‘கலாசாரம் , மதம் என்ற வரையறைக்குள் இருந்து கொண்டு செயற்பட்டால் நாட்டை முன்னேற்ற முடியாது, ஆதலால் கஞ்சா செய்கையை சட்டபூர்வமாக்கி அதை ஏற்றுமதி செய்து வருமானத்தைப் பெருக்கிக்கொள்ள வேண்டிய அதே வேளை இரவு 10 மணி வரை நாட்டில் மதுபான நிலையங்களையும் திறந்து வைக்க ஆவண செய்ய வேண்டும்’ என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே கடந்த புதன்கிழமை பாராளுமன்றில் உரையாற்றியிருந்தார்.
இந்த விடயங்களை அடிக்கடி வலியுறுத்தி வரும் ஒரு மக்கள் பிரதிநிதியாக அவர் விளங்குகிறார். சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சராவதற்கு முன்பதாகவே இந்த விடயங்களை பல சந்தர்ப்பங்களில் பாராளுமன்றிலும் பொது இடங்களிலும் பேசி வருகின்றார். இலங்கையின் பெருந்தோட்டப்பயிராக ஆரம்பத்தில் கோப்பி விளங்கியது.
அதுவே 1823 இலிருந்து 1875 வரை பிரதான ஏற்றுமதி பயிராகவும் அந்நிய செலாவணியைப் பெற்றுத்தந்த வர்த்தக பொருளாகவும் விளங்கியது. 1868 இன் இறுதிப்பகுதியில் தேயிலை பயிரிட ஆரம்பிக்கப்பட்டு, இன்று வரை அந்நிய செலாவணியைப் பெற்றுத்தரும் பிரதான ஏற்றுமதி பொருளாக உள்ளது. இறப்பர் மற்றும் தென்னை போன்றவை பெருந்தோட்ட பயிர்கள் என்ற பிரிவுக்குள் அடக்கப்பட்டாலும் சிறு ஏற்றுமதி பொருட்களாகவே அவை கணிக்கப்படுகின்றன.
தேயிலையை மட்டும் நம்பிக்கொண்டிருப்பதில் பயனில்லை என்றும் மாற்று பயிர்ச்செய்கை குறித்த சிந்தனை அவசியம் என்ற ரீதியில் நாட்டின் தென்பகுதிகளில் பாம் எண்ணெய் உற்பத்தியை ஊக்குவிக்கும் செம்பனை செய்கை ஆரம்பிக்கப்பட்டது.
இந்தப் பயிர்ச்செய்கையால் சுற்று சூழல் பாதிப்பு , நிலம் வரண்டு போதல் போன்றன ஏற்படும் அதே வேளை, பாரம்பரிய தேயிலை பயிர்ச்செய்கை பாதிக்கப்படும் என்றும் ஆயிரக்கணக்கானோர் தொழிலை இழப்பர் என்பதாலும் அதை மத்திய மலை பிரதேசங்களில் ஊக்குவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
மேலும் செம்பனை செய்கையை மலேசியா போன்ற நாடுகள் பெருமளவில் முன்னெடுக்கின்றன. அதற்கான வர்த்தக நாமத்தை எந்த நாடுகளும் பிரத்தியேகமாக கொண்டிருக்கவில்லை. ஆனால் இலங்கையானது கடந்த 150 வருடங்களாக, ‘சிலோன் டீ’ என்ற இலங்கை தேயிலையின் வர்த்தக நாமத்தை உலகெங்கினும் கொண்டிருக்கின்றது. பல நாடுகள் இலங்கைத் தேயிலையை விரும்பி இறக்குமதி செய்கின்றன.
இவ்வாறான நிலையிலேயே தற்போது கஞ்சா செய்கை பற்றி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பேசி வருகின்றார். கஞ்சா என்பது மருத்துவ தேவைக்கு சிறிய அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மூலிகையாக இருந்தாலும் அதை போதை தரும் செயற்பாடுகளுக்காகவே உலகெங்கும் பலர் அதிகமாக ப்பயன்படுத்துகின்றனர்.
