மலையக சமூகம் தொடர்பில் ஐ.நா. பிரதிநிதியின் அறிக்கையும் அரசாங்கத்தின் பொறுப்பற்ற பதிலும்

By Digital Desk 5

28 Sep, 2022 | 10:10 AM
image

சிவலிங்கம் சிவகுமாரன்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கடந்த கால மற்றும் தற்கால வாழ்க்கை முறை, ஒரு சமூகத்துக்கு இழைக்கப்பட்ட   அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பதை , ஜெனீவா அமர்வுகளில் அழுத்தி கூறும் அளவுக்கு இங்கு எந்த அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கும் இன்னும் தைரியம் வரவில்லை. அரசாங்கத்துக்கோ அல்லது பாராளுமன்றத்திலோ தமது மக்கள் பற்றி  எடுத்துக் கூற  தைரியமில்லாதவர்கள் எங்ஙனம் இது பற்றி கதைக்க  சர்வதேசம் வரை செல்வர்? 

மலையக பெருந்தோட்ட  சமூகத்தின் தற்கால  நிலைமைகளை ‘ அடிமைத்துவத்தின் சமகால வடிவமாக மலையகத் தமிழர்கள் ’ என  ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர்  ரொமாயா ஒபகாடோ வர்ணித்துள்ளார். இந்த அறிக்கையை அவர் ஜெனீவாவில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் முன்வைத்து உரையாற்றியுள்ளார். இவரது அறிக்கையிடல் நிகழ்வு  கடந்த 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இந்த அறிக்கை தொடர்பான தகவல்களை அவர் பெறுவதற்காக முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர்– டிசம்பர் மாதங்களில்  இலங்கையின் பெருந்தோட்டப்பகுதிகளுக்கு விஜயம் செய்து பலரையும் நேரடியாக சந்தித்து உரையாடியிருந்தார் என்பது முக்கிய விடயம். அடிமைத்துவத்தின் சமகால வடிவங்கள் என்ற விடயம் தொடர்பாக, உலகெங்கினும் வாழ்ந்து வரும் சமூகங்கள் பற்றிய அறிக்கையிடலை செய்வதே இவரது பிரதான பணியாகும்.

கடந்த ஆண்டு அவர் இலங்கைக்கு வருகை தந்திருந்த போது எந்த மலையக பிரதிநிதிகளும் ,அரசியல் கட்சிகளும் ,தொழிற்சங்கங்களும் இவரை  நேரடியாக சந்தித்திருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. மலையக மக்களின் பிரச்சினைகளை ஐ.நா. வரை கொண்டு செல்வோம் என ஒரு கட்டத்தில் அறிக்கை விடுத்திருந்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கூட அவரை சந்திக்க ஆர்வம் காட்டவில்லை. ஆனால் அந்த பணியை மலையக பிரதிநிதிகளுக்கு வைக்காமல் தனது அறிக்கை மூலம்   சுலபமாக்கியுள்ளார் ஐ.நா பிரதிநிதி. 

எனினும் அவரது இந்த அறிக்கையிடல் தொடர்பில் பாராளுமன்றில் இருக்கும் மலையகப் பிரதிநிதிகள் எந்த பிரதிபலிப்பையும் வெளியிடவில்லை. ஏனென்றால் அவர் கூறிய விடயங்கள் உண்மை என்பதை அவர்களின் மெளனங்களே உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால் இந்த நவீன காலத்திலும் அவர்களை அடிமைகளாகவும் எந்த வித அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காமல் வைத்திருக்கும் பொறுப்பு கூற வேண்டிய அரசாங்கம் எதுவும் கூற வேண்டுமே? 

அதன் படி இந்த அறிக்கைக்கு அரசாங்கம் வழமை போன்று பொறுப்பற்ற தன்மையில் பதில் வழங்கியுள்ளது. அதாவது பெருந்தோட்ட மக்களின் பின்னடைவுகள் பூர்வீகத்துடனோ அல்லது இன அடையாளத்துடனோ தொடர்புடையவை அல்ல என்று அரசாங்கம் பதிலளித்துள்ளது. ஆனால் அரசாங்கத்தின் இந்த பதிலையும் மலையக கட்சிகளும் தொழிற்சங்கங்களும் மெளனமாக ஏற்றுக்கொண்டுள்ளன. இது அப்பட்டமானதொரு கள்ள மெளனமாகும்.

