குமார் சுகுணா
உலக வரலாற்றில் முதன்முறையாக பூமியை தாக்க வாய்ப்புள்ள விண்கல்லை வெற்றிகரமாக நாசா திசைதிருப்பி சாதனை படைத்துள்ளது. பூமியில் இருந்து பல கோடி தொலைவில் உள்ள குறித்து விண்கல்லை திசை திருப்பிய நிகழ்வு 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.
சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களில் முக்கியமானது நாம் வாழும் பூமி. பூமியை சுற்றி இலட்சக்கணக்கான சிறுகோள்கள், விண்கற்கள், நட்சத்திரங்கள் சுற்றி வருகின்றன. இதனிடையே, இந்த சிறுகோள்கள் அல்லது பிற விண்வெளி கற்கள் போன்றவை பூமியை தாக்க வாய்ப்பு இருக்கிறதா? என விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.
அந்த வகையில், அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, கிரக பாதுகாப்புக்கான அதன் தற்போதைய பணியை நிர்வகிக்க 'கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகம்(ஒன்றை நிறுவி உள்ளது. இந்த அமைப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் விண்கலம் ஒன்றை விண்வெளிக்கு அனுப்பியது. அதாவது இந்த விண்கலம் பெயர் டார்ட். இது விண்கற்களை திசை திருப்பிவிடும் தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கப்பட்டது.
இதற்கிணங்க விண்கலத்தை விண்கல்லின் மீது வேகமாக மோதச் செய்து விண்கல்லை அதன் பாதையில் இருந்து திசை திருப்ப முடியும். இந்த முறையையே தற்போது நாசா கையாண்டுள்ளது.
நாசா அனுப்பிய குறித்த டார்ட் விண்கலம் பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்ட டிமோர்போஸ் என்ற 527அடி விட்டம் கொண்ட விண்கல்லை கண்டுபிடித்தது. இது டிடிமோஸ் என்ற 2560 அடி விட்டமுள்ள விண்கல்லை சுற்றி வருவதும் கண்டுப்பிடிக்கப்பட்டது.
அதாவது பூமியை நிலவு சுற்றுவது போல.
இந்த டிமோர்போஸ் விண்கல் பூமியை தாக்க கூடிய அபாயம் உள்ளதாக கண்டறியப்பட்டது. எனவே விண்கல் பூமி மீது மோதுவதை தடுத்து அதை திசை திருப்ப நாசா சோதனை அடிப்படையில் முயற்சிகளை மேற்கொண்டது.
அந்த வகையில் நாசாவால் ஏவப்பட்ட விண்கலம் பூமி மீது மோத வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்ட விண்கல் மீது வெற்றிகரமாக மோதப்பட்டது. டிமோர்போஸ் (Dimorphos) எனப் பெயரிடப்பட்ட குறித்த விண்கல் மீது டார்ட் மோதியது. Double Asteroid Redirection Test என்பதன் சுருக்கமே டார்ட்(DART) ஆகும்.
அதாவது இரட்டை சிறுகோள்களை திசைமாற்றும் பரிசோதனை என்பது இதன் பொருள். இதன் மூலம் அந்த விண்கல்லின் பாதை பூமியில் இருந்து திசை திருப்பப்பட்டுள்ளது. இதனால், அந்த விண்கல்லால் பூமிக்கு ஏற்படவிருந்த ஆபத்து முறியடிக்கப்பட்டது.
விண்கல் மீது விண்கலம் மோதும் காணொளியை நாசா தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பியது. விண்கலம் வெற்றிகரமாக விண்கல் மீது மோதிய நிலையில் அந்த கோளின் பயண திசை சிறிதளவு மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமியில் 66 மில்லியன் வருடங்களுக்கு முன் விண்கல் மோதியதில் டைனோசர்களின் இனமே அழிந்தது. அந்த விண்கல் பூமி மீது விழுந்த அடுத்த நொடி மிகப்பெரிய சேதம் ஏற்பட்டது. பல இடங்களில் பெரும் சுனாமிகள் ஏற்பட்டன.
மலைகள் நொடியில் விழுந்து நொறுங்கின என கூறப்படுகின்றது. அப்போது அந்த விண்கல்லை தடுத்து நிறுத்த முடியவில்லை. அதற்கான அறிவோ, அறிவியலோ அப்போது இல்லை.
ஆங்கில திரைப்படங்களில் விண்ணில் இருக்கும் விண்கல் பூமியில் மோதி பெரிய சேதங்கள் ஏற்படுவதை நாம் பார்த்து இருப்போம். பூமியை நோக்கி பெரிய விண்கல் வந்து விழும், மொத்த மனித குலமும் அழிவது போன்ற காட்சிகளையும் நாம் பார்த்து இருப்போம்.
சில இடங்களில் இப்படிப்பட்ட விண்கற்களை அணு ஆயுத ரொக்கெட் கொண்டு தகர்ப்பது போன்ற காட்சிகளும் கூட அமைக்கப்பட்டு இருக்கும். அப்படி ஒரு விண்கல் தாக்குதலுக்கு தயாராகும் வகையில் தான் டார்ட் தொழில்நுட்பத்தை நாசா கையில் எடுத்தது.
அதாவது பூமியை நோக்கி வரும் விண்கல்லை இந்த ஸ்பேஸ் கிராப்ட் மூலம் தாக்க வைத்து அதன் திசையை திருப்புவது. ஆனால் பூமியை நோக்கி ஒரு விண்கல் வரும் வரை காத்திருக்க முடியாது அல்லவா? அதனால்தான் பூமிக்கு அருகில் உள்ள வேறு ஒரு விண்கல்லை மோதி நாசா தற்போது சோதனை செய்துள்ளது.
இது பூமிக்கு மிக அருகில் இருக்கும் கொஞ்சம் ஆபத்தான விண்கல். ஆனால் தற்போது பூமியை மோதும் வாய்ப்பு இல்லை. ஆயினும் இந்த விண்கல் தற்போது திசை திருப்பப்பட்டுள்ளது. இந்த சோதனையில் முதல் கட்ட வெற்றியும் பெற்றுவிட்டது.
இந்த மோதலுக்கு பின் டிடிமோஸ் , டிமோர்போஸ் சுற்றுப்பாதையில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்வதன் மூலம் டார்ட் திட்டத்தின் வெற்றியை ஆராய்ச்சியாளர்கள் தீர்மானிப்பார்கள்.
பூமியில் உள்ள தொலைநோக்கிகள் மூலம் இந்த இரு விண்பாறைகளுக்கு இடையே உள்ள தொலைவில் உண்டாகும் மாற்றங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு 325 மில்லியன் டொலர் ஆகும்.
இது வெற்றிகரமாக முடியும் பட்சத்தில் எதிர்காலத்தில் பூமியை நோக்கி விண்கல் வந்தால் அதை ‘டார்ட்’ செயற்திட்டத்தின் மூலம் பாதை மாற்ற முடியும்.. உலகிலேயே இதுதான் விண்கல் ஒன்றின் பாதையை மாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட முதல் திட்டம் ஆகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM