நிலையிழந்த முன்னணி

By Digital Desk 5

02 Oct, 2022 | 03:41 PM
image

என்.கண்ணன்

தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் இறுதி நாளன்று, நல்லூரில் உள்ளிட்ட நினைவிடத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள், தமிழ்த் தேசியப் பரப்பில், பெரும் ஏமாற்றத்தை – தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது.

திலீபன் நினைவிடத்தில் இடம்பெற்ற சம்பவங்கள், தமிழ்த் தேசிய அரசியலை மீளாய்வு செய்வதற்கும், எதிர்காலம் நோக்கிய புதிய தீர்மானங்களை எடுப்பதற்கும் வழிவகுக்குமேயானால் அது ஆக்கபூர்வமானதாக இருக்கும்.

இல்லையேல், இது தமிழ்த் தேசிய அரசியலுக்கான சாவுமணியாக மாறக் கூடும். திலீபன் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு தகுதியானவர்கள் யார், தகுதியற்றவர்கள் யார் என்ற அளவுகோல் ஒன்று இதன்போது முன்வைக்கப்பட்டது.

அந்த அளவுகோலை முன்வைத்தவர்கள், அதற்குத் தகுதிவாய்ந்தவர்களா என்பது தான் முதல் கேள்வி.

இன்று விடுதலைப் போராட்டத்துக்கு தாங்களே பிரதிநிதிகள் என்றும், நினைவேந்தல்களுக்கு தங்களுக்கே முதல் உரிமை உள்ளதாகவும் உரிமை கோருகின்றவர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர்.

விடுதலைப் போராட்டத்தில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் எந்தப் பங்கையும் வகிக்கவில்லை.

அதன் வழி வந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாரோ, அதன் முக்கிய பிரமுகர்களோ, விடுதலைப் போராட்டத்தில் ஆயுதம் ஏந்திப் போராடியவர்களோ, அரசியல் போராட்டங்களில் பங்கெடுத்தவர்களில்லை.

அவ்வாறிருக்கையில், தமிழீழ இலட்சியத்துக்காக போராடி மடிந்தவர்களை - சமஷ்டி இலட்சியத்துக்காக அரசியல் செய்பவர்கள் எவ்வாறு உரிமை கோர முடியும் என்ற கேள்வி உள்ளது.

திலீபன் ஒற்றையாட்சிக்கு எதிராக போராடியவர் என்பதால், ஒற்றையாட்சிக்கு இணங்கியவர்கள் அவரை நினைவேந்த தகுதியற்றவர்கள் என்றும், அவர்களைத் துரோகிகள் என்றும், ஒட்டுக் குழுவினர் என்றும், அரச புலனாய்வாளர்கள் என்றும் அடையாளப்படுத்தி, அந்நியப்படுத்தும் அரசியலையே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுக்கிறது.

விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது, அதனை சீர்குலைத்து, அதனைப் பலவீனப்படுத்த, அல்லது தோற்கடிக்க துணைபோனவர்கள் அவ்வாறு அழைக்கப்பட்ட வரலாறு உள்ளது.

இன்று, நினைவேந்தலை முன்னெடுக்க முன்வருபவர்களே, சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளால், துரோகிகள் ஆக்கப்பட்டுள்ளனர். அரச புலனாய்வாளர்கள் ஆக்கப்பட்டுள்ளனர். ஒட்டுக்குழுவினர் ஆக்கப்பட்டுள்ளனர். அரசாங்கமும், புலனாய்வாளர்களும், இத்தகைய நினைவேந்தல்களை விரும்பவில்லை என்பது வெளிப்படை. 

நினைவேந்தல்களுக்கு எதிராக ராஜபக்ஷவினர் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள், சர்வதேச விமர்சனங்களைத் தோற்றுவித்திருந்த நிலையில், தான் ரணில் அரசாங்கம் இம்முறை அதில் தலையிடுவதை தவிர்த்துக் கொண்டது.

இவ்வாறான நிலையில் நினைவேந்தலை முன்னெடுக்க வந்தவர்களை அரச புலனாய்வாளர்கள் என்று அடையாளப்படுத்தித் தடுக்க முனைந்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

விடுதலை என்பது ஒட்டுமொத்த மக்களுக்குமானது. அதனைத் தான் திலீபன் போன்ற, அதற்காக போராடி மடிந்த ஆயிரக்கணக்கான மாவீரர்களும் விரும்பினார்கள்.

மக்கள் புரட்சி வெடிக்கட்டும், என்று திலீபன் முழங்கிய அதே நல்லூரின் வீதியில், வெடித்தது மோதல் என்று, ஊடகங்கள் தலைப்பிடும் நிலையை உருவாக்கியது தான், விடுதலையா? கொள்கைப் பிடிப்பா?