200 வருடங்களுக்கு முன்னர் உழைக்கும் வர்க்கமாக தென்னிந்திய கிராமங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட பெருந்தோட்டத்தொழிலாளர்கள், ‘இந்திய தமிழர்கள்’  என்ற பூர்வீக அடையாளத்துடன் இருந்த காரணத்தினாலேயே பல்வேறு புறக்கணிப்புகளுக்கு முகங்கொடுத்தனர். 

சனத்தொகையில் அவர்களின் எண்ணிக்கை பாரிய தாக்கத்தை செலுத்தியதாலும் அதன் மூலம் அந்த மக்களின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தை அதிகளவில் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆபத்து இருந்தமையினாலேயே அவர்கள் நாடற்றவர்களாகக்கப்பட்டனர் என்பது வரலாற்று உண்மை. இதை சர்வதேசமே அறியும். 

எனினும் இதை முற்றாக மறைத்து அறிக்கை விட்டிருக்கின்றது தற்போதைய அரசாங்கம். இப்படியான அறிக்கைகள் குறித்து ஆச்சரியப்படத்தேவையில்லை. ஏனென்றால் 1948 ஆம் ஆண்டு இந்த சமூகத்தை நாடற்றவர்களாக்கிய ஐக்கிய தேசிய கட்சியின் பாரம்பரிய கொள்கைகள் மற்றும் பூர்வீகத்துடன் தொடர்புபற்ற ரணில் விக்ரமசிங்கவே தற்போதைய ஜனாதிபதியாக இருக்கின்றார். எனவே இவ்வாறான சமாளிப்புகளுடனான பதிலறிக்கைகளே வெளிவரும். 

 ஜெனீவா அமர்வுகள்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் ஒவ்வொரு ஆண்டும் ஜெனீவாவில் இடம்பெற்று வருகின்றன. இலங்கையைப்பொறுத்தவரை 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்ற பிறகே வடக்கு கிழக்கு வாழ் தமிழ்ப்பிரதிநிதிகள் , மனித உரிமை ஆர்வலர்கள் , சிவில் சமூகத்தினர் ஆகியோர் இந்த கூட்டத்தொடரை அதிகமாக பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தனர். 

இறுதி யுத்த காலகட்டத்தில் அப்போதைய அரசாங்கம் மற்றும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் யுத்த மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேசம் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என தொடர்ச்சியாக இக்கூட்டத்தொடரில் ஐ.நாவுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாகவே இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேசம் அவதானத்தை திருப்பியுள்ளது. மேலும் இது அடிக்கடி பேசப்படும் விடயமாகவும் உள்ளது. 

ஆனால் இருநூறு வருட வரலாற்றைக் கொண்டுள்ள பெருந்தோட்ட சமூகம் அனுபவித்து வரும் இன்னல்கள் தொடர்பில் இது வரை ஜெனீவா கூட்டத்தொடரில் எந்த மலையக பிரதிநிதியும் கலந்து கொள்ளவில்லை. அது தொடர்பான அக்கறை இவர்களுக்கு இல்லை. 

இம்முறை இக்கூட்டத்தொடரில் அனைவரையும் நிமிர்ந்து பார்க்க வைத்த சம்பவம், காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியாவின் உரையாகும்.  தனது கணவர் கடத்தப்பட்டமை மற்றும் இலங்கையில் நிலவி வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தனி பெண்ணாக அவர் பல விடயங்களை முன்வைத்திருந்தார்.  

மனித உரிமைகள் தொடர்பில் அக்கறை கொண்டுள்ள குழுவினர் இவரை ஜெனீவா வரை அனுப்பி இலங்கையில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இடம்பெற்ற அநீதி குறித்து அம்பலப்படுத்தி வருகின்றனர். காணாமல் போன தனது கணவருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் கடந்த 10 வருடங்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வரும் சந்தியா நீதி கேட்டு பயணித்த தூரங்கள் சராசரியாக  4 இலட்சம் கிலோ மீற்றர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. 

