அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பின் வெற்றி மற்றைய இனத்தவர்கள், மதத்தவர்கள் மீதான வெறுப்புணர்வின் அடிப்படையிலான கொள்கைகளைக் கொண்ட  கடும் தேசியவாத அரசியல் சக்திகளுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. அந்த தேர்தலுக்கு  பின்னரான நாட்களில் இது குறித்து பரவலாக  கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்ட  வண்ணமிருக்கின்றன. இலங்கையில்  உள்ள அத்தகைய  தேசியவாத அரசியல் சக்திகள் அமெரிக்க குடியரசு கட்சியின் வேட்பாளரின் எதிர்பாராத  வெற்றியையடுத்து எக்களிப்புடன் கூடிய நம்பிக்கையுணர்வுடன்  கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அவற்றில் பிரபலமான சிங்கள எழுத்தாளரும் தேசிய அமைப்புக்களின் சம்மேளனத்தின்   அமைப்பாளருமான டாக்டர் குணதாச அமரசேகர  தெரிவித்த கருத்தொன்று  எமது கவனத்தைப் பெரிதும் ஈர்த்திருக்கிறது. அதற்கான பிரதான காரணத்தை இக்கட்டுரையின் போக்கில் வாசகர்களினால் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். 

சிறுபான்மையினத்தவர்களின் அமோகமான ஆதரவு இல்லாமல் தேசியத் தேர்தல்களில் வெற்றி பெற முடியுமென்பதை அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் நிரூபித்திருக்கிறது என்று டாக்டர் அமரசேகர குறிப்பிட்டிருக்கிறார். டொனால்ட் ட்ரம்பின் வெற்றி தங்களுக்கு  பெரும் உற்சாகத்தைத் தந்திருப்பதாகவும்  பிரதானமாக பெரும்பான்மைச் சமூகத்தின் பலத்திலேயே முக்கியமான  தேர்தல்களில் வெற்றிபெற முடியுமென்ற தங்களது நம்பிக்கை நியாயப்படுத்தப்பட்டிருக்கிறது என்றும்  அவர்  கடந்தவாரம் கொழும்பில் செய்தியாளர் மாநாட்டில் கூறியிருக்கிறார். மேலும், விடுதலைப் புலிகளுடன்  சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கின்றவர்கள் டொனால்ட் ட்ரம்பின்  வெற்றியிலிருந்து படிப்பினையைப்  பெற்றுக்கொள்ள வேண்டும். இலங்கையைப் பொறுத்தவரையில்  மாத்திரமல்ல, முழு உலகைப் பொறுத்தவரையிலும்  கூட,மிகவும் அவசியமான ஒரு தருணத்திலேயே  அமெரிக்காவில்  குடியரசுக் கட்சிக்காரர் ஜனாதிபதியாக பதவியேற்கவிருக்கிறார் என்றும் டாக்டர் தெரிவித்திருக்கிறார். 

அமெரிக்காவில்  கறுப்பினத்தவர்கள் உட்பட சிறுபான்மையினத்தவர்களின் வாக்குகளைப் பெறுவதில் ஆர்வம்  காட்டாமல் பெரும்பான்மையினத்தவர்களான வெள்ளையர்களின் பேராதரவில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதை டாக்டர்  அமரசேகர மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றார் என்றால், இலங்கையிலும்  அவர்  எதை  எதிர்பார்க்கிறார் என்பதை புரிந்துகொள்வதற்கு எவரும் அரசியல் விஞ்ஞானியாக இருக்க வேண்டியதில்லை. பெரும்பான்மையினத்தவர்களான சிங்களவர்களின் வாக்குகளை அமோகமாகப்  பெறுபவரே  இலங்கையில் ஆட்சியாளராக இருக்க வேண்டும் என்பதே அவரின் விருப்பமாக இருக்கிறது. சிறுபான்மையினத்தவர்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளில் குறைந்தபட்சமானவற்றைக் கூட அங்கீகரிக்கத் தயாரில்லாத தேசியவாத அமைப்புக்களை உள்ளடக்கிய சம்மேளனத்தின்  அமைப்பாளராக இருக்கும் டாக்டர் அமரசேகர, சிறுபான்மையினங்களைச் சேர்ந்த வாக்காளர்கள்  கொழும்பில்  ஆட்சியதிகாரத்துக்கு வருபவர்களைத் தீர்மானிப்பதில் எந்தவிதமான பங்கையும் கொண்டிருக்கக்கூடிய அந்தஸ்தில் இருக்கக்கூடாது என்பதே அவர் தனது கருத்துக்களின் மூலமாக உணர்த்துகின்ற செய்தியாகும். 

ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இத்தகைய கருத்தியல் முனைப்படைந்ததை நாமெல்லோரும் ஏற்கனவே அறிவோம். 

2015 ஜனவரி 8 ஜனாதிபதித்  தேர்தலில் தோல்வியடைந்த பிறகு அடுத்தடுத்த நாள் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான வீரக்கெட்டியாவுக்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வாசஸ்தலத்தின் முன்பாக திரண்ட ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றியபோது ‘மைத்திரிபால சிறிசேன  ஈழம் வாக்குகளினால் தான் தேர்தலில்  வெற்றி பெற்றார்’ என்று  கூறியதைப் பலரும் மறந்திருக்கமாட்டார்கள்.  சிங்களவர்கள் அல்ல, தமிழர்களே சிறிசேனவை ஜனாதிபதியாக்கியிருக்கிறார்கள் என்பதே ராஜபக் ஷ தென்னிலங்கைக்கு தெரிவிக்க விரும்பிய செய்தியாகும். 

தமிழர்களின் வாக்குகள்  மாத்திரமல்ல, ஒட்டுமொத்தமாக முஸ்லிம்களின்  வாக்குகளும் அன்று  எதிரணியின்  பொதுவேட்பாளராக நின்ற மைத்திரிபால சிறிசேனவுக்கு  கிடைத்தன என்பதே உண்மை. தமிழர்களைப்  பொறுத்தவரை,  அவர்கள் ராஜபக் ஷவை  எந்தளவுக்கு வெறுத்தார்கள் என்பதை 2010 ஜனவரி 26 ஜனாதிபதித் தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு  தமிழ்ப் பகுதிகளில் பெருவாரியாகக் கிடைத்த வாக்குகள்  வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தன. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தமிழர்கள் மாத்திரமல்ல, மலையக தமிழர்களும் அதிகப் பெரும்பான்மையாக பொன்சேகாவுக்கே வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தங்களுக்கு பெரும் அவலத்தையும் அழிவையும் ஏற்படுத்திய போரின் இறுதிக் கட்டங்களில் இலங்கை இராணுவத்துக்கு தலைமை தாங்கிய தளபதி பொன்சேகாவை விடவும், ராஜபக் ஷவையே  தமிழர்கள் கூடுதலான  அளவுக்கு வெறுத்தார்கள் என்பதை அது நிரூபித்தது. தங்களை அரசியல் ரீதியாக வீரியமற்ற ஒரு சமுதாயமாக ராஜபக் ஷவின்  கொள்கைகளும் செயற்பாடுகளுமே  மாற்றியமைத்தன என்பதை  தமிழர்கள் நன்குணர்ந்துகொண்டதனாலேயே அத்தகைய  நிலைப்பாட்டை  அவர்கள்  எடுத்தார்கள். 

விடுதலை புலிகளுக்கு  எதிரான போரில் ராஜபக் ஷ அரசாங்கத்துக்கு  ஆதரவான நிலைப்பாட்டையே பெரும்பாலான முஸ்லிம் அரசியல் கட்சிகள்  எடுத்திருந்த போதிலும் கூட,  போரின்  முடிவுக்குப் பின்னரான கால கட்டத்தில்  முஸ்லிம் சமூகத்துக்கு எதிராகத் தென்னிலங்கையில் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாதப் பிரசாரங்களையும்  வன்செயல்களையும் கட்டுப்படுத்துவதற்கு அந்த அரசாங்கம் உருப்படியான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கு அப்பால், முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ராஜபக் ஷ  அரசாங்கம்  அனுசரணையாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தது என்று முஸ்லிம்கள் நம்பிக்கை கொள்ளக் கூடியதாகவே நிலைவரங்கள் காணப்பட்டன. பொதுபல சேனா போன்ற சிங்கள–பெளத்த  பேரினவாத சக்திகளுடன் ராஜபக் ஷ அரசாங்கத்தின் முக்கிய  உறுப்பினர்களுக்கு ஒட்டுறவு இருந்தது என்பது ஒன்றும்  இரகசியமானதல்ல. முஸ்லிம் மக்கள் ராஜபக் ஷவுக்கு எதிராக ஒட்டு மொத்தமாக அணிதிரள்வதற்கு அதுவே காரணமாயமைந்தது.  

