‘அழுத்தக் குழு’ இல்லாத அரசியல்

By Digital Desk 5

02 Oct, 2022 | 03:42 PM
image

ஏ.எல்.நிப்றாஸ்  

வண்டிலில் பூட்டப்பட்டுள்ள மாடுகளுக்கு மூக்கணாங்கயிற்றை முறையாக கட்டாமல் விட்டு விட்டு, அக்கயிற்றைப் பிடித்து சரியான திசையில் வண்டிலை ஓட்டாமல் இருந்து விட்டு, மாடும் வண்டிலும் தறிகெட்டு ஓடுகின்றன என்று சொல்கின்றவர்கள் முட்டாள்தனமான வண்டில்காரர்கள் ஆவர். 

இது அரசியலுக்கும் பொருந்தும்! 

அதாவது, ஒரு சமூகத்தின் இலக்குகளை நோக்கி அச்சமூகத்தின் அரசியல்வாதிகளை திசை முகப்படுத்தாமல் வாழாவிருந்து விட்டு, அவர்களை சரியான வழித்தடத்தில் வழிநடாத்துவதில் பராமுகம் காட்டிவிட்டு, ‘அவர்கள் சரியில்லை’ என்று கூறுவதில் அர்த்தமில்லை. 

துரதிர்ஷ்டவசமாக, இலங்கை முஸ்லிம் சமூகம் அவ்வாறுதான் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம் அரசியலை நெறிப்படுத்துவதற்கான எந்த ஏற்பாடுகளும் முஸ்லிம் சமூகக் கட்டமைப்பிற்குள் இல்லை. குறிப்பாக, சமூக நலனை மட்டும் இலக்காகக் கொண்ட காத்திரமான ஒரு ‘அழுத்தக் குழு’ (Pressure Group) கிடையாது. 

‘மாடுகள்’ சரியான பாதையில் போகும் என்று நம்பிக்கொண்டு வண்டிலில் உறங்கிக் கிடக்கும் வண்டில் காரனைப்போல, தமது அரசியல் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சரியான பாதையில் அரசியலை முன்கொண்டு செல்வார்கள் என்ற குருட்டு நம்பிக்கையில் முஸ்லிம் வாழாவிருக்கின்றது. 

இலங்கைச் சூழலில், அரசியல்வாதிகளின் மூக்கணாங்கயிறுகளை பிடித்து வழிநடாத்துவதற்கான ஏற்பாடுகள் இல்லாத ஒரேயொரு சமூகம் முஸ்லிம்கள் தான். சிங்கள, தமிழ் சமூகத்தின் மத்தியில் மட்டுமன்றி கத்தோலிக்க சமூகத்திற்குள்ளும் இவ்வாறான ஏற்பாடுகள் உள்ளன. 

அழுத்தக்குழு Pressure Group) என்பதன் அர்த்தத்ததை சரியாக விளங்கிக் கொள்ள வேண்டியுள்ளது. அழுத்தக்குழு என்பது ஆயுத இயக்கமோ அல்லது வன்முறைக் குழுவோ அல்ல என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். இது சமூகம் பற்றிச் சிந்தித்துச் செயற்படுகின்ற செயற்பாட்டாளர்களை உள்ளடக்கியதொரு கட்டமைப்பாகும். 

அதாவது, அரசியலுக்கு வெளியில் இருந்து கொண்டு எவ்வித உள்நோக்கங்களோ அரசியல்சார் எதிர்பார்ப்புக்களோ இல்லாமல், சமூகத்திற்கான இலக்குகளை நோக்கி அரசியல் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை வழிநடாத்துவதற்கான வெளிப்புற மக்கள் பிரிவை இதுகுறிக்கின்றது.

புத்திஜீவிகள், பல்கலைக்ழக மாணவர்கள், சமயத் தலைவர்கள், சமூக அமைப்புக்கள், மூத்த அரசியல்வாதிகள், சமூக நலன்விரும்பிகள், தொழில்வாண்மையாளர்கள், வெளிநாட்டில் உள்ள அச்சமூகத்தின் ஒரு பிரிவினர், ஊடக செயற்பாட்டாளர்கள், ஏன் - வாக்களித்த மக்கள் கூட ஒரு அழுத்தக்குழுவாக இருக்க முடியும். 

சமூகத்திற்கான அரசியல் இலக்கை நிர்ணயித்தல், அரசியல்வாதிகளுக்கு அறிவுரை கூறுதல், அவர்களது போக்கை கண்காணித்தல், தவறுகளை தட்டிக்கேட்டல், தேவையான போது அவர்களது முன்னெடுப்புகளுக்கு துணைநிற்றல், சமூகநலனுக்காக ஆற்ற வேண்டிய பணிகளை தொடராக கண்காணிப்பதுடன் அதிலிருந்து விலகிச்செல்லாத விதத்தில் வெளியில் இருந்து அழுத்தத்தை கொடுத்துக்கொண்டே இருத்தல் என்று இக்குழுவின் செயற்பாடுகள் நீளுகின்றன. 

