வெளியிலிருந்து கல்லெறிய வேண்டாம் ; போட்டியிட்டு பதவிக்கு வாருங்கள் - ஜஸ்வர் உமர்

By Digital Desk 5

28 Sep, 2022 | 10:36 AM
image

(நெவில் அன்தனி)

பதவி ஆசை பிடித்தவர்கள் தங்களது குற்றங்களை மறைப்பதற்காக தன் மீதும் தனது நிருவாகத்தினர் மீதும் சேறுபூச முயற்சிப்பதுடன் அநாவசிய குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர். பல வருடங்களுக்கு முன்னர் ஒருவருக்கொருவர் குழி பறித்துக்கொண்டவர்கள், ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டியவர்கள் பதவி மோகத்தால் இன்று ஒன்று சேர்ந்து தன் மீது பழி சுமத்துகின்றனர் என இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் கவலையுடன் தெரிவித்தார்.

எனவே வெளியிலிருந்து கல் எறிய வேண்டாம். தலைவர் ஆசனத்துக்கு வரவேண்டுமானால் மைதானத்திற்குள் இருந்தவாறு போட்டியிடுங்கள்  என அவர் சவால் விடுத்தார்.

சர்வதேச தடையிலிருந்து இலங்கை கால்பந்தாட்டத்தைக் காப்பாற்றுவோம் என்ற கருப்பொருளில் கொழும்பு 5 ஓட்டல் ஒன்றில் நேற்று (27) பகல் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசியபோது ஜஸ்வர் உமர் இதனைக் குறிப்பிட்டார்.

'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு' என்பதை மறந்து எதிர்தரப்பினர் செயற்படுவதாகக் குறிப்பிட்ட அவர், தனது குழுவினர் மைதானத்தில் விளையாடுவதையே விரும்புவதாகவும் குத்துச் சண்டை கோதாவில் இறங்க விரும்பவில்லை எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய ஜஸ்வர் உமர்,


'கடந்த வருடம் ஜூன் மாதம் 30ஆம் திகதி நடைபெற்ற சம்மேளனத்தின் நிர்வாக சபைத் தேர்தலில் 6 மேலதிக வாக்குகளால் நான் தலைவராக தெரிவானேன். அப்போது எனக்கு 96 லீக் உறுப்பினர்கள் வாக்களித்தனர். இன்று 48 லீக்குள் (144 வாக்குகள்) எனக்கு ஆதரவாக இருக்கின்றன. எதிராக 13 லீக்குள் (39 வாக்குகள்) மாத்திரமே உள்ளன. இதிலிருந்து நான் கால்பந்தாட்டத்தின் மேம்பாட்டிற்கு எந்தளவு உழைக்கின்றேன் என்பதை முழு நாடும் அறியும்.

'நான் தலைவராக பதவியேற்று 4 மாதங்கள் கொவிட்-19 தொற்று நோய் தாக்கம் காரணமாக எனது கடமைகளை ஆற்ற முடியாமல் போனது. ஆனால், கொவிட்-19 தாக்கத்தின் பின்னர் முதன் முதலில் பார்வையாளர்களுடன் சர்வதேச அழைப்பு கால்பந்தாட்டப் போட்டியை நவம்பர் மாதம் நடத்தினோம். நவம்பர் மாத்திலிருந்து 6 மாதங்களுக்குள் அதாவது 180 தினங்களுக்குள் பல்வேறு மட்டங்களில் 31 சர்வதேச போட்டிகள் நடத்தப்பட்டதுடன் உள்ளூரில் மொத்தமாக 806 போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. 

கடைசிக் கட்ட சுப்பர் லீக், சம்பியன்ஸ் லீக், சுப்பர் மாகாணம், லீக் மட்டம் (தங்கக் கிண்ணம் மற்றும் வெள்ளிக் கிண்ணம்) ஆகிய போட்டிகளை நடத்தினோம். ஆனால், முன்னையவரின் பதவி காலத்தில் 2021 ஜனவரி முதல் ஜூன்வரை 21 போட்டிகளே நடத்தப்பட்டிருந்தது.

நிதி மோசடி குற்றச்சாட்டை நராகரித்தூர் ஜஸ்வர்


'நிதி வீண் விரயம் செய்யப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை நான் முழுமையாக நிராகரிக்கிறேன். குற்றம் சுமத்தப்படுவதுபோல் ஒரே நேரத்தில் 500,000 டொலர்கள் சம்மேளனத்தின் டொலர் கணக்கிலிருந்து மீளப்பெறப்படவில்லை. மற்றொரு வங்கியிலுள்ள சம்மேளன கணக்கிற்கு அது கட்டம் கட்டமாக மாற்றப்பட்டது. 

