தகவல்களை அறியும் உரிமையை உறுதி செய்வாரா ஜனாதிபதி ?

By Digital Desk 5

02 Oct, 2022 | 03:42 PM
image

சிவலிங்கம் சிவகுமாரன்

அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள், அவர்களின் கல்வித்தகைமைகள் போன்ற விடயங்களை, தகவல் அறியும் சட்டமூலம் ஊடாக பெறுவதில் சிவில் சமூகத்தினரும் , ஊடகவியலாளர்களும் இன்னும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். இச்சட்டமூலத்தில் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதே பலரினதும் கோரிக்கைகளாகும். 

உலகளாவிய ரீதியில் தகவல்களை அணுவதற்கான சர்வதேச தினம் கடந்த 28ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கையில் தகவல் அறியும் சட்ட மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு ஐந்து வருடங்கள் நிறைவடைந்துள்ளன. ஐந்தாவது வருடம் மிகவும் முக்கியத்துவமிக்கது.

 நல்லாட்சி காலத்தில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க 2017ஆம் ஆண்டு தகவல் அறியும் சட்ட மூலத்தை கொண்டு வர மிக முக்கியமான காரணகர்த்தாவாக இருந்தார். 

தற்போது அவர் ஜனாதிபதியாக விளங்குகிறார். இலங்கையில் தகவல்களை பெறும் உரிமையை சிவில் சமூகத்தினருக்கு பெற்றுத்தருவதில் எந்தளவுக்கு அவர் செயற்படப்போகின்றார் என்ற கேள்விகளும் எதிர்ப்பார்ப்புகளும்  அதிகமாக முன்வைக்கப்பட்டிருக்கின்றன. 

ஏனென்றால் அவர் பிரதமராக இருந்த காலகட்டத்திலேயே அவரது சொத்து மதிப்பு குறித்து தகவல் அறியும் சட்டமூலம் ஊடாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில்கள் கிடைத்திருக்கவில்லை. அவரது சொத்து மதிப்புகளை வெளிப்படுத்தும் படி தகவல் அறியும் ஆணைக்குழு 2018ஆம் ஆண்டு ஜனாதிபதி செயலகத்துக்கு உத்தரவை பிறப்பித்திருந்தமை முக்கிய விடயம். 

எனினும் ஊழல் தொடர்பான முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே தனிநபர்களின் சொத்து விபரங்கள் குறித்த கேள்விகளை எழுப்ப முடியும் என்ற ஏற்கனவே உள்ள சட்டங்களின் சரத்துகளை முன்வைத்து இந்த விவகாரம் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டிருந்தது. 

தகவல் அறியும் சர்வதேச தினத்தை முன்னிட்டு சர்வதேச ரீதியாகவும் இலங்கையிலும் பல கருத்தரங்குகள் , இணைய வழி கலந்துரையாடல்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.  26ஆம் திகதி இலங்கை இதழியல் கல்லூரி ஏற்பாடு செய்திருந்த இணையவழி கலந்துரையாடல் சில தகவல்களை வெளிப்படுத்துவதாக இருந்தது. ‘பிரஜைகளுக்காக  பணியாற்றிய ஒரு சட்டம்; இலங்கையில் தகவல் அறியும் உரிமையின்  ஐந்து வருடங்கள்’ என்ற தலைப்பில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் இலங்கை தகவல் அறியும் ஆணைக்குழுவின் ஆணையாளர் சிரேஷ்ட சட்டத்தரணி கிஷாலி பின்டோ தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருந்தார்.

அவரது கூற்றுப்படி, இலங்கை மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் வசிக்கும் மக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், பொதுவான விடயங்களை அடிப்படையாக்கொண்டே இச்சட்டமூலத்தை பயன்படுத்துகின்றனர் என்று கூறியிருந்தார். 

காணி உரிமை, பிள்ளைகளை பாடசாலைளுக்கு சேர்த்துக்கொள்ளாமை போன்ற விடயங்களை தொடர்பாகவே  கூடுதலான தகவல்கள் கோரப்பட்டிருந்ததாக கூறும் அவர் இப்படியான  கேள்விகள் வரும் போது குறித்த பகிரங்க அதிகார சபைகள் தமது கொள்கைகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள முன்வரும் போதே இச்சட்டமூலம் வெற்றியடைய வாய்ப்புகள் உள்ளது என்று சுட்டிக்காட்டினார். 