எல்லா மக்களுக்குமான விடுதலை என்பது, அவர்களுக்கு உரித்தானது, இவர்களுக்கு உரித்தற்றது என்றில்லை. அது எல்லோருக்கும் பொதுவானது.

ஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அகராதியில்,அதற்கு வேறு அர்த்தம். அவர்கள் கூறுகின்ற தமிழ்த் தேசம் விடுதலை பெற்றால் கூட, அங்கு எல்லோருக்கும் சம உரிமை கிடைக்காது என்பதையே அவர்களின் நிலைப்பாடு சுட்டிக்காட்டுகிறது. 

ஏனென்றால், அவர்களின் பாதையை ஏற்காதவர்கள், அவர்களின் அரசியலை ஆதரிக்காதவர்கள், அவர்களை விமர்சிப்பவர்கள், துரோகிகள் ஆவார்கள். 

அவர்களுக்கு எந்த உரிமையும் இருக்காது.  இவ்வாறானதொரு தேசத்தை வடிவமைக்க முனைபவர்களால் எவ்வாறு ஒரு தேசியத்தை வலுப்படுத்த முடியும்? விடுதலையை வென்றெடுக்க முடியும்?

நீண்ட அடக்குமுறைகளுக்குப் பின்னர் ஒரு நினைவேந்தலை அமைதியாகவும், உணர்வு ரீதியாகவும் முன்னெடுப்பதற்குக் கூட திராணியற்ற இனமாக தமிழ் இனத்தை மாற்றிய பெருமை முன்னணியையே சாரும்.

நினைவிடத்தில் குழுமியிருந்தவர்கள் மத்தியில் மற்றைய தரப்பினரை, விடக் கூடாது என்ற வெறி தான் மேலோங்கியிருந்ததே தவிர, ஒன்றாக அமைதியாக நினைவுகூர வேண்டும் என்ற இலட்சியமோ இலக்கோ இருக்கவில்லை. 

35 ஆண்டுகளுக்குப் பின்னர் திலீபனின் கனவு நல்லூரில் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. அதனைச் செய்தவர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

தமிழ்த் தேசியத்தையும், தமிழ் மக்களையும் பிளவுபடுத்தும் அரசியலையே அவர்கள் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

2018இல், தடைகளுக்கு மத்தியில் திலீபன் நினைவேந்தல் சாவகச்சேரியில் முன்னெடுக்கப்பட்ட போது, அந்த இடத்தில் எல்லா கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.

ஆனால், இம்முறை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அடாவடித்தன அரசியலினால், அரசியல் தலைவர்களில் பெரும்பாலானவர்கள் ஒதுங்கிக் கொண்டனர். தமிழ் மக்களுக்கு சமஷ்டி தீர்வைக் கேட்பவர்கள், சமஉரிமை வழங்கும் அதன் தத்துவங்களைக் கூடப் புரிந்து கொள்ளவில்லை.

எல்லாத் தரப்பினரையும் சமமாக நோக்காமல், ஏகபோக அரசியலையே அவர்கள் முன்னெடுக்கிறார்கள். இந்த ஏகபோக அரசியலின் மறுவடிவம் தான் ஒற்றையாட்சி.

எல்லோரையும் ஒருங்கிணைத்து, அரவணைத்து செல்வது தான் ஒரு நல்ல அரசியல் தலைவனின் பாங்கு. 

தமிழ்த் தேசிய இனம் ஒரு நீண்ட போராட்டத்தை சந்தித்திருந்தும், விடுதலையைப் பெற முடியவில்லை. இவ்வாறான நிலையில் அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்கும் அரசியலே இன்றைய தேவை.

அதனைப் புரிந்து கொண்டு தான், முன்னர் துரோகிகள் என அடையாளப்படுத்திய தமிழ் அரசியல் கட்சிகளையே, விடுதலைப் புலிகள் அரவணைத்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பை உருவாக்குவதிலும், அதனைப் பலப்படுத்துவதிலும் பங்களித்தார்கள்.

ஆனால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, எல்லாத் தரப்பினரையும், துரோகிகள், ஒட்டுக்குழுக்கள், அரச புலனாய்வாளர்கள் என்று அடையாளப்படுத்தி விடுதலைப் போராட்டத்தில் இருந்து அந்நியப்படுத்திக் கொண்டிருக்கிறது.

இவ்வாறானதொரு தரப்பினால்- தலைமையினால் ஒருபோதும், தமிழ் மக்களுக்கு தீர்வையோ, விடுதலையையோ பெற்றுக் கொடுக்க முடியாது.

