திருகோணமலையை இனவாதம் சூழுகின்றதா?

Published By: Digital Desk 5

02 Oct, 2022 | 01:59 PM
image

-திருமலை நவம்- 

சகோதர இனத்தவரால் அடக்கி ஒடுக்கப்படுவதும், மாற்று இனங்களின் அட்டூழியங்களால் பூர்வீகங்களை இழந்தும் வாழ்வாதாரங்களை பறிகொடுத்தும் வாழும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் அவலத்துக்குள் திருகோணமலை எல்லைக் கிராமங்களில் வாழும் தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தின் வடகோடியில் அமைந்துள்ள பெரும் நிலப்பரப்பு திருகோணமலை மாவட்டத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்டு அதற்கு பதிலாக வடமத்திய மாகாணமான அனுராதபுர மாவட்டத்துடன் இணைக்கப்பட திட்டம் தீட்டப்படுவதாகவும், மறுதிசையில் பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள பெரும் நிலப்பரப்பொன்றை கிழக்கு மாகாணத்துடன் இணைக்க முயற்சிக்கப்படுகிறது.

அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முக்கிய நிலப்பரப்பை பொலன்னறுவை மாவட்டத்துடன் இணைக்கும் சதி முயற்சியொன்று இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும் இதற்குரிய முன்மொழிவுகள் வரையப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரியவருகிறது.

திருகோணமலை நகரசபையை மாநகரசபையாக  தரமுயர்த்தும் திட்டத்தின்கீழ் உப்புவெளி பிரதேச சபைக்கு கீழ் உள்ள சிங்கள கிராமங்களை திருகோணமலையுடன் இணைத்து அதற்கு மாநகரசபை அந்தஸ்தை வழங்கும் அதேவேளை மாநகர ஆட்சியை எதிர்காலத்தில் பேரின ஆட்சியாளர்களின் கீழ் கொண்டுவரும் அரசியல் யுக்திகளும் வகுக்கப்படுகிறது.

முதலில் திருகோணமலையிலுள்ள இரு தமிழ் கிராமங்களுக்கு விளைவிக்கப்பட்ட அடாவடித்தனங்கள் பற்றி நோக்குவோம். கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட செம்பியன் மோட்டைக் கிராமம் பாரம்பரியமாக  தமிழர்கள் வாழ்ந்து வந்த கிராமமாகும். அக்கிரமத்தை சுற்றியுள்ள பாண்டியன் ஊற்று, சுங்கான்குழி, குரங்கு பாய்ஞ்சான் ஆகிய கிராமங்கள் முற்றுமுழுதாக    தமிழ் மக்கள் குடியிருந்த கிராமங்களாகும். 

செம்பியன் மோட்டைக்கிராமம் தற்போது மஜித்நகர் கிராமசேவகர் பிரிவுக்குள் சேர்க்கப்பட்டு, அமன் பூர்வீக அடையாளங்கள் மறைக்கப்பட்டு வருகின்றன. இக்கிராமத்தில் 1964ஆம் ஆண்டு முதல் தமிழ்க் குடிகள் விவசாயம் செய்து வந்த சுமார் 500 ஏக்கர் நிலம் காணப்படுகிறது. 

1983ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரங்களைத் தொடர்ந்தும் 1990ஆம் ஆண்டுகள் இடம்பெற்ற வன்முறைகள் காரணமாக செம்பியன் மோட்டையிலுள்ள தமிழ் மக்கள் குடிபெயர்ந்து கிராமங்களை விட்டு வெளியேறியிருந்தனர். குடிபெயர்ந்த இக்கிராம மக்கள் சீனக்குடாவிலுள்ள கிளப்பன்பேர்க் அகதி முகாமில் தங்கி வாழவேண்டிய நிலை ஏற்பட்டது.  

செம்பியன் மோட்டைக் கிராமத்தில் இராணுவ முகாமும், விடுதலைப் புலிகளின் பிரவேசமும் அடிக்கடி காணப்பட்ட காரணத்தினால் அதுவொரு சூன்ய பிரதேசமாக  பிரகடனப்படுத்தபட்டிருந்தது. 2006ஆம் ஆண்டு கிழக்கு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் அக்கிராமத்தவர்கள் தமது பூர்வீக கிராமத்துக்கு குடியேறப்போனார்கள். 