கொழும்பு,மாத்தறை போன்ற பிரதேசங்களிலிருந்து தமது பிள்ளைகளை முதலாம் தரத்துக்கு சேர்த்துக்கொள்ளப்படாததற்கு காரணம் என்னவென்பதை அடிப்படையாக்கொண்டு ஆயிரக்கணக்கில் மேன்முறையீடுகள் கிடைத்திருந்தன. ஆகவே இவ்விடயத்தில் கல்வி அமைச்சு ஒரு தீர்மானத்துக்கு வரவேண்டியுள்ளது. மாணவர்களை பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான நெறிமுறைகளில் மாற்றங்களையும் சீர்திருத்தங்களையும் அவர்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. 

இச்சட்டமூலம் குறித்த பிரசாரங்கள் பொது மக்களை சென்றடையவில்லையென்ற குறைபாடு ஒரு பக்கமிருந்தாலும், முக்கியமான சில தகவல்களை பகிரங்கப்படுத்துவதற்கு அரசியல்வாதிகள் தமது சிறப்பு விடுபாட்டு உரிமைகளை பயன்படுத்துவதும் இதற்கு முக்கியமான காரணங்களாகும். 

உதாரணங்களுக்கு பிரதமரின் சொத்து விபர கோரிக்கை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித்தகைமைகள் குறித்த தகவல்களை பெற முயற்சித்தமை தோல்வியில் முடிந்துள்ளன. பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமைகளை அறிய முற்படுவது ஒரு பொது நலன் சார்ந்த விடயமல்ல என பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆணைக்குழுவுக்கு பதில் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்த கலந்துரையாடலில் மிக முக்கியமான கேள்வி ஒன்று எழுப்பப்பட்டிருந்தது. அதாவது அரசியல்வாதிகள் இந்த சட்டமூலத்தை எந்தளவில் பயன்படுத்தியுள்ளனர் என்பதே அந்த கேள்வியாகும்.  இதற்கு பதிலளித்த ஆணையாளர் கிஷாலி பின்டோ, ‘முரண்பாடான விடயங்களுக்கு அவர்கள் ஆணைக்குழுவை நாடியிருக்கவில்லை. கொவிட் நடைமுறைகள் மற்றும் மத்திய வங்கி பிணை முறி விவகாரங்கள், ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் போன்ற சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டே மேன் முறையீடுகள் செய்யப்பட்டிருந்தன என்றார். 

எனினும் அரசாங்கத்துக்கும் தகவல் அறியும் ஆணைக்குழுவுக்கும் இந்த சட்டமூலத்தை உச்ச அளவில் மக்கள் பயன்படுத்துக்குரிய பொறிமுறைகளை வகுக்கும் கடப்பாடுகள் உள்ளன. இந்த சட்டமூலம் ஊடகத்துறைசார்ந்தவர்களுக்கும் மனித உரிமை அமைப்புகள் அல்லது சிவில் அமைப்புகளுக்கு மாத்திரம் உரித்தானது அல்ல என்ற தகவலை உரிய தரப்பினர் வெளிப்படுத்த வேண்டும்.

இலங்கையில் தகவல் அறியும் சட்டமூலம் அறிமுகப்படுத்தப்பட்டு ஐந்து வருடங்கள் நிறைவு பெற்றிருந்தாலும் கொவிட் தொற்று காரணமாக செயலிழந்து போன துறைகளில் இதுவும் அடங்குகின்றது. கடந்த வருடம் மேன்முறையீடு மேற்கொள்ளப்பட்ட பல விண்ணப்பங்கள் தற்போதே பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாட்டின் ஆட்சி மாற்றத்தால் புதிய ஆணைக்குழுவை ஜனாதிபதி நியமிப்பதற்கு பல காலங்கள் எடுக்கப்பட்டிருந்தன. 

எனினும் புதிய ஆணைக்குழுவில் எந்த தமிழரும் உள்ளடக்கப்படவில்லையென்பது முக்கிய விடயம். தகவல்களை வழங்குவதற்குரிய தகவல் வழங்கும் அதிகாரிகளை பல பொது நிறுவனங்கள் கொண்டிருக்கவில்லை. இதன் காரணமாக பல விண்ணப்பங்களை இழுத்தடிக்கும் செயற்பாடுகளும் அல்லது தாமதப்படுத்தும் சம்பவங்களும் பல இடங்களில் இடம்பெறுகின்றன. மொழி உரிமையை முன்வைத்து தமிழில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மொழிபெயர்ப்பு செயற்பாடுகளுக்காக தாமதப்படுத்தப்படுகின்றன. 

ஆனால் குறித்த மொழியில் தான் விண்ணப்பங்களுக்கு பதில் வழங்க வேண்டும் என உத்தரவிட இச்சட்டத்தில் இடமில்லை. இவ்வாறான சில குறைபாடுகள் இச்சட்டத்தில் இருப்பதாலேயே சீர்திருத்தங்கள் தேவை என சிலர் கோரிக்கை விடுக்கின்றனர். ஆனாலும் தகவல் அறியும் உரிமை செயற்பாடு எமது நாட்டில் இன்னமும் ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதால் அவ்வாறான சீர்திருத்தங்களை மேற்கொள்ள இன்னும் பல காலங்கள் எடுக்கும். 

இலங்கையில் தகவல் அறியும் சட்டமூலத்தை அமுல்படுத்துவதற்கு சுமார் 15 வருட காலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஈற்றில் 2017 ஆம் ஆண்டே அது சாத்தியமானது. அந்த வகையில் இச்சட்டமூலத்தை அடிப்படையாகக்கொண்டு செல்ல வேண்டிய பயணம் மிக நீண்டது. 

ஆனால் அதை சுயாதீனமாக இயங்க விட வேண்டியது அரசாங்கத்தின் கைகளிலுள்ளது. கடந்த ஐந்து வருடங்களாக ஆணைக்குழுவுக்கு நிரந்தரமான அலுவலகம் ஒன்று அமைத்துக்கொடுக்கப்படவில்லை. பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் இரண்டு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

மேன் முறையீடு விசாரணைகளுக்கு முகங்கொடுக்க தகவல் வழங்கும் அதிகாரிகள் அல்லது குறித்தளிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் முறைப்பாடு செய்தோர் தலைநகர் கொழும்புக்கே பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது.  மாகாண ரீதியாக ஆணைக்குழுவின் காரியாலயங்கள் ஸ்தாபிக்கப்பட வேண்டியதன் அவசியம் இங்குள்ளது. 

ஆனால் ஆணைக்குழுவுக்கே தலைநகரில் ஒரு நிரந்தர காரியாலயம் இல்லாத போது நாம் பிராந்திய அலுவலகங்கள் குறித்து சிந்திக்க முடியாது. எனினும் அர்ப்பணிப்புடன் செயற்படும் ஆணைக்குழு அங்கத்தவர்கள் சில மேன்முறையீடு விசாரணைகளை பிராந்திய பிரதேச செயலாளர் காரியாலயங்களில் கடந்த காலங்களில் மேற்கொண்டிருந்தனர். 

தகவல்களை அறியும் உரிமையை   உறுதிப்படுத்த, இலங்கை அரசாங்கமானது சட்டமூலத்தை கொண்டு வந்தமை வரவேற்கத்தக்க விடயம். ஆனால் அது முறையாக செயற்படுவதற்கான பொறிமுறைகளை ஏற்படுத்த வேண்டிய அதே வேளை ஆணைக்குழுவினர் சுயாதீனமாக செயலாற்றக்கூடிய சூழ்நிலைகளையும் ஏற்படுத்த வேண்டும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓமான் பணிப்பெண்கள் விவகாரம் : மத்திய...

2022-12-01 14:33:01
news-image

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக மலையகத்தில் ஒன்றிணைந்த...

2022-12-01 14:32:19
news-image

உலக அழகி பிரியங்கா சோப்ரா மீதே...

2022-11-29 16:09:16
news-image

மத்திய வங்கியின் ஆளுநருக்கு மாதம் நான்கு...

2022-11-30 15:48:59
news-image

விடத்தல்தீவு எனும் இயற்கைப் வனத்தைப் பாதுகாப்போம்

2022-11-29 17:25:43
news-image

உணரப்பட வேண்டிய பெறுமதி

2022-11-28 15:05:06
news-image

உலக நீதி சீர்குலைந்த நாள் :...

2022-11-28 13:21:05
news-image

ஸ்கொட்லாந்தும் சுயநிர்ணய உரிமையும் - ஒரு...

2022-11-28 12:29:41
news-image

உலகப் போர் நினைவுச் சின்னங்களின் பின்னணியில்...

2022-11-28 11:05:34
news-image

அரசியல் தீர்வு: முஸ்லிம் தரப்பின் நிலைப்பாடு...

2022-11-27 17:30:18
news-image

உக்ரேனில் நீளும் போரும் குறைந்துவரும் ஆதரவும்

2022-11-27 17:16:51
news-image

வரவு - செலவுத் திட்டம் 2023...

2022-11-27 16:08:24