பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்கும் நடவடிக்கை தொடர்பில் ஜனாதிபதி பாராளுமன்றில் ஆற்றிய முழுமையான உரை !

06 Oct, 2022 | 04:17 PM
image

சர்வதேச நாணய நிதியத்துடன் அதிகாரிகள் மட்ட இணக்கப்பாட்டை எட்டுதல், ஜப்பான், இந்தியா மற்றும் சீனா ஆகிய கடன் வழங்கிய நாடுகளுடனும் தனியார் கடன் வழங்குனர்களுடனும் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பொது உடன்பாட்டுக்கு வருதல், அதனை தொடர்ந்து, சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவாதத்துடன் நாணய நிதியத்திடமும் வேறு நாடுகளிடமும் கடனுதவி பெற்று பொருளாதாரத்தை  பலப்படுத்துதல், பொருளாதார நிலைமையை பலப்படுத்திய பின்னர் அபிவிருத்திப் பொருளாதாரம் வரை பொது திட்டமொன்றின் கீழ் நாட்டை உயர்ந்த நிலைக்கு கொண்டு வருதல் போன்ற விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று 6 ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்றினார்.

பாராளுமன்றத்தில் இன்று (06) ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை வருமாறு,

கடந்த சில வாரங்களில் இங்கிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட விஜயங்களின்போது உலகத் தலைவர்கள் பலரை சந்தித்து கருத்துப் பரிமாற சந்தர்ப்பம் கிடைத்தது. பிலிபைன்ஸில்  நடந்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்தக் கூட்டத்தில் அதன் அங்கத்துவ நாடுகளின் நிதி அமைச்சர்களை சந்திக்கவும் வாய்ப்புக் கிடைத்தது. எமது நாட்டின் நிதி  மற்றும் பொருளாதார நிலைமைகள் தற்பொழுது  சாதரண நிலையில் இல்லை. ஆனால்  நாடு சாதாரண நிலையில் இருப்பதாகக் கருதியே சில அரசியல் கட்சிகளும் குழுக்களும் செயல்படுகின்றன. அந்த சிந்தனையுடனே அவர்கள் விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கின்றனர். அவ்வாறு சிந்தித்தே   தீர்வுகளை முன்வைக்கின்றனர். எரிபொருள் வரிசை நிறைவடைந்து விட்டது என்பதற்காக எம்மால் அவ்வாறு சிந்திக்க முடியாது.

 அண்மைக்காலத்தில்  எமது நாடு முகங்கொடுத்த பாரதூரமான பொருளாதார நெருக்கடி நிலைக்கே  நாம் இன்று முகங்கொடுத்துள்ளோம்.  இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான திட்டம் தொடர்பில் பல தடவைகள் நான் விளக்கியிருக்கிறேன்.

சர்வதேச நாணய நிதியத்துடன் அதிகாரிகள் மட்ட இணக்கப்பாட்டை எட்டுதல்

ஜப்பான்,இந்தியா மற்றும் சீனா ஆகிய கடன் வழங்கிய நாடுகளுடனும் தனியார் கடன் வழங்குனர்களுடனும் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பொது உடன்பாட்டுக்கு வருதல்

அதனை தொடர்ந்து, சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவாதத்துடன் நாணய நிதியத்திடமும் வேறு நாடுகளிடமும் கடனுதவி பெற்று பொருளாதாரத்தை  பலப்படுத்துதல் 

பொருளாதார நிலைமையை பலப்படுத்திய பின்னர் அபிவிருத்திப் பொருளாதாரம் வரை பொது திட்டமொன்றின் கீழ் நாட்டை உயர்ந்த நிலைக்கு கொண்டு வருதல். 

இந்த நான்கு  மூலோபாயத் திட்டங்ளையும்  நிறைவேற்றிக் கொள்வதற்கு கடுமையாக உழைக்க  வேண்டும் என்பதை நான் ஆரம்பம் முதல் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.ஏனென்றால்  முதலாவது  கட்டத்தின் வெற்றியில் தான் இரண்டாவது கட்டம் தங்கியுள்ளது. இரண்டாவது கட்டத்தை நிறைவேற்றினாலே மூன்றாவது கட்டத்திற்குச் செல்ல முடியும். மூன்றாவது  கட்டத்தின் வெற்றியின் பின்னரே நான்காவது கட்டத்திற்குச் செல்ல முடியும்.

 நான் பிரதமராக நியமிக்கப்படுவதற்கு முன்பிருந்தே இவற்றை சுட்டிக்காட்டியிருந்தேன். பிரதமாராக தெரிவான பின்னர் மீண்டும் இவ்விடயத்தை எடுத்துரைத்தேன். ஜனாதிபதியாக தெரிவாகிய பின்னர் ஆற்றிய பாராளுமன்ற கொள்கை விளக்க உரையின் போதும் இதனை சுட்டிக்காட்டினேன்.

 நாம் முதலாவது கட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டோம். இரண்டாவது கட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க தேவையான அடித்தளத்தை  தயாரித்து வருகிறோம். இத்தகைய சூழலில் தான் உலக தலைவர்களுடன் கருத்துப் பரிமாறும் வாய்ப்புக் கிடைத்தது. அதே போன்று ஆசிய அபிவிருத்தி வங்கியின் 68  உறுப்பு நாடுகளின் நிதி அமைச்சர்களை மணிலா நகரில் சந்திக்கவும்  சந்தர்ப்பம் கிடைத்தது.

இதன்போது சிங்கப்பூர் பிரதமர் லீ சென் லொங்கை சந்தித்தேன்.சிங்கப்பூருடன் செய்து  கொண்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கடந்த காலத்தில் உரியவகையில் முன்னெடுக்கப்படவில்லை. இந்த ஒப்பந்தத்தை முறையாக செயற்படுத்த முடிந்தால் தற்போதைய நிலையில் நாட்டுக்குக் கிடைக்கும் பயன்கள் மட்டிலடங்காது. தென்கிழக்காசியாவுடன் எமது பொருளாதார உறவுகளை  மென்மேலும் பலப்படுத்தவும் இந்த ஒப்பந்தம் வாய்ப்பாக அமையும்.இந்த ஒப்பந்தத்தை செயற்படுத்துவதன் மூலம் பொருளாதார ரீதியில்  இலங்கையுடன் நிரந்தரமாக அணுக சந்தர்ப்பம் உருவாகும் என சிங்கப்பூர் பிரதமர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் மற்றும் ஜப்பான் சர்வதேச வங்கி பிரதிநிதிகள் ஆகியோருடன் நான் பேச்சு நடத்தினேன். இலங்கையில் முதலீடுகளை அதிகரிப்பதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவதாக இரு நிறுவன பிரதிநிதிகளும் அறிவித்துள்ளனர்.

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிதா உடனும் பேச்சு நடத்தினேன். இருநாடுகளுடனும் தொடர்புள்ள  பல முக்கிய விடயங்கள்  தொடர்பில் இந்த பேச்சுவார்த்தையின்போது கவனம் செலுத்தப்பட்டது. இது தவிர ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோருடனும்  கலந்துரையாடினேன்.

கடன் மறுசீரமைப்புப் பணிகளில் மத்தியஸ்தராக ஜப்பான் முன்னணி வகிக்க உடன்பட்டிருப்பது  நல்லதொரு அறிகுறியாகும். கடன் வழங்கிய நாடுகளின் மாநாட்டின் இணைத்   தலைமைத்துவத்தை ஏற்குமாறு ஜப்பானிடம் கோர எதிர்பார்க்கிறேன். கடந்த காலத்தில் நடந்த சில நிகழ்வகளால் ஜப்பானுடனான உறவில் விரிசல் ஏற்பட்டது. ஜப்பானுடனான உறவை பலப்படுத்த கடந்த சில மாதங்களாக நாம் முயன்று வருகிறோம். ஜப்பான் தற்பொழுது பச்சைக்கொடி காட்டியிருக்கிறது. ஜப்பானுடன் முன்பிருந்த பலமான நட்புறவை மீண்டும் முழுமையாக உருவாக்க நாம் தொடர்ச்சியாக பாடுபட்டோம்.

சீனாவுடன் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம். சீனா கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டின் பின்னர் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க எதிர்பார்க்கிறோம். கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவுடன் நடத்தும் பேச்சுவார்த்தையிலும் மத்தியஸ்தம் வகிக்க ஜப்பான் முன்வந்திருப்பது சிறந்த  அறிகுறியாகும். ஆரம்ப காலம் முதல் எமக்கு சீனா உதவி அளித்துள்ளது. இந்த நெருக்கடி நிலையில் அவர்கள்  எமக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று நம்புகிறோம்.

இந்தியாவுடன் பேச்சு நடத்தி வருகிறோம். ஜப்பானில் வைத்து பிரதமர் மோடியை குறுகிய நேரம் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து அவருக்கு விளக்கினேன்.

 அனைத்து சமயங்களிலும் பிரதமர் மோடியின் ஒத்துழைப்பு    எமக்கு கிடைத்திருக்கிறது. கடந்த நெருக்கடி சமயத்தில் இந்தியா பெருமளவு உதவிகளை வழங்கியது. இதற்காக பல சந்தர்ப்பங்களில் நான் இந்தியாவுக்கு நன்றி  தெரிவித்துள்ளேன்.இலங்கையை மீள கட்டியெழுப்பும் செயற்பாட்டில் இந்தியாவின் ஒத்துழைப்பு எதிர்காலத்திலும் கிடைக்கும். தமது சாதகமான பதிலை இந்தியா ஏற்கனவே அறிவித்துள்ளது.