ஆனால்  இராணுவம் அவர்களை அனுமதிக்கவில்லை. அங்குள்ள 500ஏக்கர் காணிகளும் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் காணப்பட்டது.  2014ஆம் ஆண்டு தமது கிராமங்களை நோக்கி நகர்ந்தபோது மாற்று குழுமம் தங்கள் வயல் நிலங்களையும் வீடுகளையும்  கபளீகரம் செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள். 

அரசியல் பலமோ பாதுகாப்புபடையினரின் உதவியோ பெறமுடியாத நிலையொரு புறம் இருக்க தங்களின் பூர்வீகமான காணிகளை தங்களிடம் ஒப்படைக்கும்படி கோரிக்கை விடுத்தார்கள். ஆனால் கோரிக்கைகள் அரச அதிகாரிகளாலும், படையினராலும் நிராகரிக்கப்பட்டது. 

செம்பியன் மோட்டை கிராமத்தவர் தமது பூர்வீக நிலங்களை மீளப்பெற கிண்ணியா பிரதேச செயலாளர், மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாகாண காணி ஆணையாளர் ஆகியோருக்கு தமது தாழ்மையான கோரிக்கைகளையும் விண்ணப்பங்களையும் அனுப்பியும் இன்றுவரை ஒரு சாதகமான முடிவை அவர்களால் பெறமுடியவில்லை.

மேற்படி காணிகளை தங்கள் பூர்வீக நிலங்கள் எனக் குறித்த கிராம மக்கள்  கூறி வருகின்றபோதும் அந்நிலங்களுக்குரிய உறுதிப் பத்திரங்களை உரிய அதிகாரிகளுக்கு உரிய காலத்தில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளாததன் காரணமாக அக்காணிகளுக்கு உரிமத்தை கொண்டாடும் தகுதியை இழந்தவர்களாக  காணப்படுகிறார்கள். 

அதேவேளை இவர்களின் நிலங்களை அத்துமீறி பிடித்திருக்கும் குடிகளிடமும் உரிய ஆவணங்கள் எதுவும்  இல்லையென்றும் இருதரப்பினரும் ஆவணங்கள் இல்லாமலே அரச காணிக்கு உரிமை கோருகிறார்கள் என்றும் காணி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எவ்வாறு இருந்த போதிலும் தங்கள் பூர்வீகமான நிலங்களை பறிகொடுத்து  ஜீவனோபாயத்தை தொலைத்தவர்களுக்கு உரிய நீதியையும் ஞாயத்தையும் பெற்று தரவேண்டியது அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் கடமையாகும்.

இதேபோன்றதொரு கொடுமையையே மூதூர் பிரதேசத்திலுள்ள நல்லூர் கிராம மக்களான ஆதிவாசிகள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது இன்னொரு கவலை தரும் கதையாகும். மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஆதிவாசிகளின் கிராமம் நல்லூர்க்கிரமமாகும். இங்கு 500 குடும்பங்களைச் சேர்ந்த ஆதிவாசிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்த ஆதிவாசி குடிகளின் பிரதான ஜீவனோபாய தொழிலாக காணப்படுவது. தேன் எடுத்தல், வேட்டையாடுதல், சிலர் கொள்ளி விற்றல் மற்றும் சிலர் கிராமங்களில் யாசித்தல் உள்ளிட்ட செயற்பாடுகளைக் கொண்டவர்களாக காணப்படுகிறார்கள். 

பிரித்தானிய ஆட்சி நிலவிய காலத்தில் இக்குடிமக்களின் நிலைகருதி இக்கிராமத்துக்கு வளம் சேர்க்கும் உல்லைக்குளத்தைப் புனரமைத்து சுமார் 1000ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யக்கூடிய வசதிகளை செய்து கொடுத்தார்கள். இக்கிராமவாசிகள் பன்னெடுங்காலமாக தமது மரபு அல்லது குடிமைத் தொழிலுக்கு மேலதிகமாக விவசாயத்தை செய்து வந்திருக்கிறார்கள்.

