இலங்கைக்கும் டொனால்ட் டிரம்ப் ஒருவர் தேவை என்பதை அமைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷ தனது பாராளுமன்ற உரை மூலம் நிரூபித்துள்ளார் எனத் தெரிவிக்கும் பொதுபலசேனா, முஸ்லிம் அடிப்படை வாதத்தை தடுக்க இலங்கை அரசாங்கம் இனிமேலாவது கண்களை திறந்து நடவடிக்கைகளை உஷார்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

இது தொடர்பாக பொதுபல சேனாவின் நிர்வாக இயக்குநர் கலாநிதி டிலந்த விதானகே மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 32 பேர் அல்ல அதற்கும் மேலதிகமாக ஊடுருவியுள்ளனர். இதனை 3 வருடங்களுக்கு முன்பு நாம் சொன்னோம். ஆனால் யாரும் செவிகொடுக்கவில்லை.

இன்றாவது அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ அதிலும்  ஐக்கிய தேசிய கட்சி இந்த உண்மையை புரிந்துகொண்டமை சந்தோஷமாக இருக்கின்றது.

ஆனால் மறுபுறம் 3 வருடங்கள் கழித்து உண்மையைப் புரிந்துகொண்டுள்ளமை கவலையளிக்கின்றது. எனவே இனிமேலாவது அரசாங்கம் விழித்தெழ வேண்டும். முஸ்லிம் அடிப்படை வாதத்திற்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

உலகையே இன்று முஸ்லிம் அடிப்படை வாதம், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதம் ஆக்கிரமித்துள்ளன. அது இலங்கைக்குள்ளும் ஊடுருவியுள்ளது.

உலக முஸ்லிம் அடிப்படைவாதத்தை ஒழிக்க அமொரிக்காவில் டொனால்ட் டிரம்ப் உருவெடுத்துள்ளார். அதேபோன்று இலங்கையிலும் டிரம்பின் தேவையை அமைச்சர் விஜேதாஸ உணர்ந்துள்ளார் என எண்ணத் தோன்றுகின்றது. அதேவேளை பெரஹராவிற்கு முன்பாக செல்லும் வாத்தியக் குழுக்களை போன்று அரசு செயற்படுகிறதா? என எண்ணவும் தோன்றுகிறது. 

சில முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ற சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி இப்பிரச்சினைகளை பொதுபலசேனாவின் மேல் சுமத்த முற்படுகின்றனர். எமது பெயரை பாராளுமன்றத்தில் பயன்படுத்துகின்றனர்.

இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம். பாராளுமன்ற சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி பொதுபலசேனா மீது சேறு பூசுவது கைவிடப்பட வேண்டும்  என்றார்.