அந்தவகையில், தமிழ் சமூகத்திற்குள் ஏதோவொரு வகையிலான அழுத்தக்குழு எப்போதும் இருந்தே வருகின்றது. மூத்த தமிழ் அரசியல் சிந்தனையாளர்களுக்கு இதில் முக்கிய இடமுள்ளது. அதன்பிறகு பிரதான தமிழ் ஆயுத இயக்கமும் ‘பயத்தின்’ ஊடாக அரசியல்வாதிகள் மீதொரு அழுத்தத்தை எப்போதும் பிரயோகித்து வந்துள்ளது எனலாம். 

யாழ்ப்பாண பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கல்விச் சமூகங்கள் தமிழ் மக்களுக்கான அரசியலை வழிப்படுத்துகின்றன. அரசியல்வாதிகளிடம் கேள்வி எழுப்புகின்றன. அதேபோல தமிழ் புலம்பெயர் சமூகம் உள்ளிட்ட பல தரப்பும் சரி பிழைகளுக்கு அப்பால் ஏதோவொரு விதத்தில் அழுத்தக்குழுக்களாகவே செயற்பட்டு வருகின்றன. 

சிறுபான்மைச் சமூகங்களின் அளவுக்கு பெரும்பான்மைச் சமூகத்திற்கு அழுத்தக் குழுவொன்று கட்டாயம் எனக்கூற முடியாது. ஆனபோதும், பௌத்தபீடங்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஏன் சிலபோதுகளில் கடும்போக்கு சக்திகள் கூட சிங்கள மக்களுக்கான அரசியலின் அழுத்தக் குழுக்களாகவே செயற்படுவதாக குறிப்பிடலாம். 

இப்படி பட்டியலிட்டுச் சொல்வதற்கு முஸ்லிம் சமூகத்திற்குள் மட்டும் எந்த கட்டமைப்புக்களும் இல்லை என்பதுதான் கசப்பான யதார்த்தமாகும். உருப்படியான, அரசியல் சார்பற்ற, உள்நோக்கமற்ற செயற்பாட்டாளர்களின் குழுவொன்று முஸ்லிம் அரசியலின் மீதான அழுத்தக் குழுவாக இதுவரை பரிணமிக்கவில்லை. 

அழுத்தக்குழு பெயரைச் சொல்லிக் கொண்டு உருவான செயற்பாட்டாளர்களின் கூட்டு எல்லாம் மிகக் குறுகிய காலத்திற்குள் புஷ்வாணமாகிப் போன கதைகள் ஏராளம் உள்ளன. முதலாவது ஊடக சந்திப்பிலேயே பூச்சியமாகிக் போன ‘கிழக்கின் எழுச்சி’ இதற்கு மிகச் சிறிய உதாரணமாகும்.

இதேவேளை, அழுத்தக்குழு என்ற தோரணையில் உருவான பல அமைப்புக்கள் காலவோட்டத்தில் ஒரு முஸ்லிம் கட்சிக்கு, தலைவருக்கு வக்காளத்து வாங்குகின்ற வேலையைச் செய்ததன் மூலம் தமது கௌரவத்தைக் குறைத்துக் கொண்டன. இன்னும் சில தரப்பினர், இந்த அடையாளத்துடன் ஆரம்பித்து, அதனைப் பயன்படுத்தியே ஏதாவது ஒரு அரசியல் சகதிக்குள் சங்கமித்து விடுவதை காண்கின்றோம். 

ஆனால், முஸ்லிம் சமூகம் இந்த அரசியலை சரியாக வழிப்படுத்தவும் இல்லை. அரசியல் தவறுகளை தட்டிக் கேட்கவும் இல்லை. பொதுவாக ஒரு சமூகமாக இதனைச் செய்யவும் அல்லது ஒரு சமூகம் சார்ந்த அழுத்தக் குழுவால் முஸ்லிம் அரசியல் போக்கிரிகள் கேள்விக்குட்படுத்தப்பட்ட வரலாறும் இல்லை. 

விரல்விட்டு எண்ணக்கூடிய சில முஸ்லிம் சமூக சிந்தனையாளர்கள், செயற்பாட்டாளர்கள் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றார்கள் என்பதை மறுக்கவில்லை. ஆனால் அது தொடரான, ஒரு கட்டமைக்கப்பட்ட இலக்கை நோக்கிய, அதேநேரம் பல தரப்பையும் உள்வாங்கிய ஒரு செயற்பாட்டுத் தளமாக இயங்கவில்லை என்பது கவனிப்பிற்குரியது.