காலத்துக்கு காலம் ஏற்பட்ட கலவரங்கள் வன்செயல்கள் காரணமாக இம்மக்களும் குடிபெயரவேண்டிய அவலநிலை ஏற்பட்டது. குறிப்பாக 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற மாவிலாறு யுத்தம் காரணமாக அனைத்து ஆதிக்குடிகளும் இடம் பெயர்ந்தார்கள். இந்த இடப்பெயர்வு காரணமாக கிராமம் வெறிச்சோடியது. 

விவசாய நிலங்கள் தரிசு நிலமாக மாறவேண்டிய அவலம் ஏற்பட்டது. இவர்களின் இடப்பெயர்வை வாய்ப்பாக பயன்படுத்தி இராணுவத்தினர் இக்கிராமத்தை சுற்றிப் பாதுகாப்பு முகாங்களை அமைத்துக் கொண்டார்கள். இன்னொரு புறம் அயல் கிராமத்தை சேர்ந்தவர்களால் படையினரின் உதவியோடு ஆதிவாசிகளுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. 

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்ற நிலையில் இக்கிராமவாசிகள் மீள்குடியேற்றப்பட்டார்கள். பல சர்வதேச மற்றும் உள்@ர் தொண்டர் நிறுவனங்கள் மீள்குடியேற்றத்துக்கு கணிசமான பங்களிப்பை செய்தார்கள். ஏலவே தாங்கள் செய்துவந்த வயல் நிலங்களில் செய்கையில் ஈடுபட சென்றபோது இவர்களுக்கு சொந்தமான வயல்களும் தோட்டங்களும் மாற்று குழுவினர் அத்துமீறி கைப்பற்றியிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்கள். 

தங்களுக்கு சொந்தமான நிலங்களில் மாற்று இனத்தவர் பயிர் செய்வதைக் கண்டபோது இவர்கள் ஒன்றும் செய்ய முடியவில்லை. தங்கள் அயல் கிராமத்தவர்கள் சகோதர இனத்தவர்கள் இப்படி நடந்துகொள்வார்கள் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. இதனால் இரு இனத்தவர்களுக்கிடையில் முரண்பாடுகளும் மோதல்களும் ஏற்படும் நிலை உருவாகியது. குறித்த மாற்று குழுவினர் குவேனி என்ற கமக்கார அமைப்பை ஏற்படுத்தி உல்லைக்குளம் நீர்கொண்டு செய்யப்படும் காணியின் நிர்வகிப்பு முழுவதையும் தங்கள் வசம் கொண்டு வந்திருந்தார்கள். இந்த நில ஆக்கிரமிப்புக்கு அரசியல்வாதிகளும் உடந்தையாக இருந்தார்கள்.

இந்த அநியாயம் தொடர்பில் நல்லூர் கிராமத்து ஆதிவாசி குடிகள் சம்பூர் பொலிஸ் நிலையம், மூதூர் பிரதேச செயலகம், மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் என்ற அனைத்து தரப்பினரிடமும் முறையிட்டார்கள். இதில் கவனிக்கப்படவேண்டிய விடயம் ஆதிவாசிகளின் இடப்பெயர்வை சாதகமாக்கிக் கொண்ட அயல் கிராமத்தவர்கள் அரச உத்தியோகத்தர்களின் அனுசரணையுடன் ஆதிவாசிகளுக்கு சொந்தமான நல்லூர் கிராம வயல் முழுவதையும் அருகிலுள்ள இக்பால் நகர் அதிகாரத்துக்குள்  கொண்டுவந்து வயல் முழுவதையும் தமது அதிகாரத்துக்குள் கொண்டு வந்தது  மாத்திரமன்றி நல்லூர் கிராம வயல் முழுவதும் இக்பால் நகர் கிராமசேவகர் பிரிவுக்கு சொந்தமானது என்று பிரகடனப்படுத்தியும் உள்ளனர். இந்த சதி முயற்சியில் சில அரசியல் பிரமுகர்கள் பிரதான பங்கேற்றுள்ளதாக அந்த மக்கள் தெரிவித்தார்கள். 

மாற்றப்பட்ட வயல்களை தமது உடமையாக்கும் இன்னொரு வகை சூழ்ச்சியை கையாள எத்தனித்த குழுவினர் இக்பால் நகர் விவசாய சம்மேளனம் என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் தங்களுக்கு சொந்தமில்லாத நல்லூர் கிராம வயல்களை காட்டி உரமானியம் மற்றும் ஏனைய வசதிகளையும் பெற்று வருவதாக ஆதிவாசிகள் கவலை தெரிவித்தார்கள்.

இந்த அட்டூழியம் தொடர்பாக நல்லூர் கிராம மக்கள் அண்மையில் கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களை சந்தித்து முறையிட்டதைக் கேள்வியுற்ற அத்துமீறி ஆக்கிரமித்திருக்கும் குழுவினர் சில அதிகாரிகளின் துணையோடு போலி ஆவணங்களை தயாரித்து வயல்கள் முழுவதும் தங்களுக்கு சொந்தமென  ஆதாரங்களை காட்ட முற்பட்டிருப்பதும் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக ஆதிவாசிகள் கவலையுடன் தெரிவித்தார்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக ஆராய்வதற்காக கிழக்கு மாகாண ஆளுநர் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் விசாரணைக் குழுவொன்றை நியமித்து விசாரணைகளை நடத்திவரும் நிலையில் நல்லூர் கிராம சேவகர் பிரிவின் எல்லையானது நயவஞ்சகமாக மாற்றப்பட்டிருப்பதாகவும் இதனால் தமது பூர்வீக நிலங்கள் பறிபோகும் அவலநிலை மாத்திரமல்ல இக்கிராமத்தை விட்டு  தாங்கள் அனைவரும் வீடின்றி, வாழ்வின்றி வெளியேற வேண்டிய அவலம் இடம்பெறலாமென நல்லூர் வாழ் குடித்தலைவர் தெரிவித்தார்.

நல்லூர் கிராமம் பூர்வீகமான ஒரு தமிழ்க்கிராமமாகும். தற்போது இதன் இனப்பரம்பலை மாற்றும் வகையில் தற்போது தாயிப் என்ற புதிய நகரத்தை உருவாக்கி இனவிகிதாசாரத்தை மாற்றும் முயற்சிகளும், கொடுமைகளும் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

திருகோணமலை மாவட்டத்தின் வடபகுதியையும், தென்பகுதியையும் பிற மாவட்டங்களுடன் இணைப்பதன் மூலம் வடக்குக்கும், கிழக்குக்குமான நிலத்தொடர்பை துண்டிப்பதற்கும், இனப்பரம்பலை மாற்றியமைப்பதற்குமான சூட்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதை கண்டித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எழுதிய கடிதத்தில் சில விடயங்கள் சுட்டிக்காட்டியிருப்பது கவனத்துக்குரிய விடயமாகும். 

வடமத்திய மாகாணமான அனுராதபுர மாவட்டத்துடன் திருகோணமலையின் முக்கிய கிராமங்களை இணைத்து, அனுராதபுர மாவட்டத்தை கடல் பிரதேச மாவட்டமாக்கும் உச்சமான முயற்சி மேற்கொண்டுவரும் அதேவேளை வடக்கு கிழக்குக்கு இடையேயுள்ள தொடர்நிலப்பரப்பை துண்டாடும் சூட்சுமத்துக்காகவே இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருவதாக சம்பந்தன் தனது கடிதத்தில்  சுட்டிக் காட்டியுள்ளார்.

அந்தவகையில் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தென்னமரவடிக் கிராமமானது முல்லைத்தீவு மாவட்டத்தின் தென்புற மாவட்ட எல்லையுடன் இணையும் எல்லைக் கிராமமாகும். இதன் அருகில் தான் பதவிஸ்ரீபுர பிரதேச செயலாளர் பிரிவு காணப்படுகிறது. இப்பிரிவு திருகோணமலை மாவட்டத்துக்குரியதாகும். தென்னமரவடி கிராமத்தையும் பதவிஸ்ரீபுரத்திலுள்ள சிங்கள கிராமங்களையும் சேர்த்து அனுராதபுர மாவட்டத்துடன் இணைக்கும் முயற்சியில் அரசாங்கம் பகீதரப்பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

ஏலவே தென்னமரவடிப்பிரதேசத்தை 1975ஆம் ஆண்டு அனுராதபுர மாவட்டத்துடன் இணைத்து வடக்குக்கும் கிழக்குக்கும் இடையேயுள்ள தொடர்பை அறுத்து பிரதமர்.திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் அரசாங்கம் சதி செய்தநிலையில் தான் 1977ஆம் ஆண்டு பலபோராட்டங்களுக்கு மத்தியில் தென்னமரவடி கிராமம் திருகோணமலை மாவட்டத்துடன் மீண்டும் இணைக்கப்பட்டது. 