இவை   நீதிமன்றங்கள், அரச நிறுவனங்கள், ஊடக சந்திப்புகள், ஆர்ப்பாட்டங்கள், கண்காட்சிகள், மத ஸ்தானங்கள் மற்றும் அவரது  வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பாகும். ஆனால் தோட்டத்தொழிலாளர்களின் இன்னல்களை முழுமையாக கண்டறிவதற்கு அம்மக்கள் பிரதிநிதிகள் இன்று தோட்டப்பிரதேசங்களுக்கே பயணிப்பதில்லை. 

அரசாங்கத்தின் சலுகைகளை அனுபவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களில் எவராவது இந்த மக்கள் தொடர்பில் ஜெனீவா அமர்வில் உரையாற்ற வேண்டும் என இது வரை நினைத்துப்பார்க்கவில்லை. தனது கணவர் தொடர்பிலும் இந்நாட்டில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்கள் சார்பிலும் தனி ஒரு பெண்ணாக உள்ளூரிலும் வெளிநாட்டுக்கும் பயணித்து குரல் கொடுக்கும் சந்தியா போன்ற மனித உரிமை ஆர்வலரின் செயற்பாடுகளை பார்த்து இந்த பிரதிநிதிகள் வெட்கி தலை குனிய வேண்டும். அல்லது அவரிடமிருந்து பாடங்கற்க வேண்டும். 

45 வருடங்களாக இந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக அரசியல் கட்சிகளின் சுயரூபங்கள் வெளிபட்டு விடும் என்ற காரணத்தினாலேயே கடந்த வருடம் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா பிரதிநிதியை எந்த அரசியல்வாதிகளும் சந்தித்திருக்கவில்லை. ஆனால் அவர் சகல தகவல்களையும் சேகரித்துள்ளார். அவர் பெருந்தோட்ட குடியிருப்புகள், பிரதேசங்களுக்கு விஜயம் செய்து அம்மக்களை சந்தித்து தகவல்களைப் பெற்றுள்ளார். 

பெருந்தோட்டப்பகுதிகளில் அதிகரித்து வரும் சிறுவர் தொழிலாளர் வீதம், வறுமை காரணமாக நுண்கடன் பொறியில் சிக்கித் தவிக்கும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள், நீதியைப் பெற்றுத்தருவதில் இந்த மக்களுக்குள்ள வரையறுக்கப்பட்ட வாய்ப்புகள் மற்றும் புறக்கணிப்புகள், தொழிலாளர்களுக்கு கிடைத்து வரும் மிகக்குறைவான நாட்சம்பளமான ஆயிரம் ரூபாய் ( அதுவும் இப்போது கிடைப்பதில்லை என்ற விடயத்தை அவர் அறிந்திருக்க நியாமில்லை) மற்றும் தொழிலாளர்கள் மீதான வன்முறைகள் , ஒடுக்குமுறைகள் தொடர்பில் அவர் ஆதாரங்களை முன்வைத்து உரையாற்றியிருந்தார். 

அதே வேளை இதற்கான பரிந்துரைகளையும் அவர் முன்வைக்க தவறவில்லை. தொழிலாளர் உரிமைகள் பற்றிய பிரகடனங்கள், சமத்துவமான வேலை சூழலை உறுதி செய்வதற்கான உரிமைகளைப் பாதுகாத்தல், தொழிலாளர்கள் மீதான வன்முறைகள் அடக்குமுறைகளை கண்காணிப்பு செய்வதற்கான பொறிமுறைகளை அமுல்படுத்தல் உள்ளிட்ட 46 பரிந்துரைகள் அவர் முன்வைத்து இதை அரசாங்கம் உடனடியாக செயற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தொழிலாளர் நலன் தொடர்பான பிரகடனங்களையும் அவை முறையாக அமுல்படுத்தப்படவில்லையென்ற விடயங்களையும் தொழிற்சங்க பிரமுகர்கள் அறிந்தேயுள்ளனர். ஆனால் இன்று தொழிற்சங்கங்கள் அனைத்தும் அரசாங்க சலுகைகளையும் அமைச்சுப்பதவிகளையும் பெறும் அரசியல் கட்சிகளாக மாற்றம் பெற்றுள்ளதால் அவர்களால் தொழிற்சங்க உரிமைகள் பற்றி வாய் திறக்க முடியாதுள்ளது. 

