-ஆர்.ராம்-
“யாழ். மாவட்டத்தில், பாடசாலை மாணவ, மாணவிகள் போதைப்பொருட்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளமையானது நிலைமைகள் கைமீறிச் சென்றுவிட்டதை வெளிப்படுத்தியுள்ளது”
“மகனின் நடத்தையில் நிறையவே மாற்றங்கள் உள்ளன. தினமும் வீட்டிற்கு நள்ளிரவை அண்மித்தே வருகின்றான். தனது செலவுக்காக தினமும், காலையில் ஆயிரம் ரூபா வரையில் கோருகிறான். அதற்கான காரணத்தினை வினவுகின்றபோது கோபப்படுகின்றான். ஏதோ தவறாக உள்ளது என்பதை உள்மனம் கூறுகிறது. இருப்பினும், இன்னும் ஓராண்டில் உயர்தரப் பரீட்சை நிறைவுக்கு வந்துவிடும். அதன்பின்னர் அவனை வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டால் அனைத்து பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்”
இக்கூற்றுக்கள் யாழ்ப்பாணத்தில் அரசசேவையில் பணியாற்றிக்கொண்டு கௌரவமான சமூக அந்தஸ்துடன் வாழும் பெயர் குறிப்பிடவிரும்பாத பெற்றோருக்குச் சொந்தமானவை.
“வயிற்றுவலி என்று கூறியவாறு வைத்தியசாலைக்கு வரும் இளைஞர்கள் பொதுச்சிகிச்சை வார்ட்டில் அனுமதிக்கப்படுகின்றார்கள். அவர்களுக்கான படுக்கை கிடைக்கப்பெற்றதும் கனூலாவை பொருத்தி சேலையின் இணைப்புடன் ஆரம்பசிகிச்சை தொடங்குகிறது. எனினும் சொற்பநேரத்தில் அவர்கள் வார்டிலிருந்து காணாமலாகிவிடுகின்றார்கள்” இக்கூற்றுக்கள் யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் சுகாதாரத்துறை ஊழியர்களுக்குச் சொந்தமானவை.
குறித்த கூற்றுக்கள் வடக்கில் போதைப்பொருள் பாவனை பற்றிய அறிக்கையிடலுக்காக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்துக்கான களவிஜயத்தின் போது இக்கட்டுரையாளரிடத்தில் மேற்படி தரப்புக்களால் நேரடியாகவே தெரிவிக்கப்பட்டுள்ளன.
இவை, இனவழிப்புக்கான நீதியையும், இனவிடுதலைக்காக சுயநிர்ணய உரிமையுடனான அதிகாரப்பகிர்வையும் கோரிவரும் ஒருதேசிய இனக்குழுமமான தமிழினத்தினது செல்நெறிப்போக்கின் மிகமோசமான தாழ்நிலைக்கு அண்மித்த உதாரணமாக காணப்படுகின்றது.
யாழில் தொடரும் பரிதாபம்
இவ்வாறிருக்கையில், “கடந்த மூன்று மாதங்களில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகுவதால் உயிரிழப்புச் சம்பவங்கள் சடுதியாக அதிகரித்துள்ளன” என்று குறிப்பிடும் யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர். தங்கமுத்து சத்தியமூர்த்தி, இவ்வருடத்தில் மாத்திரம் 11பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த உயிரிழப்புச் சம்பவங்கள் அனைத்தும், குருதி நாளங்களூடாக போதைப்பொருளை உடலில் ஏற்றுகின்ற போதே அதிகளவில் சம்பவித்துள்ளன” என்று குறிப்பிடும் அவர், “மிகையான போதைப்பொருள் உடலில் செலுத்தப்பட்டமையாலும் சில உயிரிழப்புக்கள் நிகழ்ந்தள்ளன” என்றும் கூறியுள்ளார்.