தமிழ் தேசிய அரசியலை வழிநடாத்துதில் இரு பல்கலைக்கழகங்கள் பங்காற்றுகின்றன. நெற்களஞ்சியசாலையும் தென்னந்தோப்புமாய்க் கிடந்த ஒலுவில் பகுதியில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை நிறுவிய போது மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அ~ரப், இப் பல்கலைக்கழகம் முஸ்லிம் சமூக அரசியலில் ஒரு குறிப்பிடத்தக்க வகிபாகத்தை எடுக்கும் எனக் கனவு கண்டார். அவர் மரணிக்கும் வரை அதன் அறிகுறிகள் சற்று தென்பட்டன. 

ஆயினும் அதன் பிறகு தௌ;கிழக்குப் பல்கலைக்கழகமானது முஸ்லிம் அரசியலை நெறிப்படுத்துவதற்கான ஒரு மறைமுக அழுத்தக் குழுவாக செயற்படவோ அல்லது குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய வகிபாகம் ஒன்றை எடுக்கவோ தவறிவிட்டது என்பது கவலைக்குரியது. அதற்குக் காரணங்களும் உள்ளன. 

அதேபோல், தலைப்பிறை பார்ப்பதற்காக ஒன்றுகூடும் முஸ்லிம் அமைப்புக்களின் பட்டியல் நீளமானது. ஆனால், ஜம்மியத்துல் உலமா சபையோ அல்லது ஏனைய முஸ்லிம் அமைப்புக்களோ முஸ்லிம் அரசியல்வாதிகளின் தவறுகளை பொதுவெளியில் கேள்விக்குட்படுத்துவதன் மூலம் வழிப்படுத்த தவறிவிட்டது. ஒவ்வொரு ஊரிலும் உள்ள பள்ளிவாசல் நிர்வாகங்களுக்கும் இதில் பங்குள்ளது. 

இதேவேளை, முஸ்லிம்கள் பல நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற போதிலும், டயஸ்போரா சமூகம் சரிவரக் கட்டமைக்கப்படவும் இல்லை. உள்நாட்டு அரசியலில் செல்வாக்கு செலுத்தக் கூடிய அல்லது (தமிழ் டயஸ்போராவைப் போல) முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய ஒரு குழுவாக அவர்கள் தம்மைப் புடம்போட்டுக் கொண்டதாகவும் தெரியவில்லை. 

ஆக மொத்தத்தில் முஸ்லிம் அரசியலை வழிப்படுத்துவதற்கு எந்த அடிப்படையிலான ஒரு அழுத்தக் குழுவும் ஏற்பாடும் இல்லாது போயிருக்கின்றது. முஸ்லிம் புத்திஜீவிகள், கல்விச் சமூகம், சமயத் தலைவர்கள், சமூக அமைப்புக்கள் குறிப்பாக அரசியல் செயற்பாட்டாளர்கள், சில ஊடகவியலாளர்கள், நலன்விரும்பிகள், வியாபார சமூகம் என எல்லா மட்டத்தில் உள்ளவர்கள் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும்.  

மாடுகளுக்கு மூக்கணாங்கயிறுகளை சரியாகக் கட்டாமல், அவற்றை சரியாக பிடித்து ஓட்டக் கூடிய தகுதியான வண்டில்காரர்களிடம் ஒப்படைக்காமல் இருந்து கொண்டு, முஸ்லிம் அரசியல் எனும் மாட்டு வண்டி தவறான வழியில் ஓடுகின்றது என்று இன்னும் ஒப்பாரி வைத்துக் கொண்டு மட்டும் இருக்கின்றோம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓமான் பணிப்பெண்கள் விவகாரம் : மத்திய...

2022-12-01 14:33:01
news-image

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக மலையகத்தில் ஒன்றிணைந்த...

2022-12-01 14:32:19
news-image

உலக அழகி பிரியங்கா சோப்ரா மீதே...

2022-11-29 16:09:16
news-image

மத்திய வங்கியின் ஆளுநருக்கு மாதம் நான்கு...

2022-11-30 15:48:59
news-image

விடத்தல்தீவு எனும் இயற்கைப் வனத்தைப் பாதுகாப்போம்

2022-11-29 17:25:43
news-image

உணரப்பட வேண்டிய பெறுமதி

2022-11-28 15:05:06
news-image

உலக நீதி சீர்குலைந்த நாள் :...

2022-11-28 13:21:05
news-image

ஸ்கொட்லாந்தும் சுயநிர்ணய உரிமையும் - ஒரு...

2022-11-28 12:29:41
news-image

உலகப் போர் நினைவுச் சின்னங்களின் பின்னணியில்...

2022-11-28 11:05:34
news-image

அரசியல் தீர்வு: முஸ்லிம் தரப்பின் நிலைப்பாடு...

2022-11-27 17:30:18
news-image

உக்ரேனில் நீளும் போரும் குறைந்துவரும் ஆதரவும்

2022-11-27 17:16:51
news-image

வரவு - செலவுத் திட்டம் 2023...

2022-11-27 16:08:24