இங்கிலாந்து,ஜப்பான்,பிலிபைன்ஸ் ஆகிய நாடுகளில் முக்கிய அரச தலைவர்கள் மற்றும் சர்வதேச நிறுவன பிரதிநிதிகள் மட்டுமன்றி நிதி அமைச்சர்களையும் சந்தித்த வேளை எமது நாட்டுக்கு உச்சபட்ச ஒத்துழைப்பை பெறுவதற்கு நான் முயற்சி எடுத்தேன். பலரை சந்தித்து கருத்துப் பரிமாறுவதற்கு நேரம், பணம் மற்றும் உழைப்பை செலவிட நேரிடுகிறது. ஆனால் தற்போதைய நிலையில் ஒரே இடத்தில், குறுகிய நேரத்திற்குள் அனைவரையும்  சந்திக்க கிடைத்தமையானது அரிதானதொரு வாய்ப்பாகும்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக நாம் பின்பற்றும் வழிமுறை மற்றும் திட்டங்கள் தொடர்பாக நான் தெளிவுபடுத்தினேன்.  எமது நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு வழங்க பலரும் விருப்பம் தெரிவித்தார்கள்.

பொருளாதார சலுகைகளை வழங்கவும் கடனை மறுசீரமைக்கவும் நிதி அமைச்சர்களினால் கூடுதல் அழுத்தம் பிரயோகிக்க முடியும். எனவே நிதி அமைச்சர்கள் பலரை ஒரே கூரையின் கீழ் சந்தித்து கலந்துரையாட கிடைத்தது சாதகமான விடயமாகும்.

ஜப்பான்,இந்தியா மற்றும் சீனா போன்ற எமக்கு உதவி வழங்கும் பிரதான நாடுகளுடன் பொது உடன்பாட்டுக்கு வர எதிர்பார்க்கிறோம். கடன் வழங்கிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதூவர்களுடன் தற்பொழுது பேச்சு நடத்தி வருகிறோம். அனைவருடனும் பல்தரப்பு உடன்பாட்டை எட்டுவதற்கு எதிர்பார்க்கிறோம்.

 எமக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் உடன்பாட்டுக்கு வந்த பின்னர் லண்டன் கிளப் போன்ற தனியார் கடன் வழங்குனர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்.கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அவர்களுடன் உடன்பாட்டுக்கு வர எதிர்பார்க்கிறோம்.

கடன் வழங்கும் நாடுகள் மற்றும் தனியார் கடன் வழங்குனர்களுடன் இணக்கப்பாட்டுக்கு வருவதன் மூலம் எம்மால் சர்வதேச நாணய நிதியத்தின் உறுதிப்பாட்டைப் பெற்றுக் கொள்ள முடியும். தற்போது ஆசிய அபிவிருத்தி வங்கி எமக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் உதவியாக வழங்க முன்வந்துள்ளது. 

சர்வதேச நாணய நிதியத்தின் உறுதிமொழியைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்து இடைநிலை நிதி வசதிகளான ‘பிரிஜின் பினான்ஸ்’ நிதி உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம் கடன் உதவிகளை வழங்கும் வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பல்தரப்பு கடன்களைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் எமக்கு கிடைக்கும்.

இன்று நாம் எதிர்கொண்டுள்ள பொருளாதார  நெருக்கடி காரணமாக சந்தை நிலவரத்துக்கமைய உலக வங்கி அல்லது வேறு கடன் வழங்கும் நிறுவனங்களிடம் இருந்து கடன்பெறும் சக்தி எம்மிடம் இல்லை. எனவே, சலுகை அடிப்படையில் நிதி உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறு நாம் சர்வதேச அபிவிருத்திச் சம்மேளனத்துடன் இணைந்து வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

இதுபோன்ற பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்ட சந்தரப்பங்களில் எகிப்து, இந்தோனேசியா, பிலிபைன்ஸ் உள்ளிட்ட 12 நாடுகள் இடைநிலைச் சலுகைகளைக் கோரியிருந்தன.  தற்போதைய நிலையில், இதுபோன்ற சலுகை கடன் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்வது எமக்கும் பெரும் நிவாரணமாக இருக்கும்.