எனக்கு முன்னர் தலைவராக இருந்தவர் செலவழித்த டொலர் கணக்குடன் ஒப்பிடுகையில் எமது நிர்வாகம் வீண் விரயம் செய்யவில்லை என்பதை குறிப்பிடவேண்டும். கடந்த வருடம் 210 ரூபாவாக இருந்த டொலர் இப்போது 360 ரூபாவாக உயர்ந்துள்ளது. 

இந்த விலையை ஒப்பிடும்போது எனது காலத்தில் நிதி வீண் விரயம் செய்யப்படவில்லை என்பது புலப்படும். மேலும் பீபா பிரதிநிதிகளால் நடத்தப்பட்ட கணக்காய்வில் எவ்வித குறைபாடுகளும் காணப்படவில்லை. எனவே சம்மேளன நிதி வீண் விரயம் செய்யப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிராகிரிக்கிறேன்' என்றார்.

'நான் பதவி ஏற்பதற்கு முன்னர் 2021 ஜனவரி முதல் ஜூன் வரை 350,000 டொலர்களும் நான் பதவி ஏற்ற பின்னர் 2021 ஜூலை முதல் டிசம்பர்வரை 500,000 டொலர்களும் 2022 ஜனவரி முதல் ஜூன் வரை 1,450,000 டொலர்களும் வருவாயாக கிடைத்தது.

'தேசிய அணி மற்றும் பயிற்சிகள், உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகள், பயிற்றுவிப்பு, அடிமட்ட நிகழ்ச்சித் திட்டங்கள், லீக்குகளுக்கான கொடுப்பனவு, நிருவாகம் ஆகியவற்றுக்கு 2021 ஜனவரி முதல் ஜூன்வரை மொத்தமாக 856,000 டொலர்களும், 2021 ஜூலை முதல் டிசம்பர்வரை 1,800,000 டொலர்களும் 2022 ஜனவரி முதல் ஜூன்வரை 720,000 டொலர்களும் செலவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நிதி வீண் விரயம் செய்யப்படவில்லை என்பது தெளிவாகிறது' என அவர் மேலும் குறிப்பிட்டார். 

 இலங்கை கால்பந்தாட்டம் தடைக்குள்ளாகுமா?


இலங்கை  கால்பந்தாட்ட விளையாட்டுத்துறையில் தற்போது தோற்றுவிக்கப்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக உலக மட்டத்தில் மிகவும் ஆபத்தான நிலையில் இலங்கை கால்பந்தாட்டம் இருப்பதாகவும், இந்த நிலை தொடர்ந்தால் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தை பீபா தடை செய்யக்கூடும் எனவும் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் கவலை வெளியிட்டார்.

'இலங்கையில் விளையாட்டுத்துறை சங்கங்கள், சம்மேளனங்களின் நிர்வாக சபைத் தேர்தலை மே 31ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நடத்தி  முடிக்க வேண்டும் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. பின்னர் நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி, மக்கள் போராட்டம் ஆகியவற்றின் காரணமாக தேர்தலுக்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டது.

'அதன் பின்னர் செப்டெம்பர் 15ஆம் திகதிக்குள் சம்மேளன யாப்பில் திருத்தம் செய்து தேர்தலுக்கான திகதியை தீர்மானிக்குமாறு பீபா பரிந்தரைத்ததன் அடிப்படையில் விளையாட்டுத்தறை அமைச்சு எதிர்வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை சம்மேளனத்திற்கு கால அவகாசம் வழங்குவதற்கு தீர்மானித்தது.

இதற்கு அமைய பீபா மற்றும் ஏ எவ் சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்ற அதிவிசேட பொதுச் சபைக் கூட்டத்தின்போது யாப்பில் ஒரு ஷரத்தைத் தவிர்ந்த மற்றைய அனைத்தும் சம்மேளனத்தினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. 

அத்துடன் 2 நீதிபதிகள் உட்பட மூவரடங்கிய தேர்தல் குழு நியமிக்கப்பட்டு தேர்தலுக்கான திகதியும் தீர்மானிக்ப்பட்டது. ஆனால், விளையாட்டுத்துறை அமைச்சர் செப்டெம்பர் 22ஆம் திகதி வெளியிட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் செப்டெம்பர் ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்ததால் தேர்தல் நடத்தாத சங்கங்கள்,  சம்மேளனங்களின் பதவிக் காலம் செப்டெம்பர் 15ஆம் திகதியுடன் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் விடயங்களை கவனிக்கவென இடைக்கால குழு ஒன்றை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் தயாராகி வருவதாக அறியக்கிடைக்கிறது. அப்படி இடைக்கால குழு நியமிக்கப்பட்டால் பீபாவின் தடையை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் எதிர்கொள்ளவேண்டிய ஆபத்து ஏற்படும்' என்றார்.

