இஸ்லாத்தின் புனிதத்தை குலைக்கிறதா சவூதி ?

By Digital Desk 5

02 Oct, 2022 | 09:58 PM
image

லத்தீப் பாரூக்

சவூதி அரேபிய ஆட்சியில் பில்லியன் கணக்கான டொலர்கள் செலவில் தனிமனித நாடகமாக அரங்கேற்றப்பட்டு வரும் முற்றிலும் மேலைத்தேச மயப்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு எதிரானவர்களுக்கு ஷரீஆ சட்டம் என்ற போர்வையில் வழங்கப்பட்டு வரும் தண்டனைகள் இஸ்லாத்தை பிரதிபலிக்காமையினால் சாதாரண மக்களின் கடும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளன. 

500பில்லியன் டொலர்கள் செலவில் சவூதி அரசு நிர்மாணிக்க உத்தேசித்துள்ள ‘நியொம்’ பெருநகர திட்டம் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளது. சிந்தலா எனப்படும் செங்கடல் தீவுத் திட்டத்தில் மது மற்றும் அது தாராளமாகப் பாவிக்கப்படும் வைபவங்கள் என்பனவற்றுக்கு எந்தக் குறையும் இருக்காது.

‘வோல் ஸ்;ரீட் ஜேர்னல்’ அறிக்கையின்படி, ‘நியொம்’ நகரம் நியுயோர்க் நகரை விட 33மடங்கு பெரியதாக இருக்கும் என்று அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். 170கிலோமீற்றர் நேர்நீளம் கொண்ட நகரமான இங்கு நீரில் மிதக்கும் வகையிலான எட்டு உபநகரங்களும் அமையவுள்ளன. 

மடிந்த செங்குத்து கிராமம் அதில் விண்ணைத் தொடும் உயரத்தில் விடுதிகள்.  செங்குத்து சுவர் காட்சியமைப்பு கொண்ட கண்ணைக்கவரும் சில்லறை மதுபான விற்பனை நிலையம் போன்ற கட்டடக் கலையையே சவாலுக்கு உட்படுத்தவுள்ள பல அம்சங்கள் இங்கு அமையவுள்ளன.

இந்தத் திட்டத்தின் மூலம் உலகில் ஆடம்பர படகுச் சவாரிகளை மேற்கொள்ளக் கூடிய அதி சிறந்த இடமாக செங்கடல் பிரதேசம் மாறவுள்ளது. உலகின் செல்வாக்கு மிக்க மனிதர்கள் பலரை கவர்ந்திழுக்கும் வகையில் இந்நகரம் அமையவுள்ளது.

இந்தத் திட்டதங்களுக்காக பெருமளவு காணிகள் சவூதி அரசுக்கு தேவைப்படுகின்றது. எனினும் இந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் அரசின் திட்டத்துக்கு இசைந்து தமது பாரம்பரிய இடங்களில் இருந்து வெளியேற மறுத்துள்ளனர். 

இங்கிருந்து வெளியேற மறுத்த பழங்குடி மக்கள் சிலருக்கு சவூதி அரசு ஐம்பது ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்துள்ளது. இன்னும் பலரை வெளியேற்ற இந்தப் பகுதிகளுக்கான நீர் மற்றும் மின் விந்யோகத்தை அதிகாரிகள் தடுத்துள்ளனர். இந்த பழங்குடி மக்களை விரட்டும் நோக்கில் அவர்களை அச்குறுத்தும் வகையில் அங்கு ஆளில்லா விமானங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தப் பகுதிகளைச் சேர்ந்த அப்துலிலா அல் ஹோவிட்டி மற்றும் அப்துல்லாஹ் துக்கயில் அல் ஹோவிட்டி ஆகிய இருவருக்கும் தற்போது 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் பயணத் தடை என்பன விதிக்கப்பட்டுள்ளது. தங்களது குடும்பத்தவர்கள் மற்றும் ஹோவிட்டி இனத்தவர்கள் இங்கிருந்து வெளியேற மறுத்ததை ஆதரித்த குற்றத்துக்காகவே அவர்கள் இருவருக்கும் இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

இந்தத் திட்டங்களை எதிர்ப்பவர்கள் எவராக இருந்தாலும் சரி அவர்களுக்கு இப்போது கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. இந்தத் தண்டனைகள் இஸ்லாத்துக்கு முற்றிலும் முரணானவை. அதுமட்டும் அல்ல உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக தாங்கள் மேற்கொண்டு வரும் தீய பிரசாரங்களை மேலும் தீவிரப்படுத்தவும் இவை காரணமாகியுள்ளன.

இஸ்லாத்தின் பூமி என்று குறிப்படப்படும் சவூதியில் 2017 முதல் இஸ்லாமிய போதகர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசாங்க அனுசரணையோடு மேற்கொள்ளப்படும் இஸ்லாத்துக்கு எதிரான விடயங்களை வெளிப்படையாக விமர்சித்ததே இவர்கள் செய்த குற்றமாகும். 

48வயதான சாலே அல் தாலிப் என்ற பிரபல மதகுருவும் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவராவார்.  இவர் மஸ்ஜிதுல் ஹரம் பள்ளிவாசலின் போதகர். மக்காவில் உள்ள சவூதி உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர். தனது போதனையில் சவூதியில் இடம்பெற்று வரும் இசை நிகழ்ச்சிகள் மற்றும் களியாட்ட நிகழ்ச்சிகளை கண்டித்து வெலளிப்படையாகப் பேசினார்.  

பெண் செயற்பாட்டாளர்களான 34 வயதான ஷல்மா அல்ஷெஹ்பாப், ஐந்து பிள்ளைகளின் தாயான நோரா பின்த் செய்த் அல் கஹ்தானி ஆகியோருக்கு 45 வருட தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. முடிக்குரிய இளவரசரும் சவூதியின் உத்தியோகப்பற்றற்ற ஆட்சியாளருமான முஹம்மத்ட பின் சல்மானின் அடக்குமுறை எந்தளவு கெடூரமானது என்பதற்கு சாட்சியாகவே இந்தத் தண்டனைகள் அமைந்துள்ளன என்று அலாவூத் என்ற பத்தி எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் பேச்சுரிமை மீறப்படுவதாக குறிப்பிட்ட குற்றத்துக்காக மொழிபெயர்ப்பாளரும், எழுத்தாளரும் கணினி நிபுணருமான ஒஸாமா காலித் என்பவருக்கு 32 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இன்னொரு அதிர்ச்சியூட்டும் நிகழ்வாக சவூதி அரேபியா கடந்த மார்ச் மாதம் 12ஆம் திகதி ஒரே தினத்தில் 81பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றியது. இந்த மரண தண்டனைகளைக் கண்டித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் விடுத்த அறிக்கையில் இவை யுத்தக் குற்றங்களுக்கு ஈடானவை என்று தெரிவித்திருந்தார். சவூதி அரேபியாவின் பாரிய மரண தண்டனை நிறைவேற்றங்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய சவூதி இயக்கம் விடுத்துள்ள அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பலருக்கு சட்டத்தரணிகளின் ஆலோசனைகளைப் பெறுவதற்கான எந்தவொரு சந்தர்ப்பமும் வழங்கப்படவில்லை. அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு ஒப்புதல் வாக்குமூலங்களில் கையொப்பம் பெறப்பட்டுள்ளது. வெளிஉலகத்தோடு எவ்வித தொடர்புகளுக்கும் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சவூதி அரேபிய அதிகாரிகள் எகிப்தின் இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்தை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் பலரை கைது செய்து கெய்ரோ அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்களுக்கு அங்கு என்ன நடக்கும் என்பதை நன்கு தெரிந்து கொண்டே இதை செய்துள்ளனர்.

எகிப்தில் சுமார் 61 ஆண்டுகளின் முன்னர் முதற் தடவையாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் தலைமையிலான குழுவின் கண்கானிப்பின் கீழ் இடம்பெற்ற ஜனநாயக ரீதியான தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்பட்டவரே முன்னாள் எகிப்திய ஜனாதிபதி மொஹமட் முர்ஷி. 

இந்தத் தெரிவின் பின் மிகவும் பிரபலமான ஒரு அரபு நாட்டில் மீண்டும் இஸ்லாம் துளிர்விடத் தொடங்கியதை அடுத்து இஸ்ரேலும் அதன் ஞானத்தந்தைகளான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சக்திகளும் விழிப்படையத் தொடங்கின.

அமெரிக்க, ஐரோப்பிய, இஸ்ரேலிய சக்திகள் ஒன்றிணைந்து சவூதி அரேபியாவை முன்னிலைப்படுத்தி ஐக்கிய அரபு அமீரகம் குவைத் என்பனவற்றின் ஒத்துழைப்போடு எகிப்தில் ஆட்சிக் கலைப்புக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. அதற்கான செயற்கையான உணவுத் தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு என்பனவற்றை ஏற்படுத்த இந்த அரபு நாடுகள் 11 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளன. 

இது தவிர லிபியா, ஈராக், சிரியா, யேமன் அகிய நாடுகளிலும் இந்த தீய ஐரோப்பிய, அமெரிக்க, இஸ்ரேல் சக்திகள் மேற்கொண்ட, மேற்கொண்டு வருகின்ற எல்லாவிதமான மனிதாபிமான விரோத செயற்பாடுகளிலும் சவூதி அரேபியா முக்கிய பாத்திரம் ஏற்றுள்ளது. தற்போது வரை இந்த நாடுகளில் இரத்த ஆறு ஓடிக்கொண்டிருக்கின்றது.

சவூதி அரேபிய அரசு தற்போது பலஸ்தீனத்தை, ஜெரூஸலத்தை ஏன் மஸ்ஜிதுல் அக்ஸாவையும் கூட கைவிட்டு விட்டது. இஸ்ரேலுடன் நெருங்கிய உறவுகளை அது கொண்டுள்ளது. மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் எல்லா சதித் திட்டங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது. மத்திய கிழக்கில் இஸ்ரேல் தனது கால்களை அகலப் பதிப்பதற்கு எல்லா வகையிலும் சவூதி உதவி வருகின்றது. இஸ்லாத்தின் பூமி எனப்போற்றப்படும் சவூதி அரசின் இன்றைய நிலை இதுதான். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓமான் பணிப்பெண்கள் விவகாரம் : மத்திய...

2022-12-01 14:33:01
news-image

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக மலையகத்தில் ஒன்றிணைந்த...

2022-12-01 14:32:19
news-image

உலக அழகி பிரியங்கா சோப்ரா மீதே...

2022-11-29 16:09:16
news-image

மத்திய வங்கியின் ஆளுநருக்கு மாதம் நான்கு...

2022-11-30 15:48:59
news-image

விடத்தல்தீவு எனும் இயற்கைப் வனத்தைப் பாதுகாப்போம்

2022-11-29 17:25:43
news-image

உணரப்பட வேண்டிய பெறுமதி

2022-11-28 15:05:06
news-image

உலக நீதி சீர்குலைந்த நாள் :...

2022-11-28 13:21:05
news-image

ஸ்கொட்லாந்தும் சுயநிர்ணய உரிமையும் - ஒரு...

2022-11-28 12:29:41
news-image

உலகப் போர் நினைவுச் சின்னங்களின் பின்னணியில்...

2022-11-28 11:05:34
news-image

அரசியல் தீர்வு: முஸ்லிம் தரப்பின் நிலைப்பாடு...

2022-11-27 17:30:18
news-image

உக்ரேனில் நீளும் போரும் குறைந்துவரும் ஆதரவும்

2022-11-27 17:16:51
news-image

வரவு - செலவுத் திட்டம் 2023...

2022-11-27 16:08:24