ரணில் மாறியது எப்படி?

By Digital Desk 5

02 Oct, 2022 | 03:37 PM
image

சத்ரியன்

“ஆட்சியில் உள்ள ரணில் விக்கிரமசிங்க மென்போக்கானவராக அறியப்பட்டவர். ஆனால் அவர் அதிகாரத்துக்கு வந்ததும், முற்றாக மாறியிருக்கிறார்” 

“இலங்கையின் ஆட்சியில் இருந்த ஜனாதிபதிகள் அத்தனை போரும், தங்களின் கைகளில் உள்ள நிறைவேற்று அதிகாரத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த முனையவில்லை”

எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் பலரும், ரணில் விக்கிரமசிங்க இப்போது சர்வாதிகாரியாக மாறிக் கொண்டிருக்கிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

ரணிலுடன் கூடவே பயணித்து அரசியல் செய்த அஜித் பெரேரா, பிரதமராக இருந்த போது, ரணில் விக்கிரமசிங்க ஜனநாயகவாதியாகவே இருந்தார் என்றும், இப்போது அவர் சர்வாதிகாரியாக மாறி விட்டார் என்றும் குற்றம்சாட்டியிருக்கிறார்.

சர்வாதிகாரியாக மாறும் பயணத்தை ஜனாதிபதி ரணில் மேற்கொள்வதாக அனுரகுமார திசநாயக்கவும் கூறியிருக்கிறார். சஜித் பிரேமதாசவும் அவ்வாறே வெளிப்படுத்தியிருக்கிறார்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதும், கையாண்டு வருகின்ற ஒவ்வொரு நகர்வுகளும், அவரை சர்வாதிகாரி போன்ற தோற்றத்தை உருவாக்கியிருக்கிறது.

ரணில் விக்கிரமசிங்க நேர் எதிர்குணமுடையவராக மாறியிருந்தால், அதற்கான காரணம் என்ன?

சில மாதங்களுக்கு முன்னர் அவரிடம் இல்லாத  அதிகாரம் அவரது கைகளுக்கு வந்திருக்கிறது. அதனை முதல் காரணமாக குறிப்பிடலாம்.

நிறைவேற்று அதிகாரம் என்பது, எந்த சாதுவையும், சர்வாதிகாரியாக்கும் வல்லமை கொண்டது. 

ஒரு மனிதனின் உண்மைக் குணத்தை அறிய வேண்டுமானால், அவனது கையில் அதிகாரத்தைக் கொடுத்துப் பார்க்க வேண்டும் என்பது யூகோஸ்லாவிய அறிஞர் ஒருவரின் பிரபலமான கூற்று.

இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியைக் கையில் எடுத்துக் கொண்டவர்கள் எல்லோருமே, தங்களின் பங்கிற்கு, ஒரு ஆட்டத்தை ஆடி விட்டே அடங்கியிருக்கிறார்கள்.

ஜே.ஆர்.ஜயவர்த்தன தொடக்கம், கோட்டாபய ராஜபக்ஷ வரையில், ஆட்சியில் இருந்து அகன்ற எல்லா ஜனாதிபதிகளுமே, அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

ஜே.ஆர். தனது அதிகாரத்தைக் கொண்டு, பயங்கரவாத தடைச்சட்டத்தை பிரகடனம் செய்ததுடன், தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரம், மற்றும் போரைக் கட்டவிழ்த்து விட்டதற்கும், நாட்டைப் பேரழிவுக்குள் தள்ளிய பல விளைவுகளுக்கும் காரணமானவர்.

ரணசிங்க பிரேமதாசவும், டி.பி.விஜேதுங்கவும் ஆட்சியில் இருந்த குறுகிய காலகட்டங்களில் தமிழர்களுக்கு எதிராக தீவிரமான போரை முன்னெடுத்தவர்கள்.

சந்திரிகா குமாரதுங்க சமாதான தேவதையாக வந்து, போர்த் தேவதையாக மாறியவர். மஹிந்த ராஜபக்ஷவின் நிலையை யாரும் கூறித் தெரிய வேண்டிய நிலை இல்லை.

மைத்திரிபால சிறிசேனவும், நெகிழ்வுப் போக்குடைய தலைவராகத் தன்னைக் காட்டிக் கொள்வதில் கவனம் செலுத்தினாலும் பிரதான விடயங்களில் அவர், விட்டுக்கொடுப்புகளுக்கு தயாராக இருக்கவில்லை.