அத்துடன், “வெளிப்படுத்தப்பட்ட தரவுகளின் அடிப்படையில், யாழ் சிறைச்சாலையில் 10பெண்கள் உட்பட 491 பேர் போதைப்பொருள் பாவனையாளர்களாக இருந்த நிலையில் அந்த எண்ணிக்கை இரட்டிப்பாகி இந்த வருடம் 13பெண்கள் உட்பட 854 பேர் போதைப்பொருள் பாவனையாளர்களாக உள்ளனர்” என்றும் வைத்தியர். தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதனைவிடவும் “ஹெரோயின் பாவனையால் சட்ட மருத்துவ அதிகாரியின் அலுவலகத்தில் 165பேர் சேர்க்கப்பட்டுள்ளதோடு சிறைச்சாலையில் 300பேர் வரையிலும் உள்ளனர்” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மட்டும் கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமையவே மேற்படி தரவுகள் காணப்படுவதோடு, வடக்கின் ஏனைய வைத்தியசாலையின் தரவுகளையும், சமூகத்தினுள் தொடர்போதைப்பொருள் பாவனையாளர்களாக உள்ளவர்களின் எண்ணிக்கையும் கவனத்தில் கொள்ளப்படும் பட்சத்தில் மிகப்பெரிய எண்ணிக்கையே வெளிப்படும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர். தங்கமுத்து சத்தியமூர்த்தியின் கூற்றுக்கள், யாழ்.மாவட்டம் உட்பட வடக்கில் போதைப்பொருள்பாவனையானது சமூகத்திற்குள் எவ்வளவு தூரம் வேரூன்றியிருக்கின்றது என்பதை சான்றுபகர்வதாக உள்ளது.
அதேநேரம், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை வலியுறுத்தி ஐந்தம்ச கோரிக்கைகள் அடங்கிய மகஜரை யாழ்.போதனா வைத்தியசாலை சமூகம் பேரணியாகச் சென்று யாழ்.மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசனிடத்தில் கையளித்துள்ளது.
குறித்த மகஜரில்,
• போதைப்பொருள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முப்படைகளையும் உடனடியாக வலியுறுத்துதல்.
• போதைப் பொருள் விநியோகம் தொடர்பான தகவல்களை வழங்குவோரை பாதுகாப்பதற்கான பொறிமுறையை உருவாக்குதல்.
• போதைப்பொருள் சம்பந்தமான தகவல்களை தயக்கமின்றி வழங்க அதிபர்கள் ஆசிரியர்களை ஊக்கப்படுத்தல், அவர்களைப் பாதுகாத்தல்;.
• போதைப் பொருள் பாவனைக்கு எதிரான மக்கள் பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து பொலிஸாருடன் இணைந்து போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு உதவியளித்தல், ஊக்கப்படுத்துதல்;.
• போதைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிப்பதற்கு உரிய கட்டமைப்புகளை உருவாக்குதல் அதன் தொடர்ச்சியான செயற்பாடுகளை உறுதிப்படுத்தல்
ஆகிய விடயங்கள் காணப்படுகின்றன. அவ்விடயங்கள், யாழ் குடநாட்டின் பாரதூரமான நிலைமையின் வெளிப்பாடாகவே உள்ளது.
அதிர்ச்சியும் அதிருப்தியும்
“யாழ். மாவட்டத்தில் உள்ள 20 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஹெரோயின் பாவனைக்கு அடிமையாகியுள்ளனர்” என்று தெரிவித்துள்ள யாழ்.மாவட்ட பொலிஸார் 18 – 23 வயதுக்கும் இடைப்பட்டவர்களே ஹெரோயினுக்கு அதிகளவில் அடிமையாகியுள்ளனர்” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
“இரண்டு மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட போதை மறுவாழ்வு நிலையத்தில், தமது தரப்பிலிருந்து இதுவரை 134பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிடும் பொலிஸார் யாழ்ப்பாணம் உட்பட வடபகுதிக்கு கடல்வழியாகவும், தரைவழியாகவும் போதைப்பொருள் கொண்டுவரப்பட்டு முகவர்கள் ஊடாக பகிர்ந்தளிக்கப்படுகின்றது” என்று உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய சூழலில், “யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலைகளின் மாணவர்களும் போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ளதோடு, தமது நடவடிக்கைகளுக்கு அப்பால், சமுதாயத்தின் முழுமையான ஒத்துழைப்பு அவசியமாக உள்ளது” என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, “மன்னார் முதல் வெற்றிலைக்கேணி வரையிலும், காங்கேசன்துறையிலும் கடற்படை படகு மூலம் விசேட கண்காணிப்புச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. கடற்கரையோரப்பகுதிகளில் விசேட ரோந்துச் நடவடிக்கைகளிலும் கடற்படையினர் ஈடுபடுகின்றனர்” என்று கடற்படைப் பேச்சாளர் கப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணக் குடாநாட்டைச் சுற்றிய கடற்பரப்பின் அளவு 273 கடல் மைல்களாகும். இதனை பாதுகாக்கும் பெயரில் 93 முகாம்கள் அல்லது காவல்நிலையங்களில் கடற்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதனைவிட, தரையில் விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட இராணுவமும், புலனாய்வாளர்களும் போதுமான அளவில் உள்ளனர். அவ்வாறிருக்கையில், போதைப்பொருட்கள் ‘தராளமாக’ குடாநாட்டிலும் வடக்கிலும் எவ்வாறு புழக்கத்தில் உள்ளது என்பது வினாவாகின்றது.