தற்போது அரசு எடுக்கும் முயற்சி நிறைவேற்றப்படுமானால் தென்னமரவடி கிராமத்துக்கு சொந்தமான பெருந்தொகையான வயல்நிலங்களும், வனநிலங்களும் பறிபோகும் அபாயம் உருவாகும்.

இதேபோன்றதொரு திட்டமிட்ட சதி முயற்சியை தற்போதைய ஆட்சியாளர்கள் திருகோணமலை மாவட்டத்தின் தெற்குப் புறமாகவும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது அண்மைக்காலத்தில் கூறப்படும் விடயமாகும். திருகோணமலை மாவட்டத்திற்கு சொந்தமான மாவிலாறு பிரதேசத்தை பொலநறுவை மாவட்டத்துடன் இணைக்கும் சதிமுயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

 இதனால் மாவிலாறு பிரதேசத்திலுள்ள பெருந்தொகையான வயலகள்; நிலங்கள், வனங்கள், குடியிருப்புகள், நீர் ஓடு வாய்க்கால்கள் பொலநறுவை வசமாகிவிடும். இதேபோன்றே மட்டக்களப்பு மாட்டத்தை சேர்ந்த வாகரை பிரதேச செயலாளர் பிரிவை சேர்ந்த ஆலங்குளம்  மற்றும் ரெஜிதனை, கரனடியனாறு போன்ற கிராமங்களை பொலன்னறுவையுடன் இணைத்துவிடும் முயற்சியில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. 

இதன் மறைமுகமான கைங்கரியம் என்னவெனில், திருகோணமலை மாவட்டத்தை சிங்களமயமாக்கி பேரின குடியிருப்புக்களை விஸ்தரித்து தமிழ்மக்களின் இனப்பரம்பலை இல்லாது ஒழிக்கும் திட்டமிட்ட சதிமுயற்சியாகவே இது பார்க்கப்பட வேண்டும். தமிழர்களின் வரலாற்று ரீதியான வாழ்விடங்களாக காணப்படும் காணிகளை மிகமோசமான முறையில் மாற்றியமைக்கும் வகையில் மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் ஆகியவற்றுக்கான பிரதேச எல்லைகளை தந்திரமான முறையில் மாற்றியமைத்து திருகோணமலை மாவட்டத்தின் இனப்பரம்பலை மாற்றியமைக்க அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் முயற்சி செய்து வருகிறார்கள் என்பதையே அண்மைக்கால நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன. 

இன்னொரு பக்கத்தில் திருகோணமலை நகரசபையை மாநகரசபையாக தரம் உயர்த்தும் உத்தியோடு கடந்த செப்டெம்பர் 5ஆம்  வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய திருகோணமலை நகரசபை எதிர்வரும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் மாநகரசபையாக தரம் உயர்த்தப்படவுள்ளது என்ற அறிவித்தல் வெளிவந்துள்ளது. நகரசபையாக தரம் உயர்த்துவதற்காக சில பிரதேசங்களை வெட்டியெடுத்து மற்றமொரு சபையுடன் இணைக்கவும் சில சிங்கள பிரதேசங்களை நகரசபையுடன் இணைக்கும் எல்லை நிர்ணய நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. 

அந்தவகையில் பல தசாப்தகாலமாக திருகோணமலை நகரசபையின் ஒரு வட்டாரமாக இருந்துவரும் அன்புவழிபுர வட்டாரத்தை பிரித்தெடுத்து உப்புவெளி பிரதேசசபையுடன் இணைக்கும் வகையில் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் அனுராதபுர சந்தியில் அமைந்திருக்கும் சந்தை கட்டிடத்தொகுதி மற்றும் நகரசபை விடுதி ஆகியன பறிபோகின்ற அபாய நிலை உருவாகியுள்ளதாக திருகோணமலை நகரசபை அங்கத்தவர்கள் தங்கள் விசனத்தை தெரிவித்துள்ளார்கள். 