சுற்றுலாத்துறை மூலம் பலன்களை துரிதமாகப் பெற்றுக்கொள்ள முடியும். பல்வேறு வழிகளில் சுற்றுலாத்துறைக்கு மீண்டும் புத்துயிர்ப்புக் கொடுக்க நாம் முயற்சிக்கின்றோம். இதன்மூலம் நாட்டிற்கு கிடைக்கும் அந்நியச்செலாவணியை அதிகரித்துக் கொள்வதே எமது நோக்கமாகும்.

தனியார் துறையின் நிதி கையிருப்பை அதிகரித்துக் கொள்வதும், வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதுமே எமது நோக்கமாகும். இந்த வேலைத் திட்டத்தின் ஊடாக அடுத்த வருட நடுப்பகுதியளவில்  ஓரளவு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திக் கொள்வதுடன் ரூபாவின் பெறுமதியை வலுப்படுத்திக் கொள்ளவும் எம்மால் முடியுமாக இருக்கும். வீழ்ந்துள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப நாம் எடுத்து வரும் முயற்சியில், தற்போது நாம் எதிர்கொண்டுள்ள சில சவால்கள் குறித்தும் நான் உங்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

இது தொடர்பாக இதற்கு முன்னரும்  நான் அவ்வப்போது சுட்டிக்காட்டியுள்ளேன். எனினும், இன்று நாம் விழுந்துள்ள நிலையின் உண்மை நிலவரத்தைப் புரிந்துகொள்வதற்காக மீண்டும் மீண்டும் இதனை நான் நினைவூட்ட வேண்டியுள்ளது. 

கடந்த காலங்களில், பின்பற்றப்பட்ட பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் அதற்கு நிகராக ஏற்பட்ட உலகளாவிய நெருக்கடி ஆகியன காரணமாக, எமது நாட்டின் பொருளாதாரம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. 

கடந்த இரண்டு வருடங்களில், எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி பணம் அச்சிடப்பட்டது. 2015ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் அச்சிடப்பட்ட பணத்தைவிட 13 மடங்கு அதிகமான பணம் கடந்த இரண்டு வருடங்களில்  அச்சிடப்பட்டுள்ளது. அதற்கு நிகராக உற்பத்தி அதிகரிக்கவில்லை. இதனால் 100 சதவீத பணவீக்கம் ஏற்பட்டது. எனினும், கடந்த இரண்டு, மூன்று மாதங்களில் எம்மால் எடுக்கப்பட்ட சிற்சில தீர்மானங்களால் பண வீக்கத்தை இந்த செப்டம்பர் மாதத்தில் 69.8 வீதமாக பேண முடிந்தது. 

இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்ற, தீவிர பொருளாதார மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கமைய நாட்டிற்கு பெரும் சுமையாக உள்ள அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளோம். பல தசாப்தங்களாக பொதுமக்களே இந்த நிறுவனங்களின் நட்டத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமந்து வந்தனர். அரச சொத்து என்ற பெயரின் பின்னால் மறைந்தபடி, இந்த நிறுவனங்களின் நட்டம் மக்கள் மீது சுமத்தப்பட்டது. 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு நிறைவடையும் சந்தர்ப்பத்தில் சில அரச நிறுவனங்களால் எதிர்கொள்ளப்பட்ட மொத்த நட்டத்தை  இங்கு குறிப்பிடுகிறேன். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், 1057 பில்லின் ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளது. இலங்கை மின்சார சபை 261 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளது. ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் 791 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளது. இந்தச் சுமையை தொடர்ந்தும் மக்கள் மீது சுமத்த முடியாது. அதனால் இந்த நிறுவனங்களை மறுசீரமைத்து மக்கள் மீதான சுமையைக் குறைக்க வேண்டும்.

உரம் குறித்து பின்பற்றப்படும் தூரநோக்கற்ற செயற்பாடுகளினால் விவசாயம் மற்றும் உணவு உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போது உணவு பற்றாக்குறை 95 சதவீதத்தை அண்மித்துள்ளது. இதுதான் உண்மை. இவ்வாறான பற்றாக்குறை உலக யுத்த காலப்பகுதியில் கூட இலங்கையில் இருக்கவில்லை. இது மிகவும் மோசமானதொரு நிலைமையாகும்.  

உணவு உற்பத்தி வீழ்ச்சியடைந்ததால், உள்நாட்டுச் சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான தீர்மானங்களை கடந்த சில மாதங்களில் நாம் எடுத்திருந்தோம்.  இவை, ஓரிரு நாட்களில் அல்லது ஒரே இரவில் தீர்த்துவிடக்கூடிய பிரச்சினைகள் அல்ல. 

நாம் பின்பற்றிய துரித நடவடிக்கைகளினால் கடந்த சிறுபோகத்தின் விளைச்சல், எதிர்பார்த்ததைவிடவும் அதிகமாக இருந்தது. அடுத்த பெரும்போகத்தின்போது, எவ்வித சிரமமும் இன்றி விவசாயம் செய்யத் தேவையான உரங்கள் மற்றும் விதைகள் ஆகியவற்றை வழங்க தயார் செய்யப்பட்டுள்ளது. இயற்கை அனர்த்தைத் தவிர்த்து பெரும் போகத்தில் சிறந்த விளைச்சலைப் பெற்றால் ஏனைய உணவுப் பொருட்களின் விலைகளைக்  குறைத்துக் கொள்ள முடியும். அதேபோல பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திக் கொள்ளவும் இது வாய்ப்பாக அமையும்.

விவசாயத்தின் மீது அதிக கவனம் செலுத்துவத்துடன் துரித உணவு உற்பத்தி வேலைத் திட்டமொன்றையும் நாம் ஆரம்பித்துள்ளோம். நாட்டில் ஒரு பிரிவு உணவுப் பற்றாக்குறையால் சிரமப்படுவதை நாம் அறிவோம். கிராமங்களில் இந்தத் தரப்பினரை அடையாளம் காண்பதற்கான வேலைத் திட்டமொன்றும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்படுவதன் மூலம் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த நாம் எதிர்பார்க்கிறோம்.

பண விநியோகத்தைக்  கட்டுப்படுத்தும் தற்காலிக முயற்சியாக  வட்டி வீதத்தை அதிகரிக்க மத்திய வங்கி தீர்மானித்தது. இது ஒரு தரப்பிற்கு நன்மை கிடைப்பதைப் போன்று தென்பட்டாலும் இது ஒட்டு மொத்தமாக பாதகத்தையே ஏற்படுத்தும். இதனால், பொருளாதார வளர்ச்சி வீதம் குறைந்து உள்நாட்டில் கடன் பெறுவது குறையும். இதனால் பொருளாதாரம் சுருங்கி, தனியார்துறை பின்னடைவைச் சந்திக்கும். தற்போது செய்யப்பட்டுள்ள மதிப்பீடுகளுக்கமைய பொருளாதார வளர்ச்சி, 7 – 8 சதவீதத்தால் வீழ்ச்சியடையலாம். ஒருபுறம் பொருளாதாரம் சுருங்கி, பண வீக்கம் அதிகரிக்கும். எனவே, இந்த நிலைமையைத் தவிர்த்துக் கொள்ள நாம் பல நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்த்துள்ளோம்.

1. அடிப்படை நுகர்வுப் பொருட்களுக்கு  கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்தல்.

2. உள்நாட்டு உற்பத்திகளுக்கு உள்ள தடைகளை நீக்குவதன் மூலம் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அதிகரித்தல்.

3. அந்நியச் செலாவணியை   அதிகரிப்பதற்காக அந்நியச் செலாவணி கட்டுப்பாடுகளை சிறிதளவில் தளர்த்தல்.

4. அத்தியாவசியமற்ற இறக்குமதிகளை குறைப்பதற்கான கட்டுப்பாடுகளை ஏற்படுத்தல்.

5. மிகவும் சிறப்பான திறந்த பொருளாதார சந்தை பொறிமுறைகளை நடைமுறைப்படுத்தல். 

6. வைப்புகளுக்கான  வட்டி வரையறைகளை ஏற்படுத்துவதன் மூலம் வட்டி விகிதங்களை குறைந்தளவில் பேணுதல்.

கட்டம் கட்டமாகவே நாம் பொருளாதாரத்தை மீளமைக்கும் பயணத்தை முன்னெடுக்க வேண்டும். இந்தப் பிரச்சினைகள் எதற்கும் உடனடித் தீர்வுகள் இல்லை. ஆசிய அபிவிருத்தி வங்கியின் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு மத்திய வங்கியின் வெளிநாட்டுக் கையிருப்பை பலப்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுக்கின்றோம்.  அரச நிறுவனங்களின் மூலம் நாட்டுக்கு ஏற்படும் சுமையை குறைப்பதனூடாக இக்கையிருப்பை மேலும் இரண்டு அல்லது மூன்று பில்லியன் அமெரிக்க டொலர்களால் பலப்படுத்த முடியும். 

அதேபோன்று, எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலினால் எமக்குக் கிடைக்கும் நட்ட ஈட்டுத் தொகையையும் அந்த கையிருப்பிலேயே தொடர்ந்து வைப்பதற்கு நாம் தீர்மானித்துள்ளோம். இதற்கு இணையாக நமது பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு இடைக்கால கடன் வசதிகளினாலும் சுற்றுலாத் துறையினாலும் தனியார் வியாபாரங்களினாலும்  ஈட்டும் பணம் பயன்படுத்தப்படும். ஏற்றுமதி வருமானம் அதிகரிக்கப்படும். 

இவ்வாறான சிறந்த பொருளாதார செயற்பாடுகளினால், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத்  தொழிலாளர்களின் நம்பிக்கையை எம்மால் மீண்டும் வெற்றிகொள்ள முடியும். இவ்வாறான நம்பிக்கைகளின் மூலமே  அவர்கள் மீண்டும் முன்னரைப் போன்று அந்நியச் செலாவணியை இலங்கைக்கு அனுப்புவார்கள். இதன் பயனாக சர்வதேசத்தின் நம்பிக்கையை எம்மால் மீண்டும் வெற்றிகொள்ள முடியும். 

எமது நாட்டின் வரிக்கட்டமைப்பை முழுமையாக மீள் பரிசீலனை செய்து மாற்ற வேண்டியுள்ளது. தற்போது முழுமையாக அறவிடப்படும் வரிகளில் நூற்றுக்கு 80 சதவீதம் மறைமுக வரியாகும். இந்நாட்டின் அனைத்து குடிமக்களும் அறியாமல் வரி செலுத்துகின்றனர். தாம் எந்தவொரு வகையிலும் தொடர்புபடாத விடயங்களுக்காக அவர்கள் வரி செலுத்துகின்றனர். நாட்டின் கடைசி ஏழைக் குடிமகனும் இந்த வரி வலையில் சிக்கியுள்ளான். இந்நிலைமையை மாற்றுவது காலத்தின் தேவையாகும். 

2019இல் நாம் பின்பற்றிய வரிக் கொள்கைக்கு ஏற்ப மொத்த தேசிய உற்பத்தியில் நூற்றுக்குப் 14 சதவீதம் வரியினால் பெற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் அந்த வரிக்கொள்கை மாற்றப்பட்டதினால் வரி வருமானம் நூற்றுக்கு 8.5 வரை விழ்ச்சியடைந்துள்ளது. தற்போது நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி அந்நிதியை மீண்டும் நூற்றுக்குப் 14 வரை உயர்த்துவதற்கு இணங்கியுள்ளோம். 

எனினும் இதனைக் கொண்டு எம்மால் திருப்தி அடைய முடியாது. இலவசக் கல்வி மற்றும் இலவச சுகாதார சேவை சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டுமாயின் அரசாங்கத்தின் வரி வருமானம் மொத்த தேசிய உற்பத்தியில் நூற்றுக்கு 18 வரை உயர்த்தப்பட வேண்டும். வரி வருமானம் மூலமே நிதி திரட்டப்பட வேண்டும். அவ்வாறன்றி மீண்டும் பணம் அச்சடிக்கப்பட்டால் எமது எதிர்காலம் கேள்விக்குறியாகும். 

நீண்ட கால நிதி  தொடர்புகள் இல்லாததால் எமது வருமானம் குறைந்துள்ளது. அந்நியச் செலவுகளுக்கும் வருமானத்துக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்ததால், அந்நியச் செலாவணி கையிருப்பு வீழ்ச்சியடைந்தது. பணவீக்கம் நூறு சதவீதம் அதிகரித்துள்ளது. ரூபாவின்  பெறுமதி  வீழ்ச்சியடைந்தது. வட்டி விகிதம் அதிகரித்துள்ளதால் கடுமையான பாதிப்பை  சந்திக்க வேண்டியுள்ளது.

அதனால்தான் நமது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் வங்கிக் கட்டமைப்பு என்பவற்றின்  மூலம் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்ற எதிர்பார்த்தோம். இப்போது அது தோல்வியடைந்துள்ளது. எனவே, எமது கடனை மறுசீரமைத்து, சர்வதேச நாணய நிதியத்திடம்  கடன் பெற்று உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றில் கடனுதவி  பெற்று, அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்குமாறு அறிவித்துள்ளேன்.

அதற்கு நமது உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும். நமது அந்நிய செலாவணியை அதிகரிக்க வேண்டும். அந்நியச் செலாவணி அதிகரிப்புக்குப் பிறகு, நமது  கைத்தொழில்கள் மற்றும் சேவைகள் மேம்படும். மேலும், நஷ்டத்தில் இயங்கும் நமது நிறுவனங்களின் நஷ்டம் குறைக்கப்பட்டு, வருமானம் அதிகரிக்கும் போது, அரசின் வரவு செலவு திட்டம்  பலமடையும். பெரும்போகத்தை வெற்றிகரமாக முன்னெடுத்தால்    உற்பத்தி  பலமடையும்.  அரச பொருளாதாரமும் பலம் பெறும்.