பாரியளவில் பயிரிட்டு அதை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உலகெங்கினும் மருத்துவ தேவையை உடைய மூலிகையாக கஞ்சா இல்லை என்பதை அனைவரும் அறிவர். மேலும் எந்த நாடும் கஞ்சா செடியை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு பொருளாதார பின்னடைவை கொண்டிருக்கவில்லை. அவ்வாறு கடும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நாடுகளும் இப்படியானதொரு முடிவை எடுக்க துணியவில்லை.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேயின் சிந்தனையில் நாட்டை பொருளாதார ரீதியாக முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகவும் தெரியவில்லை. ஏனென்றால் அவர் மது பான நிலையங்களை அதிக நேர உபயோகத்துக்கு திறந்து விட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இன்று எமது நாட்டில் மதுபான விற்பனையின் மூலம் கிடைக்கும் வரிவருமானத்தை விட, அதன் பாவனையால் நோயுற்றவர்களுக்கு சுகாதார அமைச்சு செலவிடும் தொகையே அதிகம் என்ற விடயம் டயானா கமகேவுக்கு தெரியவில்லை.
இந்த விடயத்தை சுட்டிக்காட்டியே ஒரு தடவை சுகாதார அமைச்சராக இருந்த நிமால் சிறிபால டி சில்வா, மது பாவனையால் நோயுற்றவர்களுக்கு அரச வைத்தியசாலைகளில் இலவசமாக மருத்துவம் பார்க்க முடியாது என்று தெரிவித்திருந்தார்.
மேலும் இலங்கையில் இடம்பெறும் நானாவித குற்றச்சம்பவங்களுக்கு 90 வீத காரணியாக இருப்பது மது மற்றும் போதை பொருட்கள் தான் என்ற தகவல்களை அவர் பொலிஸ் தரப்பிடம் பெறலாம். கஞ்சா என்பது எமது கலாசாரத்துடன் தொடர்புடையது என்று கூறும் அவர் அதை மருத்துவ மூலகையாக பெருமளவில் பயன்படுத்தும் இலங்கை பாராம்பரிய மருத்துவர்களின் விபரங்களையும் வைத்தியசாலைகளின் விபரங்களையும் பெற வேண்டும்.
மருத்துவ தேவைகளுக்காக பாரியளவில் ஏற்றுமதி செய்ய வேண்டிய தேவைகள் இருக்கின்றது என அவர் கூறுகின்றார். அப்படியானால் அதை அத்தேவைகளுக்காக பெருமளவில் கஞ்சா செடிகளை இறக்குமதி செய்யத் தயாராக இருக்கும் நாடுகள் எவை போன்ற விபரங்கள் இங்கு அவசியம். நாட்டை பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீட்க எதை வேண்டுமானாலும் செய்து பணத்தைப் பெற்றால் போதும் என்ற மனப்பான்மையிலிருந்து டயானா கமமே வெளியே வர வேண்டும். மீன் விற்ற பணம் மணக்காது என்பர்.
கஞ்சா விற்ற பணம் போதை தராது என்றாலும் இந்த திட்டத்தின் பின்விளைவுகள் எந்தளவுக்கு ஆபத்தானவை என்பதை யதார்த்தம் விளங்காத டயானா எம்.பிக்கு உரியோர் விளக்கமளிக்க வேண்டும். இலங்கையின் வர்த்தக நாமம் சிலோன் டீ என தேயிலையைக் குறித்து நிற்கும் போது அதை கஞ்சா என்று மாற்றினால், இலங்கையர்கள் வாழ்ந்து வரும் நாடுகளில் மற்றும் அவர்கள் செல்லும் இடங்களிலெல்லாம் அவ்வாறு பெயர் சொல்லி அவர்களை அழைப்பதை இந்த மக்கள் பிரதிநிதி விரும்புகின்றாரா? அதை இலங்கையர்களும் ஏற்றுக்கொள்வார்களா என்ன?
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM