பறிபோகும் கேந்திர முக்கியத்துவம்

By Digital Desk 5

02 Oct, 2022 | 03:41 PM
image

ஹரிகரன்

இலங்கை கேந்திர முக்கியத்துவம் மிக்க இடத்தில் அமைந்திருந்தாலும், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்களைக் கொண்டிருந்தாலும், அதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறியுள்ளதால், வாய்ப்புகளை இழக்கின்ற நிலை உருவாகியுள்ளது.

திருகோணமலை ஒரு கேந்திர முக்கியத்துவம் மிக்க துறைமுகமாக இருந்த போதும், 30 ஆண்டுகளுக்குப் பின்னர், அங்கிருந்து கடந்த வாரம், இல்மனைட் ஏற்றிய கப்பல் ஒன்று சீனாவுக்குப் புறப்பட்டுச் சென்றிருக்கிறது.

திருகோணமலைத் துறைமுகத்தை மூன்று தசாப்தங்களாக ஏற்றுமதி துறைமுகமாக அபிவிருத்தி செய்யாமல் இருந்தமை அரசாங்கத்தின் தவறு. இதன் மூலம், திருகோணமலைத் துறைமுகத்துக்கு இருந்த கேந்திர முக்கியத்துவம், வீணடிக்கப்பட்டிருக்கிறது. 

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் ஊடாக, ஏற்றுமதி, இறக்குமதியைக் கையாளும் வாய்ப்புகள் குறைவாக இருந்த போதும், அதன் அபிவிருத்திக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

அதற்காக செலவிடப்பட்ட நிதியை மீளத் திரட்டிக் கொள்ள வாய்ப்பில்லாத நிலையில் தான், அந்த துறைமுகத்தை, சீனாவிடம் இழக்க நேரிட்டது. அத்துடன் பிராந்திய அதிகாரப் போட்டிக்கான கதவுகளையும் அது திறந்து விட்டது.

கொழும்பு துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் விவகாரத்திலும், ஏற்படுத்தப்படும் தாமதங்களும், இழுபறிகளும் கூட, இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

ஏனென்றால், கொழும்பு துறைமுகத்தின் வாய்ப்புகளை தட்டிப் பறிக்கின்ற புதிய துறைமுக முதலீடுகள் பிராந்தியத்தில் அதிகரித்து வருகிறது.

கொழும்பு துறைமுகத்தின் ஊடாக கையாளப்படுகின்ற 70 வீதமான கொள்கலன்கள், இந்தியாவுடன் தொடர்புபட்டவை.

இந்தியா உலகின் இரண்டாவது பெரிய சனத்தொகையையும், விசாலமான நிலப்பரப்பையும் மூன்று பக்கங்களிலும் ஆழ்கடலினால் சூழப்பட்டிருப்பினும், அதன் துறைமுகங்கள் வளர்ச்சி அடையவில்லை.

கொல்கத்தா, மும்பை போன்ற பழமையான துறைமுகங்களைக் கொண்டிருந்தாலும், இந்தியாவின் பெரும்பாலான இறக்குமதி, ஏற்றுமதிகளை கொழும்பு துறைமுகமே கையாளுகிறது.

உலகின் மிகவும் பரபரப்பான 10 துறைமுகங்களுக்குள், சீனாவின் ஆறு துறைமுகங்கள் இருக்கின்றன.

ஆனால் இந்தியாவின் மும்பை துறைமுகம் 35 ஆவது இடத்திலும், குஜராத்தின் முந்த்ரா துறைமுகம் 39ஆவது இடத்திலும் உள்ளன.

மும்பை துறைமுகத்துக்கு முன்னால், சீனாவின் 11 துறைமுகங்கள் இருக்கின்றன. இந்தப் பட்டியலில் கொழும்பு துறைமுகம் 25 ஆவது இடத்தில் உள்ளது.

இந்த நிலை நீண்டகாலத்துக்கு நிலைத்திருக்கும் என்று கூறமுடியாது. ஏனென்றால், கொள்கலன் போக்குவரத்து தான் இன்று உலக வர்த்தகத்தின் உயிர் நாடி.

இந்தியாவின் உள்நாட்டு வர்த்தகம், நெடுஞ்சாலை வழி போக்குவரத்தை அதிகம் நம்பியதாக உள்ளது. பரந்த நிலப்பரப்பில், கப்பல் வழியாக பொருட்களை கொண்டு செல்லும் முறை அங்கு வளர்ச்சி பெறவில்லை. ஆனால் அது மிகவும் மலிவானது.

இந்தநிலையில் இருந்து மாறுவதற்கு எத்தனிக்கும் இந்தியா, தன்னைச் சூழ துறைமுகங்களை அமைக்க முயற்சிக்கிறது.

இப்போது உலகின் இரண்டாவது பணக்காரராக மாறியுள்ள கௌதம் அதானியின், அதானி குழுமமே, துறைமுகங்களை கட்டியாளும் நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது.

அதானி குழுமம் தற்போது இந்தியாவில் 13 துறைமுகங்களை இயக்குகிறது அல்லது அபிவிருத்தி செய்து இயக்கும் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் உள்ள தாஜ்பூர் துறைமுகத்தை 3 பில்லியன் டொலர் செலவில் அபிவிருத்தி செய்யும் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு அதானி குழுமத்துக்கு கடந்த திங்கட்கிழமை அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த துறைமுகங்களை அதானி குழுமம் அபிவிருத்தி செய்து போது, கொழும்பு துறைமுகத்துக்கான முக்கியத்துவம் குறையும் ஆபத்து உள்ளது.

இந்தியாவின் 70சதவீத கொள்கலன்களை கையாளுகின்ற கொழும்பு துறைமுகத்திடம் இருந்து, 20 சதவீத வாய்ப்புகள் இழக்கப்பட்டால் கூட, அது இலங்கைக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். கொழும்பு துறைமுகத்தின் கேந்திர வாய்ப்புகள் ஏற்கனவே பறிபோகத் தொடங்கி விட்டது.

பங்களாதேஷின் சிட்டகொங் துறைமுகத்தில் இருந்து, டுபாய் துறைமுகத்துக்கு நேரடி கொள்கலன் கப்பல் சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

இது கொழும்பு துறைமுகத்துக்கான வருவாயில் பாதிப்பை ஏற்படுத்தும். தற்போது, சிட்டகொங் துறைமுகத்தில் இருந்து கொள்கலன்கள் சிறிய கப்பல்களின் மூலம், கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டு, பாரிய கொள்கலன் கப்பல்கள் மூலமே, டுபாய்க்கு அனுப்பப்படுகிறது.

அவ்வாறே டுபாயில் இருந்து வரும் கொள்கலன்கள், கொழும்பு துறைமுகம் ஊடாகவே, சிட்டகொங் துறைமுகத்தை அடைகிறது.

பங்களாதேஷ் சனத்தொகை அதிகம் உள்ள நாடு என்பதால் அதற்கான ஏற்றுமதி இறக்குமதி வாய்ப்புகள் அதிகம். சிட்டகொங் துறைமுகம் உலகின் பரபரப்பான துறைமுகங்களின் பட்டியலில் 58ஆவது இடத்தில் உள்ளது.

இந்த துறைமுகம் ஊடாக இடம்பெறும் ஏற்றுமதி இறக்குமதியில் 90சதவீதம் பங்களாதேசுடன் தொடர்புடையது. ஏனையவை இந்தியா, நேபாளம், பூட்டானுக்கான ஏற்றுமதி இறக்குமதிகளாகும்.

இவ்வாறான துறைமுகத்தில் இருந்து மாதத்தில் மூன்று பாரிய கப்பல்கள், டுபாய்க்கு இயக்குவதற்கு கப்பல் நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது.

இந்தக் கப்பல்கள் 1700கொள்கலன்களை ஏற்றிச் செல்லக் கூடியவை. இதனால், கொழும்பு துறைமுகம் இருவழிப் பயணங்களிலும் மாதத்துக்கு, 10,200 கொள்கலன்களின் வருகையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதேவேளை, தற்போது கொழும்பு ஊடாக மேற்கொள்ளப்படும் கொள்கலன் பரிமாற்றத்துக்காக ஏற்படும் 45 நாட்கள் என்ற காலம், 18 நாட்களாக குறையும். இதனால் 20 அடி கொள்கலன் ஒன்றுக்கான செலவினம், 150 தொடக்கம், 200 டொலர்களால் குறையும் என்று கூறப்படுகிறது.

அவ்வாறானில், கொள்கலன் ஒன்றுக்கு 50 டொலர்களை பெறும் வாய்ப்பை கொழும்பு துறைமுகம் இழந்தால் கூட, கிட்டத்தட்ட மாதம் ஒன்றுக்கு 5 இலட்சம் டொலர்கள் வரை இழப்பு ஏற்படும்.

வருடத்தில், இந்த இழப்பு, கிட்டத்தட்ட 6 மில்லியன் டொலர்களை நெருங்கும். இது குறைந்தபட்ச கணக்கு மட்டுமே.

சிட்டகொங்- டுபாய் இடையே நேரடியான கொள்கலன் கப்பல் போக்குவரத்து தொடங்குவதே இந்தளவு பாதிப்பை கொழும்பு துறைமுகத்துக்கு ஏற்படுத்துமானால், இந்தியாவிலுள்ள துறைமுகங்களில் இருந்து அவ்வாறான ஏற்றுமதிகள் ஆரம்பிக்கப்பட்டால் கொழும்பு துறைமுகத்தின் கதி என்னவாகும்?

கொழும்பு துறைமுகத்தின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு, அரசாங்கங்களோ, தொழிற்சங்கங்களோ, எதிர்க்கட்சிகளோ செயற்படவில்லை.

கொழும்பு துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டங்களை விரைவாக முன்னெடுத்திருந்தால், இந்தியா போன்ற நாடுகள், தங்களின் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதில் அதிக அக்கறை செலுத்தியிருக்கமாட்டாது.

கப்பல்களில் இருந்து பொருட்களை விரைவாக ஏற்றி இறக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தால், கப்பல் கட்டணங்கள் குறையும், களஞ்சியக் கட்டணங்கள் குறையும், சரக்குப் பரிமாற்றக் காலமும் குறையும்.

சிட்டகொங்- டுபாய் இடையிலான நேரடி கப்பல் சேவை மூலம், சரக்கு பரிமாற்றக் காலத்தை மூன்றில் ஒரு பங்கு நாட்களாக குறைத்துக் கொள்ள முடிகிறது என்றால், அந்த இழுபறியில் கணிசமான காலம் கொழும்பு துறைமுகத்தில் ஏற்படுகிறது என்றே அர்த்தம்.

கொழும்பு துறைமுகத்தை நவீன மயப்படுத்துவதில் அசமந்தப் போக்கு காண்பிக்கப்பட்டதும், அபிவிருத்தி செய்யும் திட்டங்களை முன்னெடுப்பதில் போதிய அக்கறை செலுத்தப்படாததும், எதிர்ப்புப் போராட்டங்களும் கொழும்பின் கேந்திர முக்கியத்துவம் குறைவதற்கு முக்கிய காரணம்.

கிழக்கு கொள்கலன் முனையத் திட்டம் ஏற்கனவே திட்டமிட்டபடி நிறைவேற்றப்பட்டிருந்தால், தற்போது அது செயற்பாட்டுக்கு வந்திருக்கும்.

அது இவ்வாறான தாமதங்களை குறைப்பதற்கு வழியை ஏற்படுத்தியிருக்கும். அத்துடன் மாற்றுத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான வாய்ப்புகளையும் குறைத்திருக்கும்.

தற்போது கூட இந்தியாவின் அதானி குழுமம், கொழும்பு துறைமுகத்தில் முதலீடு செய்வதற்கு எதிர்ப்புகள் உள்ளன.

இவ்வாறான எதிர்ப்புகளின் ஊடாக முக்கியமான துறைமுகங்களைக் கொண்டிருந்தும், அவற்றின் ஊடாக சரியான வருமானத்தை ஈட்ட முடியாத நிலையே ஏற்படும்.

இந்தியா தனது துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்கு முன்னதாக, கொழும்பு துறைமுகம் தனது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ளாவிட்டால், இதன் கேந்திர முக்கியத்துவம் பறிபோவது தவிர்க்க முடியாததாகி விடும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓமான் பணிப்பெண்கள் விவகாரம் : மத்திய...

2022-12-01 14:33:01
news-image

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக மலையகத்தில் ஒன்றிணைந்த...

2022-12-01 14:32:19
news-image

உலக அழகி பிரியங்கா சோப்ரா மீதே...

2022-11-29 16:09:16
news-image

மத்திய வங்கியின் ஆளுநருக்கு மாதம் நான்கு...

2022-11-30 15:48:59
news-image

விடத்தல்தீவு எனும் இயற்கைப் வனத்தைப் பாதுகாப்போம்

2022-11-29 17:25:43
news-image

உணரப்பட வேண்டிய பெறுமதி

2022-11-28 15:05:06
news-image

உலக நீதி சீர்குலைந்த நாள் :...

2022-11-28 13:21:05
news-image

ஸ்கொட்லாந்தும் சுயநிர்ணய உரிமையும் - ஒரு...

2022-11-28 12:29:41
news-image

உலகப் போர் நினைவுச் சின்னங்களின் பின்னணியில்...

2022-11-28 11:05:34
news-image

அரசியல் தீர்வு: முஸ்லிம் தரப்பின் நிலைப்பாடு...

2022-11-27 17:30:18
news-image

உக்ரேனில் நீளும் போரும் குறைந்துவரும் ஆதரவும்

2022-11-27 17:16:51
news-image

வரவு - செலவுத் திட்டம் 2023...

2022-11-27 16:08:24