மறுபுறம், சுற்றுலாத் துறையின் மூலம் அந்நியச்செலாவணியைப் பெறலாம். அத்துடன் வெளிநாடுகளில் உள்ள எமது ஊழியர்கள் தமது வருமானத்தை இலங்கைக்கு அனுப்புவதன் மூலம் பொருளாதாரத்திற்கு வலுவான பங்களிப்பை வழங்க முடியும். அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் இருந்து இந்த திட்டத்தை செயல்படுத்த எதிர்பார்க்கிறோம்.  

இதுபோன்ற நெருக்கடிகளை வெற்றிகொள்ளும் கடுமையான பயணத்தில் முன்னோக்கிச் செல்லும்போது, நம்மால் கட்டுப்படுத்த முடியாத பூகோள காரணிகளால் நாம் பாதிக்கப்படுகிறோம். எரிபொருள் விலை அதில் ஒன்றாகும். உக்ரேன் போரின் தாக்கத்தால் எதிர்வரும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் உலக எரிபொருள் உற்பத்தி குறைவடையுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக எரிபொருள் விலை உயர்வடையும். இவ்வாறான நிலைமைக்கு முகம்கொடுப்பதற்கு நாம் தற்போதே தயாராக வேண்டும். எரிபொருள் விலை உயர்வை நுகர்வோர்களினால் தாங்கிக்கொள்ளக் கூடியளவில் வைத்திருக்க  நாம் இப்போதே திட்டங்களை வகுக்க வேண்டும். 

நான் இங்கு இன்னுமொரு முக்கிய விடயத்தை குறிப்பிட விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் பல்வேறு அரசியல் கருத்துக்களை உடையவர்கள். ஆனால் இந்தப் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மீண்டால் மட்டுமே உங்கள் அரசியல் நோக்கங்களை அடைந்துகொள்ள முடியும். 

சவாலை ஏற்றுக்கொண்டே நான்  இந்தப் பயணத்தை ஆரம்பித்தேன்.  எதிர்க்கட்சியில் எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது தலைவரோ இந்த சவாலை ஏற்றுக்கொள்ளாத சந்தர்ப்பத்தில் நான் நாட்டுக்காக இச்சவாலை ஏற்றுக்கொண்டு,  ஆபத்தான ஒரு பயணத்தை ஆரம்பித்தேன். நாம் மெது மெதுவாகவும் நிலையாகவும் இதுவரை முன்னோக்கி வந்துள்ளோம்.   எமது நாட்டின் பெரும்பாலான மக்கள் இப்பயணத்திற்கு ஆதரவு வழங்குவது எமக்குத் தெரியும். அவர்களுக்கு சிறந்ததொரு வாழ்க்கை, சிறந்ததொரு நாடு, சிறந்ததொரு எதிர்காலமே அவசியமாகும். 

ஆனால் அவ்வாறு அவசியமற்றவர்களும் இருக்கின்றார்கள். நாட்டை நாளுக்கு நாள் வீழ்ச்சியடையச் செய்து, நெருக்கடிக்குள் தள்ளி அரசியல் இலாபங்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் அனைத்தையும் பிழையாகவே பார்க்கிறார்கள்.

ஒரு சில குழுக்கள், உலகில் பல தசாப்தங்களுக்கு முன்னர் நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிக்கப்பட்ட கருத்தியல்களை இன்றோடு ஒப்பிட்டுப் பார்க்க முயற்சிக்கின்றனர். அக்காலத்தில், ஒரு சில அரசியல் குழுக்கள் உயிர் பிரியும் சந்தர்ப்பத்தில் உள்ள ஒருவருக்கு நீர் துளியொன்றை வழங்கி உயிரைக் காப்பாற்ற வேண்டாம் என்றே கூறினர். பட்டினியால் இறந்த பின்னர் சடலத்தை தோளிலே சுமந்துகொண்டு, நாடு பூராகவும் செல்லுமாறும் கூறினர்.  அந்தக் கருத்தியலை இன்றும் முன்னுதாரணமாகக்கொள்ள ஒரு சில குழுக்கள் முயற்சிக்கின்றனர். உயிர் பிரியும் தருவாயில் உள்ள பொருளாதாரத்திற்கு மூச்சுக் காற்றை பெற்றுக்கொள்ள உதவாது, பொருளாதாரம் இறுதி மூச்சையும் இழக்கும் வரை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, மக்கள் பட்டினியால் இறக்கும் நிலை ஏற்பட்டால், சடலங்களின் மேல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். வரலாறு  முழுவதும் உலகில் எங்கேயும் இவ்வாறான எதிர்பார்ப்புகள் நிறைவேறியது இல்லை என்பதை மட்டும் நான் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அவ்வாறு அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டாலும் அந்த அதிகாரம் அதையும் விட துரதிஷ்டவசமான முறையிலே நிறைவடையும். 

அத்தகைய கருத்துக்களை உடையவர்களிடம் தங்களின் மனசாட்சிகளை கேட்டுக்கொள்ளும்படி நான் கூறுகிறேன். தற்போது   நாட்கணக்கில் எரிபொருள் வரிசைகளில், எரிவாயு வரிசைகளில் நிற்க வேண்டிய அவசியமில்லை. பத்து, பன்னிரண்டு மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படுவதில்லை. பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்டுள்ளன. நாடு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக அனைத்துத் துறையினரும் தற்போது உணர்ந்து வருகின்றனர். மீண்டும் தமது வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு இந்நாட்டு மக்களுக்கு அதிக தேவை உள்ளது. அத்தேவை சிறந்த முறையில் நிறைவேறிய ஒர் சந்தர்ப்பமாக மிக சிறப்பாக நிறைவடைந்த கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியை உதாரணமாக எடுத்துக் காட்டலாம். ஆனால் இன்னும் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. பலவீனங்கள் உள்ளன. அவற்றை நாம் சீர் செய்துகொள்ள வேண்டும். திருத்திக்கொள்ள வேண்டும்.

உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பு இதற்கு கிடைத்தால் மட்டுமே இந்தப் பயணத்தை பலப்படுத்தவும் துரிதப்படுத்தவும் முடியும். இதனால் பழைய  முரண்பாடுகளை மறந்து, இப்பயணத்தில் இணையுமாறு நான் மீண்டும் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.  விமர்சிப்பதும் தவறாகப் பார்ப்பதும் இலகுவான விடயங்கள். எதிர்ப்பதும் மிக இலகுவான விடயம். ஆனால் தீர்வுகளைத் தேடுவது மிகக் கடினம். 

இந்தப் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு புத்தபெருமானின் வழிமுறைகளையே நான் பின்பற்றுகின்றேன். வீழ்ச்சியடைந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு மகா விஜித்த மன்னர் பின்பற்றிய விடயங்களை “கூத்ததந்த சூத்ரய” மூலம் புத்தபெருமான் சுட்டிக்காட்டியுள்ளார். சரியான உபதேசங்களைப் பின்பற்றுதல், பிரச்சினையின் உண்மையான நிலையை புரிந்துகொள்ளல், பிரச்சினைக்கு முழுமையான திட்டங்களுடன் கூடிய தீர்வுகளைத் தேடுதல் மற்றும் அத்திட்டங்களை நம்பிக்கையுடன் முழுமையாக செயற்படுத்தல் என்பனவே அவையாகும். நாம் இந்த வழிமுறையையே பின்பற்றுகின்றோம். அதனால் இந்த செயற்பாடுகளுக்கு உங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு நான் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். நாட்டுக்காக ஒன்றிணைந்து  நாம் இந்த சவாலுக்கு முகம் கொடுப்போம். 

தேசிய சபை, விரைவில்  ஸ்தாபிக்கப்பட உள்ள மக்கள் சபை, பாராளுமன்ற துறைசார் குழுக்கள் போன்றவற்றின் மூலம் நாட்டைக் கட்டியெழுப்பும் பொதுவான வேலைத்திட்டத்துடன் இணையுமாறு நான் மீண்டும் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்து சமுத்திர கடலுக்கடியிலான இணைய கேபிள்...

2022-12-09 15:05:51
news-image

வவுனியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் 9...

2022-12-09 15:24:41
news-image

நுகேகொடையில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த...

2022-12-09 13:39:36
news-image

உடுகம பிரதேசத்தில் ஒருவர் தாக்கப்பட்டுக் கொலை!

2022-12-09 13:40:31
news-image

இளம்பெற்றோர் போதைப்பொருளிற்கு அடிமையாவது அதிகரிப்பு -...

2022-12-09 13:19:21
news-image

கிளிநொச்சியில் பல கிராமங்களில் 165 க்கும்...

2022-12-09 14:34:19
news-image

வவுனியாவை சேர்ந்தவர் கொழும்பில் 3 ஆவது...

2022-12-09 13:33:48
news-image

ரி - 56 ரக துப்பாக்கியின்...

2022-12-09 13:22:54
news-image

வடக்கு மக்கள் அநாவசியமாக வெளியில் நடமாடுவதை...

2022-12-09 12:58:15
news-image

சார்ஜன்டின் மனைவியான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்...

2022-12-09 12:24:27
news-image

காற்று மாசடைவது குறித்து யாழ் மக்களுக்கு...

2022-12-09 12:07:04
news-image

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள்...

2022-12-09 11:56:50