அதேவேளை புதிதாக அமைக்கப்படவுள்ள திருகோணமலை மாநகரசபையுடன் இணைக்கப்படவுள்ள கிராமங்களாக மிஹிந்தபுரம் (243-I), செல்வநாயகபுரம் (243 M), லிங்கநகர் (244 R)இ சிங்கபுரம் (243 H), பாலையூற்று கிராம சேவகர் பிரிவு (243 D)இ முருகன் கோவிலடி (243 P) ஆகிய கிராமசேவகர் பிரிவுகளையும் இணைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி கிராமசேவகர் பிரிவுகளை புதிய திருகோணமலை மாநகரசபையுடன் இணைப்பதன் மூலம் தமிழ் மக்கள் பாதிப்புக்களை எதிர்நோக்க வேண்டிவரும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டு வருகிறது. 

தமிழ்மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு இவ்வாறு சவால்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்களிலும் அவர்களின் வாழ்வாதாரங்களையும், பூர்வீக இடங்களையும் கபளீகரம் செய்யும் முயற்சிகள் திட்டமிட்ட முறையில் முன்னெடுத்து வரப்படுகிறதென்பதற்கு வெள்ளைமணல் கிராமத்தை சேர்ந்த கருமலையூற்று கடற்கரைப்பிரதேசத்தில் விமானப்படையினரால் எல்லைவேலி அமைக்கப்பட்டிருப்பதால் இங்கு வாழும் சுமார் 400மேற்பட்ட குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்துவிடும் அவலநிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கொட்டியாரக்குடாவின் கரையோர கிராமங்களில் ஒன்றான கருமலையூற்று கிராமம் மீன்பிடிப்பை ஜீவனோபாயமாகக் கொண்ட 150 மேற்பட்ட குடும்பங்களை கொண்ட ஒரு முஸ்லீம் கிராமம். இக்கிராமம் அழகிய கடற்கரையைக் கொண்டது. இங்கு வாழும் மக்கள் மீன்பிடித்து வாழும் நிலையில் இக்கிராமத்தை பறித்தெடுக்கும் நோக்கில் படையினர் எல்லை வேலிகளை அமைத்து குடியிருப்புக்களுக்கு பங்கம் விளைவித்து வரும்நிலையில் அக்கிராம மக்கள் தம் தொழில்களை இழந்து குடியிருப்புக்களை பறிகொடுத்து செல்லவேண்டிய ஆபத்து உருவாகி வருவதாக தெரிவித்தார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐந்துமாத குழந்தைக்கு சத்திரசிகிச்சை இடம்பெற்றுக்கொண்டிருந்தத வேளை...

2024-07-10 17:04:03
news-image

தேர்தல் வாக்குறுதிகளால் மழுங்கடிக்கப்பட்டுள்ள மலையக தனிவீட்டுக்...

2024-07-10 14:42:33
news-image

இலங்கை தமிழர்களுக்கான ஒரு மிதவாதக்குரல்

2024-07-10 11:42:47
news-image

என்ன இந்த 'மார்ஷல்' பதவிநிலை? 

2024-07-10 10:48:07
news-image

தேசிய ரீதியில் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஜனாதிபதியின்...

2024-07-10 10:21:25
news-image

புதிய ஜனாதிபதியின் கீழ் ஈரானின் வெளியுறவுக்...

2024-07-09 15:53:45
news-image

ஜனநாயக செயன்முறையில் அரசாங்கத்தின் கடப்பாடு மீதான...

2024-07-08 16:03:50
news-image

பெருந்தோட்டப் பகுதிகளில் தீவிரமடையும் போஷாக்கின்மை! : ...

2024-07-07 16:54:00
news-image

மூன்று வருடங்களில் பத்தாயிரம் வீடுகள் சாத்தியமா?...

2024-07-07 16:02:29
news-image

பிரான்ஸிய தேசியவாத எழுச்சி

2024-07-07 18:19:37
news-image

முதலீடுகள், வட்டி வருமானம், வரி

2024-07-07 18:19:52
news-image

பிரித்தானிய தேர்தலில் ஈழத்தமிழ் பெண்ணின் வெற்றி

2024-07-07 16:58:15