07:32