கால்பந்தாட்டம் ஜெயிக்கும்


இது இவ்வாறிருக்க, இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தேர்தல் நடத்தப்பட்டால் வெற்றி பெறுவீர்களா? என ஜஸ்வர் உமரிடம் கேட்டபோது, 'நிச்சயமாக. மக்கள் (லிக்குள்) எனது பக்கம்   இருக்கின்றனர். மக்கள் கால்பந்தாட்டத்தின் பக்கம் இருக்கிறார்கள். எனவே கால்பந்தாட்டம் ஜெயிக்கும்' என பதிலளித்தார்.

கால்பந்தாட்ட குடும்பத்திற்கு கடைசியாக என்ன கூற விரும்புகிறீர்கள் என அவரிடம் கேட்டபோது, 'கால்பந்தாட்டத்தில் கேவலமான அரசியல் வேண்டாம். கொவிட் - 19க்குப் பின்னர் இந்த வருடத்தில் கால்பந்தாட்டம் மீள் எழுச்சி பெற்று வருகிறது. மகளிர் கால்பந்தாட்டம், இளையோர் கால்பந்தாட்டம், தேசிய அணி, பயிற்றுநர்களுக்கான பயிற்சி நெறி எல்லாம் மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அதனால்தான் கத்தார் இராச்சியம் பெரிய அளவில் இலங்கைக்கு உதவி வருகிறது. 

எனவே, பொறுமை காக்கவேண்டும். நல்லதை செய்பவருக்கு அதனை தொடர்ந்து செய்ய அனுமதியுங்கள், அதற்கான அத்திவாரம் போடப்பட்டுள்ள நிலையில் அழுக்கு நிறைந்த தந்திரங்களில் ஈடுபடுவோர் அதனைக்கைவிட்டுவிடுங்கள்..  கால்பந்தாட்ட வளர்ச்சிக்காக  என்னைவிட   சேவை செய்யக்கூடிய செயற்திட்டம் யாரிடமாவது இருந்தால் தேர்தலில் போட்டியிட்டு வாருங்கள். எனவே வெளியிலிருந்து கல் எறிய வேண்டாம். தலைவர் ஆசனத்துக்கு வரவேண்டுமானால் மைதானத்திற்குள் இருந்தவாறு போட்டியிடுங்கள்" என்றார் ஜஸ்வர் உமர்.

(படப்பிடிப்பு: எஸ். சுரேந்திரன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரேஸில் - குரோஷியா போட்டியுடன் உலகக்...

2022-12-09 10:18:00
news-image

கலம்போ ஸ்டார்ஸுக்கு முதலாவது வெற்றி :...

2022-12-09 07:40:15
news-image

ஸ்பெய்ன் கால்பந்து அணியின் பயிற்றுநர் நீக்கப்பட்டார்:...

2022-12-08 18:28:45
news-image

தொடர்ச்சியாக 3 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் சதம்...

2022-12-08 17:43:11
news-image

ரசிகர்களின் கோஷங்களால் குரோஷியாவுக்கு பீபா 1.94...

2022-12-08 16:12:46
news-image

வரலாறு படைத்தது வத்தளை லைசியம்; நந்துன்,...

2022-12-08 16:14:19
news-image

நான்கு பற்களை இழந்தார் சாமிக நேற்றைய...

2022-12-08 10:46:41
news-image

க்ளடியேட்டர்ஸ் அணியின் வெற்றிக்கு வழிவகுத்த ப்றத்வெய்ட்,...

2022-12-08 10:09:41
news-image

மெஹிதி ஹசன் மிராசின் சகலதுறை ஆட்டத்தால்...

2022-12-07 21:48:33
news-image

தீக்ஷன, வியாஸ்காந்த், சதீர, அவிஷ்க அபாரம்...

2022-12-07 21:42:13
news-image

நியூ ஸிலாந்து றக்பி தலைவராக முதல்...

2022-12-07 13:11:52
news-image

ரமொஸின் ஹெட்-ரிக் கோல்களின் உதவியுடன் கால்...

2022-12-07 10:24:18