வாய் கிழிய பேசிக் கொண்டிருக்கத் தான் முடியும்.

திலீபன் நினைவிடத்தில் அரசியல் பேசக்கூடாது என்று வலியுறுத்தப்பட்ட போதும் அதனைப் பேசுவோம் என்று முன்னணியின் தலைவர்கள் கூறுகிறார்கள்.

மாவீரர் நாள் உரையில் தலைவர் அரசியல் பேசினார் என்றும் தாங்களும் பேசுவோம் என்று முன்னணியின் பேச்சாளர் சுகாஸ் கூறியிருக்கிறார்.

மாவீரர் நாள் உரையில், தலைவர் பிரபாகரன், கட்சி அரசியலைப் பேசவில்லை. அவர் இனத்தின் விடுதலைக்கான அரசியலையே பேசினார்.

அவர் தனது உரையில் துரோகிகள் பற்றிப் பேசவில்லை. முன்னணியினரைப் போல, யார் துரோகிகள், என்றும் சுட்டிக்காட்டியதில்லை.

விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பிளவுபடுத்தி, பேரழிவுக்கு காரணமான கருணாவைப் பற்றிக் கூட தலைவர் பிரபாகரன் பொதுவெளியில் பேசியதில்லை.

மல்லாந்து படுத்துக் கொண்டு காறி உமிழும் அரசியலை அவர் முன்னெடுக்கவில்லை. அது சிறந்த தலைமைக்குரிய பண்பு.

ஆனால் முன்னணியினர், அடுத்த நிமிடம் யாரை காறி உமிழ்வார்கள், யாரை துரோகி என்பார்கள் என்றும் கூற முடியாது.

அரச புலனாய்வாளர்கள் என்று முன்னாள் போராளிகளை அடையாளப்படுத்தி அந்நியப்படுத்தும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தான், தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் தற்போதைய பிரதிநிதிகள் என்றால், ஏன் அவர்களை அரச புலனாய்வாளர்கள் துரத்தித் துரத்தி தொல்லை கொடுக்காமல் இருக்கிறார்கள்?

யார் என்ன சொன்னாலும் மக்களுக்கு புரியும் வரை நாம் அரசியல் பேசுவோம் என்று சூளுரைத்திருக்கிறார் சுகாஸ். மக்களுக்கு அரசியல் தெரியாது, புரியாது என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் தான் இங்கு முட்டாள்கள்.

மக்கள் கடந்தகால, நிகழ்கால அரசியலை நன்கு உன்னிப்பாக அவதானித்து வந்தவர்கள்.  அவர்களுக்கு கடந்த காலத்தை ஒவ்வொருவரும் எவ்வாறு கடந்து வந்தார்கள் என்பது நன்றாகவே தெரியும்.

மக்களுக்கு புரிய வைப்பதற்கு முன்னதாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணி தங்களை மீளாய்வு செய்து கொள்ள வேண்டும். இல்லையேல், இருக்கும் இடத்தைக் கூட அவர்கள் இழக்கும் நிலை ஏற்படலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓமான் பணிப்பெண்கள் விவகாரம் : மத்திய...

2022-12-01 14:33:01
news-image

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக மலையகத்தில் ஒன்றிணைந்த...

2022-12-01 14:32:19
news-image

உலக அழகி பிரியங்கா சோப்ரா மீதே...

2022-11-29 16:09:16
news-image

மத்திய வங்கியின் ஆளுநருக்கு மாதம் நான்கு...

2022-11-30 15:48:59
news-image

விடத்தல்தீவு எனும் இயற்கைப் வனத்தைப் பாதுகாப்போம்

2022-11-29 17:25:43
news-image

உணரப்பட வேண்டிய பெறுமதி

2022-11-28 15:05:06
news-image

உலக நீதி சீர்குலைந்த நாள் :...

2022-11-28 13:21:05
news-image

ஸ்கொட்லாந்தும் சுயநிர்ணய உரிமையும் - ஒரு...

2022-11-28 12:29:41
news-image

உலகப் போர் நினைவுச் சின்னங்களின் பின்னணியில்...

2022-11-28 11:05:34
news-image

அரசியல் தீர்வு: முஸ்லிம் தரப்பின் நிலைப்பாடு...

2022-11-27 17:30:18
news-image

உக்ரேனில் நீளும் போரும் குறைந்துவரும் ஆதரவும்

2022-11-27 17:16:51
news-image

வரவு - செலவுத் திட்டம் 2023...

2022-11-27 16:08:24