அவ்வாறு வாய் திறந்தால் அவர்களுக்கு அரசாங்கத்தின் ஊடாகக் கிடைக்கும் சலுகைகள் இல்லாமல் போகும். அதன் காரணமாகவே தற்போது வரை இழுபறியாக இருக்கும் ஆயிரம் ரூபாய் நாட்சம்பள விவகாரத்தை கூட தொழிற்சங்கங்கள் சற்று அடக்கி பேசுகின்றன. தொழிலாளர்களை வீதிக்கு இழுத்து விட்டு அரசாங்கத்துக்கு அழுத்தங்களை கொடுக்கும் செயற்பாடுகளை செய்ய அவை விரும்பவில்லை. 

மலையக தொழிற்சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவோர் சர்வதேச தொழிலாளர் சம்மேளன அமர்வுகளில் பங்குபற்றுவதை ஒரு பாரம்பரிய சடங்காகவே நினைக்கின்றனர். ஒரு பாரிய தொழிற்படையை பிரதிநிதித்துவப்படுத்தி மாநாட்டில் பங்குபற்றுவதை தமது தனிப்பட்ட  பெருமையாகக் கருதுகின்றனர். 

ஆனால் அங்கு சென்று இம்மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து எத்தனைப் பேர் பேசியுள்ளனர் என்பது ஆய்வுக்குரியது. அதே வேளை மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கடந்த கால மற்றும் தற்கால வாழ்க்கை முறை ஒரு சமூகத்துக்கு இழைக்கப்பட்ட    அப்பட்டமானதொரு  மனித உரிமை மீறல் என்பதை , ஜெனீவா அமர்வுகளில் அழுத்தி கூறும் அளவுக்கு இங்கு எந்த அரசியல் கட்சி உறுப்பினர்ளுக்கும் இன்னும் தைரியம் வரவில்லை. அரசாங்கத்துக்கோ அல்லது பாராளுமன்றத்திலோ அவ்வாறு எடுத்துக் கூற  தைரியமில்லாதவர்கள் எங்ஙனம் இது பற்றி கதைக்க  சர்வதேசம் வரை செல்வர்? 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓமான் பணிப்பெண்கள் விவகாரம் : மத்திய...

2022-12-01 14:33:01
news-image

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக மலையகத்தில் ஒன்றிணைந்த...

2022-12-01 14:32:19
news-image

உலக அழகி பிரியங்கா சோப்ரா மீதே...

2022-11-29 16:09:16
news-image

மத்திய வங்கியின் ஆளுநருக்கு மாதம் நான்கு...

2022-11-30 15:48:59
news-image

விடத்தல்தீவு எனும் இயற்கைப் வனத்தைப் பாதுகாப்போம்

2022-11-29 17:25:43
news-image

உணரப்பட வேண்டிய பெறுமதி

2022-11-28 15:05:06
news-image

உலக நீதி சீர்குலைந்த நாள் :...

2022-11-28 13:21:05
news-image

ஸ்கொட்லாந்தும் சுயநிர்ணய உரிமையும் - ஒரு...

2022-11-28 12:29:41
news-image

உலகப் போர் நினைவுச் சின்னங்களின் பின்னணியில்...

2022-11-28 11:05:34
news-image

அரசியல் தீர்வு: முஸ்லிம் தரப்பின் நிலைப்பாடு...

2022-11-27 17:30:18
news-image

உக்ரேனில் நீளும் போரும் குறைந்துவரும் ஆதரவும்

2022-11-27 17:16:51
news-image

வரவு - செலவுத் திட்டம் 2023...

2022-11-27 16:08:24