இந்தியாவின் தென்பகுதியிலிருந்தே இலங்கையின் வடகடற்பரப்புக்குள் போதைப்பொருட்கள் பெருமளவில் கொண்டுவரப்படுகின்றன. இவற்றில் இந்திய, இலங்கை கடற்படையினரிடத்தில் சிக்குபவை போக எஞ்சியவை குடாநாடு உள்ளிட்ட வட பகுதிக்குள் கொண்டுவரப்படுகின்றது. இவற்றில் ஒருதொகுதி நாடாளவிய விநியோகத்திற்காக பகிரப்படுவதோடு எஞ்சியவை, வடகடற்பரப்பிலிருந்து வேறு சில நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் தகவல்கள் உள்ளன.
அதேநேரம், ஹெரோயின், ஐஸ் உள்ளிட்டவை பெருமளவில் தென்னிலங்கையிலிருந்தே வடக்கிற்கு கொண்டு வரப்படுவதாக கூறப்படுகின்றது. அதற்கான சான்றுகள் எவையும் உறுதிப்படுத்தப்படாத நிலைமைகளும் நீடிக்கின்றது.
கூட்டுப் பொறுப்பும் கூட்டுச் செயற்பாடும்
இதேவேளை,“அண்மைய காலத்தில் வடக்கு மாகாணம் போதைப்பொருள் கடத்தல் மையமாகியுள்ளது என்பதை உணரமுடிகின்றது. அந்நிலைமை ஏற்படுவதற்கு வடக்கைச் சுற்றி கடற்பரப்பு இருப்பதும், அதனை அண்மித்து வாழும் வறுமையான கடற்றொழிலாளர்கள் சிலரின் செயற்பாடுகளும், சமூக விரோதக்குழுக்களின் மேலெழுச்சியும் காரணமாகின்றன” என்று யாழ்.மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
“யாழ்.மாவட்டத்தில் மாத்திரம் காங்கேசன்துறை, பருத்தித்துறை, குருநகர், நாவாந்துறை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக போதைப்பொருட்கள் பெருமளவில் கைப்பற்றப்படுகின்றன. இதனைவிடவும் மன்னார் உள்ளிட்ட கடற்பரப்புக்களிலும் பெருமளவில் போதைப்பொருட்கள் கைப்பற்றப்படுகின்றன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், “மாவட்ட செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை மீட்கும் செயற்றிட்டத்தின் கீழ் 12பேர் கந்தக்காடு புனவர்ழ்வு முகாமிற்கு அனுப்பட்டுள்ளனர்” என்று கூறியுள்ள அவர், “மனநல ஆலோசனை சிகிச்சைக்காக, யாழ்.சிறைச்சாலையில் 304பேரும், சமூகத்திலிருந்து கடந்த ஆண்டு 354பேரும், இந்த ஆண்டில் இதுவரை 167பேரும் உள்வாங்கப்பட்டுள்ளனர்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“போதைப்பொருள்களுக்கு அடிமையானவர்களை மீட்பதற்காக, தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபைக்கான ‘தடுப்பு மையமொன்றை’ அமைப்பதற்கு முயற்சிக்கின்றோம். கோப்பாயில், உள்ள கட்டடம் தற்காலிமாகவே வழங்க முடியும் என்பதால் மருதங்கேணியில் நிரந்தரக் கட்டடத்துக்கான காணிகளை வழங்கத் தயராக உள்ளோம்” என்றும் அவர் கூறினார்.
இதனைவிடவும், “1927 என்னும் தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதோடு, மாவட்ட செயகத்தில் உள்ள தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபை மற்றும் சிறுவர்பதுகாப்பு அதிகாரசபை உத்தியோகத்தர்கள், சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர்கள் ஆகியோரின் கூட்டுச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன” என்றும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், “போதைப்பொருள்களுக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்கும் செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு அப்பால், போதைப்பொருள்களுக்கு அடிமையாவதை முற்கூட்டியே தடுக்க வேண்டும்” என்று யாழ்.மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் வலியுறுத்தியுள்ளார்.
சவால்கள்
அதனடிப்படையில், யாழ்.குடாநாடு உட்பட வடக்கினுள் போதைப்பொருட்கள் கொண்டுவரப்படுவதை தடுப்பதில் பெரும் சவால்கள் உள்ளன. குறிப்பாக, கடற்படையால் வடகடலுக்கான இருபத்துநான்குமணிநேர பாதுகாப்பை வழங்க முடியாத நிலைமைகள் காணப்படுகின்றது.
அதேநேரம், கடற்றொழிலாளர்களின் படகுகளில் சிறிய பொதிகளாக வருகின்றவற்றை அடையாளம் காண்பதும் கடினமானதாக இருக்கின்றது. அதுமட்மன்றி, கடற்கரையோரத்தில் வாழ்பவர்களின் முழுமையான ஒத்துழைப்புடன் சட்டவிரோத கடத்தல்கள் நடைபெறுகின்றபோது அவற்றை அடையாளம் காண்பதும் கடினமானதாக உள்ளது.
இதேவகையான சாவல்கள் தான் பொலிஸாருக்கும், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் உள்ளன. இதனைவிடவும், யாழ்.போதனா வைத்தியசாலை உள்ளிட்ட வடக்கு வைத்தியசாலைகளில் காணப்படும் மருத்துவ தட்டுப்பாடுகளால் போதைப்பொருட்களை அதிகளவில் நுகர்ந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவர்களுக்கான தீவிரமான சிகிச்சைகளை வழங்குவதில் நெருக்கடிகள் காணப்படுகின்றன.
அதுமட்டுமன்றி, போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள் தம்மை அடையாளப்படுத்தாது, அவர்களுக்குள்ள வேறு நோய்களுக்கான மருத்துவ சிகிச்சைகளை பெறுவதற்கு முனைகின்றமையும், சிகிச்சைகளுக்கு பின்னர் மீண்டும் போதைப்பொருட்களை நுகருகின்றமையும் இக்கட்டான சூழல்களை சுகாதாரத்துறையினருக்கு ஏற்படுத்துவதாக உள்ளது.
இதனைவிட, சமூகத்தில் போதைப்பொருள் பாவனையாளர்கள் தம்மை அடையாளப்படுத்தாது, அதிலிருந்து மீள்வதற்கான செயற்றிட்டங்களில் பங்கேற்பதை தவிர்ப்பதும் போதை ஒழிப்பில் மிகப்பெரும் சவலாக உள்ளது. அதேநேரம், போதைப்பொருள்பாவனையாளர்களை அடையாளம் காண்பிக்கும், உறவினர் உள்ளிட்ட தரப்பினரை நோக்கிய வன்முறைகள் பெரும் சமூகப் பதற்றங்களை தோற்றுவிப்பதாக உள்ளது.
அதுமட்டுமன்றி, போதைக்க அடிமையான ஒருவர் அதிலிருந்து மீண்டு மீண்டும் சமூகத்துடன் இணைகின்றபோது, அவரை அடையாளப்படுத்தி ஓரங்கட்ட முனைவதும் மீட்சிப்பயணத்தில் முகங்கொடுக்கும் மிகப்பெரும் சவால்களில் முக்கியமானதாகின்றது.
இந்நிலையில், யாழ்.மாவட்டம் உட்பட வடக்கில் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதாக இருந்தால் கூட்டாக பொறுப்புக்கூறும் வகையில் கூட்டுச் செயற்பாடு அவசியமாகின்றது.
அதற்கான பொறிமுறையானது அரச கட்டமைப்புக்கள் முதல் சிவில் சமுகங்கள் சதாரண பொதுமக்கள் வரையில் உள்ளீர்க்கப்பட்டு உருவாக்கப்பட வேண்டியுள்ளது.
இப்பொழுதே நிலைமைகள் கைமீறிச் சென்றுள்ள நிலையில் இனியும் காலம் தாழ்த்துவது, எதிர்கால சந்ததியை ‘இனப்படுகொலை’ செய்வதற்கு சமமானதாகவே இருக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM