(எம்.எப்.எம்.பஸீர்)

குருணாகல் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புத்தளம் பிரதான வீதியின் மாஸ்பொத்த பகுதியில் கடத்தல் சந்தேக நபர்களைக் கைது செய்ய சென்றபோது உப பொலிஸ் பரிசோதகர் ஏக்கநாயக்கவை சுட்டுக்கொன்ற பிரதான சந்தேக நபரைக் கைது செய்யும் பொறுப்பு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் எம்.நவாஸ் ஆகியோரின் நேரடி கண்காணிப்பில் பிரதான சந்தேக நபரைக் கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

அதன்படி நேற்றைய தினம் பிரதான சந்தேக நபர் தொடர்பில் தகவல்களை வெளியிட்ட பொலிஸ் தலைமையகம், அவர் போலி பெயர்களில் நடமாடும் நிலையில் அவர் தொடர்பில் பொது மக்களிடமிருந்து தகவல்களைக் கோரியுள்ளது. அதன்படி சந்தேக நபரைக் கைது செய்ய சரியான தகவல்களை வழங்குபவருக்கு பொலிஸ் தலைமையகமானது விஷேட பணப் பரிசு ஒன்றினை வழங்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளர்

கடந்த நவம்பர் 15 ஆம் திகதி மாஸ்பொத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து கொழும்பை மையப்படுத்தி செயற்படும் பாதாள உலகக் குழுவின் தலைவரான சுது ரோஹன அல்லது ரத்மலானே ரொஹா எனும் பெயர்களால் அறியப்படும் தேவமுனி ஹெரல்ட் ரோஹன டி சில்வா கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரது நண்பரான மாத்தற துஷார எனும் முன்னாள் இராணுவ வீரரும் தெற்கு பாதாள உலகக் குழு உறுப்பினறுமான சந்தேக நபர் தப்பிச் சென்றிருந்த நிலையில் தொடர்ச்சியாக அவர் தலைமறைவாகியுள்ளர்.

சந்தேக நபர் கந்த கெதரலாகே சமில மதுசங்க, ஜாலத் கண்டம்பி சமிந்த ஆகிய பெயர்களில் உள்ள தேசிய அடையாள அட்டைகளில் நடமாடிவருவதாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

சந்தேக நபர் தொடர்பில் தகவல்களை அறிவோர் உடனடியாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவை 0772001021, 011- 2451633, 011- 2451636 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்புகொன்டு தகவல் வழங்குமாறு பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.