ஜெனிவாவின் புதிய பிரேரணையை ஏற்கவே முடியாது : வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி

Published By: Vishnu

02 Oct, 2022 | 03:39 PM
image

ஆர்.ராம்

பொறுப்புக்கூறுவதற்காக உண்மைகளை கண்டறியும் ஆணைக்குழு நியமிக்கப்படும்

தேசியப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காண்பதில் விசேட கரிசனை 

புலம்பெயர் தமிழர்களுடனும் பேச்சுகளை முன்னெடுக்க தயார்

விசாரணையாளர்களை நாட்டுக்குள் அனுமதிப்பது அரசியலமைப்புக்கு முரண்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடரில் ‘இலங்கையின் பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் மற்றும் நல்லிணகத்தை ஊக்குவித்தல்’ எனும் தலைப்பிலான பிரேரணை பிரித்தானியா தலைமையிலான  இணை அனுசரணை நாடுகளால் கொண்டுவரப்படவுள்ளது. 

குறித்த பிரேரணையை இலங்கை அரசாங்கம் முழுமையாக நிராகரிக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கை குறித்த பிரேரணையை பிரித்தானியா, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பலமான நாடுகள் இணை அனுசரணை வழங்கி நிறைவேற்றுவதற்காக கொண்டுவரும் நிலையில், அதன் மீதான வாக்கெடுப்பில் இலங்கை வெற்றி பெறுவது மிகவும் சவலாக இருப்பதை நாம் அறிந்து கொண்டுள்ள போதும் வாக்கெடுப்பினை கோரும் நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் பிரேரணையை எதிர்வரும் 6ஆம் திகதி நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வீரகேசரிக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தாவது, 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணையொன்று கொண்டுவரப்படுகின்றது. 

அந்தப் பிரேரணைக்கு பிரித்தானியா தலைமையில் கனடா, அமெரிக்கா, ஜேர்மன் உள்ளிட்ட நாடுகள் இணை அனுசரணை வழங்கவுள்ளன. மனித உரிமைகள் பேரவையில் இத்தகைய வல்லாதிக்க நாடுகளின் அணுசரணையில் கொண்டுவரப்படும் பிரேரணையை எதிர்த்து வெற்றிபெறுவது மிகவும் கடினமானதொரு விடயமாகும். 

எனினும், பிரேரணை மீதான வாக்கெடுப்பினை இலங்கை கோரவுள்ளது. 

அதுமட்டுமன்றி, பிரேரணையின் உள்ளடக்கம் பற்றி ஏற்கனவே குறித்த நாடுகளுடன் கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இறைமைக்கு ஆபத்து

புதிதாக கொண்டுவரப்படும் பிரேரணையால் இலங்கையின் இறைமைக்கு ஆபத்தான நிலைமைகள் உள்ளன. குறிப்பாக, அந்தப் பிரேரணையில் சாட்சியங்களை திரட்டும் பொறிமுறையைச் செயற்படுத்துவதற்காக சிறப்பு விசாரணையாளர்களை இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த விடயமானது, இலங்கையின் அரசியலமைப்பினை மீறும் செயற்பாடாகும். இதனால் இலங்கையின் இறைமை கேள்விக்கு உள்ளாகும் ஆபத்தான நிலைமைகள் ஏற்படலாம். ஆகவே நாம் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அதனை நிராகரிப்பதாகவே அறிவிக்கவுள்ளோம். 

பொறுப்புக்கூறல்

26ஆண்டுகளாக தொடர்ந்த உள்நாட்டு ஆயுத வன்முறை முரண்பாடுகளால் பல்வேறு பாதிப்புக்கள் நிகழ்ந்துள்ளன. இந்நிலையில் அதிலிருந்து மீண்டும் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த வேண்டும் என்பதில் நாம் கரிசனைகளைக் கொண்டுள்ளோம். 

அதற்காக, தென்னாபிரிக்காவில் அமைக்கப்பட்டதைப்போன்று உண்மைகளைக் கண்டறியும் ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். அந்த ஆணைக்குழுவின் முடிவுகளின் பிரகாரம் உள்ளகப் பொறிமுறையொன்றின் ஊடாக அடுத்தகட்டச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். 

தேசிய பிரச்சினைக்கு தீர்வு

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதிலும் எமது கரிசனைகள் அதிகமாகவுள்ளன. குறிப்பாக, தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு தமிழ், முஸ்லிம், மலையக சமூகத்தினரும் தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என்பதில் அதிகளவான அக்கறைகளை கொண்டவர்களாக உள்ளோம். 

தொடர்ந்தும், இனங்களுக்கு இடையில் முரண்பாடுகள் நீடித்துக்கொண்டிருப்பதை அனுமதிக்க முடியாது. அதற்கு முற்றுப்புள்ளியொன்று வைக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகின்றது. எனவே, குறித்த சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்புக்களுடன் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 

புலம்பெயர் தமிழர்கள் 

இதேவேளை, இனப்பிரச்சினைக்கான தீர்வு உட்பட எதிர்கால பொருளாதாரச் செயற்றிட்டங்கள் தொடர்பில் புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு தயாராகவே உள்ளோம். புலம்பெயர் தமிழர்கள் மட்டுமன்றி ஏனைய சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களுடனும் கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்கு எப்போதும் நாம் தயாராக உள்ளோம். இதற்கான முன்முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன.

பொருளாதார விவகாரம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையிலும், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய பிரேரணையிலும், பொருளாதார நெருக்கடிகளுக்கான காரணங்கள் மற்றும் சர்ச்சைக்குரிய நிதியை மீளத் திரட்டல் உள்ளிட்ட முன்மொழிவுகள் காணப்படுகின்றன. 

இந்த முன்மொழிவுகள் ஐ.நா.மனித உரிமைகள்பேரவையின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டதாக உள்ளது. ஐ.நா.மனித உரிமைகள் பேரவையானது மனித உரிமைகள் தொடர்பான விடயங்களுக்கான அதிகார எல்லையையே கொண்டிருக்கின்ற நிலையில் பொருளாதார விவகாரங்கள் பற்றி அக்கட்டமைப்பினால் எவ்வாறு உள்ளீர்ப்புக்களைச் செய்ய முடியும் என்பது கேள்வியாகின்றது. 

இந்த விடயங்கள் தொடர்பில் சர்வதேச நாணயநிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி போன்றவை தலையீடுகளைச் செய்தால் அதிலொரு நியாயம் உள்ளது. அவ்வாறான நிலையில் தனது அதிகாரவரம்பினை மீறி எவ்வாறு மனித உரிமைகள் பேரவையினால் செயற்பட முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33