நடிகர் மைக்கேல் தங்கதுரை நடிக்கும் 'ஆரகன்' படத்தின் டீசர் வெளியீடு

Published By: Digital Desk 5

01 Oct, 2022 | 04:02 PM
image

சின்னத்திரை தொகுப்பாளர், தொலைக்காட்சி தொடர் நடிகர், வண்ணத்திரை நடிகர்... என படிப்படியாக உயர்ந்து, இன்று வளர்ந்து வரும் திரை நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் மைக்கல் தங்கதுரை கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஆரகன்' படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'ஆரகன்'. இதில் மைக்கேல் தங்கதுரை கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக எம் மண்ணின் மங்கையான நடிகை கவிப்பிரியா நடித்திருக்கிறார். நடிகைகள் ஸ்ரீரஞ்சனி, கலைராணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சூர்யா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விவேக் - ஜஸ்வந்த் எனும் இரட்டையர்கள் இசையமைத்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை ட்ரெண்டிங் ஆர்ட்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹரிஹரன் பஞ்சலிங்கம் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில தினங்களுக்கு முன் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. டீசரில் அடர்ந்த காடுகளுக்கிடையே நாயகனும், நாயகியும் அமானுஷ்ய சக்திகளுடன் போராடும் காட்சிகள் இடம் பெற்றிருப்பதால், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தயாரிப்பாளர் ஹரிஹரன் பஞ்சலிங்கம் எம் மண்ணிலிருந்து புலம்பெயர்ந்து நோர்வே மற்றும் இங்கிலாந்து நாடுகளில் வசிப்பவர் என்பதும், இவர் ஏற்கனவே ஆங்கில மொழியில் தயாரான இரண்டு குறும்படங்களை  தயாரித்தவர் என்பதும், தற்போது 'ஆரகன்' படத்தின் மூலமாக தமிழ் மொழியில் முழு நீள திரைப்படத்தை தயாரித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' இன்றைய திகதியில் வாழ்க்கை நடைமுறையில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. நாம் மருத்துவத்துறை மற்றும் சுகாதாரத்தறையினரின் மறைமுகமான சுரண்டலுக்கு எதிர்வினை ஆற்றாமல் ஆட்படுகிறோம். தமிழ் மருத்துவம் குறித்தும், சித்தர்கள் குறித்தும், அமானுஷ்யமான விடயங்கள் குறித்தும் இப்படத்தின் திரைக்கதை ஃபேண்டஸி திரில்லர் ஜேனரில் அமைக்கப்பட்டிருக்கிறது.'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right