கோட்டாபய ராஜபக்ஷ தன் இராணுவமயப் போக்கில் இருந்து விலகாததுடன், நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டு எடுத்த தவறான முடிவுகளின் மூலம், நாட்டை வரலாறு காணாத அழிவுகளுக்கும் இட்டுச் சென்றார்.

இதுவரை ஆட்சியில் இருந்த ஜனாதிபதிகள் அத்தனை போரும், தங்களின் கைகளில் உள்ள நிறைவேற்று அதிகாரத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த முனையவில்லை.

அத்தனை பேரும், போருக்கு அடிப்படைக் காரணமான விடயங்களை கண்டறிந்து அவற்றைத் தீர்த்து, நாட்டை அதிலிருந்து மீட்பதற்குப் பதிலாக, போரை நடத்தி, அல்லது, பிரச்சினையை வளர்த்து விட்டு அரசியல் செய்வதிலேயே குறியாக இருந்தனர்.

கடைசியாக ஆட்சியில் இருந்த கோட்டாபய ராஜபக்ஷ, நிறைவேற்று அதிகாரத்தை கையில் வைத்திருந்த போதும், போராட்டங்களை அடக்குவதற்கு படைபலத்தை பயன்படுத்துவதை முடிந்தளவுக்கு தவிர்த்துக் கொண்டார்.

நிறைவேற்று அதிகாரத்தை தான்தோன்றித் தனமாகப் பயன்படுத்தி, உர இறக்குமதிகளை தடை செய்து, பல்வேறு குழறுபடிகளை ஏற்படுத்திய அவர், படைபலத்தைப் பயன்படுத்துவதை தவிர்த்தமை ஆச்சரியம் தான்.

ஏற்கனவே சர்வதேச அளவில் மனித உரிமை குற்றச்சாட்டுகளில் சிக்கியிருப்பதால், அவர் நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி படைபலத்தை பிரயோகிக்க தயங்கியிருக்கலாம்.

இப்போது ஆட்சியில் உள்ள ரணில் விக்கிரமசிங்க மென்போக்கானவராக அறியப்பட்டவர். ஆனால் அவர் அதிகாரத்துக்கு வந்ததும், முற்றாக மாறியிருக்கிறார்.

ஆட்சிக்கு வந்தவுடன், போராட்டக்காரர்களை காலிமுகத்திடலில் இருந்து அகற்றினார்.  பயங்கரவாத தடைச்சட்டத்தைக் கொண்டு, போராட்டத்தை முன்னெடுக்க காரணமானவர்களை சிறைக்குள் தள்ளினார்.

ஊடகங்களின் மீதும் அடக்குமுறைகளை ஏவி விட்டார்.

இப்போது, உயர் பாதுகாப்பு வலயங்களைப் பிரகடனம் செய்து, இன்னொரு போராட்டம் நடத்தப்படுவதை தடுப்பதற்கு வழிவகுத்துக் கொடுத்திருக்கிறார்.

ஆட்சிக்கு வந்தவுடனேயே, பாராளுமன்றத்தைப் பாதுகாக்க, முப்படைகளுக்கும் அதிகாரத்தைக் கொடுத்தவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. அதற்குப் பின்னர், பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் படைகளுக்கு அதிகாரத்தை கொடுத்து வருக்கிறார்.

அவசரகாலச் சட்டத்தையும் பிறப்பித்து தனது அதிகாரத்தைக் காண்பித்தார்.

கொழும்பில் உயர் பாதுகாப்பு வலயங்களைப் பிரகடனம் செய்து, முப்படைகளுக்கும், பொலிசாருக்கும் புதிய அதிகாரங்களைக் கொடுத்து, கடும் வெறுப்பையும்  எதிர்ப்பையும் கூட உருவாக்கிக் கொண்டார்.

இவையெல்லாம் ரணில் விக்கிரமசிங்கவை ஒரு ஜனநாயகவாதி எனக் காண்பித்து வந்த அடையாளங்களை முற்றாகவே மாற்றியிருக்கிறது.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்த போது உயர்பாதுகாப்பு வலயங்களை அகற்றி, தங்களின் காணிகளை விடுவிக்குமாறு, தெல்லிப்பளையில் போராட்டம் நடத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், இணைந்து கொண்டவர் ரணில் விக்கிரமசிங்க.

ஆனால் அவர் ஜனாதிபதியாகியதும், கொழும்பில் உயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனம் செய்தமை, அதிர்ச்சியையே கொடுத்தது.

அவரது கையில் உள்ள நிறைவேற்று அதிகாரம் மாத்திரம், இந்த முடிவை எடுப்பதற்குக் காரணம் எனக் கூற முடியாது. அவர் இப்போது ராஜபக்ஷவினரின் பொம்மையாகவும் தான் இருக்கிறார். 

நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டிருந்தாலும், ராஜபக்ஷவினரின் விருப்பங்களையும், தேவைகளையும் நிறைவேற்றக் கூடியவராகவே அவர் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்.

அவர்களைப் பாதுகாப்பதையும், அவர்களின் செல்வாக்கை மீள நிலைப்படுத்துவதிலும் தவிர்க்க முடியாமல் கவனம் செலுத்துகிறார். காலிமுகத்திடல் போராட்டம், இலங்கையின் அரசியல் கலாசாரத்தை முழுமையான மாற்றியமைக்கத் தவறி விட்டது.

இனவாதம், ஊழல், மோசடி, முறைகேடு என காலம் காலமாக ஊறிப் போயிருந்த சகதிக்குள் இருந்து நாட்டை வெளியே கொண்டு வந்திருந்தால், அரகலய வெற்றி பெற்றிருக்கும்.

ஆனால் அந்தப் போராட்டம் கோட்டா, மஹிந்த, பசில், சமல் போன்றவர்களை மட்டும் தற்காலிகமாக வெளியேற்றியதே தவிர, மற்றெல்லாமே மாறாமல் தான் இருக்கிறது.

யாரெல்லாம், ராஜபக்ஷவினரின் ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தார்களோ அவர்கள் மீண்டும் அமைச்சர்களாகியிருக்கிறார்கள். அவர்கள் நினைத்தபடியே அரசாங்கம் நடந்து கொண்டிருக்கிறது.

ஆட்சிமுறையும் மாறவில்லை, ஆட்சியில் இருப்பவர்களும் மாறவில்லை.  இவ்வாறான நிலையில் மாற்றங்களை எதிர்பார்த்த மக்கள் ஏமாற்றமடைந்து போயிருக்கிறார்கள்.

ராஜபக்ஷவினர் தங்களுக்கு எதிரான அலை பரவத் தொடங்கியதும், சதுங்கப் பலகையில், காய்களை சாதுரியமாக மாற்றி விட்டு பதுங்கிக் கொண்டனர்.

அவ்வாறு முன்னிலைக்கு வந்தவர் தான் ரணில் விக்கிரமசிங்க. அவரிடம் இப்போது கையில் இருக்கும் நிறைவேற்று அதிகாரம் அவரை எல்லாவற்றையும் செய்யத் தூண்டுகிறது. 

அவருக்குப் பின்னால் இருப்பவர்களும் செய்யத் தூண்டி விடுகின்றனர். இவ்வாறான நிலையில் ரணில் விக்கிரமசிங்க மட்டுமல்ல, எந்த ஜனநாயகவாதியும் சர்வாதிகாரியாக மாறுவது ஆச்சரியமில்லை.

வாசுதேவ நாணயக்கார போன்ற இடதுசாரிகள், அதிகாரத்துக்காக, ராஜபக்ஷவினருடன் சேர்ந்த இனவாதிகளாக மாறியது போலத் தான் இதுவும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓமான் பணிப்பெண்கள் விவகாரம் : மத்திய...

2022-12-01 14:33:01
news-image

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக மலையகத்தில் ஒன்றிணைந்த...

2022-12-01 14:32:19
news-image

உலக அழகி பிரியங்கா சோப்ரா மீதே...

2022-11-29 16:09:16
news-image

மத்திய வங்கியின் ஆளுநருக்கு மாதம் நான்கு...

2022-11-30 15:48:59
news-image

விடத்தல்தீவு எனும் இயற்கைப் வனத்தைப் பாதுகாப்போம்

2022-11-29 17:25:43
news-image

உணரப்பட வேண்டிய பெறுமதி

2022-11-28 15:05:06
news-image

உலக நீதி சீர்குலைந்த நாள் :...

2022-11-28 13:21:05
news-image

ஸ்கொட்லாந்தும் சுயநிர்ணய உரிமையும் - ஒரு...

2022-11-28 12:29:41
news-image

உலகப் போர் நினைவுச் சின்னங்களின் பின்னணியில்...

2022-11-28 11:05:34
news-image

அரசியல் தீர்வு: முஸ்லிம் தரப்பின் நிலைப்பாடு...

2022-11-27 17:30:18
news-image

உக்ரேனில் நீளும் போரும் குறைந்துவரும் ஆதரவும்

2022-11-27 17:16:51
news-image

வரவு - செலவுத் திட்டம் 2023...

2022-11-27 16:08:24