இலங்கையில் நடைபெற்ற முதல் மூன்று ஜனாதிபதித் தேர்தல்களிலுமே வெற்றி பெற்றவர்களைத் தீர்மானித்ததில் நாட்டில் சிறுபான்மைச் சமூகங்களின் வாக்குகளுக்கு தீர்க்கமானதொரு பங்கு இருந்தது.  சிங்களவர்களின் வாக்குகளைப் பெருமளவுக்கு  பெற்றால் மாத்திரம் போதாது, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு  சிறுபான்மைச் சமூகங்கள் மத்தியில்  இருந்தும் கணிசமான வாக்குகளை  பெறவேண்டியிருந்தது என்பதே அன்றைய தேர்தல் அரசியல் யதார்த்த நிலை. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களோ  அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்களோ இனக்குழும பெரும்பான்மைவாத  (Ethnnic Majoritarianism)  அரசியலை உறுதியாக முன்னெடுத்து வந்த போதிலும்,  ஜனாதிபதித்  தேர்தல் என்று வரும்போது சிறுபான்மைச் சமூகங்களின் வாக்குகளையும் சாத்தியமான அளவுக்கு  பெறக் கூடியதான அணுகுமுறையையே கடைப்பிடித்ததைக் காணக்கூடியதாக இருந்தது. 

1982 அக்டோபரில்  நடைபெற்ற இலங்கையின் முதல் ஜனாதிபதித்  தேர்தலில்  ஜே.ஆர்.ஜெயவர்தனவுக்கு வடக்கு, கிழக்கில் தமிழர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு  இருந்தபோதிலும், மலையகத் தமிழர்களின் வாக்குகள் அவரின் வெற்றிக்கு பெருமளவுக்கு உதவியிருந்தன. மலையக  மக்களின் வாக்குகள் அவருக்கு கிடைப்பதை காலஞ்சென்ற  செளமிய மூர்த்தி தொண்டமான் தலைமையிலான  இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுதி செய்தது. பிறகு 1988 டிசம்பரில் நடைபெற்ற  இரண்டாவது  ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட ரணசிங்க பிரேமதாசவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட திருமதி சிறிமா பண்டாரநாயக்கவும் தங்களால் இயன்றவரை சிறுபான்மையினக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கான அணுகுமுறைகளை வகுத்தே செயற்பட்டனர். முன்னரைப் போன்றே தொண்டமானும் மலையக மக்களும் பிரேமதாசவை ஆதரித்த அதேவேளை, திருமதி பண்டாரநாயக்காவின் மேடைகளில் அகில இலங்கை  தமிழ் காங்கிரஸின்  பொதுச்செயலாளரான  காலஞ்சென்ற குமார்  பொன்னம்பலம் முக்கியமான ஒரு  பேச்சாளராக விளங்கினார். 

1994 நவம்பரில் நடைபெற்ற மூன்றாவது ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரக்கட்சி  தலைமையிலான பொதுஜன முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிட்ட திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அமோக வெற்றியில் சிறுபான்மை சமூகங்களின் வாக்குகள் முக்கியமான பங்கை வகித்தன.. சகல சமூகங்களினதும் கணிசமான  ஆதரவைப் பெறமுடியாத ஒரு அரசியல்   தலைவரினால் 'ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்பதே அரசியல் விஞ்ஞானிகளின் பொதுப்படையான மதிப்பீடாக இருந்தது. 

அது வரையான தேர்தல்கள் முடிவுகள் இந்த மதிப்பீட்டை  நிரூபித்தவையாகவே விளங்கின.

2005 நவம்பர் 'ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் பெருமளவில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு  வாக்களிக்காதிருப்பதை உறுதி செய்தால் மாத்திரமே தன்னால் வெற்றிபெறக் கூடியதாக இருக்குமென்று ராஜபக் ஷ வகுத்த வியூகத்தின்  அடிப்படையிலேயே  விடுதலை புலிகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில்  தமிழர்களை வாக்களிக்கவிடாமல்  தடுக்கும் காரியத்தைச் செய்தார்கள் என்பது  எல்லோருக்கும் தெரியும். தமிழர்கள் வாக்களிப்பில் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொள்ளாத நிலையில் அந்த ஜனதிபதித்  தேர்தலில் வெற்றிபெற்ற ராஜபக் ஷ சிங்கள மக்களினால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி என்று தன்னைக்  காட்சிப்படுத்துவதில் முனைப்பாகச் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதற்குப் பின்னரான  கால கட்டத்தில் போரை  முழு வீச்சில் தீவிரப்படுத்திய  ராஜபக்ஷ  அரசாங்கம் சிங்கள மக்கள் மத்தியில்  பெரும்  ஆதரவைப்  பெறத் தொடங்கியது.  இறுதியில் போர் வெற்றி  ராஜபக் ஷாக்களுக்கு சிங்கள மக்களின் ஏகபோக தலைமைத்துவத்துக்குரியவர்கள்  தாங்களே என்ற  மமதையைக் கொடுத்தது. நாளடைவில் அவர்கள் சிங்கள மக்களின் வாக்குகளினால் மாத்திரம் ஒரு அரசியல்வாதியினால் நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட முடியும் என்று புதியதோர் அரசியல் வரைவிலக்கணத்தையும் வகுத்துக்கொண்டார்கள். அதன் தொடர்ச்சியாக ராஜபக் ஷாக்கள்  தென்னிலங்கை அரசியல் கட்சிகள் மத்தியில் தங்களின் தலைமையிலான ஆட்சி மாத்திரமே  தேசிய பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த முடியும் என்றும் தாங்கள் மாத்திரமே  சிங்கள பெளத்தர்களின் நலன்களைப்  பேணிப்பாதுகாக்கக் கூடிய வல்லமை கொண்டவர்கள் என்றும் ஒரு பிரதிமையைக்  கட்டி வளர்த்தார்கள். அதற்கு ஆட்சியதிகாரத்தை அவர்கள்  உச்சபட்சத்துக்கு பயன்படுத்தினார்கள்.. ….. இல்லை துஷ்பிரயோகம் செய்தார்கள் என்று சொல்வதுதான் பொருத்தமானது. 

இந்த அதிகார துஷ்பிரயோகங்களின் தொடர்ச்சியாக  ராஜபக் ஷாக்கள் சிறுபான்மையினச் சமூகங்களின்  அரசியல் அபிலாசைகளுக்கும் உரிமைகளுக்கும்  முற்றிலும் எதிரானவர்கள் என்று தங்களை சிங்கள மக்களுக்கு  காட்டிக்கொள்வதற்காக  அந்தச்   சமூகங்களுக்கு எதிரான இனவாதப் பிரசாரங்களையும் வன்முறைச் செயற்பாடுகளையும் உத்வேகப் படுத்துகின்ற கொள்கைகளையும்   அணுகு முறைகளையும்  கடைப்பிடித்தார்கள். போரின் முடிவுக்குப் பின்னரான காலகட்டத்தில்  தமிழ் மக்களுக்கு ஆரோக்கியமான உணர்வுடன் அரசியல் ரீதியில் நேசக்கரத்தை நீட்டாமல் தொடர்ந்தும் அவர்களை இராணுவ முற்றுகை நிலையில் வைத்திருக்கும் நடவடிக்கைகளையே முன்னெடுத்தார்கள். அதற்குச் சமாந்தரமாக தென்னிலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் அதிகரித்துக் கொண்டேவந்தன. இறுதியில், இலங்கையில் இதுவரையில் ஆட்சியதிகாரத்தில் இருந்த தலைவர்களுடன் ஒப்பிடும்போது சிங்கள கிறிஸ்தவர்கள் உட்பட சகல சிறுபான்மையினச் சமூகங்களினாலும் பெரிதும் வெறுக்கப்பட்ட ஒரு  தலைவராக ராஜபக் ஷ விளங்கியதைக் காணக்கூடியதாக இருந்தது. 

இதற்கான விலையை அவர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் செலுத்தினார். சிறுபான்மையினச் சமூகங்களின் அமோகமான  ஆதரவுடன்  மைத்திரிபால சிறிசேன  வெற்றிபெற்று நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு கருத்து வெளியிட்ட பிரபலமான உள்நாட்டு அரசியல் ஆய்வாளர் ஒருவர் ‘இலங்கையின் வாக்காளர் தொகுதி (Electorate) வழமை நிலைமைக்குத் திரும்பிவிட்டது' என்று குறிப்பிட்டிருந்தார். அதாவது, சகல சமூகங்களினதும்  கணிசமான   ஆதரவைப் பெறுபவரே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறக்கூடியதாக இருக்கும் என்ற முன்னைய மதிப்பீடு மீண்டும் சரியானதென்று நிருபிக்கப்பட்டதையே அவர்  அவ்வாறு வர்ணித்தார். 

சிங்களவர்களின் ஆதரவை மாத்திரம் கொண்டிருந்தால் போதும் தங்களை எவராலும் அசைக்க முடியாது என்று இறுமாப்புடன் நினைத்துச் செயற்பட்டுக் கொண்டிருந்த ராஜபக் ஷாக்கள் தங்களது  பிரமாண்டமான தவறைப்  புரிந்துகொண்டார்களோ தெரியவில்லை. ஆனால்,   அவர்கள் மீண்டும் அதே தவறான பாதையில் நம்பிக்கை வைப்பதற்கு மனங்கொள்ளக்கூடிய சூழ்நிலையை அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெள்ளையின வெறியை வெளிப்படையாகக் காட்டிக்கொள்வதில்  எந்த அசெளகரியத்தையும் காணாத டொனால்ட் ட்ரம்ப் பெற்ற வெற்றி ஏற்படுத்தியிருக்கிறது என்று நினைக்கத் தோன்றுகிறது. டாக்டர் குணதாச அமரசேகர போன்ற கடும் போக்கு சிங்கள தேசியவாத சக்திகள் தெரிவிக்கின்ற கருத்துக்கள் மீண்டும் சிங்களவர்களின்  அமோக ஆதரவுடன் மாத்திரம் ராஜபக் ஷாக்களை ஆட்சியதிகாரத்துக்கு கொண்டுவரவேண்டுமென்ற விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன என்பதில் சந்தேகமில்லை. 

சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகளை மதித்து அவர்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதை மாத்திரம் இந்த சிங்களத் தேசியவாதிகள் எதிர்க்கவில்லை. சர்வசன வாக்குரிமை என்ற கோட்பாடுகளின் அடிப்படையில் சிறுபான்மையினத்தவர்களுக்கு இருக்கக்கூடிய அடிப்படைக் குடியியல் அந்தஸ்தைக் கூட இவர்கள் மதிக்கத் தயாராயில்லை. அதாவது சகல இனத்தவர்களினதும் வாக்குகளும் சமமான அந்தஸ்தையுடையதே என்பதற்கு பதிலாக பெரும்பான்மையினத்தவர்களின் வாக்குகளுக்கு கூடுதல் அந்தஸ்து இருக்கிறது என்பது போன்று  பேசுவதை காணக்கூடியதாக இருக்கிறது.

இலங்கையின் அரசியல் ஆய்வாளர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவரான திஸ்ஸரணி  குணசேகர, டொனால்ட் ட்ரம்பின் வெற்றி தொடர்பாக கடந்தவாரம் எழுதிய 'டொனால்ட் ட்ரம்புடன் சேர்ந்து சொர்க்கத்தைப் மீளப் பெறுதல் என்ற தலைப்பிலான கட்டுரையில் மிகுந்த  அரசியல் நுண்ணறிவுத் திறத்துடன் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்;

"ட்ரம்பின் வெற்றி 'மற்றவர்கள்'  ( others ) மீதான அச்சத்தையும் வெறுப்பையும் மையமாகக் கொண்டதும் மனித மனதில் இருக்கக்கூடிய இழிவான உணர்வுகள் சகலவற்றை உருவகப்படுத்துவதுமான புதிய காலப்பண்பு  ( zeitgeist )  ஒன்றின் வருகையின் முன்னறிவிப்பாக அமைகிறது. எம்மில் இருக்கக்கூடிய சிறந்தவை பற்றியல்ல மோசமானவை பற்றியே அது பேசுகிறது. வெளிப்படுத்துவதற்கு நாம் அஞ்சிய பீதிகளுக்கும் வெளிப்படுத்துவதற்கு நாம் தயங்கிய வெறுப்புணர்வுகளுக்கும்  இது இறக்கை கட்டிவிடுகிறது. உண்மையிலேயே அசாதாரணமானவற்றையெல்லாம் அது சாதாரணமாக்குகிறது. ஒருபோதுமே நடக்கக்கூடாதவற்றை அது சாத்தியமாக்குகிறது. சர்வசனவாக்குரிமை உட்பட உலகளாவிய ஒப்புரவான கோட்பாடுகளை யெல்லாம் அது வெறுக்கிறது. அருவருக்கிறது".