(நா.தனுஜா)
இலங்கை அரசாங்கங்களின் பல தசாப்தகால கொள்கைத்தீர்மானங்களும் அண்மையகால வெளியகக்காரணிகள் சிலவுமே நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குப் பிரதான காரணமாக அமைந்திருப்பதாக புதிதாக வெளியிட்டுள்ள 57 பக்க அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, இலங்கைக்கான இருதரப்பு, பல்தரப்பு மற்றும் தனியார் கடன்வழங்குனர்கள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தும்போது இலங்கை நிறைவேற்றவேண்டிய மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை மனதிலிருத்திச்செயற்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், அதன்விளைவாக உணவு மற்றும் சுகாதாரம் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வதற்கான மக்களின் உரிமையில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள், இப்போது நடைமுறையில் உள்ள சில சமூகப்பாதுகாப்பு செயற்திட்டங்கள்மீது விதிக்கப்பட்டுள்ள மட்டுப்பாடுகள் என்பன உள்ளடங்கலாகப் பொதுமக்கள் முகங்கொடுத்திருக்கும் சவால்களையும் அரசாங்கம் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளையும் உள்ளடக்கி 'நாங்கள் முழுமையானதொரு ஸ்தம்பித நிலைக்கு அண்மையில் இருக்கின்றோம்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சுகாதாரம், உணவு மற்றும் சமூகப்பாதுகாப்பு ஆகியவற்றுக்கான உரிமைகளைப் பாதுகாத்தல்' என்ற தலைப்பில் 57 பக்க அறிக்கையொன்றை சர்வதேச மன்னிப்புச்சபை செவ்வாய்கிழமை வெளியிட்டிருக்கின்றது.
இலங்கை அரசாங்கங்களின் பல தசாப்தகால கொள்கைத்தீர்மானங்களும், அண்மையகால வெளியகக்காரணிகள் சிலவுமே நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குப் பிரதான காரணமாக அமைந்திருப்பதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, இந்நெருக்கடி பொதுமக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் உணவு, எரிபொருள், மருந்து உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவித்துள்ளது.
கடந்த ஜுன் மாதமளவில் நாடளாவிய ரீதியில் சுமார் 11 சதவீதமான குடும்பங்கள் தமது வருமானத்தை இழந்திருப்பதுடன் 62 சதவீதமான குடும்பங்களின் வருமானத்தில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கும் அதேவேளை, ஜுலை மாதத்தில் வருடாந்த உணவுப்பணவீக்கம் 90.9 சதவீதமாக உயர்வடைந்துள்ளது என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் இப்பொருளாதார நெருக்கடியின் விளைவாக உணவு மற்றும் சுகாதாரம் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வதற்கான உரிமை உள்ளடங்கலாக மனித உரிமைகள் மீது ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் சமூகப்பாதுகாப்பை நோக்கி நகர்வதற்கும் இலங்கை அரசாங்கம், கடன் வழங்குனர் நாடுகள் மற்றும் தனியார்துறை கடன் வழங்குனர்கள் உள்ளிட்ட சர்வதேச சமூகம் என்பன மேற்கொள்ளவேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை அதன் அறிக்கையில் விரிவாக ஆராய்ந்திருப்பதுடன் சர்வதேச உதவிகளின் கிடைப்பனவை அதிகரித்தல், கடன் மறுசீரமைப்பு குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தல் உள்ளடங்கலாக கடன்சுமையைக் குறைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்தல் ஆகியவற்றின் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது.
இவ்வறிக்கையானது நாளாந்த கூலித்தொழிலாளர்கள், மலையகத்தமிழ் சமூகத்தைச்சேர்ந்த தேயிலைத்தோட்டத்தொழிலாளர்கள், பொதுச்சுகாதாரப்பணியாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான அமைப்புக்களின் பிரதிநிதிகள், இவ்விடயம் தொடர்பில் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் உள்ளடங்கலாக 55 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்கள் மற்றும் இலங்கையின் கடன்கள் தொடர்பில் வெளியான பொருத்தமான தரவுகள், மத்திய வங்கி, சர்வதேச பொதுக்கட்டமைப்புக்கள் போன்றவற்றால் வெளியிடப்பட்ட தரவறிக்கைகள், மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களால் இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகள் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
'இலங்கை மிகப்பாரியளவில் மீளச்செலுத்தவேண்டியுள்ள கடன்தொகையைக் குறைப்பதன் ஊடாக சுகாதாரம் மற்றும் சமூகப்பாதுகாப்பு ஆகிய துறைகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு உருவாகும்.
கடந்த சில தசாப்தங்களாக இலங்கையின் பொதுக்கடன்களின் அளவு அதிகரித்துச்செல்கின்றது. 2021 ஆம் ஆண்டின் இறுதியில் அரசாங்கம் மீளச்செலுத்தவேண்டியிருந்த வெளியகக்கடன்களின் மொத்தப்பெறுமதி 32.2 பில்லியன் டொலர்களாகும்.
தற்போது சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதை முன்னிறுத்திய தொடர் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், மனித உரிமைகள் மற்றும் சமூகம்சார் செலவினங்களுக்கு முன்னுரிமையளிக்கப்படவேண்டியது மிகவும் அவசியமாகும்.
அதேவேளை இப்பேச்சுவார்த்தைகள் மற்றும் தீர்மானமெடுத்தல் என்பன வெளிப்படையான முறையில் அமைவதை அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டும்' என்று சர்வதேச மன்னிப்புச்சபை அதன் 57 பக்க அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் அரசாங்கம் தற்போது நடைமுறையிலுள்ள சமூகப்பாதுகாப்பு செயற்திட்டங்களை அனைத்துத்தரப்பினரதும் சமூகப்பாதுகாப்பை உறுதிசெய்யக்கூடியவகையில் மறுசீரமைக்கவேண்டும். அடுத்ததாக தற்போதைய சூழ்நிலையில் அதிகரித்துவரும் தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடியவகையில் சமூக உதவித்திட்டங்களுக்கான செலவினங்களை அரசாங்கம் உயர்த்தவேண்டும்.
இலங்கைக்கான பல்தரப்பு, இருதரப்பு மற்றும் தனியார் கடன்வழங்குனர்கள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தும்போது தமது மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை மனதிலிருத்திச்செயற்படவேண்டும்.
மேலும் பொதுமக்களின் மனித உரிமைகள் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு அவசியமான அனைத்து உதவிகளையும் இருதரப்பு மற்றும் பல்தரப்பு நன்கொடையாளர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள சர்வதேச மன்னிப்புச்சபை அரசாங்கமும் ஏனைய சம்பந்தப்பட்ட தரப்பினரும் நிறைவேற்றவேண்டிய மேலும் பல பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM